Saturday, 23 July 2016

12 மானக்கஞ்சாற நாயனர் புராணம்


"மலைமலிந்ததோள் வள்ளல் மானக்கஞ்சாறனுக்கு அடியேன்"

"தம்மகளின் நீண்டகூந்தலைச் சிவனடியாரின் பஞ்சவடிக்காக அளித்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கல்யாணசுந்தரி

அவதாரத் தலம் : ஆனந்ததாண்டவபுரம்

முக்தி தலம் : ஆனந்ததாண்டவபுரம்

குருபூஜை நாள் : மார்கழி - சுவாதி

"மாறில் பெருஞ்செல்வத்தின் வளம் பெருக மற்றதெலாம் 
ஆறுலவுஞ் சடைக்கற்றை அந்தணர்தம் அடியாராம் 
ஈறில் பெருந்திருவுடையார் உடையார் என்றியாவையுநேர் 
கூறுவதன்முன் அவர் தங்குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்."

பாடல் விளக்கம்:

ஒப்பற்ற பெருஞ் செல்வத்தின் வரும் வளங்கள் யாவும் பெருகிவர, அப்பொருள்கள் எல்லாவற்றையும், கங்கை நிலவிய சடையையுடைய அறவாழி அந்தணனாம் சிவபெருமானின் அடியவராக விளங்கும் முடிவிலாத பெருந்திரு உடையவர்களே, தம்மை அடிமைகொள்ளுதற்குரியராவர் என்று கருதி, அவ்வடியவர்கள் நேராக எதனையும் வேண்டும் முன்பே, அவர்களின் குறிப்பறிந்து கொடுத்து வரும் பாங்கினர்.

மானக்கஞ்சாற நாயனர் புராணம்


கஞ்சாறு என்னும் நகரம் சோழ நாட்டிலுள்ளது. கொம்புத் தேனின் சாறும், கரும்பின் சாறும் நிறைந்து இருந்தமையால் இத்தலத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது. இத்தகைய வளமிகு பதியிலே, மானக்கஞ்சாறர் என்னும் சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரை மானகாந்தன் என்றும் அழைப்பர். இவரது மனைவியாரின் பெயர் கல்யாண சுந்தரி என்பதாகும். அரசர்க்குச் சேனாதிபதியாக இருந்து வரும் வேளாண் மரபிலே அவதரித்த இவரிடம் சிவபக்தி நிறைந்திருந்தது. சிவனடியார்களை வழிபடுவதையே தம் வாழ்வின் முழுப்பயன் என்று எண்ணிய இத்தொண்டர் முக்காலமும் சிவனடியார்களைப் பற்றிய சிந்தனையிலே வாழ்ந்து வந்தார். 

இறைவனின் திருவடிக் கமலத்திற்கு மனத்திலே திருக்கோயில் அமைத்து வழிபட்டு வந்தார். இவரிடம் வேண்டிய அளவிற்குச் செல்வ வளமும், சொல்வளமும், நிலவளமும் நிறைந்திருந்தன. எல்லாப் பேறுகளையும் பெற்றும் மக்கட்பேறு ஒன்று மட்டும் இல்லாமல் போனது மானக்கஞ்சாறருக்கும் அவர் மனைவியாருக்கும் அளவு கடந்த வேதனையைக் கொடுத்தது. இருவரும் எந்நேரமும் இறைவனின் திருவருளையே எண்ணி மழலைச் செல்வத்தை தந்தருள வேண்டி நின்றனர். பல விரதங்களை மேற்கொண்டனர். எம்பெருமானின் திருவருளால் மானக்கஞ்சாறர் மனைவியாருக்குப் பெண் குழந்தையொன்று பிறந்தது. 

காலம் வளர்ந்தது. அந்த பசுங்கொடியும் வளர்ந்தது. கொடிப் படரப் பந்தல் என்பது போல் பெண் வாழ மணப்பந்தல் தானே முக்கியம்? மானக் கஞ்சாறர் தம் மகளைப் பருவம் வந்ததும் தக்க இடத்தில் மணம் முடித்து மகிழ வேண்டும் என்று விரும்பினார். சிவபெருமானிடத்து அன்புடையவராகி ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் மானக்கஞ்சாறருடைய மகளின் அழகையும், அறிவையும், அவர்கள் குலப்பெருமையையும் கேள்வியுற்று முதியவர்களை அனுப்பித் தமக்கு அப்பெண்ணை மணம் பேசுமாறு செய்தார். 

முதியோர்கள் மானக்கஞ்சாறரைச் சந்தித்துத் திருமணப் பேச்சு நடத்தினர். மானக் கஞ்சாறர் முழுமனதுடன் தமது மகளை கலிகாமருக்கு மணமுடிக்கப் பூரணமாக ஒப்புக் கொண்டார். ஆண் வீட்டாரும் பெண் வீட்டாரும் கலந்து ஆலோசித்து விரைவிலேயே திருமணத்திற்கு நந்நாளும் குறித்தனர். மணமகள் மாளிகையிலேயே திருமணத்தை நடத்துவதாகத் தீர்மானம் செய்யப்பட்டது. திருமணத்திற்கு முதல் நாள் கலிக்காம நாயனார் உறவினர்களுடன் புடைசூழ வெண்புரவி மீது அமர்ந்து மணமுரசுகள் முழுங்கப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். இவர் கஞ்சாறுருக்கு சமீபத்தில் ஓரிடத்தில் வந்து தங்கினார். திருமண நாளன்று எம்பெருமான் அந்தணர் கோலம் அணிந்து மானக்கஞ்சாறர் மனைக்கு எழுந்தருளினார். 

கங்கை அணிந்த திருச்சடையிலே உருத்திராட்ச மாலையை சுற்றியிருந்தார். குண்டலம் இரண்டும் காதுகளிலே ஒளிர, திருத்தாழ்வடம் திருமார்பிலே பிரகாசிக்க பட்டிகையும், கருநிறம் பொருந்திய மயிர்வடப் பூணூலும், திருநீற்றுப் பையும், தோளிலே அணிந்திருக்க, நெற்றியும், திருமேனியும், திருநீற்றினைப் பெற்றிருக்க அரனார் அந்தணர் கோலத்திற்கு ஏற்பத் தம் வடிவத்தை கொண்டிருந்தார். இத்தகைய சூரியகோடிப் பிரகாசத்தோடு எம்பெருமான் மானக் கஞ்சாறர் மனையை அடைந்தார். 

சிவனடியார் தம் மனை நோக்கி மகளின் மணநாள் அன்று எழுந்தருள்வது கண்டு மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் அடியார். அவர் தம் பொற்பாதங்களில் விழுந்து வணங்கி எழுந்தார். தேவரீர்! எழுந்தருள இங்கு யாம் என்ன தவம் செய்தோமோ? என்று முகமன் கூறினார். வலம் வந்து வணங்கினார் மானக் கஞ்சாறர். தோரணம் தொங்கும் பந்தலிலே மங்கள இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அது கண்டு அரனார் ஒன்றுமறியாதவர் போல, இங்கு ஏதாவது மங்கள காரியம் இன்று நடக்க இருக்கிறதோ? என்று கேட்டார். ஆம், ஐயனே! இந்த அடியேனின் மகளுக்குத் திருமணம் என்று கூறி மீண்டும் அடியாரை வணங்கிய திருத்தொண்டர் அகத்துள் சென்று திருமணக் கோலத்திலிருக்கும் தம் மகளை அழைத்து வந்தார். மணப்பெண்ணும் மாத் தவசியின் காலில் விழுந்து வணங்கினாள். மங்களம் உண்டாகட்டும் என்று மணப்பெண்ணை மனங்குளிர வாழ்த்தினார் பெருமான்! சிவனாரின் அருட்கண்கள் மணப்பெண்ணின் சுருளேறிய நெடுங்கூந்தலை நோக்கின. 

கார் போல் கறுத்து நாற்றுப்போல் அடர்ந்து ஆலம் விழுதுபோல் நீண்டிருந்த கூந்தலைப் பார்த்த பரமன், இவளுடைய கூந்தல் கிடைத்தால் எம்முடைய பஞ்சவடிக்கு உதவும்போல் இருக்கிறதே என்றார், பஞ்சவடி என்பது தவசிகள் மார்பில் அணியும் பொருட்டு முடியினால் அகலமாக பின்னப்பட்டிருக்கும் பூணூலில் ஒரு வகை. (பஞ்சம் - விரிவு; வரி - வடம்). இவ்வாறு விமலர் தம் விருப்பத்தைத் திருவாய் மலர்ந்து மொழிந்தது தான் தாமதம், மானக்கஞ்சாறர் சற்றும் சினம் கொள்ளவில்லை. சந்தோஷம் மிகக் கொண்டார். 

அகத்துள் சென்றார். கத்தியொன்றை எடுத்து வந்தார். தாம் செய்யப்போவது அமங்கலமான செயல் என்று கூட எண்ணினாரில்லை. அடியாரின் விருப்பத்தையே பெரும் பேறாகச் சிந்தையில் எண்ணியிருந்த நாயனார் தம் மகளின் பூமலர் கொத்தணிந்திருந்த அழகிய நெடுங் கருங்கூந்தலை நொடிப் பொழுதில் அடியோடு அரிந்தார். அதனைத் தவசியின் திருக்கரத்தில் வைப்பதற்காக நிமிர்ந்து பார்த்தபோது அங்கே தவசியைக் காணோம். வானத்திலே பேரொளி திகழ பரமன் உமையாளுடன் அவ்வடியார்க்கு ஆனந்தக் காட்சி அளித்தார். 

அடியாரும் மனைவியும் மகளும் நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அப்பொழுது விண்வழியே அசரீரி வாக்கு ஒலித்தது. அடியார் மீது நீவிர் காட்டும் பக்தியை உலகறியச் செய்தோம் அத்தோடு, எப்பொழுதும் எம் அருகிலேயே இருக்கும் சிவலோக பிராப்தியையும் அளித்தோம் என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். நாயனார், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரித்தார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். தந்தையும், மகளும், சிவநாமத்தைச் செப்பியவாறு நிலத்தில் வீழ்ந்து பணிந்து எழுந்தனர். 

இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோர் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். இத்தருணத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க கலிக்காமரும் திருமண இல்லத்தை வந்தடைந்தார். பெண் வீட்டார் முறையோடு மணமகனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இறைவன் அருள்செய்த திரு நிகழ்ச்சியை அங்குள்ளோர் மூலம் கூறக் கேட்க கலிக்காமர் பெருமகிழ்ச்சி பொங்கினார். தாம் முற்பிறப்பில் மாதவம் செய்ததால் தான் இப்பிறப்பில் இறைவனுக்குக் கூந்தலைக் கொடுத்த அறமகள் தமக்கு மனைவியாக வருகிறாள் என்று மனதிலே எண்ணிப் பெருமிதம் பூண்டார் கலிக்காமர். 

கூபமுகூர்த்த வேளையில் மானக்கஞ்சாறரின் மகளுக்கும், கலிக்காமருக்கும், மங்கலம் பொங்கும் மனையிலே இறைவன் திருவருளோடு திருமணம் சிறப்பாக நடந்தது. தேவ துந்துபிகள் இன்னிசை நாதம் எழுப்ப, விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர். மானக்கஞ்சாறரும் அவரது மனைவியாரும், மண்ணுலகில் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இறைவனுக்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து சிவலோகப் பதவியை எய்தினார். 

"ஒருமகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரில் புக்க மாவடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன்."

பாடல் விளக்கம்:

தம் ஒரே ஒரு மகளின் கூந்தலைத் திருமண நாளன்று ஒப்பற்ற மாவிரதியாருக்கு அரிந்து கொடுத்த பெருமையுடைய மானக்கஞ்சாற நாயனாரின் பெருமையைப் போற்றுதல் என் அளவில் இயலுவதாகுமோ? ஆகாது. பொருந்திய நில வெடிப்பிலே சிதறுண்டு சிந்திய மாவடுவைக் கடித்திடும் போது கேட்கப்படும் `விடேல்` என்னும் ஓசையை அன்பு மீதூர்ந்த உரிமையால் கேட்க வல்லாராயஅரிவாட்டாய நாயனாரின் திறம் பற்றி இனிச் சொல்லலுற்றேன்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment