Saturday, 23 July 2016

13 அரிவாட்டாய நாயனார் புராணம்

“எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்” 

"பூசைப் பொருட்கள் தவறித் தரையில் உள்ள நில வெடிப்பில் சிந்தியமையால் தம் கழுத்தை தாமே அறுக்க முனைந்த வேளாளர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நீள்நெறி நாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஞானாம்பிகை

அவதாரத் தலம் : கணமங்கலம்

முக்தி தலம் : கணமங்கலம்

குருபூஜை நாள் : தை - திருவாதிரை

"நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த 
அல்லல் தீர்த்தாள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு 
எல்லையில் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன் என்று 
ஒல்லையில் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்."

பாடல் விளக்கம்:

நல்ல செங்கீரையும், தூய மாவடுவும், அரிசியும் சிந்திப் போயதால், 'எம்மை அல்லல் தீர்த்து ஆட்கொள வல்லாராகிய பெருமான் இன்று திருவமுது செய்திடும் அப்பேற்றை, எல்லையில்லாத தீமையுடைய அடியேன் இங்குப் பெற்றிலேனே' என்று சொல்லி, இதற்கு இதுவே தீர்வாகும் என்று உடனாக இடுப்பில் செருகியிருந்த தம் அரிவாளை எடுத்துத் தமது கழுத்தில் மாட்டித் தன் மிடற்றினை அரியல் உற்றார்.

அரிவாட்டாய நாயனார் புராணம்


கணமங்கலம் என்னும் ஊர் சோழவள நாட்டின் செழிப்பிற்கு இலக்கணமாய் அமைந்துள்ள வளம் பொருந்திய தலங்களிலே ஒன்றாகும்! நீர்வளமும், நிலவளமும், இறைவளமும் ஒருங்கே அமையப் பெற்ற தலத்திலே தாயனார் என்னும் சிவனடியார் அவதாரம் செய்தார். இவர் வேளாண் மரபைச் சேர்ந்தவர். சிவனடியார்களிடத்துப் பேரன்பு மிக்க இத்தொண்டர், இறைவனுக்குச் சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும், மாவடுவையும் நிவேதனப் பொருட்களாகத் தினந்தோறும் தவறாமல் அளித்து வந்தார். 

தாயனார் கோவிலுக்குச் செய்து வந்த திருப்பணிகள் பலவற்றுள் இதை ஒரு முக்கியத் திருப்பணியாகக் கொண்டிருந்தார். இவரது மனைவியும் இவரைப் போலவே இறைவனிடம் பக்தி கொண்டிருந்தாள். கணவனும் மனைவியும் தெய்வப் பணியை மட்டுமே வாழ்க்கையில் முக்கியமாகக் கொண்டிருந்தனர்! இவ்வாறு இறைவனுக்குத் தவறாமல் பணிபுரியும் இவ்வன்பர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக் கண்டு அடியார் சற்றும் மனம் தளரவில்லை. 

தாம் செய்து வரும் தெய்வத் திருப்பணியை மட்டும் எப்பொழுதும் போல் தவறாது செய்து வந்தார். வறுமை நாளுக்கு நாள் அதிகமாயிற்று. அந்த நிலையிலும் அடியார் சற்று கூட மனம் தளரவில்லை. கூலி ஆட்களை வைத்து வேலை வாங்கிய நாயனார் கூலிக்கு நெல் அறுக்கும் பணியில் இறங்கலானார். கூலி வேலை செய்து கிடைக்கும் நெல்லில் செந்நெல்லைக் கோயில் நைவேத்தியத்துக்கும், கார்நெல்லை தம் உணவிற்கும் வைத்துக் கொள்வார். 

இங்ஙனம் வறுமையையும் ஒரு பொருமையாக எண்ணி வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு இறைவனின் சோதனை ஏற்பட்டது. தொண்டர்க்குக் கிடைத்த கூலி முழுவதும் செந்நெல்லாகவே கிடைத்தது. நாயனாருக்குப் பெருமிதம் தாங்கவில்லை. செந்நெல் முழுவதையுமே கோயிலுக்கு வழங்கினார். இதனால் இவரது குடும்பத்திற்கு அரிசி இல்லாமற் போனது. அடியார் கீரையைப் பக்குவம் செய்து சாப்பிடத் தொடங்கினார். 

நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் வந்தது. அந்த சமயத்தில் அடியார் தண்ணீரைக் குடித்துக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொண்டார். இறைவனுக்கு திருவமுது படைப்பதற்காகவாவது நல்ல செந்நெல் கிடைக்கிறதே என்ற மனக்களிப்போடு தமது கடமையைத் தவறாது நடத்தி வந்தார் அடியார். ஒருநாள் நாயனார் இறைவனுக்கு திருவமுது படைப்பதற்கான செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஓர் கூடையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டார். பசியால் ஏற்பட்ட சோர்வு அவரை மிகவும் வருத்தியது.

அடியாருடன் அவரது மனைவியும் பஞ்சகவ்வியம் எடுத்துக்கொண்டு நடக்க முடியாமல் சென்று கொண்டிருந்தாள். நாயனார் பசியினால் நிலத்தில் விழப்போனார். அம்மையார் தாங்கிக் கொண்டார். கூடையில் சுமந்து வந்த நிவேதனப் பொருள்கள் கீழே விழுந்து சிதறின. நாயனார் மனம் கலங்கினார். திருவமுது தரையில் வீழ்ந்த பின்னர் திருக்கோயிலுக்கு சென்று தான் என்ன பயன்? என்று எண்ணித் துடித்தார்.அடியார் உலகத்தில் உயிர் வாழவே விரும்பவில்லை. தம்மிடம் இருந்த அரிவாளால் கழுத்தை அரிந்துகொள்ள துணிந்தார்.

அவரது பக்தியின் ஆவேசத்தைக் கண்டு உடன் வந்த மனைவியார் செய்வதறியாது திகைத்தாள். அவள் கழுத்தில் கிடக்கும் மாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றியவாறு இறைவனை வணங்கி நின்றாள். அடியாரின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட அம்பலத்தரசன் தொண்டரைத் தடுத்தாட் கொண்டார். திருவமுது சிந்திய நிலவெடிப்பிலிருந்து உருத்திராக்ஷ மாலையும், திருவெண்ணீரும் அணியப் பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது. 

அத்திருக்கரம் நாயனாரின் கையைப் பற்றியது. இறைவனின் ஸ்பரிசத்திலே மெய் உருகி நின்றார் நாயனார். அவர் கை நின்றும் அரிவாள் தானாக நழுவியது. நிலத்தில் இருந்து வெடுக் வெடுக் என்று ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட நாயனார் தான் நிலத்தில் கொட்டிய மாவடுவை எம்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அறிகுறியாகத்தான் இவ்வோசை கேட்கிறது என்று உணர்ந்து அகமகிழ்ந்தார். 

நினைத்த மாத்திரத்திலேயே எழுந்தருளி அடியார்கள் துயர் துடைக்கும் இறைவனின் திருவருட் கருணையை எண்ணி எண்ணி மனம் உருகிய நாயனாரும் அவர் மனைவியாரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அடியவரை ஆட்கொண்ட இறைவன் சக்தி சமேதராய்த் தம்பதியர்க்குப் பேரானந்த காட்சி அளித்தார். இறைவன் நாயனாருக்கும் அவர் தம் மனைவியாருக்கும் என்றென்றும் தம் அருகிலேயே இருந்து மகிழ்ந்து வாழும் பேரின்பப் பேற்றினை அருளினார். 

அரிவாளால் தம் கழுத்தை அரியத் துணிந்தமையால் இவருக்கு தாயனார் என்ற நாமத்துடன் அரிவாள் தாய நாயனார் என்னும் சிறப்பு திருநாமம் ஏற்பட்டது. அரிவாள் தாய நாயனாரும் அவரது மனைவியாரும் உலகில் நெடுங்காலம் வாழ்ந்து, இறைவனுக்குப் பற்பல அரிய திருப்பணிகளைச் செய்தனர். இருவரும் பிறவாப் பெருவாழ்வு பெற்று இறைவனின் திருவடி நிழலிலே ஒன்றினர்.

"முன்னிலை கமரே யாக முதல்வனார் அமுது செய்யச்
செந்நெலின் அரிசி சிந்தச் செவியுற வடுவின் ஓசை
அந்நிலை கேட்ட தொண்டர் அடியிணை தொழுது வாழ்த்தி
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவா வழுத்தல் உற்றேன்."

பாடல் விளக்கம்:

தமது முன்னிலையாய இடம் நிலவெடிப்பேயாக, முதல்வனாராய சிவபெருமான் அமுது செய்திடக் கொண்டுவரச் சென்ற செந்நெல்லின் அரிசி சிந்திடவும், மாவடுவினைக் கடித்தலால் ஆய "விடேல்" எனும் ஓசை தம் செவியில் கேட்கப் பெற்றிடவும் வல்ல தொண்டராய அரிவாட்டாயரின் திருவடிமலர்களைத் தொழுது, வாழ்த்தி, திருவருள் சிறந்து என்றும் வாழ்ந்திருக்கும் ஆனாய நாயனாரின் செயலினை யான் அறிந்தவாறு போற்றத் தொடங்குகின்றேன்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment