Sunday, 31 July 2016

50 நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்

"நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற 
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்."

"சமண சமயத்தவராக இருந்து திருஞானசம்பந்தரால் சைவ சமயத்துக்கு மாறியவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாதர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மீனாட்சியம்மை

அவதாரத் தலம் : மதுரை

முக்தி தலம் : மதுரை

குருபூஜை நாள் : ஐப்பசி - பரணி

"வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கரசியார்
களபமணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார்
இளவள வெண்பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவில் புகழ்பெற விளக்கி அருள்பெருக அரசு அளித்தார்."

பாடல் விளக்கம்:

சோழ மன்னரின் மகளாரான மங்கையர்க்கரசியாரின் கலவைச் சாந்து அணிந்த கொங்கைகள் மூழ்கப் பெற்ற அகன்ற மார்பையுடைய பாண்டியரான "நின்றசீர் நெடுமாறனார்" இளைய பாம்பையும் வெண்மையான பிறையையும் சூடிய சிவபெருமானுக்கு, ஏற்ற திருத்தொண்டுகளை எல்லாம் அளவில்லாத புகழ் பெரும்படிச் செய்து, சிவனருள் பெருகுமாறு ஆட்சி செய்தார்.

நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்



பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசு புரிந்து வந்தார். இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியார் என்னும் சிவக்கொழுந்தைப் பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றார். இவர் சமணர்களது மாய வலையில் சிக்கிப் பின்னர் ஆளுடைப் பிள்ளையாரின் திருவருளால் சைவ சமயம் சார்ந்து சைவ ஆகம நெறிப்படி ஒழுகினார். 

சங்கத்தமிழ் வளர்த்ததோடு, சைவத்தையும் வளர்த்து, வான்புகழ் பெற்றார். ஒரு சமயம், வடபுலத்துப் பகை மன்னனை திருநெல்வேலியில் நடந்த கடும்போரிலே தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். திருநெல்வேலி களத்திலே வெற்றி கண்ட நெடுமாறனைக் கன்னித் தமிழ்த் தெய்வப் புலவர்கள், திருநெல்வேலி வென்ற நெடுமாறர் என்று சிறப்பித்தார்கள். 

இத்தகைய தமது சிறந்த வெற்றிக்குக் காரணம் சிவனாரின் திருவருள் ஒன்றேதான் என்பதை உணர்ந்த நெடுமாறன் ஆலயப் பணிகள் பல புரிந்து ஆலவாய் அண்ணலின் அருளோடு அரசாண்டார். உலகில் வீரத்தோடு, திருநீற்று பெருமையை ஓங்கச் செய்த புகழோடு நெடுங்காலம் அரசாண்ட நின்றசீர் நெடுமாற நாயனார் சிவபாதமடைந்து இன்புற்றிருந்தார்.

"பொன்மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதராம்
தென்மதுரை மாறனார் செங்கமலக் கழல் வணங்கிப்
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடுங்கடல் பரப்பைத்
தொன்மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம்."

பாடல் விளக்கம்:

பொன் பூண்ட மதில்சூழ்ந்த சீகாழிக் கதிபாராகி ஆளுடைய பிள்ளையாரது திருவடிச் சார்பினாலே புனிதராகிய தென்மதுரையில் அரசாண்ட நெடுமாறனாரது செந்தாமரை மலர்போன்ற பாதங்களை வணங்கி, அத்துணைகொண்டு பல மணிகளையும் அலைகளாலே நீர்விளிம்பிற் பரப்புகின்ற நீண்ட கடற்கரையில் உள்ள தொன்மையாகிய மயிலாபுரியில் வாழ்ந்த வாயிலார் நாயனாரதுதிருத்தொண்டின் தன்மையைத் தொழுது துதித்துச் சொல்வோம்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

No comments:

Post a Comment