"உருத்திர பசுபதிக்கு அடியேன்"
"நாள் தோறும் திருவுருத்திர மந்திரங்களை ஓதி முக்தியடைந்த மறையவர்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பசுபதிநாதர்
அவதாரத் தலம் : திருத்தலையூர்
முக்தி தலம் : திருத்தலையூர்
குருபூஜை நாள் : புரட்டாசி - அஸ்வினி
"ஆய அந்தணர் அருமறை உருத்திரம் கொண்டு
மாயனார் அறியா மலர்ச் சேவடி வழுத்தும்
தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி
நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்."
பாடல் விளக்கம்:
அரிய மறைப் பொருளாய உருத்திர மந்திரத்தைக் கொண்டு, திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராச் சேவடியைப் போற்றிடும் தூயதான அன்புடன், இடையறாது அவ்வுருத்திர மந்திரத்தை எண்ணுதலையே விரும்பிய நெஞ்சினராகி, அதனையே ஓதுகின்ற பணியில் தலை நின்றார்.
உருத்திரபசுபதி நாயனார் புராணம்
பால்வளம் செறிந்த சோழவள நாட்டிலே பூம்பொழிகள் மிகுந்துள்ள திருத்தலையூர் அமைந்திருந்தது. இவ்வூரில், எந்நேரமும், அந்தணர்களின் வேத பாராயணம் வானெட்ட ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய் மாதம் மும்மாரி பெய்யும். அந்த அளவிற்கு அருளுடைமையும், பொருளுடைமையும் ஓங்கிட அன்பும் அறனும் சால்பும் குன்றாது குறையாது நிலைபெற்று விளங்கின.
இத்தகைய சீரும், சிறப்புமிக்கத் திருத்தலையூரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் இருந்தார். இவர் தமது மரபிற்கு ஏற்ப வேத சாஸ்திர, இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார். பசுபதியார் அருமறைப் பயனாகிய திருஉத்திரம் என்னும் திருமந்திரத்தை இடையறாமல் பக்தியுடனும், அன்புடனும் சொல்லிக் கொண்டேயிருப்பார். திரு அல்லது ஸ்ரீ என்பது திருமகளாகிய செல்வம், அழகு ஆகிய பொருள்களில் சொல்லப்படுவதால் எம்பெருமான் ஸ்ரீ ருத்திரன் அல்லது திருவுருத்தன் என்னும் திருநாமம் பெற்றார். ருத் என்றால் துன்பம் என்றும் திரன் என்றால் தீர்ப்பவன் என்றும் பொருள் கொள்ளப்படுவதால் எம்பெருமான் ருத்திரன் என்னும் திருநாமம் பெற்றார்.
உருத்திரராகிய சிவபெருமானுக்குரிய திருமந்திரம் உருத்திரமாகும். சிவபெருமானுக்கு உருத்திரம் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின. எம்பெருமானுடைய பெருமையைச் சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப்பொருளாகும். அருமறைப் பயனாகிய உருத்திரம் என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப் பெற்றுள்ள இத்திரு மந்திரத்ததையே தமது மூச்சாகவும், பேச்சாகவும் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார்.
இவர் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் சிவத்தொண்டு புரிந்து வந்தார். இவர் தினந்தோறும் தாமரைப் பொய்கையில் நீராடி கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலைக்கு மேல் கை குவித்து உருத்திர மந்திரத்தை ஓதுவார். இரவென்றும் பகலென்றும் பாராமல் எந்நேரமும் உருத்திரத்தைப் பாராயணம் செய்வதிலே தம் பொழுதெல்லாம் கழித்தார். இது காரணம் பற்றியே இவருக்கு உருத்திர பசுபதியார் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
உருத்திர பசுபதியின் பக்தியைப் பற்றி ஊரிலுள்ளோர் அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணமாகவே இருப்பர். உருத்திர பசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்கிறது. உருத்திரத்தின் பொருளான எம்பெருமான் திருவுள்ளம் கனிந்து, பசுபதியாருக்குப் பேரருள் புரிந்தார். உருத்திரபசுபதி நாயனார் இறைவனுடைய திருவடி அருகில் அரும்பேற்றைப் பெற்றார்.
"அயில்கொள் முக்குடுமிப் படையார் மருங்கு அருளால்
பயில் உருத்திர பசுபதியார் திறம் பரசி
எயில் உடைத் தில்லை எல்லையில் நாளைப் போவாராம்
செயல் உடைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்."
பாடல் விளக்கம்:
கூர்மை பொருந்திய முத்தலைச் சூலப்படையையுடைய சிவபெருமானின் அருகே, அருளால் விளங்கி வாழ்கின்ற உருத்திரபசுபதியார் தம் தொண்டின் சீர்மையை வணங்கி, இப்பால் ஒளியுடைய மதில் சூழ்ந்த தில்லைப்பதியின் எல்லையில் "நாளைப் போவேன்" எனச் சொல்லி வாழ்வு பெற்றதிருநாளைப் போவாரின் திறத்தினை இனி மொழிகின்றாம்.
நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment