இந்தியாவில் இப்போது சிலைகளுக்கும் கோயில்களுக்கும் குறைச்சலே இல்லை. சினிமா நடிகைக்கு கோயில்களும், கிரிக்கெட் வீரர்களுக்கு சிலைகள் எழுப்புவதுமென ஆளாளுக்கு கிளம்பி விட்டார்கள். அதேவேளையில் தெய்வ சிலைகளும்,ஞானிகளின் சிலைகளும் பார்த்த மாத்திரத்தில் நம் கர்வத்தை பிடுங்கிக்கொண்டு நான் என்ற அகந்தையை விரட்டியடித்து விடுகின்றன. உலகின் பல்வேறு நாடுகள் உயர உயரமான சிலைகளை எழுப்பியுள்ளன. இவற்றில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் புத்தர் சிலைகள் உலகில் பல இடங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிக உயரமான சிலைகள் எங்கெங்கு உள்ளன, அவற்றின் உயரம் என்ன என்று பார்ப்போம்.
வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் சுவாமி ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பரிடால எனும் கிராமத்தில் வீர அபய ஆஞ்சநேய ஹனுமான் சுவாமி அமையப்பெற்றுள்ளது. 135 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த சிலை உலகிலேயே மிக உயரமான அனுமார் சிலையாகவும், இந்தியாவின் மிக உயரமான சிலையாகவும் அறியப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை இந்தியாவின் 2-வது உயரமான சிலையாக அறியப்படும் திருவள்ளுவர் சிலை 133 அடி உயரத்தில் இந்தியப் பெருங்கடல்,வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய மூன்று சமுத்திரமும் ஒன்றுகூடும் கன்னியாகுமரியில் வீற்றிருக்கிறது.
பத்மசம்பவா ஹிமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற ஏரிகளில் ஒன்றான ரேவால்சார் ஏரிக்கு அருகே இந்த பத்மசம்பவா சிலை அமைந்துள்ளது. இது 123அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
முருதேஸ்வர் அரபிக்கடல் பிரம்மாண்டமாய் பின்புறத்தில் காட்சியளிக்க, தன் வாகனமாம் நந்தி முன்புறத்தில் நிற்க, ஒட்டுமொத்த முருதேஸ்வர் நகரத்தையே மறைத்துக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் சிவபெருமான். 123 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிவன் சிலை உலகிலேயே 2-வது பெரிய சிவன் சிலையாக அறியப்படுகிறது. மேலும் சூரிய ஒளி நேரடியாக சிலை மேல் படும்போது ஒளிரும்படியாக இந்த சிவன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பத்மசம்பவா, நம்ச்சி சிக்கிம் மாநிலத்தின் அழகிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நம்ச்சிக்கு அருகே உள்ள சம்த்ருப்சே குன்றில் பத்மசம்பவா சிலை அமையப்பெற்றுள்ளது. 118 அடி உயரத்தில் மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிலை 2004-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
பசவா கார்நாடக மாநிலத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யான் நகரில் பசவா சிலை அமையப்பெற்றுள்ளது. 2012-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 108 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
மிந்த்ரோலிங் மடாலய புத்தர் சிலை இந்தியாவின் மிக உயரமான புத்தர் சிலையாக கருதப்படும் மிந்த்ரோலிங் மடாலய புத்தர் சிலை 107 அடி உயரமுடையது. இது உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் அமையப்பெற்றுள்ளது.
நந்துரா அனுமார் சிலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நந்துரா நகரில் இந்த பிரம்மாண்ட அனுமார் சிலை அமைந்துள்ளது. இது 105 அடி உயரத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
ஹர் கி பௌரி சிவன் சிலை உத்தரகண்ட்டின் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரி எனுமிடத்தில் இந்த உயரமான சிவன் சிலை அமைந்துள்ளது.100அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சிலை உலகின் 3-வது உயரமான சிவன் சிலையாகும்.
சின்மய கணாதீஷ்ய மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரில் இந்த உயரமான விநாயகர் சிலை அமைந்துள்ளது. 2001-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 85 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது
சிவகிரி, பீஜாப்பூர் உலகின் உயரமான சிவன் சிலைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த சிவன் சிலை பீஜாப்பூரில் உள்ள ஷிவாபூர் எனுமிடத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிவன் சிலை 85 அடி உயரமும், 1500 டன் எடையும் கொண்டது. இதன் காரணமாக இவ்வளவு பெரிய சிவன் சிலையை செய்வதற்கு 13 மாதங்கள் பிடித்திருக்கிறது.
போத்கயா புத்தர் சிலை பீகார் மாநிலத்தில் உள்ள புத்தர் ஞானம்பெற்ற இடமான போத்கயா நகரில் இந்த பிரம்மாண்ட புத்தர் சிலை அமைந்துள்ளது.1989-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 80அடி உயரம் கொண்டது.
ஹனுமான் வாடிகா ஓடிஸா மாநிலத்தின் ரூர்கேலா நகரிலுள்ள ஹனுமான் வாடிகா என்ற இடத்தில் இந்த அனுமார் சிலை அமைந்துள்ளது. இந்த சிலை75 அடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது
லிகிர் மடாலய தங்க புத்தர் சிலை ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள லிகிர் மடாலயத்தில் இந்த மைத்ரேய புத்தர் சிலை அமைந்திருக்கிறது. 1999-ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த சிலை 75 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது
பெங்களூர் கெம்ப் கோட்டை சிவன் சிலை பெங்களூர் ஏர்போர்ட் சாலையில் உள்ள கெம்ப் கோட்டையின் பின்னே இந்த பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்திருக்கிறது. இந்த சிலை 65 அடி உயரத்தில் மிகவும் நுணுக்கமாக கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கபட்டிருக்கிறது. இது 1995-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை உலகம் முழுவதுமிருந்து எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த சிவன் சிலையை வந்து பார்த்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment