"விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்."
"நாள் தோறும் தம் வலையில் அகப்படும் முதல் மீனை இறைவனுக்குப் படைத்த மீனவர்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காயரோகணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ நீலாயதாட்சியம்மை
அவதாரத் தலம் : நம்பியார் நகர்
முக்தி தலம் : நம்பியார் நகர்
குருபூஜை நாள் : ஆவணி - ஆயில்யம்
"வாகு சேர்வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர் தம் கழற்கு என விடும் இயல்பால்
ஆகும் நாள்களில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர்படி வேலையின் பட விட்டு வந்தார்."
பாடல் விளக்கம்:
அதிபத்த நாயனார் புராணம்
ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார். எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார். இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை.
அந்த மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது. ஒருநாள் அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அப்பொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள்.
அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார். அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.
"தம் மறம் புரி மரபினில் தகும் பெருந்தொண்டு
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி
மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்."
பாடல் விளக்கம்:
நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment