"கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்."
"சிவ வேடங்கொண்ட பணியாளனையும் வழிபட்டவர். மறுத்த மனைவி கையை வெட்டிய வணிகர்."
“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”
நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சுடர்க்கொழுந்தீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஆமோதனம்பாள்
அவதாரத் தலம் : பெண்ணாடம்
முக்தி தலம் : பெண்ணாடம்
குருபூஜை நாள் : தை - ரேவதி
"வெறித்த கொன்றை முடியார்தம் அடியார் இவர் முன் மேவுநிலை
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை
தறித்துக் கரக நீரெடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்."
பாடல் விளக்கம்:
கலிக்கம்ப நாயனார் புராணம்
வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். நாயனார் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார். அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள்.
மனைவியின் தயக்க நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார். சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார்.
கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார். கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார்.
சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்து அந்தர்த்தியாமியானார். நாயனார் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.
"ஓத மலிநீர் விடமுண்டார் அடியார் வேடம் என்று உணரா
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர்ச் சேவடி வணங்கிப்
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த
காதல் அன்பர் கலிநீதியார் தம் பெருமை கட்டுரைப்பாம்."
பாடல் விளக்கம்:
நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
No comments:
Post a Comment