Sunday, 31 July 2016

63 முழுநீறு பூசிய முனிவர் புராணம்

"முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திருமூலட்டானேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சிவகாமியம்மை

அவதாரத் தலம் : தில்லை

முக்தி தலம் : தில்லை

குருபூஜை நாள் : பங்குனி கடைசி நாள்

"சாதியினில் தலையான தரும சீலர்
தத்துவத்தின் நெறியுணர்ந்தோர் தங்கள் கொள்கை
நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர்
நித்தம் நியமத்து நிகழ் அங்கி தன்னில்
பூதியினைப் புதிய பாசனத்துக் கொண்டு 
புலியதளின் உடையானைப் போற்றி நீற்றை
ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை
அருமுனிவர் முழுவதும் மெய்யணிவாரன்றே."

பாடல் விளக்கம்:

பிறப்பொழுக்கத்தில் தலைமையான அற ஒழுக்கத்தை உடையவர்களாய், மெய்யுணர்வு உடையவர்களாய், தாம் கொண்ட அறநெறியில் தவறாது நிற்பவர்களாய்த் தொன்று தொட்டு வரும் மும்மலங்களையும் அறுத்த வாய்மையுடைய அரிய முனிவர்கள், முறையாகச் செய்துவரும் நாள்வேள்வியில் விளைத்து எடுத்த திருநீற்றைப் புதிய கலத்தில் வைத்துக் கொண்டு, புலித்தோலை உடுத்த இறைவரை வணங்கி, அத்திருநீற்றை மேனி முழுவதும் பூசிக் கொள்வர். இவர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப்படுவார்.

முழுநீறு பூசிய முனிவர் புராணம்


எம்பெருமானுடைய அடியார்கள் திருமேனியல் அணி செய்யும் சிவச்சின்னங்கள் திருவெண்ணீரும் உருத்திராட்சமும் ஆகும். திருநீறு கற்பகம், அநுகற்பகம், உபகற்பகம் என்று மூன்று வகைப்படும். இம்மூன்று வகையான திருநீற்றையும் அணிவதினால் பிறவிப் பிணியைப் போக்கி நலம் பெற மார்க்கம் ஏற்படுகிறது! நோயின்றிக் கன்றையுடைய பசுவின் சாணத்தைப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்து ஏற்று பஞ்சகவ்யம் விட்டுப் பிசைந்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிவராத்திரி அன்று சிவமந்திரத்தால் வேள்விகள் நடத்தி நெருப்பில் இடவேண்டும். கொழுந்து விட்டு எரியும் ஓமத்தீயில் சாணம் வெள்ளைப் பொடியாக நீராக எரிந்து விடுகின்றது. இத்திருநீற்றை சிவபெருமானார் திருவடிகளை வாழ்த்தி வணங்கி, பயபக்தியுடன் எடுத்தல் வேண்டும். இத்தகைய திருவெண்ணீறு கற்பகம் என உரைக்கப்படும். காட்டிலே உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைப் பொடி செய்து, ஆவின் நீரை ஊற்றி, நன்றாக பிசைந்து உலர்த்த வேண்டும். திருஓமம் வளர்த்து, கொழுந்து விட்டு எரியும் ஓமத்தீயில் இட்டு எரிக்க வேண்டும். இத்திருவெண்ணீறு அநுகற்பகம்.

பசுக்கள் மேயும் காட்டில் மரங்கள் பற்றி எரிந்து அதனால் உண்டான நீரும், பசுக்கள் கட்டி வைத்த இடங்களில் தீப்பற்றி வெந்துபோன நீரும், செங்கல் சுட்ட காளவாயிலில் உண்டான நீரும், ஆகிய இவற்றைத் தனித்தனியே பசுவின் நீரினால் நன்றாகப் பிசைந்து உலர்த்த வேண்டும். அவற்றைத் திருமந்திரம் ஓதி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட உருண்டைகளை மடங்களில் உள்ள சிவாக்கினியில் இட்டு வேக வைத்தல் வேண்டும். இப்படித் தீயில் இட்டு எடுத்த திருநீறு உபகற்பம் ஆகும்.

இந்தப்படி அல்லாது அகற்பம். இவற்றுள் எந்த வெண்ணீற்றையாயினும் உடல் முழுவதும் பூசிக் கொள்ளலாம். ஆனால் திருநீற்றை பூசிக்கொள்வதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதைத் தட்டாமல் கடைப்பிடித்தல் வேண்டும். தூய்மையில்லாத இடங்களில் நடக்கும் போது திருநீறு அணியவே கூடாது. திருநீற்றை அணியும் போது அவற்றைக் கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு முழுநீறு பூசிய முனிவர்களைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தொகையடியார்களில் ஒருவராக்கி சிறப்பித்துப் பாடி உள்ளார்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

No comments:

Post a Comment