Monday 18 July 2016

12 ஜோதிர் லிங்கம்(2.அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்)

12 ஜோதிர் லிங்கம்

2.அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில்




கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது.



ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில், நம் கண்களுக்கு விருந்தாகின்றது.

ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் "ரங்க மண்டபம்' எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது.  இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன.

மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.



சனகல பசவண்ணா நந்தி: இத்தலத்தில் பிரதான  மண்டபத்தில் உள்ள இந்த நந்தி கர்ஜனை செய்யும் போது கலியுகம் முடியும் என பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சாட்சி கணபதி: ஸ்ரீசைல சிகரத்திற்கு 2. கி.மீ. தூரத்தில் சாட்சி கணபதி திருக்கோயில் உள்ளது. மஹா விஷ்ணுவானவர், விநாயகரின் உருவத்தில் உட்கார்ந்திருந்திருக்கிறார். இந்த கணபதி தன்னை காணவரும் பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள், யார் இல்லாதவர்கள் என கைலாசத்தில் (ஸ்ரீ சைலத்தில்) உள்ள சிவபெருமானிடம் ஒரு பட்டியல் போட்டு கொடுப்பதால் இவரை சாட்சி கணபதி  என்பர். எனவே பக்தர்கள் தமக்கு மோட்சம் கிட்ட வேண்டும் என்று கருதி தத்தம் கோத்திரங்களை கூறி சாட்சி கணபதியை வணங்கிய பின் பக்தியுடன் ஸ்ரீ சைலம் வாயில் நுழைகின்றனர்.


No comments:

Post a Comment