Sunday 17 July 2016

திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு

திருத்தணி முருகன் கோயில் தல வரலாறு
 அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி 

முருகப்பெருமான் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படைவீடாகத் திகழ்வது திருத்தணிகைத் திருத்தலமாகும். 
முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபத்மாவுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, கோபம் தணிந்து, அமர்ந்த தலம் ஆதலின் இதற்குத் "தணிகை"  எனப் பெயரமைந்தது.
தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனிவர்களின் காம,  வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை, ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்தது. 




திருத்தணி

ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில்.

அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார்.  கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில், மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில்கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம், சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே எனவும், உலகில் மலைகள் பல இருப்பினும், சிவபெருமான் கயிலாய மலையினை காதலித்தது போல, முருகன் திருத்தணிகை மலையினை பெரிதும் விரும்பி, அங்கு மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கிறான் எனவும் இதனைச் சிறப்பித்து பாடியுள்ளார்.



திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது.  இங்கே அபிராஜிதவர்மன் (கி. பி. 875 -893) என்னும், பல்லவ மன்னனின் கல்வெட்டும், முதலாம் பராந்தகச் சோழன் (கி. பி. 907 -953 ) காலத்துக் கல்வெட்டும் காணப்படுவதனால், இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, இத்தலம் பல்லவர் சோழர் முதலிய தமிழ்நாட்டுப் பேரரர்சர்களால் போற்றப்படும் பெருமை பெற்றிருந்த செய்தி தெளிவுறத் தெரிகிறது. 


திருவிழாக்கள்


 முருகன் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால் இத்திருக்கோயிலின் ஆடிக்கிருத்திகை பெருவிழா முக்கிய திருவிழாவாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாவிற்கு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் 5இலட்சம் பக்தர்கள் மலர்காவடி, பால்காவடி போன்றவற்றை சுமந்தும், தலைமுடிகளை காணிக்கை செலுத்தியும் முருகனை தரிசித்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றி செல்கின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31  மற்றும் ஜனவரி 1 -ல் நடைபெறும் திருப்புகழ் திருப்படித்திருவிழா சுமார் 1 லட்சம் பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

திருவிழா விவரங்கள்
1. ஆங்கில புத்தாண்டு
ஜனவரி
2. தை பூசம்
ஜனவரி
3. மாசிப்பிரம்மோற்சவம்
பிப்ரவரி
4 . தவன உற்சவம் (3 நாட்கள்)
பிப்ரவரி, மார்ச்
5. மஹா சிவராத்திரி (1008   சங்காபிஷேகம் )
மார்ச்
6 . சித்திரை பிரம்மோற்சவம்
ஏப்ரல்
7 . 1008  பால்குட திருவிழா
ஏப்ரல்
8. வசந்த உற்சவம் (5 நாட்கள்)
ஜூன்
9. ஆடிக்கிருத்திகை
ஜூலை, ஆகஸ்டு
10. ஆடிப்பூரம்
ஆகஸ்டு
11. நவராத்திரி
செப்டம்பர், அக்டோபர்
12 . கந்த சஷ்டி, இலட்சார்ச்சனை திருவிழா
அக்டோபர், நவம்பர்
13 . கார்த்திகை கிருத்திகை (தீபத்திருவிழா )
நவம்பர், டிசம்பர்
14 . திருபுகழ் திருப்படித்திருவிழா
டிசம்பர் 31

No comments:

Post a Comment