உற்சவர் : -
அம்மன்/தாயார் : கொடியிடை நாயகி
தல விருட்சம் : முல்லை
தீர்த்தம் : அக்னி தீர்த்தம்
ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவடமுல்லைவாயல்
ஊர் : வடதிருமுல்லைவாயில்
பாடியவர்கள்: சுந்தரர்
தேவாரப்பதிகம்
திருவும் மெய்ப் பொருளும் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள் என்று எண்ணி ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே. -சுந்தரர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 22வது தலம்.
திருவிழா:
வைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்,
இத்தலத்தில் உள்ள சுயம்புலிங்கம், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். அந்நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப்பெற்று, முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால், ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள்.மூலவரின் விமானம் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி) அமைப்புடையது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 255 வது தேவாரத்தலம் ஆகும்.
பொது தகவல்:
இத்தலத்து விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருளுகிறார்.
பிரார்த்தனை:
பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர்த்த பிற நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்கிறார்கள். தலபெருமை: இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னருக்கு துணையாகச் சென்றதால், சுவாமியை பார்த்தபடி இல்லாமல், எதிர்த்திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு. அம்பாள் கொடி போன்ற அழகிய இடையுடன் இருப்பதால், கொடியிடைநாயகி எனப்படுகிறாள். வெள்ளிக்கிழமை பவுர்ணமி தினத்தில் இவளை வணங்கினால் பாவவிமோசனம் கிடைக்கும் என்பதும், இத்தலத்து வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பிரகாரத்தில் சோழபுரீஸ்வரர், லவ குசர்கள் வணங்கிய குசலபுரேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடனான சுப்பிரமணியர் உள்ளனர்.
தல வரலாறு:
பல்லாண்டுகளுக்கு முன்பு, வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியிருந்த வாணன், ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான். அப்போது, பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டது. மன்னன், யானையின் மீது இருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அவன் பயந்து போய், கீழே இறங்கி பார்த்தபோது, மண்ணிற்கு அடியில் இருந்த லிங்கத்தை பார்த்தான். லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவபெருமானின் வடிவமான லிங்கத்தை வெட்டிய வருத்தத்தில், உயிரையே மாய்க்கச் சென்றான். அப்போது சிவன் அவனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அம்பாளைக் கூட அழைக்காமல் தனியாக மன்னனுக்கு காட்சி தந்தார், " வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும், வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம்' என்றும் கூறி அருள் செய்தார். அதன்பிறகு இங்கு வந்த அம்பாள் சுவாமிக்கு வலதுபுறத்தில் எழுந்தருளினாள். பின் சிவன், நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். மன்னன், அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து, மாசிலாமணீஸ் வரருக்கு கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதைக் காணலாம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
No comments:
Post a Comment