வேத முதல்வன் உமா தேவியாரோடு வீற்றிருந்தருளும் தலம். இமய மாமலையின் வடக்கே திபெத் எல்லையில் அமைந்துள்ள தலம். இந்துக்கள் தங்கள் வாழ்நாள் யாத்திரையாகக் கொள்ளும்
ஒப்புவமையில்லா தலம். ஞான சம்பந்தர் திருக்காளத்தி தலத்திலிருந்து (ஞானக் கண்களால்) திருக்கயிலையைத் தரிசித்து திருப்பதிகம் பாடியருளி உள்ளார்.
நாவுக்கரசு சுவாமிகளின் திருப்பாதம் பதிந்த தலம். திருக்கயிலை மலையை நேரிலேயே தரிசித்து நான்கு திருப்பதிகங்களைப பாடியருளி உள்ளார் அப்பரடிகள். அவற்றுள் மூன்று 'போற்றித் திருத்தாண்டகங்கள்' என குறிக்கப் பெறுகிறது. சுந்தரரின் இறுதிப் பதிகம் பெற்ற தலமாகவும் திகழ்கிறது திருக்கயிலை. வள்ளலார் திருவருட்பாவில் திருக்கயிலையைப் போற்றியுள்ளார்.
நக்கீரர் 'கயிலை பாதி காளத்தி பாதி' எனும் தொகுப்பை 11ஆம் திருமுறையில் அருளியுள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழில் (ரசதகிரி என்று பெயரால் கயிலையைக் குறித்து) கயிலையிலுறையும் முருகக் கடவுளைப் போற்றுகிறார். காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கங்கையைச் சூடும் பரம்பொருளைத் தரிசித்த புண்ணியத் தலமும் இதுவே.
திருக்கயிலைக்கு 20 மைல் தொலைவில் அமைந்துள்ள மானசரோவர தீர்த்தம் அன்னை சதி தேவியின் வலது முன் கரம் விழுந்த சக்தி பீடமாகத் திகழ்கிறது. ஆதியில் அன்னையின் கரம் விழுந்ததால் மிகப் பெரும் அளவில் பள்ளமொன்று இவ்விடத்தில் உருவாகிறது. பின்னாளில் இங்கு தவமியற்ற வரும் மரீசி முனிவர் நீர் நிலைகள் அனைத்தும் உறைந்திருப்பதைக் காண்கிறார்.
நீராடி அனுஷ்டானம் புரிய வழியின்றி திகைக்கிறார். தந்தையான பிரமனைப் பிரார்த்திக்கிறார். நான்முகன் சிவபெருமானை உளமாறத் துதித்து வேண்ட, பரமனின் திருவருளால் கயிலை மலையிலுள்ள அனைத்து பனிக் கட்டிகளும் உருகி அன்னையின் கரம் வீழ்ந்த பெரும் பள்ளத்தை நிறைக்கிறது. இதுவே மானசரோவரம் எனும் பரம புண்ணியத் தீர்த்தம்.
அம்பிகையே இங்கு தடமாக விளங்கி அருள் புரிகிறாள். சமானமில்லாத பவித்திரத் தன்மை கொண்ட தீர்த்தம். கோடிப் பிறவிகளின் வினைகளை அடியோடு நீக்கி மோட்ச சாதனமாக விளங்கும் அற்புத தீர்த்தம். ஸ்காந்த புராணத்தின் 'மானஸ்காந்தம்' பகுதியில் மானசரோவர தீர்த்தத்தின் சிறப்பு பேசப் படுகிறது. மகாபாரதம் இந்த தீர்த்தத்தை 'பிந்துசாரா' என்ற பெயரால் குறிக்கிறது.
மானசரோவர தீர்த்தத்தினைப் பருகுவதும், இங்கு புண்ணிய நீராடுவதும் சகல பாவங்களையும் போக்கி கயிலைப் பதத்தை நல்க வல்லது. இத்தலத்துக்கு யாத்திரை செல்வோர் அதிகாலை மூன்று முதல் ஐந்து மணி வரையிலான நேரத்தில் இங்கு நிகழும் தெய்வீகத் திருக்காட்சியைக் காண முயல வேண்டும். தேவர்கள் நீராட வரும் சமயமது.
தேவர்கள் நுண்ணுடம்பு கண்களுக்குப் புலப்படாது. எனினும் பல ஜோதிகள் ஒன்றாக இந்த தீர்த்தத்தில் இறங்கும் காட்சியையும், சில நிமிட நேரத்துக்குப் பின் அவை மீண்டும் மேலேழும்பிச் செல்லும் காட்சியையும் பலர் தரிசித்துள்ளனர். கயிலை நாயகனின் திருவருள் கை கூடினால் நாமும் அக்காட்சியைத் தரிசிக்கலாம்.
திருக்கயிலை - அப்பர் தேவாரம் - போற்றித் திருத்தாண்டகம் (முதல் பாடல்):
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!!!
(திருவருட்பா - விண்ணப்பக் கலி வெண்பா - திருக்கயிலை)
சான்றோர் வணங்கு நொடித்தான் மலையில் வாழ்கின்ற
தேன்தோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த
இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல்
தாய்க்கும் கிடையாத தண்ணருள் கொண்டு அன்பர் உளம்
வாய்க்கும் கயிலை மலையானே!!!
No comments:
Post a Comment