சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் புரிந்தருளிய தலங்கள் என்று பொதுவில் இதனைக் குறிப்பர். இது மேலோட்டமான பார்வை.
கோடான கோடி அண்டங்களுக்குத் தனிப்பெரும் நாயகனாக விளங்கும் பரம்பொருளான இறைவன் தனக்குக் கட்டுப்பட்ட நிலையில் சிறு துகளென விளங்கும் ஒரு ஜீவாத்மாவை சம்ஹரிக்கும் செயலை 'வீரம்' என்று விளிப்பது சிறப்புடைமை ஆகாது.
இறைவனால் தர்மம் நிலைநாட்டப் பெற்ற எட்டு சிறப்புத் தலங்கள் என்று இத்தலங்களைச் சுட்டுவது ஏற்புடையது.
இத்தலங்களின் தல புராணங்களுள் சில, வியாசர் வடமொழியிலும் கச்சியப்பர் தமிழிலும் இயற்றிய புராணங்களோடு சிறிது மாறுபடுகின்றன. (உ):- தக்ஷனின் சிரம் கொய்யப்பட்ட தலமானது கங்கைக் கரையில் அமைந்துள்ள கனகல் (ஹரித்வார்) என்று கந்த புராணம் அறுதியிடுகிறது. திருப்பறியலூரின் தல புராணமும் இதே நிகழ்வினைப் பதிவு செய்கிறது.
இத்தகு தருணங்களில் மூல புராணங்களைப் பிரமாணமாகக் கொள்வதே ஏற்புடைய செயல். எனில் தல புராணத்தை எவ்வாறு விளங்கிக் கொள்வது? தஷனின் சிரம் கொய்த அம்சத்தைப் பிரதானமாகக் கொண்டு சிவபெருமான் 'திருப்பறியலூரில்' எழுந்தருளி உள்ளார் என்று பொருள் கொள்வது உத்தமம்.
பஞ்ச பூதத் தலங்களில் 'நீர்; நிலம்; நெருப்பு; ஆகாயம்; பூமி' என்று அந்தந்த அம்சங்களைப் பிரதானமாகக் கொண்டு சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். அது போன்றே இவ்வெட்டு தலங்களிலும் அந்தந்த புராண நிகழ்வுகளைப் புரிந்தருளிய அம்சத்துடன் பெருமான் சிறப்புற வீற்றிருந்து பேரருள் புரிகிறார்.
இவ்வெட்டு தலங்களில் 'வழுவூர்' நீங்கலாக மற்ற ஏழு தலங்களும் தேவாரப் பாடல் பெற்றவை. வழுவூருக்கு நேரடியாகப் பாடல்கள் இல்லையெனினும் நாவுக்கரசு சுவாமிகளின் ஊர்த் தொகை
தேவாரத்தில் இத்தலம் குறிக்கப் பட்டு தேவார வைப்புத் தலமாகத் திகழ்கிறது.
திருக்குறுக்கை:- மன்மதனை எரித்தருளிய நிகழ்வு. இந்நிகழ்வு ஆதியில் நடந்தேறியது திருக்கயிலையில்.
திருக்கடவூர்:- மார்க்கண்டேயருக்கு அருள் புரிய எமனைச் சம்ஹரித்து அருளிய தலம்.
திருக்கண்டியூர்: பிரமனின் ஐந்து முகங்களில் ஒரு முகத்தைக் கிள்ளி ஆணவம் போக்கியருளிய தலம்.
திருக்கோவலூர்:-அந்தகாசுரன் வதம். சிவபுராணம் திருக்கயிலையில் நடந்தேறியதாகக் குறிக்கிறது.
திருப்பறியலூர்:தஷனின் சிரம் கொய்யப் பட்ட நிகழ்வு. இந்நிகழ்வு நடந்தேறியது ஹரித்வாரில் உள்ள 'கனகல்' தலத்தில்.
வழுவூர்:கஜ சம்ஹாரம் புரிந்தருளிப் பின் தாருகாவனத்து முனிவர்களுக்கு அருள் புரிந்த நிகழ்வு.
திருவிற்குடி: சலந்தரனை வதம் புரிந்தருளிய நிகழ்வு.
திருவதிகை: திரிபுர சம்ஹார நிகழ்வு.
No comments:
Post a Comment