Tuesday, 8 November 2016

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி (அரியலூர்)



மூலவர் : வைத்தியநாதசுவாமி

அம்மன்/தாயார் : சுந்தராம்பிகை, பாலாம்பிகை

தல விருட்சம் : பனை மரம்

தீர்த்தம் : கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமிய ஆகமம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : மழுவாடி, திருமழபாடி

பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், சுந்தரர்

மூலவர் : வைத்தியநாதசுவாமி

தேவாரப்பதிகம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. -சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 54வது தலம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை. 



தல சிறப்பு:

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில்தான் நந்திக்கு திருமணம் நடைபெற்றது.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 54 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

இத்தல விநாயகர் சுந்தர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

அம்மன் : பாலாம்பிகை


பிரார்த்தனை

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்

நேர்த்திக்கடன்:

கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குள்ள ஜுரஹரருக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் படைக்கின்றனர். 



தலபெருமை:

இங்கு பாலாம்பிகை, சுந்தராம்பிகை சன்னதிகள் உள்ளன. பங்குனி புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. "நந்தி திருமணம் பார்த்தால், முந்தி திருமணம் நடக்கும்' என்ற பழமொழியின் அடிப்படையில் ஏராளமான கன்னியர், இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.ஒரே கல்லால் ஆன சோமாஸ்கந்தர் தனி சன்னதியில் அருளுகிறார். இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. சிவன் பிரகாரத்தில் இரண்டு தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். காத்தியாயினி அம்மன் சன்னதியும் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தலம் இது.பக்தர்கள் சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் இருக்கும் மூன்று குழிகளை நவக்கிரகங்களாக கருதி, அவற்றில் தீபமேற்றி வணங்குகின்றனர். மார்க்கண்டேய முனிவர், வைகாசி விசாகத்தில் மழுவேந்திய கோலத்தில் காட்சி தருகிறார். இதனால் இத்தலத்திற்கு மழுவாடி என்ற பெயரும் உண்டு.

சோமாஸ்கந்தர்

தல வரலாறு:

திருவையாறில் வசித்த சிலாத முனிவர் குழந்தை பாக்கியம் வேண்டி சிவனை நோக்கி தவம் இருந்தார். அப்போது அசரீரி தோன்றி,""முனிவரே! புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீர் யாகம் செய்யும் நிலத்தை உழும் போது, பூமியில் இருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். ஆனால், அந்தக் குழந்தை 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும்,''என்றது.சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில், மூன்று கண்கள், நான்கு தோள்கள், சந்திரனை அணிந்த முடியுடன் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டார். வியந்து போன அவர், பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் மறைந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது. அதற்கு "ஜபேசர்' என பெயரிட்டார். குழந்தைக்கு 14 வயது ஆனதும், இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்த முனிவர் மிகவும் வருத்தப்பட்டார். இதனையறிந்த ஜபேசர் திருவையாறிலுள்ள "அயனஅரி' தீர்த்த குளத்தில் ஒற்றைக்காலில் நின்றும் கடும் தவம் புரிந்தார். நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர் வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன. இவரோ தவத்தை விடவில்லை. இவரது தவத்தில் மகிழ்ந்த சிவன், ஜபேசரை குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார்.

அம்மன் : சுந்தராம்பிகை


அதன் பின் ஜபேசருக்கும், சுய சாம்பிகை என்ற பெண்மணிக்கும் திருமழபாடியில் திருமணம் நடந்தது.


திருமணத்திற்கு பின்னும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்து சிவகணங்களின் தலைமைப்பதவியையும், கயிலாயத்தின் முதல் வாயில் காவல் உரிமையையும், நந்தி தேவர் என்ற பெயரையும் பெற்றார்.


சிறப்பம்சம்:


அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்

No comments:

Post a Comment