Tuesday, 29 November 2016

கங்கை கரையில் - 10

சார்தாம் யாத்திரை - கேதார்நாத் 

இமயமலையில் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ள நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத்  மற்றும் கேதார்நாத் ஆகிய நான்கு தலங்களுக்கும், ஒரே சமயம் தலயாத்திரை செல்வது,  ''சார்தாம் யாத்திரை !'' என்றழைக்கப்படுகின்றது.

Image result for kedarnath god shiva

அந்த வரிசையில் மூன்றாவதாக நம் பார்க்க போகும் தலம் கேதார்நாத் ஆலயம்..

Image result for kedarnath

அம்பலத்தாடும் ஐயனை, மிக்கார் அமுதுண்ண தான் நஞ்சுண்ட நீலகண்டனை, ஜோதிர்லிங்கமாக இமயமலையில் இருந்து கொண்டு அருள்பாலிக்கும் சிவ பரம்பொருளை தரிசிக்க செல்லலாம்..


Image result for gauri kund near kedarnath
கௌரி குண்டம்

 முதலில் கௌரி குளத்தில் குளித்து விட்டு பர்வதராஜன் பொற்பாவையாக பிறந்து சிவபெருமானையே மணம் செய்து கொள்ள வேண்டும் என்று தவம் செய்த கௌரி அன்னையை தரிசனம் செய்து , பின்னர்  14  கி.மீ தூரம் நடைப் பயணமாக  மேலே மலை ஏறிச்  சென்று கேதாரீஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்..

Related image

சீதாப்பூருக்கு அடுத்த ஊர் ராம்பூர், அதற்கு அடுத்து கங்கை நதியும் மந்தாங்கனியும்  சங்கமமாகும் சோன் பிரயாகை. இங்கிருந்து கௌரிகுண்டம் 5 கி.மீ தூரத்தில்  சுமார் 1982 மீ உயரத்தில் அமைந்துள்ளது.  இங்கு தான் மலையன்னை, மலைமகள், வரைமகள், மலையரசன் பொற்பாவை, வரைமகள், பர்வதவர்த்தினி,   உமையம்மை, வரையரசன் பொன் மணி, சைலபுத்ரி, சைலசுதே என்றெல்லாம் அழைக்கப்படும்   அன்னை பார்வதி இமவான் புத்ரியாக பிறந்து , இந்த இமயமலையில் இளமென்பிடியாக வளர்ந்து, சிவபெருமானையே மணாளனாக அடைய வேண்டும் என்று தவம் புரிந்த இடம் ஆகும். அதற்கு பிரமாணம் தருவது போல் அருகில் தலை வெட்டப்பட்ட கணபதி கோவில் உள்ளது.   (அம்மை பார்வதி தான் நீராடும் போது யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரை கேட்டுக் கொண்டதால் சிவ பெருமான் வந்த போதும் அவர் தடுக்க அவர் திரிசூலத்தில் தலையை கொய்த கதை நமக்கு ஞாபகம் வரும்..)

Image result for kedarnath
 
ஆணவம், கன்மம் , மாயை என்னும் மும்மலமாம், தாராகாசுரன், சிங்கமுகன், சூரபத்மன் என்னும் சூரர்களை சம்ஹாரம் செய்ய குமரன் தோன்ற காரணமாக அமைந்த இடமும் இதுதான்.

கௌரி குண்டம் சுக்ல பக்ஷத்தில் (வளர் பிறையில்) மஞ்சள் நிறமாகவும், கிருஷ்ண பக்ஷத்தில் ( தேய் பிறையில்) பச்சை நிறமாகவும் காட்சி தருகின்றது. அருகிலேயே சுடு நீர்  ஊற்றுகள் உள்ளன.

Image result for kedarnath god

(முதல் அவதாரத்தில் ஜகத்ஜனனி, ஜகன்மாதா தக்ஷப்பிரஜாபதியின் மகளாக, சதிதேவியாக பிறந்து வளர்ந்து தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாக சிவபெருமானை கரம் பிடித்து, அதற்காக, தக்ஷன் சிவபெருமானை அவமதிக்க ஒரு யாகம் நடத்தி, அதில் சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் தராமல் நடத்த, அந்த முறையற்ற யாகத்தில் தேவர்கள் அனைவரும் கலந்து கொள்ள, அங்கு சென்ற சதிதேவி தனது தந்தையால் அவமானப் படுத்தப்பட்டு அவன் யாகத்தை அழித்து அவம் கொடுத்த உடலையும் அழித்துக்கொண்டு பின் இமவான் மேனை  திருக்குமாரத்தியாக மீண்டும் பிறப்பெடுத்த  கதையை அனைவரும் அறிவோம்...)

  இந்த முறையற்ற யாகத்தில் கலந்து கொண்டதனால் தான் தேவர்கள் அனைவரும் சூரபதமனிடம் சிறைபட்டு துன்பம் அடைந்தனர், அவர்களுக்கு  தனது அம்சமான சிவகுமாரனின் மூலம் விமோசனம் அளித்தவரும் அதே பரம கருணாமூர்த்தி சிவபெருமான் தான்.

கௌரி குண்டம்  வடநாட்டுத் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒன்று. இங்குள்ள ஆலயமே அநேகதங்காவதமாகும்.
இதில் சந்திர சூரியர் வழிபட்டுப் பேறு பெற்றனர். இதற்குத் திருஞானசம்பந்தரது பதிகம் ஒன்று உள்ளது.

Image result for kedarnath god

 இறைவன் : மனோன்மனி உடனுறை அநேகதங்காவதநாதர்

இறைவி : கௌரி

தேவாரப்பாடல் : திருஞான சம்பந்தர்

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.

 பொருள்:  தந்தத் திந்தத் தடம் என்ற ஒலிக் குறிப்போடு அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற அளவுபடுத்த முடியாத அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப் பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது என்று அன்னையின் ஞானப்பாலுண்ட ஆளுடையபிள்ளை இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.

கௌரிகுண்டத்தில் குளித்து விட்டு அன்னை கௌரியை தரிசனம் செய்து விட்டு தான் கேதார மலையேற வேண்டும்..
       


அன்னையும் ஐயனும் திடமான பக்தியை நமக்கு தெரியப்படுத்தும் பொருட்டு இந்த கௌரி குண்டத்தில் நடத்திய சிறு திருவிளையாடல் பார்ப்போம்....

 சூரர் கிளை மாய சிவகுமரன் தோன்ற வேண்டும். சிவபெருமானோ யோக தக்ஷிணாமூர்த்தியாக யோகத்தில் ஆழ்ந்திருந்தார், சிவசக்தியோ  இமவான் மகளாக அவதரித்து இமயமலையில் வளர்ந்து வந்தாள். இருவரது  திருமணம் நடைபெற வேண்டி தேவர்கள் மன்மதனை வேண்ட  அவனும் சிவபெருமான் மலர்க்கணை தொடுத்து நெற்றிக்கண்ணால் சாம்பல் ஆனான். ஆயினும் ஐயனின் யோகநிஷ்டை கலைந்தது.



நாரதர் பார்வதியிடம் சிவபெருமானை மணாளனாக அடைய தவம் செய்யுமாறு அறிவுறை கூறினார். பெற்றோர்களிடம் அனுமதி பெற்று கௌரி மரவுரி தரித்து  இமயமலையில் கடும் தவம் செய்து வரலானாள். அம்மைக்கு அருள ஐயன் ஜடாமுடி தரித்த ஒரு  கிழ வேதியர் வடிவம் கொண்டு வந்து சேர்ந்தார். அவ்வாறு வந்த வேதியரைக்கண்டு பார்வதி தேவி பெருமகிழ்ச்சியோடு அவரை வரவேற்று உபசரித்து வழிபட்டாள். பின்னர் உணவளித்தாள். பின்னர் உறங்கி எழுந்த அந்த  விருத்தரிடம் அன்னை மலைமகள் “ நீங்கள் எங்கு வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

திருவிளையாடல் தொடரும்...

திருச்சிற்றம்பலம்

கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...

No comments:

Post a Comment