Wednesday, 9 November 2016

அருள்மிகு திருக்கேதீச்வரர் திருக்கோயில், மன்னார் (இலங்கை)



மூலவர் : திருக்கேதீச்வரர்

அம்மன்/தாயார் : கவுரி

தல விருட்சம் : வன்னி மரம்

தீர்த்தம் : பாலாவி

ஆகமம்/பூஜை : -

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்






பாடியவர்கள்:

புத்திராய்ச் சில புனைதுகில் உடையவர்

புறனுரைச் சமண்ஆதர்

எத்தர் ஆகிநின்று உண்பவர் இயம்பிய

ஏழைமை கேளேன்மின்

மத்த யானையை மறுகிட உரிசெய்து

போர்த்தவர் மாதோட்டத்து

அத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே

தீச்சரம் அடைமின்னே. - 
திருஞான சம்பந்தர்




நத்தார்புடை ஞானன்பசு

ஏறிந்நனை கவிழ்வாய்

மத்தம்மத யானைஉரி

போர்த்தமழு வாளன்

பத்தாகிய தொண்டர்தொழு

பாலாவியின் கரைமேல்

செத்தார்எலும்பு அணிவான்திருக்

கேதீச்சரத் தானே. - 
சுந்தரர்



தேவாரப்பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் இத்தலம் இலங்கையில் உள்ளது.

திருவிழா:

பவுர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம்

தல சிறப்பு:

உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. 

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. 

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 269 வது தேவாரத்தலம் ஆகும்.

 பொது தகவல்:

இறைவன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, கவுரி தெற்கு நோக்கியபடி தரிசனம் அருள்கிறாள். கருவறைக்கு வெளியே இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். உட்பிராகாரத்தில் சூரியன், சம்பந்தர், கேது, சேக்கிழார், நால்வர், சுந்தரர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள். பின்புறம் பழைய மகாலிங்கம். இங்கு பூஜை செய்து முடித்தபின்னரே கருவறை தீபாராதனை. அடியார்களின் நலனைக் கருதி ஆலயத்துக்கு வெளிப்புறமாக சம்பந்தர் மடம், சந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம்,. நாவலர் மடம் என்று பற்பல மடங்கள் அமைந்துள்ளன.


பிரார்த்தனை

ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

கேது பகவான் இக்கோயிலுக்கு வந்து தவமியற்றி பூஜை செய்து வழிபட, இறைவன் அம்மை அப்பராக அவருக்குத் தரிசனம் அளித்தாராம். இதனால்தான் திருகேதுஈஸ்வரம் என்றாகி திருக்கேதீஸ்வரமாக ஆகியிருக்கிறது. 

ஜாதகத்தில் ஒருவருக்கு ராகு, கேது தோஷம் இருப்பின், பாலாவியில் நீராடி, கேதீச்வரரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று ஐதீகம். பாலாவி தீர்த்தம், பல பிறவிகளில் செய்த பாவங்களைப் போக்கும் மகா சக்தி படைத்தது. இங்கு நீராடி பித்ருபூஜை செய்தால், கயையில் பித்ரு பூஜை செய்த புண்ணியம் கிட்டும். சூரபத்மனின் பேரனான துவட்டா என்பவன், இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அவருடைய திருவருளால் பிள்ளைப்பேற்றைப் பெற்றான். 

பின்னர் இங்கேயே தங்கியிருந்து இவ்விடத்தை பெருநகரமாக்கியதால், மாதுவட்டா என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் மருவி மாதோட்டம் என்றும் மாத்தை என்றும் ஆனது. ராமபிரான் சிவபெருமானிடமிருந்து பெற்ற மூன்று லிங்கங்களுள் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். 

அகத்திய மாமுனிவர் தென்திசைப் பயணம் வரும்போது, தட்சிணக் கயிலாயமான கோணேஸ்வரத்தைத் தரிசிக்கும் முன்பு திருக்கேதீச்சரம் வந்து சிவ வழிபாடு செய்ததாக தல புராணம் தெரிவிக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி, அவள் தந்தை மயன் முதலானோர் இத்தலத்தில் பூஜித்துள்ளனர். இங்கு பழங்குடியினரான நாகர்கள் வழிபட்டுள்ளதால், நாகநாதர் என்றும் இத்தல இறைவனுக்குப் பெயருண்டு.

ஐந்து திருத்தேர்கள் உள்ளன. அதில் முதல் தேரில் உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் சிலை வைப்பார்கள். சிவராத்திரி இரவு முழுக்க இங்கு பூஜை நடைபெறுகிறது. காலையில் பாலாவியில் நீராடி, விரதத்துடன் நீர் முகந்து வந்து பக்தர்கள் தம் கையாலேயே பஞ்சாட்சரம் கூறியபடியே அபிஷேகம் செய்விப்பது காசியைப் போன்றே கண்கொள்ளாக் காட்சியாகும்.

தல வரலாறு:

10, 11 ஆண் நூற்றாண்டில், சோழ மன்னன் ராஜேந்திரனால் இக்கோயில் கட்டப்பட்டது. சுந்தர பாண்டியனும் பல திருப்பணிகள் செய்ததாக, கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. அதன்பின்னர் போர்த்துகீசியர் படையெடுப்பில் இக்கோயிலிலிருந்து தூண் மற்றும் பெரிய கற்களை உடைத்து எடுத்து மன்னார் கோட்டையைக் கட்டியதாக வரலாறு.

பின்னர் ஆங்கிலேயர் கையில் சிக்கிய இக்கோட்டை. காவெள்ளத்தில் புயலில் சிதைந்து மண்மேடாகியது. விடிவெள்ளியாக அவதரித்த யாழ்ப்பாணத்து சைவப் பெருவள்ளல் ஆறுமுக நாவலர் கனவில், அந்த இடைமருதின் ஆனந்தத் தேன் சொரியும் பொந்து போல இந்த இலங்கை திருக்கேதீச்சரத்திலும் ஒரு தேன்பொந்து மறைந்துள்ளது. 

அதனைச் சென்றடையுங்கள். என்று சுட்டிக் காட்டப்பட்டது. 1893-ல் மீண்டும் அவ்விடத்தை சுமார் 43 ஏக்கர் நிலப்பரப்பினை, வாங்கி கோயிலுக்கு அளிக்க, மீண்டும் திருப்பணிகளுடன் 1910-ல் சிறுகோயில் கட்டப்பட்டது. அப்போது மண்ணில் சிதையுண்ட நந்தி, சோமாஸகந்தர், கணேசர், பலிபீடம், துவஜஸ்தம்பம், அர்த்த மண்டபம் ஆகியவை திருப்பணிகள் மூலம் வெளிப்பட்டன. 

இறையருளால் பழைய கருவறை மகாலிங்கமும் மண்ணிலிருந்து வெளிப்பட, லிங்கத் திருமேனியை வெளியே எடுக்கையில் சிறிது பழுதுபட்டதால், அவரை மேற்கு பிராகாரத்தில் எழுந்தருளச் செய்தனர். கருவறைக்கு, காசியிலிருந்து புதிய லிங்கம் தருவிக்கப்பட்டதாக ராமேஸ்வர வரலாறு தெரிவிக்கிறது.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: உலகிலேயே மிகப் பெரிய சோமாஸ்கந்தர் சிலை உள்ளது.

No comments:

Post a Comment