Friday, 25 November 2016

கங்கை கரையில் - 5



சார்தாம் யாத்திரை – கங்கோத்ரி


கங்கோத்ரி ஆலயம் வரையில் வண்டிகள் செல்கின்றன. கங்கோத்ரி ஆலயத்தின் கோபுரம் பளிங்கால் ஆனது.. கோவிலின் வாயில் மூன்று முக்கோண வடிவத்தில் இருக்கும்..

Related image


ஆலயத்தில் இருந்து நதிக்கு செல்ல படிகள் உள்ளன , நதிக்கரையில் உள்ள கணேசரை வணங்கி விட்டு, முதலில் பாகீரதியில் ஸ்நானம் செய்து விட்டு பின்னர் கங்கம்மாவை தரிசனம் செய்யவேண்டும். இங்கு தண்ணீர் மிகவும் குளிர்ந்ததாக இருக்கும். தண்ணீரில் மூன்று முழுக்கு போடவேண்டும். உடம்பெல்லாம் விறைத்து கொள்ளும்.. மானசரோவரில் இருப்பதை விட இங்கு தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்.. எனவே இந்த மாதிரி இடங்களில் முதலில் கரையில் அமர்ந்து செம்பின் மூலம் தண்ணீரை முகர்ந்து உடம்பில் ஊற்றிக் கொள்வது நல்லது. மேலும் தலையில் நீரில் உள்ளே கொண்டு செல்லாமல் நீரை உற்றிக்கொள்வது உத்தமம்..


கங்கா ஸ்நானத்திற்குப்பின் கங்கா மாதாவிற்கு, முக்தி தாயினிக்கு, வாழ்வளிக்கும் அன்னைக்கு தூப தீப நைய்வேத்யம் படைத்து பூஜைகள் செய்ய வேண்டும்..


பகவத்கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜலலவ கணிகா பீதா

ஸக்ருதபி ஏன முராரி சமார்ச்சா

க்ரியதே தஸ்ய யமேந ந சர்ச்சா


கொஞ்சமாவது கீதையை பாராயணம் செய்து, துளியாவது கங்கா தீர்த்தம் பருகி ஒரு முறையாவது அர்ச்சனை செய்தால் அவர் எமலோகமான நரகத்திற்குப் போகாமல் புண்ணிய லோகத்திற்கு போகின்றார் என்ற படி முக்தியளிக்கும் என்பது ஐதிகம்..


Image result for ganga maiya wallpapers

இங்கு கங்கா தீர்தத்தை கேதாரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யவும், வீட்டிற்கும், நண்பர்களுக்கு கொடுக்கவும் கங்கா தீர்த்தம் சேகரித்துக் கொள்ள வேண்டும்..

பின்னர் பாகீரதியின் கரையில் அமைந்துள்ள பாகீரதனின் சன்னதிக்கு சென்று நாம் உய்ய கங்கையை ஆகாயத்திலிருந்து பாகீரத தவம் செய்த செம்மலை வணங்க வேண்டும். இவர் அமர்ந்துள்ள பாறை பாகீரதன் சிலா என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அமர்ந்ததுதான் இவர் கங்கையை பூலோகத்திற்கு வரவழைக்க தவம் செய்தாராம். தன் முன்னோர்களை கரையேற்ற பாகீரதன் தவம் செய்த இடம் என்பதால் இவ்விடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது சிறந்தது.

பின்னர் கணபதி சன்னதிக்கு சென்று முழு முதற்கடவுளுக்கு தோப்புக்கரணம் இட்டு வணங்கி கங்கோத்ரி கோவிலுக்கு வலப்பக்கத்தில் அமைந்துள்ள சிவ பெருமான் சன்னதிக்கும் சென்று சிவ லிங்கத்திற்கு கங்கா தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும்..


பின்னர் கங்கா மாதாவின் சன்னதிக்கு சென்று வணங்க வேண்டும். லலிதா சகஸரநாமம் ஜபித்துக்கொண்டே மூன்று முறை சன்னதியை சுற்றி வந்து தரிசனம் செய்யவேண்டும்..

கருவறையில் கங்கை அன்னை நடு நாயகமாக சிலா ரூபத்தில் அமர்ந்த ரூபத்தில் பட்டுப்பீதாம்பரதாரியாய், சர்வாபரணபூஷிணியாய் எழிலாக கொலு வீற்றிருப்பாள். அன்னையின் இரு புறங்களிலும் இவளது சகோதரிகள் யமுனையும் சரஸ்வதியும் சேவை சாதிக்கின்றனர். மேலும் இராதாகிருஷ்ணரும் சேவை சாதிக்கின்றனர். இமயமலையின் பல ஆலயங்களில் தெய்வ மூர்த்தங்கள் பஞ்சாதாயன முறையில் முக்கிய மூர்த்தி நடுவிலும் மற்ற மூர்த்தங்கள் அவருடன் இருக்கும் முறையில் அமைக்கப்படுகின்றன.

வெளியே வந்து சிவ பெருமான் பெருங்கருணையுடன் தன் ஜடா முடியில் கங்கையை தாங்கும் சிலா ருபத்தை தரிசனம் செய்ய வேண்டும்.


இனி கங்கோத்ரி கோவிலைப் பற்றிய ஒரு சில தகவல்களை காண்போம்..


பாகீரதியின் வலக்கரையில் 3753 மீ (12313 அடி) உயரத்தில் வெள்ளைப் பளிங்கு கற்களால் ஆன கங்கோத்ரி கோயில் அமைந்துள்ளது கர்வாலின் கூர்க்கா பிரிவைச் சார்ந்த ஜெனரல் அமர்சிங் தாபா 18ம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்.


அருகிலேயே சிவபெருமானுக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது. கோயில் அமைந்திருக்கும் கல் பகீரதன் காலை ஊன்றி தவம் செய்த இடம் என்பது ஐதீகம். அதனால் தான் இது பாகீரத சிலா என்னும் பெயர் பெற்றது. இங்குதான் பாண்டவர்கள் அசுவமேத யாகம் செய்ததாக நம்பிக்கை. ஆதிசங்கர பகவத்பாதாள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூவருக்கும் கோயில் எடுத்தாராம்.

Image result for ganga mata ki aarti


இக்கோவில் தாருகாவனம் எனப்படும் தேவதாரு மரங்கள் சூழ்ந்த காட்டில் அமைந்துள்ளது. கங்கோத்ரியில் உள்ள ஆலயம் 20 அடி உயரம் கொண்டது. அற்புதமான இயற்கை சூழல் அமைந்த அந்த இடத்தில் சிவலிங்கத்தையும், கங்காதேவியையும் வணங்கிப் பணிவது அற்புதமான ஓர் அனுபவம். நம் மனதில் தொக்கி நிற்கும் அற்பமான ஆசைகள் அங்கு தானாக விடைபெற்றுக் கொள்கின்றன.

கங்கோத்ரி பகுதியில் ஓடும் பாகீரதி நதிக்குள்ளே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. நீர் மட்டம் குறையும்போது இந்த லிங்கத்தை தரிசிக்கும் பேறு பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இவ்வளவு உயரத்தில் அமைந்திருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையில் தான் கங்கோத்ரியை அடைய முடியும் என்றாலும், ஆண்டு தோறும் இரண்டரை லட்சம் பேர் இங்கு கூடி ஈசனையும், கங்காதேவியையும் தரிசித்து மகிழ்கின்றனர். திபெத்திய எல்லைக்கருகே இந்த இடம் இருக்கிறது. மகாபாரதப் போருக்குப் பிறகு பாண்டவர்கள் இங்கு யாகம் செய்துள்ளனர். கங்கோத்ரியில் இயற்கை எழிலுக்குப் பஞ்சமே இல்லை. அழகிய பள்ளத்தாக்குகள், அற்புத வனங்கள், ட்ரெகிங் எனப்படும் மலையேற்றப் பயிற்சியையும் இங்கு செய்கின்றனர். ஆலயத்தின் மறுபுறத்தில் நிறைய ஆசிரமங்கள் உள்ளன. மொத்தத்தில் அமைதி அளிக்கும் சூழல் இங்கு நிலவுகிறது.

நவம்பர் மாதத்தில் இந்த பகுதி முழுவதும் பனி சூழ்ந்து விடும். ஆலயத்தையும் பனிப்படலம் மூடி விடும். எனவே, தீபாவளி திருநாள் முடிந்தவுடன் இங்கு இருக்கும் கங்கை அம்மன் திரு உருவத்தை அலங்காரம் செய்து பல்லக்கில் இங்கிருந்து 12 கி.மீ., கீழே உள்ள ஹர்சில் என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ள முக்பா என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நிறுவுகின்றனர். அடுத்த மே மாதம் தான் பூஜாரிகள் அம்மனின் சிலையை மீண்டும் கங்கோத்ரி ஆலயத்திற்கு எடுத்துச்செல்வர். அக்ஷய திருதியை அன்று முக்பாவிலிருந்து கங்கையன்னை திரும்பி கங்கோத்ரிக்கு பல்லக்கில் திரும்பி வருகின்றாள் அன்றையதினம் சன்னதியிலும் நதிக்கரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தீபாவளியன்று ஆலயம் மூடும் போதும் கோயில் முழுவதும் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இரண்டு நாட்களிலும் பக்தர் கூட்டம் கங்கோத்ரியில் அலை மோதும்.




கோடை காலத்தில் ஆலயம் காலை 6:15 மணி முதல் 2 மணி வரையிலும் பின்னர் 3 மணி முதல் 9:30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். குளிர் காலத்தில் காலை 6:45 மணி முதல் 2 மணி வரையிலும் பின்னர் 3 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும் காலை 6 மணிக்கு மங்கள ஆரத்தி சன்னதியில் நடைபெறுகின்றது அதற்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப் படுவதில்லை. கோடைக் காலத்தில் மாலை 7:45 மணிக்கும், குளிர் காலத்தில் 7 மணிக்கும் கங்கோத்ரிக் கரையில் ஆரத்தி நடைபெறுகின்றது.

இந்திய திபெத் எல்லைக்கு மிக அருகில் அமைந்துள்ளது கங்கோத்ரி.

டேராடுனிலிருந்து 300 கி.மீ, ரிஷிகேஷிலிருந்து 250 கி.மீ. உத்தரகாசியிலிருந்து 105 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கங்கோத்ரி.

பார்க்கோட்டிலிருந்து செல்லும் பாதை சிறிது தூரத்தில் இரண்டாக பிரிகின்றது இடப்பக்கம் செல்லும் பாதை யமுனைக் கரையோரம் யமுனோத்திரிக்கு செல்கின்றது. வலப்பக்கம் செல்லும் பாதை பிரம்மகால், கல்யாணி, தராசு, உத்தரகாசி வழியாக வழியாக கங்கோத்ரிக்கு செல்கின்றது..

ரிஷிகேஷிலிருந்து நரேந்திர நகர், ஜகல், சம்பா, தேஹ்ரி, தராசு, உத்தரகாசி வழியாகவும் கங்கோத்திரிக்கு ஒரு பாதை உள்ளது.

அடுத்த பதிவில் பத்ரிநாதர் தரிசனம்.....

திருச்சிற்றம்பலம்

கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...

No comments:

Post a Comment