Wednesday, 23 November 2016

ஆலயமும் ஆகமும்






ஆலயம், மெய்ப்பொருள் வாழும் சத்திய அரங்கம்; இறைவன் உவந்து குடிகொள்ளும் தர்மபீடம். கலை, கலாசார, ஆன்மிக செல்வத்தை ஒருங்கே பிரதிபலிக்கும் சாதனம். ஆகவே, இதனை உருவாக்க விதிமுறைகள் பல உள்ளன.

இவற்றைக் கூறும் நூல்களே ‘ஆகமங்கள்’ எனப்படுகின்றன.

ஆகமங்கள் வேதங்களின் உட்பொருள் என்பர்.

வேதங்களை அருளியவர் தென்திசை நோக்கி ஞானத் தவம் புரியும் தட்சிணாமூர்த்தி. மறை அருளிய பிறை சூடிய பெரு மானே ஆகமங்களையும் அருளினார் என்று பல நூல்கள் கூறுகின்றன.

ஆகமங்கள் சுருக்கமாக சைவ ஆகமம், வைகானஸ ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம் என்று மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. சைவ ஆகமம் சிவவழிபாட்டையும், வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் திருமால் வழிபாட்டையும் விவரிப்பவை.

ராமாயண காவியத்திலும், பல புராண நூல்களிலும் புகழ்மிக்க ஆலயங்கள் பற்றி நிறையக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஆகமக் கலையின் பழம்பெருமையை உணரலாம். வேதங்களிலேயே இறைவனின் வடிவ லட்சணங்களைப் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன.

இந்தியத் தத்துவ ஞானத்தின் விடிவெள்ளி எனக் கூறப்படுவதும், கிறிஸ்துவ சகாப்தத்துக்கு இருநூறு ஆண்டுகள் முற்பட்டது மான ‘பதஞ்சலி மகாபாஷ்ய’த்தில் ஸ்கந்தன், விசாகன் ஆகிய தெய்வங்களின் திருமேனிகளை வடிப்பது பற்றிய குறிப்புகள் உள்ளன.

ஆகமங்கள் எதற்காக இயற்றப்பட்டன? சிவனருட் செல்வர்கள் ஸாலோகம், சாமீப்யம், ஸாரூபம், ஞானபாதம் ஆகிய நான்கு பேறுகளையும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும், நயனம், ஸ்பரிசம், வாசகம், பாவனை, சாஸ்திரம், யோகம், ஔத்ரீ என்னும் ஏழு வித தீட்சைகளையும் அடைய ஆகமங்கள் என்னும் வழிமுறையை அருளினார் சிவபெருமான்.

இவை சிவபெருமானின் சதாசிவ அம்ச வடிவத்திலிருந்து வெளிப்பட்டவை. இவை, இருபத்தெட்டு வகை. இவற்றுள் சிவபேத ஆகமங்கள், ருத்ர பேத ஆகமங்கள் என்று இருவகை.

இந்த இருபத்தெட்டு ஆகமங்களுக்கு இருநூற்று ஏழு உப ஆகமங்கள் உள்ளன. சிவபிரான் அருளிய இருபத்தெட்டு ஆகமங்களையும், அறுபத்தாறு சிவனருட் செல்வர்கள் கேட்டு மங்கள வாழ்வு பெற்றனர். இதனை திருமூலர் தமது திருமந்திர த்தில்,‘‘அஞ்சோடு இருபத்து மூன்றுள
ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத்தருவரும் அஞ்சா முகத்தவரும் பொருள் கேட்டதே...’’ என்று பாடிப் பரவசப்படுகிறார்.


வைகானஸ ஆகமத்தை திருமாலே திருவாய் மலர்ந்தருளினார் என்பர். வைகானஸ ஆகமத்தின் மூலமந்திரங்கள், ரகசிய விவரங்கள் ஆகியவற்றை விஷ்ணு உபதேசிக்க, விகனச முனிவர் எழுதி வைத்தார்.
வைகானஸ ஆகமத்துக்கு ‘பகவத் சாஸ்திரம்’ என்றும் பெயர் உண்டு.

பாஞ்சராத்ர ஆகமமும் விஷ்ணு வழிபாட்டின் பெருமைச் சிறப்புகளையும் முறைகளையும் கூறுகிறது.

அதர்வண வேதத்தின் ஒரு முக்கிய அங்கம் எனப்படும் ‘ஸதாபத்திய சாஸ்திர வேதம்’ எனும் பகுதி, ஆகமக் கலையில் மிக முக்கியமான நூல்.
இதனையே ‘வாஸ்து சாஸ்திரம்’ என்கிறார்கள்.

அக்னி புராணம், மத்ஸ்ய புராணம், கருட புராணம் ஆகிய நூல்கள் ஆலயங்களின் சிற்பங்களைப் பற்றிப் பேசுகின்றன.

ஆலய அமைப்பில் இறை வடிவங்களின் லட்சணங்கள் பற்றிக் கூறும் ‘சில்ப சாஸ்திரம்’ பிரம்மதேவனிடமிருந்து பெறப்பட்டு, கார்க்கர் போன்ற முனிவர்களது வழிவழியாக விளங்குகிறது என்பர்.

ஆகம நூல்களுள் வராஹ மிஹிரரால் இயற்றப்பட்ட ‘பிருகத் சம்ஹிதை’ முதன்மை பெறுகிறது. இதன் பிறகு பல அறிஞர்கள் இயற்றியுள்ள பலப்பல ஆகம நூல்கள் நமக்கு வழிகாட்டிகளாக இன்றளவும் உள்ளன.
சைவ ஆகமங்களுள் காமிகம், காரணம் என்பவை மிக முக்கியமானவை.
இவை ஆலயத்துக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தல்,கட்டடம் நிர்மாணிக்கும் முறை, சிற்பிகள் மற்றும் அர்ச்சகர் ஆகியோர் தகுதி, கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வது போன்றவற்றைக் கூறுகின்றன.

சைவ ஆகமங்களிலும் வைணவ ஆகமங்களிலும் உட்பிரிவுகள் உள்ளன.
ஆலயத்தை நிர்மாணிக்கும் பெரிய பொறுப்பு முக்கியமாக நான்கு பேரைச் சேர்ந்தது. அவர்கள் ஸ்தபதி (தலைமைச் சிற்பி), சூ த்ரதாரன் (நூலினால் அளவை செய்பவர்) தட்சகன் (கற்களை வெட்டி செதுக்குபவர்), வர்த்தகி (வண்ணப் பூச்சு கொடுப்பவர்) ஆகியோர்.

ஆலயம் எழுப்பப் பெற இருக்கும் இடம் இயற்கை எழில் கொழிப்பதாக இருக்க வேண்டும் என்று ஆகம நூல்கள் வலியுறு த்துகின்றன. மலை உச்சியிலும், சோலைகளிலும், நதிக்கரைகளிலும் பழமைமிக்க ஆலயங்கள் விளங்கக் காரணம் இதுவே.

ஆலயம் அமைக்கப் போகும் நிலப்பரப்பு தூய்மையானதாகவும், சமதளமாகவும், தோஷம் அற்றதாகவும் இருக்க வேண்டும். ஆலயம் கட்டவிருக்கும் இடத்தில் வளரும் மரங்களின் வகைகளிலிருந்தும், பூமியின் சக்தியை அறியலாம்.

ஆலய நிலத்தை சுபத்மம், பத்ரம், பூர்ணம், தூம்ரம் என நால் வகையாகப் பிரித்திருந்தனர்.

கோயில் பெருமாளுக்கானால் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப்பட வேண்டும். சிவாலயம் எனின் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். துர்க்கை தென்மேற்கிலும், தாரகரி (முருகன்) வடக்கிலும், விநாயகர், ஐயனார் ஆகியோர் தென்மேற்கிலும் கோயில் கொள்வார்கள் என ஆகம நூல்கள் கூறுகின்றன.

சமதள நிலப்பரப்பில் ‘வாஸ்து புருஷ மண்டலம்’ எனப்படும் வரைபடம் எழுதப்படும். இவ்வடிவம், எழுப்பப்படவிருக்கும் ஆலயத்தின் உத்தேச அடித்தளம். ஆகம நூல்கள் பலவும் வாஸ்து புருஷ மண்டலத்தை வரைந்து கொண்ட பிறகே கட்டட வேலையைத் தொடங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

இந்த வாஸ்து புருஷ மண்டலத்தை அறுபத்து நான்கு அல்லது தொண்ணூற்று ஒரு பகுதியாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் உரிய தேவதையை ஆவாஹனம் செய்து பூஜை செய்யப்படும். பிறகே ஆலயத்துக்கு ஆதாரக் கல் நாட்டும் பணி செய்யப்ப டும். இந்த ஆதார (அடிக்)கல் சதுரவடிவில், நடுப்பகுதி குழிந்து இருக்கும். இக்குழியில் தானியங்கள் போடப்பெறும். தானியம் இட்டதும் அதன்மேல் ரத்தினங்கள் நிரம்பிய கலசம் ஒன்று வைக்கப்படும்.

இந்தக் கலசத்தைத் தாமரை மலர் வடிவம் செதுக்கப் பெற்ற கல்லால் மூடுவர்.

ஆலயத்தின் மிக முக்கிய அங்கம் கர்ப்பக்கிருஹம். இவ்விடத்தில் சதுரமான தாமிரப் பாத்திரம் ஒன்று நிலை கொள்ளச் செய்யப்படும். இப்பாத்திரம் வைக்கும் முறை தெய்வத்துக்கு தெய்வம் வேறுபடும்.

கர்ப்பக்கிருஹ உட்சுவரும் வெளிச்சுவரும் எழுப்பப்பட்டதும், அதைச் சுற்றி அந்தராளம் எனும் பாதை அமைக்கப்படும். இது கர்ப்பக்கிருஹத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை வலம் வருவதற்கான வழியாகும். பெரிய ஆலயங்களில் மட்டுமே இந்த பிரதட்சணப் பகுதியைக் காணலாம்.

மூலத்தானம் நிறுவப் பெற்று, சுற்றுச் சுவர் பணியும் முற்றுப் பெற்றதும் தலைவாசல் அமைக்கப்பட்டு வாயிற் கதவுகள் நிறுவப் பெறும். ஆலயத்தின் பல நுழைவாயில்களில் மகர, பத்ர, சித்ர தோரணங்கள் அமைக்கப்பட்டு, இறைகூடம் எழில் கூடமாக்கப்படும்.

இறை கூடத்தின் மேற்தளத்தில் சிகரம் என்னும் பகுதி மிக முக்கியமானது. இதன் மீதே, கும்பாபிஷேகம் செய்யும்போது புனித நீராட்டப்படும் ஸ்தூபிகை அமைக்கப்படுகிறது. ஸ்தூபிகையே ஆலயத்தின் முற்றுப்பாகம் என்பர்.

ஆலயங்கள் பழங்காலத்தில் மரத்தினாலேயே அமைக்கப்பட்டன. கேரளத்திலும் இமயமலைப் பகுதிகளிலும் மரக் கோயில்கள் இன்றும் காணப்படுகின்றன. கருங்கல் ஆலயமே சிறந்தது என்கிறது ஆகமம். பழைய கட்டடக் கற்களை ஆலயத்துக்குப் பயன்படுத்தக்கூடாதாம். ஆலயத் திட்ட அமைப்புக்கு ஏற்றவாறு வெட்டிச் செதுக்கப்பட்ட கருங்கற்களை ‘வஜ்ரலேபம்’ எனும் காரை சாந்து கொண்டு பொருத்தமாக ஒட்டி இணைத்தனர்.

இந்திய ஆலயங்கள் நாகரம், திராவிடம், லேசரம் எனும் மூன்று பாணிகளில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலயத்தின் சிகரப் பகுதி சதுர வடிவானால், அது நாகரம். ஆறு அல்லது எட்டு முகங்கள் கொண்ட சிகரம் திராவிட பாணி. வட்ட வடிவச் சிகர நிர்மாணம், லேசரம்.

முற்கால ஆலயங்களில் மூலத்தானத்தின் மேல்பகுதி விமானமே முக்கியப் பகுதி. ஆனால் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு ஆலயத்தின் நுழைவாசலில், நீண்டுயர்ந்த ராஜகோபுரங்கள் அமைப்பது வழக்கமாயிற்று. சோழ மன்னர்கள் கோபுரம் க ட்டுவதில் நாட்டம் கொண்டனர். கோபுரம், நாளடைவில் சோழர் கலையின் தனிச் சொத்தாயிற்று. கோபுரங்களில் இறைவனின் உருவங்களைச் சிற்பங்களாகப் பொருத்தினர்.

மூலக் கோயில் எனப்படுவது அர்த்த மண்டபம், அதனை அடுத்து பிரதான தெய்வத்தின் வாகனம், பிறகு பலிபீடம், அதற்கு அருகே கொடிமரம் ஆகிய அமைப்புடன் கூடியது. தென்னாட்டில் இவ்வகைக் கோயில்களே அதிகம்.
திருக்குளம், பக்தர்கள் நீராடித் தூய உடலுடன் ஆலய இறைவனைக் காணச் செல்வதற்கு ஏற்ப நிறுவப்பட்டவை.

ஆலய நிர்மாண விதிமுறைகளுக்கு வழிவகுக்கும் ஆகம நூல்களும், அவற்றை அறிந்த கலைஞர்களும் சமுதாயத்தில் உரிய இடம் பெறவில்லை. காஞ்சி மகாபெரியவர் ஆண்டுதோறும் ஆகம சிற்ப சதஸ் நடத்தி, சிற்ப, ஆகமக் கலைகளுக்குப் புத்துயிர் ஊட்டினார்.

No comments:

Post a Comment