வரகுணப்பாண்டியனின் புதல்வன் ராஜராஜ பாண்டியன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தான். இந்த சமயத்தில் பாணபத்திரரும் இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது மனைவியும் யாழிசையில் வல்லவள். அவள் கணவன் விட்ட பணியைத் தொடர்ந்தாள். சோமசுந்தரரின் சன்னதிக்கு வந்து மயக்கும் பாடல்களால் பெருமானையும், பக்தர்களையும் பரவசப் படுத்துவாள். மன்னன் ராஜராஜன் சிவபக்தன் என்றாலும், ஒழுக்கமில்லாதவன். குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் பலவீனமானவன். பல பெண்களைத் தனது அந்தப்புரத்தில் ஆசை நாயகியாக வைத்திருந்தான். அவர்களில் ஒருத்தி, மிகச்சிறப்பாக யாழ் மீட்டி, மன்னனை புகழ்ந்து பாடுவாள். புகழ் போதை மிக்க ராஜராஜன் அவளது இசையை மட்டுமல்ல! அவளையும் மற்றவர்களை விட அதிகம் ரசிப்பான். அந்தப் பெண் இதனால் பெரும் கர்வம் கொண்டிருந்தாள். மன்னனுக்கு மிகவும் வேண்டபட்டவள் என்பதால், அரண்மனையில் அவளைத் தட்டிக்கேட்பார் யாருமில்லை. அவள் பாணபத்திரரின் மனைவியைப் பற்றி கேள்விப் பட்டாள். அவளது மயக்கும் இசை பற்றி அறிந்தாள். உள்ளத்தில் பொறாமை பொங்கியது. தன்னை விட இசையில் உயர்ந்த ஒருத்தி மதுரை நகருக்குள் இருக்கக்கூடாது என்று வெறி கொண்டாள். ஒருநாள், மன்னனை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அன்பே! பாணபத்திரரின் மனைவி தன்னை விட இசையில் உயர்ந்தவர் இல்லை என்று கர்வம் கொண்டு திரிகிறாள். அவளை அடக்க வேண்டுமானால், தாங்கள் ஒரு போட்டி வைக்க வேண்டும், என்றாள். மயங்கிக் கிடந்த மன்னன், தன் ஆசைநாயகி சொல்வதை அப்படியே கேட்டான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? நீ சொன்னதைச் செய்கிறேன் கண்ணே! என்று உளறினான்.
மாமன்னா! ஈழத்தில் யாழிசைக் கலையில் வல்ல ஒரு பெண்மணி இருக்கிறாள். அவள் எனக்குத் தெரிந்தவள். அவளை இங்கு வரவழைத்து இரு வருக்குமிடையே போட்டி வைக்க வேண்டும். அதில் பாணபத்திரர் மனைவி நிச்சயம் தோற்பாள். அவளது கர்வம் அடங்கும், என்றாள். மன்னன் சம்மதித்தான். ஈழத்தில் இருந்து அந்தப் பாடகியை வரவழைத்தான். அவள் தனது மாணவிகளுடன் மதுரை வந்து சேர்ந்தாள். மன்னன் பாணபத்திரர் மனைவியை அழைத்தான். பெண்ணே! நீ ஈழத்து பாடகியுடன் போட்டியிட வேண்டும். அவளை வெல்ல வேண்டும். நம் நாட்டின் கவுரவமே உன் கையில் தான் இருக்கிறது, என்றான். அன்று தன் கணவன் ஹேமநாதனை வென்றது போல, இன்று ஈழத்து பாடகியை நிச்சயம் வெல்வேன், பாண்டிய நாட்டின் புகழ் ஈழம் வரை பரவும் என்று அவள் உறுதியளித்தாள். மன்னனின் மனமோ வஞ்சக எண்ணத்தில் சிக்கியிருந்தது. இவள் எப்படி யாழிசைத்தாலும் சரி, இனிய குரலில் பாடினாலும் சரி...ஈழத்துப் பாடகியே வென்றாள் என்று தீர்ப்புக் கூறி விட வேண்டும். அத்துடன் இவள் யாழிசைக்க தடைவிதித்து விட வேண்டும் என்று திட்டம் வகுத்துவிட்டான். இதையறியாத பாணபத்திரனின் மனைவி போட்டிக்கு தயாரானாள். அரங்கம் நிரம்பி வழிந்தது. ஈழத்துப் பாடகி ஆணவத்துடனும், பாணபத்திரர் மனைவி அமைதியாகவும் அரங்கத்தில் வந்து அமர்ந்தனர். போட்டி ஆரம்பமானது.
ஈழத்துப்பாடகி மன்னரை நோக்கி, மாமன்னர் ராஜராஜபாண்டியரே! தங்கள் தேசத்தில் யாழிசைத்துப் பாடும் வாய்ப்பினை தந்தமைக்கு நன்றி. ஆனால், என் எதிரே யாழ் என்றால் என்னவென்றே அறியாத, ஏழு ஸ்வரங்களின் வாசனையே அறியாத ஒருத்தியை அமரவைத்து போட்டியிட்டு பாடச் சொல்கிறீர்கள். அவள் என்னோடு போட்டியிட தகுதியுள்ளவளா என்பதை அறிந்தபிறகே அவளோடு போட்டியிடுவேன். அதாவது, ஸ்வரங்கள் குறித்த சில கேள்விகளைக் கேட்பேன். அதற்கு அவள் பதில் சொல்ல வேண்டும். அதற்கு இஷ்டமில்லையென்றால், இப்போதே அவள் போட்டியில் தோற்றதாக ஒப்புக்கொண்டு விலகிக்கொள்ளலாம். எனக்கு அதில் எந்த ஆட்சேபமும் இல்லை, என அலட்சியமாகப் பேசினாள். அவளது பேச்சில் இருந்த ஆணவத்தைக் கவனித்த பாணபத்திரர் மனைவி, அரசே! அறிவிக்கப்பட்டது இசைப்போட்டி தானே ஒழிய வாதப்போட்டி அல்ல. ஒருவேளை, இந்தப் பெண்மணி என்னோடு போட்டியிட பயந்து, வாதப்போருக்கு இழுக்கிறாளோ என்னவோ! யாழிசைக்கத் தெரியாவிட்டால் பரவாயில்லை. தோற்றதாக அறிவித்து விட்டு, அவளாகவே ஒதுங்கிக் கொள்ளட்டும். எனக்கும் அதில் எந்த ஆட்சேபமும் இல்லை, என பதிலடி கொடுத்தாள். கோபமடைந்த ஈழப்பாடகி பதிலுக்கு ஏதோ பேச, பாணபத்திரர் மனைவி அதை எதிர்த்துப்பேச, இசைமேடை, சண்டை மேடையாகியது. ராஜராஜ பாண்டியன் அவர்களை அடக்கி சமாதானம் செய்தான்.
நான் ஏற்கனவே அறிவித்தது போல் இசைப்போட்டி துவங்கட்டும். அதன் முடிவை நான் அறிவிப்பேன், என்றவன், தன் ஆசைநாயகியை ஓரக்கண்ணால் பார்த்தான். அவள் மெதுவாக விஷமப்புன்னகை சிந்தினாள். அந்தப் புன்னகையின் அர்த்தம் என்ன தெரியுமா? போட்டியின் போக்கு எப்படி இருந்தாலும் சரி...ஈழத்துப்பாடகியே வென்றதாக அறிவிக்கவேண்டும் என்பதைப் போல் இருந்தது. ராஜராஜனும் யாருமறியாமல் கண்ணசைத்து அதை ஆமோதித்தான். முதலில் ஈழத்துப்பாடகி யாழிசைத்து பாடினாள். அதில் அத்தனை சுவாரஸ்யம் இல்லாவிட்டாலும் ராஜராஜன் கைதட்டி ரசிப்பதைப் போல் நாடகமாடினான். பாடல் முடிந்ததும் அவளை வானளாவப் புகழ்ந்தான். அடுத்து பாணபத்திரர் மனைவி யாழிசைக்கவே அதை நிஜமாகவே ரசித்தான். அவன் மட்டுமல்ல! அவையே ரசித்தது. தீர்ப்பு சொல்லும் நேரம் வந்தது. இருதரப்பு இசையையும் கேட்டு ரசித்தேன். ஆனால், எனக் கென்னவோ ஈழத்துப் பாடகியின் யாழிசையே உள்ளத்தைக் கவர்வதாக இருந்தது, என்று சொல்லி நிறுத்தியதும் பாணபத்திரர் மனைவி மட்டுமல்ல, அவையோர் அதிர்ச்சிக்குள்ளாயினர். மன்னருக்கு என்ன ஆனது என்று அவர்கள் நினைத்தாலும், அவனை எதிர்த்துக் கருத்துச் சொல்ல யாரால் இயலும்? அவர்களும் மன்னனோடு இணைந்து ஆமாம் போட வேண்டியதாயிற்று. மன்னன், ஆசை நாயகியை திருப்திப்படுத்த இவ்வாறு சொன்னானே ஒழிய மனசாட்சி என்னவோ உறுத்தியது.
அவையோரே! ஈழத்துப் பாடகி சிறப்பாகப் பாடினார் என்றாலும், இப்போது நடந்த போட்டியின் அடிப் படையில் நான் தீர்ப்பளிக்க விரும்பவில்லை. ஏனெனில், ஒரே ஒரு பாட்டைக் கொண்டு இருவரது திறமையையும் மதிப்பிட முடியவில்லை. இன்னொரு நாள் போட்டி நடத்தி தீர்ப்பளிக்கிறேன், என சொல்லிவிட்டு அரியாசனத்தை விட்டு வேகமாக சென்று விட்டான். அதிர்ச்சியடைந்த பாணபத்திரர் மனைவி, தன் பாடலைக் குறைத்து மதிப்பிட்டதால் அவமானம் தாங்காமல், நேராக சொக்கநாதரின் ஆலயத்திற்குச் சென்றாள். சொக்கநாதப்பெருமானே! என் கணவருக்காக அன்று விறகு சுமந்தீர். பாண்டியமண்ணின் பெருமையை உலகறியச் செய்தீர். இன்று எனக்கு சோதனை வந்துள்ளது. என்னை அவையோர் முன்னிலையில் அவமானப்பட வைத்தீர். இறுதி போட்டியில் வெற்றி பெறாவிட்டால் என் நிலைமை என்னாகுமென்றே எனக்குத் தெரியாது. மன்னர் தர்மத்துக்குப் புறம்பாக தீர்ப்பு சொன்னதை அனைவரும் அறிவர். நீரே இதற்கு நல்ல தீர்ப்பு சொல்ல வேண்டும், என கதறியழுது பிரார்த்தித்தாள். அப்போது அசரீரி குரல் கேட்டது. பெண்ணே! கலங்க வேண்டாம். நீயே வெற்றி பெறுவாய், என்று. அதைச் சொக்கநாதரின் வாக்காகவே மதித்த அவள், மறுநாள் மன்னனிடமே சென்றாள். அரசே! தாங்கள் செய்தது உங்களுக்கே நன்றாக இருக்கிறதா? உண்மையிலேயே, அவளது பாடல் நன்றாக இருந்தால், நானே என் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறி இருப்பேன். தாங்களோ அவளது இசை தான் நன்றாக இருப்பதாகச் சொன்னீர்களே! உங்கள் ஆசைநாயகியின் கட்டளைக்கு அடிபணிந்தே அவ்வாறு செய்தீர்கள் என்பதை நான் அறிவேன், அடுத்த போட்டி சொக்கநாதர் ஆலயத்தில், கால்மாறி ஆடும் நடராஜப்பெருமான் முன்னிலையில் நடக்க வேண்டும். கூத்தாடும் அவரே இதற்கு தீர்ப்பளிக்கட்டும், என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். பத்திரரின் மனைவி சொன்ன வார்த்தை மன்னனைச் சிந்திக்கச் செய்தது. அவன் சற்று நடுங்கியும் போனான். மீண்டும் போட்டி நாள் குறிக்கப்பட்டது. இந்தப் போட்டியைக் காண மதுரை மக்களும் குவிந்து விட்டனர்.
மக்களே! இந்தப் போட்டியின் முடிவை நான் அறிவிக்கமாட்டேன். இதோ! கால்மாறி ஆடும் கூத்தபிரானே அறிவிக்கட்டும். தோல்வியடைந்தவர் வெற்றி பெற்றவருக்கு காலமெல்லாம் அடிமையாய் இருந்து சேவை செய்ய வேண்டும். இது போட்டியின் நிபந்தனை, என்றும் சொன்னான். போட்டி ஆரம்பிக்க இருந்த வேளையில், காவி கட்டி, திருநீறு பூசிய புலவர் ஒருவர் அரியாசனம் ஒன்றில் யாரிடமும் கேட்காமல் அமர்ந்தார். எவ்வளவு பெரியவராக இருந்தாலும், நம் வீட்டுக்குள் அனுமதியின்றி ஒருவர் நுழைவதை நாம் விரும்பமாட்டோம், அனுமதிக்கவும் மாட்டோம். மன்னன் ராஜராஜனும் அப்படியே தான் செய்வான் என அனைவரும் எதிர் பார்த்த வேளையில், தன்னையும் அறியாமல் அவன் அந்தப் பெரியவரைப் பார்த்து வணங்கினான். திடீரென வந்தது அந்த சோமசுந்தரப் பெருமானாகத்தான் இருக்க வேண்டும் என்று பாணபத்திரர் மனைவிக்குப் பட்டது. அவள் அவரைக் கையெடுத்து வணங்கினாள். மீண்டும் போட்டி ஆரம்பமானது. முதலில் ஈழத்துப்பாடகி யாழிசைத்துப் பாடினாள். அவள் பாடி முடித்ததும் ஒரு சிலர் மட்டும் கைதட்டினர். பெரியவர் அவளது பாடல் பற்றி கருத்தும் சொல்லவில்லை, கைதட்டவும் இல்லை. அமைதியாக இருந்தார். அடுத்து பாணபத்திரர் மனைவி பாடி முடித்ததும் அவையே அதிரும் வகையில் கைத்தட்டல் ஒலி எழுந்தது. எல்லாரும் பெரியவரைக் கவனித்தனர். அவரும் அந்த இசைக்கு கைதட்டி மகிழ்ந்தார். அரியாசனத்தில் இருந்து எழுந்த அவர்,பாணபத்திரர் மனைவியே சிறப்பாகப் பாடினாள். அவளே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும், என்று மன்னனைப் பார்த்துச் சொன்னார். அடுத்த கணமே அங்கிருந்து மறைந்துவிட்டார். மின்னலென மறைந்துவிட்ட அவர் சோமசுந்தரப்பெருமானே என்பதை ராஜராஜ பாண்டியன் உணர்ந்தான். தன் ஆசைநாயகியின் சொல்கேட்டு, இத்தகைய போட்டிக்கு ஏற்பாடு செய்ததையும், நீதி தவறி நடந்ததையும் எண்ணி வெட்கப் பட்டான்.
இங்கே வந்து தீர்ப்பளித்து மறைந்தவர் சாதாரணமானவரல்ல! அந்த சோமசுந்தரப் பெருமானே இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறார். அவரது தீர்ப்பே எனது தீர்ப்பு. பாணபத்திரர் மனைவியே வென்றார். இங்கிருக்கும் ஈழத்துப்பாடகி, அவளுக்கு அடிமையாக இருந்து சேவகம் செய்ய வேண்டும். இங்கு வந்து தீர்ப்பளித்த ஈசனின் தீர்ப்பே எனது தீர்ப்பும், என்றான். மன்னனின் ஆசைநாயகி இதுகேட்டு தலைகுனிந்தாள். அவர்களெல்லாம் அரண்மனையை விட்டு உடனே போய்விட வேண்டும் என்றும் மன்னன் சொல்லி விட்டான். அன்றுமுதல் ஒழுக்கமான வாழ்வு வாழ உறுதிபூண்டான். பாணபத்திரர் மனைவி மன்னனிடம், மாமன்னரே! நமது பாண்டியமண்ணின் புகழ் இறைவனே சொன்ன எனது வெற்றியால் பாதுகாக்கப்பட்டு விட்டது. அந்த மன திருப்தி ஒன்றே எனக்கு போதும். நாம் எல்லாருமே சோமசுந்தரரின் அடிமைகள். அப்படியிருக்க, மானிடப்பிறவியான எனக்கு இன்னொரு மானிட ஜென்மம் அடிமையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்ப வில்லை. ஈழத்துப்பாடகியை விடுவித்து விடுங்கள், என்றாள். மன்னனும், அந்தப் பாடகிக்கும், பாணபத்திரர் மனைவிக்கும் பரிசுகளை வழங்கி கவுரவப்படுத்தி அனுப்பி வைத்தான்.
No comments:
Post a Comment