Saturday, 5 November 2016

தமிழும் தெய்வமும் (ஆதார பூர்வ விளக்கங்கள்):

Lord Muruga
தமிழ் தெய்வ மொழி என்பது ஆன்றோர் வாக்கு. 'தமி என்ற பதம் பிற மொழிகளின் துணையின்றி இயங்க வல்ல தனித்தன்மையைக் குறிக்க வந்தது' என்று உரை கண்டருள்கிறார் வாரியார் சுவாமிகள். இறைவனால் இப்புவிக்கு வழங்கப் பட்ட அருட்கொடை தமிழ் மொழி. இனி அருளாளர்களின் பாடல்களைக் கொண்டு தமிழ் மொழியின் சிறப்பினை ஆய்வோம்.

'தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் - தந்தான்' என்ற கம்ப ராமாயணப் பாடல் வரியில் 'நெற்றிக் கண் படைத்த சுடர்க் கடவுளான சிவபெருமான் தந்தருளிய தமிழை அகத்தியர் இப்புவிக்கு அளித்தார்' என்று குறிக்கிறார் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

'தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே'
என்று சான்றுரைக்கிறார் மணிவாசகர். நாவுக்கரசு சுவாமிகளும் 'முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய்' என்று இறைவன் முத்தமிழுமாய் விளங்கும் தன்மையினை வழிமொழிகிறார்.

Sage Agastya


தமிழுக்கு அகத்தியர் ஆற்றிய பணி அளப்பரியது. பரமனருளாலும் தமிழ்க் கடவுள் என்று போற்றப் படும் முருகப் பெருமானின் அருளாலும் தேனினும் இனிய தமிழ் மொழிக்கு இலக்கணம் அருளியவர் அகத்தியர்.

அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் 22ஆம் பாடலில் 'முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்' என்று குறிக்கிறார். தமிழால் தன்னை வசை பாடும் அடியவரையும் வாழ வைக்கும் தெய்வம் குமரவேளன்றி வேறொருவரும் உளரோ?

Lord Muruga and Avvaiyar

திருவேங்கடத் திருப்புகழில் 'தமிழ் மொழியினால் உள்ளம் உருகத் தன்னைப் பன்முறை பணிந்தேத்தும் அடியவர்களின் ஜனன மரணத் துன்பத்தை நீக்கி சிவ முக்தியை அடைவிக்கிறான் ஆறுமுகக் கடவுள்' என்றும் பாடுகிறார். வேதத்தினும் விழுமியது அருணகிரியாரின் வாக்கு.
 
சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர
சரவணபவ நிதி அறுமுக குருபர எனவோதித்

தமிழினில் உருகிய அடியவர் இடமுறு
சனன மரணமதை ஒழிவுற சிவமுற
தருபிணி துள வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே


Lord Shiva

மகா கவி பாரதி தமிழன்னையே தன்னைப் பாடிக் கொள்வதாய் பாடும் 'தமிழ்த் தாய்' தொகுப்பில் ஒரு பாடலைக் காண்போம்.

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்


Barathiar

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்றும் போற்றுகிறார் மகா கவி. தமிழ் மொழியின் சிறப்பினை உணர்வோம்; வளரும் தலைமுறையினர்க்கு முறையாக அதனைப் பயில்விப்போம்; பயன்பாட்டில் மிகுதியாகக் கொண்டு வருவோம்; உய்வு பெறுவோம்.

பொதிகை மலைச் சாரலில் அகத்தியருக்கு முருகப் பெருமான் தமிழைக் கற்பிக்கும் காட்சி

 Lord Muruga and Sage Agastya 

No comments:

Post a Comment