எங்கெங்கு காணினும் சக்தியடா!
பிரம்மாவின் புதல்வர்களுள் ஒருவன் தட்சன். அவனை தட்சப் பிரஜாபதி என அனைவரும் அழைப்பர். அவன் மகள் சதி தேவி எனப்படும் தாட்சாயணி. அவள் சிவபெருமானை மணந்து கொண்டாள். தட்சன் மிகப்பெரிய அளவில் யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும் யாகத்தில் கலந்து கொள்ள அழைத்தான். சதிதேவியையும், சிவபெருமானையும் தவிர தேவர்கள், முனிவர்கள் அனைவரும் யாகத்தில் கலந்து கொண்டனர். தன் தந்தை யாகத்திற்கு அழைக்காவிட்டாலும் தன் கணவரான ஈசனுக்குச் சேர வேண்டிய ஹவிர்பாகத்தைப் பெற தீர்மானித்தாள் சதி தேவி. அதற்கேற்றாற்போல் வானவீதியில் அனைவரும் தட்சயாகத்திற்குப் போகும் காட்சி அவள் மனதை மேலும் தூண்ட, யாகத்திற்குச் செல்ல ஈசனிடம் அனுமதி கேட்டாள் சதிதேவி. அழையா விருந்தாளியாகச் சென்று அவமதிக்கப்படப்போகிறாளே எனும் ஆதங்கத்தில் ஈசன் அதற்கு அனுமதி மறுத்தார். இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியது. அப்போது தன் சக்தியைக் காட்ட சதிதேவி ஈசனுக்கு எடுத்துக் காட்டிய பத்து உருவங்களே தசமகாவித்யாவாக உபாசகர்களால் போற்றப்படுகின்றன.
மை போன்ற கருநிறம் கொண்டவளாய்காளியாய் உருமாறி பயங்கரமான பற்களைக் காட்டி இடிமுழக்கம் போல் பயங்கர சத்தத்துடன் சிரித்தாள் சதி. தன் முக்கண்களாலும் ஈசனை நோக்க சர்வநாடியும் ஒடுங்கி நின்றார் ஈசன். ஈசனுக்கு நேர் எதிரில் காளியாகவும், அவருக்கு மேலே தாராவாகவும், வலது புறம் சின்னமஸ்தாவாகவும், இடது புறம் புவனேஸ்வரியாகவும், பின்புறம் பகளாமுகியாகவும், கீழ்ப்புறம் பைரவியாகவும், தென்கிழக்கே தூமாவதியாகவும், தென்மேற்கே திரிபுர சுந்தரியாகவும் வடமேற்கில் மாதங்கியாகவும் வடகிழக்கில் கமலாத்மிகாவாகவும் உருமாறி நின்ற சதி தேவியின் சக்தி முன், தான் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஈசன் உணர்ந்தார். வேறு வழியின்றி யாகத்திற்குச் செல்ல அனுமதி தந்தார். யாகசாலையில் நுழைந்த சதியை அவமானப்படுத்திய தட்சப்பிரஜாபதி ஈசனின் மகிமையை அறியாமல் அவரது தோற்றத்தை இகழ்ந்தான்.
அதனால் மனம் நொந்த சதிதேவி அந்த யாக குண்டத்தில் விழுந்தாள். அதை அறிந்த ஈசன் வீரபத்திரரை தோற்றுவித்து தட்சயாகத்தை அழித்தார். சதியின் உடலை தன் தோளில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அதனால் உலகமே நடுங்கியது. திருமால் தன் சக்ராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக்கினார். அவை பாரத தேசமெங்கும் சிதறி விழுந்து சக்தி பீடங்களாயின. தசமகாவித்யா தேவியர் தோன்ற காரணமான தட்சயாகம் 51 சக்திபீடங்கள் தோன்றியதோடு முடிந்தது. பிறகு தாட்சாயிணி பர்வதராஜன் மகள் பார்வதியாகப் பிறந்து ஈசனை மணந்தாள். சனத்குமாரர்கள் (பிரம்மபுத்திரர்கள்) சதுச்ருங்க மலையில் சதாசிவனை நோக்கித் தவம் செய்தனர். அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன் ரிஷபாரூடராக தோன்றினார். ஆனாலும், ஆழ்ந்த தியானத்திலிருந்து சனத்குமாரர்கள் கண் விழித்துப் பார்க்கவில்லை. அவர்களை எழுப்ப சிவன் டமருகத்தை (உடுக்கை) வேகமாய் ஆட்டினார்.
சனத்குமாரர்கள் கண்விழித்து சிவனடி பணிந்தனர். இதனை சிவமகா புராணம் சொல்கிறது. அந்த உடுக்கையிலிருந்து ‘டம்டம்’ என்று எழுந்த நாதமே சமஸ்கிருதத்தின் 51 எழுத்துகளாயின என்றும், இவை பாரத தேசத்தின் 51 இடங்களில் எரிநட்சத்திரம்போல் தெறித்து விழுந்தன என்றும் சொல்வார்கள். அவை, ‘அ’ முதல் ‘க்ஷ’ வரையிலான 51 எழுத்துகளாகும். சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் (எழுத்துகள்) தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் உடல் பகுதிகள் விழுந்தன. ஆகவே அவற்றை 51 அட்சர சக்தி பீடங்கள் என்பர். இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் எனும் நூல் கூறுகிறது. தேவி பாகவதம், ஸ்கந்த புராணம், பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்பிகைக்கு 108 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. வேதவியாசரின் தேவிபாகவதம் 108 சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. காளிகா புராணம் நான்கு ஆதி சக்தி பீடங்கள் இருப்பதாகக் கூறுகிறது. மேலும் ஆதி சங்கராச்சாரியாரின் ‘அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம்’ 18 மஹா சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது.
தந்திர சூடாமணி என்ற நூல் 51 அட்சர சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகிறது. (52 என்று கூறுபவர்களும் உண்டு.) லலிதா ஸகஸ்ரநாம ஸ்தோத்திரத்திலும் ‘பீடங்களும் அங்க தேவதைகளும்’ என்ற பகுதியில் சக்தி பீடங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. இதில் பஞ்சாசத் பீட ரூபிணீ என்ற பதம் வருகிறது. மார்க்கண்டேய புராணமும் திருவிளையாடற் புராணமும் 64 சக்தி பீடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்த 64 பீடங்களும் தேவி பாகவதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. சம்ஸ்க்ருதத்தின் 51 அட்சரங்களுக்கும் 51 பீடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. நவ சக்தி பீடங்கள் என்ற ஒன்பது பீடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நித்யோத்சவம், வாமகேஸ்வர தந்த்ரம் போன்ற நூல்களும் சக்தி பீடங்களைப் பற்றிக் கூறுகின்றன. சக்தி பீடங்கள் என்பவை ஆதிசக்தியின் ரூபமான சதிதேவி எனும் தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவான கோயில்களாகும்.
சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருள் கொள்ளலாம். இதில் 51 சக்தி பீடங்கள் அக்ஷரசக்தி பீடங்கள் என்றும், 18 சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும், நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் வழங்கப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி சக்தி பீடங்களான அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா ஆலயம், கொல்கொத்தாவின் காளிகாட் ஆலயம், ஒடிஸாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி ஆலயம், பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கொலுவீற்றருளும் விமலா தேவி சந்நதி ஆகிய நான்கு சக்தி பீடங்களையாவது கட்டாயம் தரிசிக்க வேண்டும் என தேவி தந்திரம் எனும் நூல் கூறுகிறது. எந்த ஊரில் அருளும் சக்திபீட நாயகியை தரிசிக்கச் சென்றாலும் அங்கு அருளும் பைரவரையும் கட்டாயம் வணங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக சொல்லப்பட்டுள்ளது. எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல் பாரதமெங்கும் மட்டுமல்லாமல் இலங்கையிலும், பாகிஸ்தான் பலூசிஸ்தானிலும் சக்தி பீட நாயகியாய் அம்பிகை அருள்கிறாள். இனி அடுத்தடுத்து சக்தி பீட நாயகியரை தரிசிப்போம்
No comments:
Post a Comment