சிவாகம மரபில் தீக்ஷை என்பது மிக முக்கியமான கிரியை ஆகும். ஜாதி மற்றும் வருணாச்சிரம பேதங்களுக்கு அப்பால் யாவரும் பெற்றுக் கொள்ளத்தக்கதாக விளங்கும் இந்த தீக்ஷைகளை சைவசமயிகள் யாவரும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சிவாகமங்கள் வலியுறுத்துகின்றன.
இதே போல, வைஷ்ணவர்களுக்கும் பாஞ்சராத்திரதீக்ஷை போன்றன இருப்பதாகவும் அது மிகவும் வலியுறுத்தப்படுவதாகவும் தெரிகின்றது.
பொதுவில் உபநயனம் போன்ற சடங்குகள் குறித்த சில வருணத்தாராலேயே அதிகம் பின்பற்றப்பட்டு, அவர்களுக்குரியதாக காட்டப்பட்டு விட்ட சூழலில் தீக்ஷை என்பது அனைவருக்கும் உரியதாக சிறப்பாக கைக்கொள்ளப்படுவது விசேடமானதாகும்.
சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம். எனவே, இத்தீட்சா மரபுகளை நன்கு ஆராய்ந்து கற்றறிகின்ற போதே இதிலுள்ள விளக்கங்களை அறிந்து கொள்ள முடியும்.
சைவாகம செம்பொருளை யாவரும் அறியும் வண்ணம் விரித்துரைத்த பெருமை பதிணெண் பத்ததிகாரர்களுக்கு உரியது. அதில், அகோரசிவாச்சார்ய பத்ததியும் முதன்மையானது. அந்த அகோர சிவாச்சார்யார் தொகுத்த பத்ததிக்கிரமமே பெருமளவில் சைவாகம தீக்ஷைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகின்றது.
நூல்கள் பேசும் தீக்ஷைகள் பல. மானசதீக்ஷை , நயனதீக்ஷை , ஸ்பரிச தீக்ஷை வாசகதீக்ஷை சாஸ்திரதீக்ஷை, யோகதீக்ஷை, ஒளத்திரி தீக்ஷைபோன்ற ஏழு வகையான தீக்ஷைகள் பொதுவாகப் பேசப்படுகின்றன. இந்த ஆகமங்கள் சொல்லும் முக்கிய தீக்ஷைகள் யாவும் ஒளத்திரி தீக்ஷையின் பாற்படுவன.
இதே போலவே, யாகம், கும்பம் போன்றன இன்றிச் செய்யும் தீக்ஷை நிராதார தீக்ஷைஎன்றும் அவற்றோடு கூடிச் செய்யும் தீக்ஷை சாதாரதீக்ஷை என்றும் அழைக்கப்படும். சிவாகமம் பேசும் சமயாதி தீக்ஷைகள் போன்றன சாதாரதீக்ஷையாகும்.
இவ்வாறே பீஜாட்சரங்களுடன் கூடிய மந்திரோபதேசத்தோடு வழங்கப்படும் தீக்ஷை சபீஜதீக்ஷை என்றும் பீஜாட்சரமின்றி மந்திர உபதேசம் செய்யும் தீக்ஷை நிர்பீஜதீக்ஷை என்றும் குறிப்பிடுவர். பொதுவில் பெண்களுக்கு நிர்பீஜதீக்ஷையே வழங்குவது வழக்கம்.
சிவாகம மரபில் சமய தீக்ஷை, விசேடதீக்ஷை, நிர்வாண தீக்ஷை என்று மூன்று வகை தீக்ஷைகளும் அதற்கு மேலே சிவாச்சார்ய அபிஷேகம் என்கிற நான்காவது தீக்ஷையும் முக்கியமானவை. இவைகள் செய்யப்படும் விதம் குறித்தும் இவற்றில் உள்ள சில விடயங்கள் குறித்தும் இனி நோக்கலாம்.
பொதுவான அம்சங்கள்
மேலே சொன்ன நான்கு வகையான தீக்ஷைகளுக்கும் பூர்வாங்கமாக தடைகளை நீக்கும் விநாயகவழிபாடு, சுத்தியை உண்டாக்கும் பஞ்சகவ்யபூஜை, புண்யாகவாசனம் போன்றனவும், இடத்தில் சுத்தி செய்யும் வாஸ்து சாந்தி, யாகத்தில் பாலிகை சேர்ப்பதற்கான மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் போன்றனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றோடு தீக்ஷை வழங்கும் குருவும், தீக்ஷை பெறும் சீடனும் ரட்சாபந்தனம் என்கிற காப்பு அணியும் நிகழ்வும் உண்டு.
இவற்றுக்கு அடுத்து தீக்ஷைக்கான யாகமண்டபபூஜை இடம்பெறும். கும்பாபிஷேகம் போன்ற வைபவங்களில் நடக்கிற யாகபூஜையை ஒத்து இருக்கும். ஆனால், இந்த தீக்ஷைக்கான யாகபூஜையில் வேதிகையில் (மேடை) மண்டலம் அமைத்து பூஜிப்பர். சிவாகமங்களில் சுபத்திரா முதலிய தீக்ஷாமண்டலங்கள் அமைத்து பூஜிப்பர்.
உதாரணமாக சுபத்திரா தீக்ஷாமண்டலத்தை எடுத்துக் கொண்டால் பஞ்சலிங்கங்கள் அந்த மண்டலத்தில் வரையப்பட்டிருக்கும். அவை வௌ;வேறு நிறத்தில் அமைந்திருக்கும். அவற்றை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்று விரிவாக பூஜிப்பர். அருகில் இதேபோல ஐந்து கும்பங்கள் வைத்து சிவபெருமானின் பஞ்சமூர்த்திகளையும் பூஜிப்பர்.
மேலும், யாகத்தில் கணேசர், நந்தி, மஹாகாளர், சுப்ரஹ்மண்யர், போன்ற பல்வேறு சிவசம்பந்தமான மூர்த்திகளும் கும்பங்களில் பூஜை செய்யப்படுவர்.
இந்த யாகத்தில் ஹோமகுண்டம் உருவாக்கப்பட்டு விசேஷ ஹோம வழிபாடும் இடம்பெறுவதுடன், தென்கிழக்கு மூலையில் ஸ்தாலிபாகம் என்று சொல்லப்பட்டுள்ள இடத்தில் நெய் கலந்து அன்னம்(சரு) ஒரு பானையில் உருவாக்கப்படும். குருவால் உருவாக்கப்படும் இந்த ஹவிஸ் என்ற அன்னம் மூன்றாக வகுக்கப்படும்.
முதல் பாகம் குருவுக்கானது. இரண்டாம் பாகம் சிவாக்கினியில் ஹோமத்திற்கு உரியது. மூன்றாவது பாகம் சிவனுக்கு நெய்வேதனத்திற்கு உரியது. மிகுதி ஸ்தாலியில் (பாத்திரத்தில்) இருப்பது சீடனுக்கு உரியதாகும்.
இவ்வாறான கிரியைகள் எல்லா தீக்ஷைகளுக்கும் பொதுவான அம்சங்களாகும்.
சமயதீக்ஷை
யாகத்தின் மேற்கு வாசலை நோக்கி சீடனை அழைத்து வந்து குருவானவர் சிவபெருமானை பிரார்த்தனை செய்து, பிரணவாசனத்தில் சீடனை நிற்கச் செய்து, சுத்தி செய்து, நிரீட்சணம், புரோட்சணம் முதலிய சம்ஸ்காரங்களால் அவனை தூய்மையாக்கி, அவனை சிவமாக்குவார்.
அதன் பின் அவனது கண்களை வெண்பட்டால் கட்டி, யாகத்துக்குள் அழைத்து வந்து கையில் பூவை கொடுத்து தீக்ஷா மண்டலத்தில் இடச் செய்வார். அவன் கண்களை மூடிக் கொண்டு பூ இட்ட லிங்கத்தின் பெயரே அவனது தீக்ஷா நாமமாகும். (ஈசான சிவ, தத்புருஷ சிவ, அகோர சிவ, வாமதேவ சிவ, சத்யோஜாத சிவ)
இதன் பின் சில ரஹஸ்ய மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெறும். இதன் பின், குருவானவர் சீடனுக்கு மந்த்ரோபதேசம் செய்வார். அதன் பின், பூர்ணாகுதி வழங்கப்பெறும். சீடன் குருவையும், மண்டலேஸ்வரரான சிவனையும், அக்னியையும் வழிபாடாற்றுவான். ஆசீர்வாதத்துடன் இத் தீக்ஷை நிறைவு பெறும். இது சமய தீக்ஷையாகும்.
விசேட தீக்ஷை
சமயதீக்ஷை பெற்று, சமய ஒழுக்கங்களுடன் வாழும் சீடனுக்கு வழங்கப்பெறுவதே விசேடதீக்ஷை. முன்போலவே, செய்யப்படும் யாகபூஜை, ஸ்தாலீபாகம் என்பவற்றுடன், மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெற்று, தீக்ஷா விதிகளில் சொல்லப்பட்டவாறான ஹோமங்கள் இடம்பெறும்.
குரு தன்னை சீடனுடன் ஐக்கியப்படுத்தி, ஹோமவழிபாடுகள் செய்வார். சீடனால் வழிபாடு செய்யப்பட்டதும் ஆசீர்வாதம் செய்யப்படும். இதன் போது குல மரபுக்கு ஏற்ப யக்ஞோபவீதம்(பூணூல்) வழங்குவதும் சம்பிரதாயம். இதன் பின், சீடன் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தகுதியானவன் ஆகிறான்.
நிர்வாண தீக்ஷை
விசேட தீக்ஷை பெற்று சில காலம் ஆகிய பின்னர், குருவானவர் சீடனுடைய பக்குவநிலையை அறிந்து நிர்வாண தீக்ஷை செய்கிறார். இந்த தீக்ஷைக்கும் முன் சொன்ன பூர்வாங்கமான கிரியைகள் அனைத்தும் உண்டு. அநேகமாக இக்கிரியையை இரவில் செய்வது வழக்கம்.
குருவானவர் இறைவனிடம் வேண்டிக் கொண்டு யாகத்தில் சிவாக்கினிக்கு அருகில் சீடனை நிற்க வைத்து 38 கலாநியாசம் செய்து, மூன்று இழை கொண்ட நூலை மேலும் மூன்றாக்கி, சுசும்னா நாடியாக பாவித்து, சீடனின் சிகையில் கட்டி பாதம் வரை தொங்குமாறு செய்வார்.
சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார்.
மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை செய்து, யாகபூஜை முடிந்ததும், சீடன் முதல் நாள் இரவு கனவு கண்டாரா? என்று அறிந்து அதற்கேற்ப ஹோமங்கள் நடக்கும். பின்னர் சிவகும்பம் முன் முதல் நாள் இரவு வைத்த பாசசூத்திரம் என்ற நூல் பின்னரும் சீடனின் சிகையில் கட்டப்பட்டு, கலைகள் வெட்டி எடுக்கப்பட்டு, அக்கினியில் சேர்க்கப்பட்டு ஹோமம் செய்யப்படும். இவற்றுக்கெல்லாம் விரிவான ஹோமங்களும் தத்துவ விளக்கங்களும் அகோரசிவாச்சார்ய பத்ததியில் காணலாம்.
முடிவில் சிறிதளவு சிகையும் வெட்டப்பட்டு கோமயத்தில் வைத்து ஆகுதி செய்து, பின் சீடனை ஸ்நானம் செய்து வரச் செய்து மீண்டும் வழிபாடுகள் ஆற்றி ஆசீர்வாதம் செய்யப்படும். இது நிர்வாண தீக்ஷை யாகும்.
ஆச்சார்ய அபிஷேகம்
தகுதி வாய்ந்த சீடன் ஆலயங்களில் கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உத்ஸவாந்தம், உத்ஸவாதி பிராயச்சித்தாந்தம் என்கிற கிரியைகள் யாவற்றையும், இன்னும், தீக்ஷை முதலியவற்றையும் செய்து நல்ல குருவாக மிளிர குருவால் அதிகாரம் அளிக்கப்படுவதே ஆச்சார்ய அபிஷேகம் ஆகும். ஆனால், இந்த ஆச்சார்ய அபிஷேகம் பெற்ற ஆதிசைவ குலத்து வேதியர்களே ஆலயக்கிரியைகளான பரார்த்தம் செய்யலாம் என்றும், பிறர் ஆன்மார்த்த கிரியைகளையே செய்து வைக்கலாம் என்றும் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
முன் சொன்ன விதிகள் போலவே யாகபூஜை வரை செய்து ஹோமவழிபாடுகள் ஆற்றி நிறைவாக, சிவகும்பங்களால் சீடனுக்கு அபிஷேகம் செய்து, அதிகாரம் வழங்கப்படும்.
முந்தைய தீக்ஷைகள் போலன்றி, இந்நிகழ்வுக்கு பின்னர், சீடனானவன் சிவாகமவிதிகளின் படி, ஒரு குருவாக மிளிர்வதால் இந்நிகழ்வு குருத்துவ அபிஷேகமாக பலரும் பார்க்கும் நிகழ்வாக, சிறப்பாக மங்களகரமான வைபவமாக இது இடம்பெறும்.
இந்நிகழ்வின் நிறைவிலும் சீடன் குரு, மண்டலேஸ்வர சிவன், அக்கினி முதலியவற்றை பூஜிப்பான். தூன் நியமத்துடனும் செழுமையாகவும், ஒழுக்கமுடையவனாகவும், ஆகமவிதிகளின் வண்ணம் சிவாச்சார்யனாக திகழ உறுதி பூண்டு அன்றிலிருந்து செயற்படலாவான்.
இந்த சிவாச்சார்ய அபிஷேகத்தை செய்து வைக்கிற போது ஒருவனது தகுதி மிகவும் நுணுக்கமாக ஆராயப்பட வேண்டும். இல்லாது போயின், தீக்ஷா விதிகளுக்கு அமைவான சிறப்புகள் இங்கே இல்லாது போய் விடும்..
பொதுவில் மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் வேதியர் குலத்தார் என்று சேக்கிழார் அறிமுகம் செய்யும் சிவாச்சார்ய மரபினரே இந்த நான்காவது தீக்ஷை ஆகிய சிவாச்சார்ய அபிஷேகம் பெறுவதைக் காணலாம்.
இந்த அபிஷேகம் பெற்றுக் கொண்ட பின்னரும் சில நாட்கள் (ஒரு மண்டலம் என்று சொல்லப்பட்ட போதிலும் ஒரு பக்ஷமாவது) நியமம் காக்கும் சீடன் குருவால் அஸ்திராபிஷேகம் என்கிற பாசுபதாஸ்திரமூர்த்தி வழிபாட்டுடனான அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு முழுமையான சிவாச்சார்யனாவான்.
இவ்வாறு நீண்ட இக்கிரியைகளில் ஒவ்வொரு சைவரும் சமயதீக்ஷையேனும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் வலியுறுத்துவார்கள். இவ்விளக்கம் தீக்ஷை தொடர்பான முழுமையான விளக்கம் அன்று. குருவுடனான தொடர்பும் அது வழியான சிவாகம உணர்ச்சியும், சிவவழிபாடுமே தீக்ஷை குறித்த நிறைவான புரிதலை வழங்கும் எனலாம்.
- நீர்வை. தி.மயூரகிரி சர்மா
No comments:
Post a Comment