Saturday, 5 November 2016

பஞ்ச புராணப் பாராயணம்:

Lord Nataraja



சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் ஐந்து பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அவை ஒவ்வொன்றிலும் ஒரு பாடலைத் தேர்வு செய்து, அப்பாடல்கள் ஐந்தையும் பாராயணம் செய்யும் மரபு 'பஞ்ச புராணப் பாராயணம்' என்று அழைக்கப் பெறும்.

முதல் ஏழு திருமுறைகள்: மூவர் தேவாரத்தில் ஒரு பாடலும், எட்டாம் திருமுறை: திருவாசகத்தில் ஒரு பாடலும், ஒன்பதாம் திருமுறை: திருவிசைப்பாவில் ஒரு பாடலும், ஒன்பதாம் திருமுறை: திருப்பல்லாண்டில் ஒரு பாடலும், பன்னிரெண்டாம் திருமுறை: பெரிய புராணப் பாடல் ஒன்றும் பஞ்ச புராணத்தில் இடம் பெறுபவை.

பன்னிரு திருமுறைகளையும் பாராயணம் புரிந்த நற்பலன்களைப் 'பஞ்ச புராணப் பாராயணம்' பெற்றுத் தரும் என்று சைவ சமய ஆச்சாரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பெரும்பான்மையான தலங்களிலும், நூல்களிலும் கீழ்க் கண்ட ஐந்து பாடல்களுமே பஞ்ச புராணப் பாடல்களாக இடம் பெறுகின்றன. இப்பாடல்களை அனுதினமும் பாராயணம் செய்து உய்வு பெறுவோம் (ஓம் நமசிவாய!!)

Lord Nataraja and Goddess Sivagami


தேவாரம் (திருநாவுக்கரசர்) - 4ஆம் திருமுறை:-

அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தம் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!!!


திருவாசகம் (மாணிக்கவாசகர்): 8ஆம் திருமுறை:


கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத்து அழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம்பலம் என்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்!!!


Lord Nataraja

திருவிசைப்பா (திருமாளிகைத்தேவர்) - 9ஆம் திருமுறை:

ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே!
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே!
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே!
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே!
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே!!!


திருப்பல்லாண்டு (சேந்தனார்) - 9ஆம் திருமுறை:

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் -போயகல
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து -புவனியெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு -அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப் -பல்லாண்டு கூறுதுமே!!!
 
பெரிய புராணம் (சேக்கிழார்) - 12ஆம் திருமுறை:

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்!!!

 

No comments:

Post a Comment