Saturday 5 November 2016

திருமுறை கண்ட புராணம் (தேவாரப் பனுவல்கள் கிடைக்கப் பெற்ற வரலாறு):

raja raja chozhan listens to devaram hymns


தேவாரப் பனுவல்கள் பாடப் பெற்ற காலம் 7ஆம் நூற்றாண்டு தொடங்கி 8ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில். பின்னர் சில நூற்றாண்டுகளுக்கு சிற்சில பாடல்களைத் தவிர மற்ற பனுவல்கள் வழக்கில் இல்லாது போயின.




10ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் நடந்தேறுகிறது. ஒரு சமயம் அரசவையில் ஓதுவாரொருவர் பாடிய சில தேவாரப் பாடல்களை மன்னன் செவியுற்று உள்ளம் மகிழ்கிறான்.



ஓரிரு பாடல்களே இத்தகு தெய்வீகச் சுவையுடன் திகழுமெனில் அனைத்து பதிகங்களும் கிடைக்கப் பெறுமானால் இனி வரும் தலைமுறையினரும் உய்வு பெறலாமே எனக் கருதி அவையினரிடம் இது குறித்து ஆலோசிக்கிறான்.



அமைச்சர் ஒருவர் 'திருநாரையூர் தலத்தில் நம்பி ஆண்டார் நம்பி எனும் அருளாளர் வாழ்ந்து வருகிறார். அவர் அங்கு உறையும் பொல்லாப் பிள்ளையாரிடம் நேரடியாகப் பேசும் தவம் பொருந்தியவர். அவர் நமக்கு உதவலாம்' என்று தெரிவிக்கிறார்.



மன்னனும் உடனே திருநாரையூர் விரைகிறான். நம்பியிடம் பணிந்து 'தேவாரப் பனுவல்கள் இருக்கும் இடத்தை ஆனைமுகக் கடவுளிடம் அறிந்து கூறுமாறு' விண்ணப்பிக்கிறான்.



திருமுறைப் பனுவல்கள் சிதம்பரம் திருக்கோயிலில் திருக்காப்பிட்ட ஒரு அறையுள் இருப்பதாக நம்பியிடம் பொல்லாப் பிள்ளையார் அறிவித்தருளுகிறார். சோழன் நம்பியுடன் சிதம்பரம் விரைகிறான்.



தில்லை வாழ் அந்தணர்களோ 'தேவார மூவர் நேரடியாகத் தோன்றாது திருக்காப்பிட்ட அறை திறக்கப் பட அனுமதியோம்' என்று பகர்கின்றனர். சோழ மன்னன் தேவார மூவரின் உற்சவ மூர்த்திகளை சிவிகையில் எழுந்தருளச் செய்துப் பின்னர் அறையைத் திறப்பிக்க வேண்டுகிறான்.



'உற்சவ மூர்த்திகளின் சிலா ரூபத் திருமேனியைத் தேவார ஆசிரியர்களாக ஏற்பதற்கு இல்லை' என்று தீட்சதர்கள் மறுக்கின்றனர். மன்னனும் 'சிற்சபையில் நின்றாடும் அம்பலவாணரையும் தாங்கள் சிலை என்றே கூறுவீர்களா?' என்று வாதிட, அரசனின் மதி கூர்மையை வியக்கும் அந்தணர்கள் முடிவில் திருக்காப்பினைத் திறப்பிக்க இசைகின்றனர்.



திறப்பிக்கப் படும் அறையில் எண்ணற்ற பனுவல்கள் கிடைக்கப் பெறினும் பெரும்பகுதி ஓலைச் சுவடிகள் செல்லரித்த நிலையில் காணப் படுகிறது. இறைவன் அசரீரியாய் 'இக்காலத்து தேவைப்படும் பதிகங்களைத் தவிர பிறவற்றை மறைத்தோம்' என்று பேரருள் புரிய அனைவரும் பேரானந்தம் கொள்கின்றனர்.



பின்னர் நம்பி ஆண்டார் நம்பி திருமுறைகளைப் பதினொன்றாகத் தொகுக்க, இராஜ இராஜ சோழனும் அவற்றை ஒரு சுபதினத்தில் தில்லையில் அரங்கேற்றம் செய்வித்து நிலைத்த புகழினைப் பெறுகிறான்.

நம்பி ஆண்டார் நம்பி திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரை வழிபடும் காட்சி!!!

No comments:

Post a Comment