Monday 28 November 2016

51 சக்தி பீடங்கள் : 2

கடைக்கண் பார்வையில் கடைத்தேற்றும் காமாட்சி : காஞ்சிபுரம் - ஒட்யாண பீடம்





Image result for காஞ்சிபுரம் காமாட்சி

ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழ்வதும், காமகோடி பீடத்தினரால் உபாசிக்கப்படும் தேவியுமான காஞ்சி அன்னை காமாட்சி பேசும் தெய்வமாக போற்றப்படுகிறாள். வேண்டும் வரங்களை விரைந்து தரும் வரப்பிரசாதியும் இவளே. காமாட்சி எனும் திருநாமத்தில் கா என்பது சரஸ்வதியையும், மா என்பது லட்சுமியையும் குறிக்கும். அட்சி என்பது கண்ணாக உடையவள் என்று பொருள்படும். அதாவது, கலைமகளையும், திருமகளையும் தன் இரு கண்களாகக் கொண்டவள் காமாட்சி என்பதையே அவளது திருப்பெயர் உணர்த்துகிறது. நாடி வரும் பக்தர்களுக்கு கல்வியையும், செல்வத்தையும் ஒருங்கே தருபவளாக இந்த அம்பிகை விளங்குகிறாள். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளாள்.

Image result for காஞ்சிபுரம் காமாட்சி

தந்திர சூடாமணி எனும் நூலின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இத்திருத்தலம் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது. காஞ்சிக்கு வந்து அன்னை கொலுவிருந்ததற்கு காரணம் உண்டு. கயிலையில் சிவனின் கண் பொத்தி விளையாடினாள் உமையவள். ஈசனின் நெற்றிக்கண் ஒளிபட்டு பார்வதி கருநிறம் கொண்டாள். சாபத்தின் விளைவாய் காசியில் சில காலம் அன்னபூரணியாகவும், மாங்காட்டில் பஞ்சாக்னி வளர்த்து அதன் நடுவே காமாட்சியாக தவமிருந்து, பிறகு சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் மணலை லிங்கமாக பிடித்து பூஜித்தாள். அப்போது கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வர மணல் லிங்கத்தை தன் திருக்கரத்தால் கரையாவண்ணம் காத்தாள். பஞ்சாக்னி வளர்த்து தவமிருந்து காம இச்சையை சுட்டெரித்ததால் காமாட்சி எனும் பெயருடன் சாப விமோசனம் பெற்றாள். அதேசமயம் மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உருவான பண்டாசுரன் எனும் அசுரனை அனைத்து தேவர்களின் துணையோடு வதைத்த லலிதா திரிபுரசுந்தரியின் வடிவினளாக இத்தலத்தில் நிலைகொண்டாள்.

தன் கணவரான ஈசன் அளித்த இரண்டு நாழி அளவு நெல்லினைக் கொண்டே இவ்வுலகில் 32 அறங்களையும் வளர்த்ததால் அறம் வளர்த்த நாயகி என்ற சிறப்புப் பெயரும் இந்த அன்னைக்கு உண்டு. இத்தேவி அமர்ந்துள்ள இடம் காம கோட்டம் என அழைக்கப்படுகிறது. காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள். காமாட்சியை வலம் வந்து வரம் கேட்டால் தட்டாது தருவாள் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆலயத்தில் பலிபீடம் அஸ்திரதேவி எனும் தேவியோடு அபூர்வமாக உள்ளது. முதல் பிராகாரத்தில் இருபத்து நான்கு தூண்கள் கொண்ட காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. காமகோடி காமாட்சி, அஞ்சன காமாட்சி எனும் அரூப லட்சுமி, ஸ்ரீசக்ரம் என மூன்று வடிவங்களில் இங்கு தேவி ஆராதிக்கப்படுகிறாள். முதல் வடிவான காஞ்சி காமாட்சி, காயத்ரி மண்டபத்தின் நடுவில் தென் கிழக்கு திசையை நோக்கி நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் தேவி அருட்காட்சியளிக்கிறாள்.

மற்ற அம்பிகை ஆலயங்களைப்போல அபயவரத முத்திரைகள் இல்லாது பாசம், அங்குசம், மலர்க்கணைகள், புஷ்ப பாணங்கள் போன்றவற்றை தன் திருக்கரங்களில் ஏந்தியுள்ளாள். அம்பிகையின் இடப்புற கோஷ்டத்தில் சேனா நாயகி எனப் போற்றப்படும் வாராஹியும், இரண்டாம் வடிவான அரூபலட்சுமியும் இடம் பெற்றுள்ளனர். வாராஹிக்கு முன்னே அம்பிகை பண்டாசுரனைக் கொன்று பூமியில் புதைத்ததின் நினைவாக ஜெயஸ்தம்பம் உள்ளது. இரு உருவில் பெரிய விநாயகர்களும் வாராஹிக்கு முன் அருள்கின்றனர். சௌந்தர்யத்திற்கே பொருள் தரும் லட்சுமி இத்தலத்தில் அரூபலட்சுமியாக அருள்கிறாள். வலப்புற கோஷ்டத்தில் திருமகளும் அந்தத் திருமகளைக்காண வந்த திருமாலான கள்ளவாரணரும் இடம் பெற்றுள்ளனர். நூற்றியெட்டு வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக இந்த சிறிய திருமாலின் சந்நதி இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.


மூன்றாம் வடிவான ஸ்ரீசக்ரம், திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை அரங்கேற்றித் துதித்த வசின்யாதி வாக்தேவதைகள் என்னும் எட்டு தேவிகளை உள்ளடக்கி காமாட்சியம்மனின் திருமுன் தரிசனமளிக்கிறது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட பெருமையுடையது இந்த ஸ்ரீசக்ரம். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். இந்த சக்ரத்திற்கே அர்ச்சனை, வழிபாடு, பூஜை எல்லாம் நடக்கின்றன. ஆதிசங்கரரின் வருகையால் இத்தலம் மேலும் சிறப்படைந்தது. காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்க்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்தும்.


51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்புகள் இந்தக் காஞ்சியிலே விழுந்ததாகக் கருதப்படுகிறது. ஒட்டியாண பீடம் என இந்தப் பீடம் சிறப்பிக்கப்படுகிறது. காஞ்சியில் அருளாட்சி புரியும் ஏகாம்பரநாதரும், வரதராஜப்பெருமாளும் உற்சவ மூர்த்திகளாக உலாவரும்போது அன்னை காமாட்சியை வலம் வந்து போவது வழக்கம். இத்தலத்தின் உள்ளே சென்றால் திசைகளை அறியமுடியாத ஆன்மிக உணர்வு மேலோங்குகிறது. சேக்கிழார் கூட இத்தலத்தை திசைமயக்கம் உள்ள ஆலயம் எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தலத்தில் சாஸ்தா, ராஜமாதங்கி, அன்னபூரணி, ஆதிசங்கரர் போன்றோர் பிராகாரத்தில் அருள்கின்றனர். தீபாவளியன்று பல்வேறு விதமான இனிப்புவகைகள் கொண்டு அன்னபூரணியை அலங்கரிப்பது வழக்கம். இன்றும் உற்சவ காலங்களில் உற்சவ காமாட்சி ஆலயத்தை விட்டு வெளியே போகும்போது ஆதி சங்கரர் சந்நதி முன் நின்று அனுமதி பெற்று பின்னரே ஊர்வலம் செல்வது வழக்கம். இத்தலத்தில் வெளி வாயில் அருகே ஞானகூபம் எனும் கிணறு உள்ளது.

பஞ்சமூர்த்திகளால் உருவாக்கப்பட்ட பஞ்சதீர்த்த குளமும் உள்ளது. இது உலகாணித் தீர்த்தம் என்றும் வழங்கப்படு கிறது. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வெளிப்பிராகாரத்திலிருந்தே தங்கம் வேய்ந்த கருவறை கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாக்ஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. க்ஷி என்றால் ஆறு. அதாவது படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் எனும் ஐந்தொழில்களையும் சக்தி பேதம் மூன்று. சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள். சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு. கடைக்கண் பார்வையினாலே பக்தர்கள் கோரும் நலனைத் தரும் அன்புத் தாய், காமாட்சி. ஸ்ரீநகரத்தில் லலிதாம்பிகை எத்திருக்கோலத்தில் அருள்வதாக கூறப்பட்டுள்ளதோ அதே திருக்கோலத்தில் பூவுலகில் காமாட்சியம்மன் அருட்கோலம் கொண்டதாக ஐதீகம். காஞ்சிபுரத்திலுள்ள எல்லாக் கோயில்களும் காமாட்சியம்மன் கோயிலை நோக்கியே அமைந்துள்ளன. இக்கோயிலின் முதல் பிராகாரத்தில் ஆதிசங்கரர் யோகாசனத்தில், தியான நிலையில் அமர்ந்துள்ள காட்சியைக் காணலாம். காமாட்சி தேவி காரடையான் நோன்பு மேற்கொண்டு கம்பாநதி வெள்ளப் பெருக்கிலிருந்து ஈசனைக் காப்பாற்றியதால் இத்தலத்தில் காரடையான் நோன்பு விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது.

அம்பிகை ஸ்ரீசக்ரத்தில் பிந்து மண்டல வாசினியாக முக்கோணத்துள் அருள்பவள் என்று கூறப்பட்டுள்ளதால், கருவறை முக்கோண வடிவில் அமைந்துள்ளது. வாராஹியின் எதிரே உள்ள சந்தான ஸ்தம்பத்தை வலம் வந்து வணங்குபவர்களுக்கு மழலை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் மேற்கு, காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள அன்னபூரணியை தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் போன்ற துவாரங்கள் மூலமும் தரிசிக்கலாம். பிக்ஷத்வாரத்தின் மூலம் அன்னபூரணியை வணங்கி ‘பவதி பிக்ஷாம்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டு வழிபட்டால் நம் வாழ்வில் உணவுப் பஞ்சம் வராது என்கிறார்கள். இத்தலத்தில் மூலஸ்தான காமாட்சி, தபஸ் காமாட்சி, பிலாகாஸ காமாட்சி, உற்சவ காமாட்சி, பங்காரு காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் அருள்கின்றனர். கனிவான தன் கண் வீச்சிலேயே பக்தர்களைக் காப்பதால், அன்னை தன் கரங்களால் அபய, வரத முத்திரைகளைக் காட்டவில்லை. காமாட்சியை வழிபட வரும் ஆண்கள் மேலாடை அணிந்திருக்கக் கூடாது என்பது இவ்வாலய வழிபாட்டு மரபுகளில் ஒன்று.

இங்கு எழுந்தருளும் முன் செங்கழுநீரோடை பிள்ளையார் கோயில் தெருவில் ஆதிகாமாட்சியாக கோயில் கொண்டாள், தேவி. ஆகவே ஆதிகாமாட்சியை தரிசிப்பதும் அவசியம். ஆதிசங்கரருக்கே இத்தலத்தில் முதல் மரியாதை. அவரது அனுமதி பெற்றே அம்பாள் வீதியுலா வருவாள். அப்போது அம்பாளை நோக்கியபடியே உலா வருவார் ஆதிசங்கரர். அம்பிகையின் கருவறை விமானமும், ஆதிசங்கரரின் விமானமும் தங்கத்தால் ஆனவை. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் அம்பிகைக்கு நவாவரண பூஜை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று ஏலவார்குழலியம்மன், ஏகாம்பரநாதர் திருமணம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். அதே சமயம் நூற்றுக்கணக்கான பக்த ஜோடிகளுக்கும் திருமணமும் நடக்கும். காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும் அவற்றில் அம்மன் சந்நதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழ்கிறாள். காமாட்சி அம்பாள் சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள்.

No comments:

Post a Comment