- நீர்வை. தி.மயூரகிரி சர்மா
இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத்
தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர்.
யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால், இன்றைய ஆலயங்களில் நடைபெறும் யாகபூஜையில் அக்னி வழிபாடு சிறிது சுருங்கியதாய், யாகவழிபாட்டின் ஓரங்கமாகியிருக்கின்றது.
யாக பூஜையும் யாக மண்டபமும்
யாகசாலை அல்லது யாகமண்டபம் என்பது ஒரு திருவோலக்கம் போன்றது. அதாவது, ஒரு
பெரும் சக்கரவர்த்தி தனது பரிவாரங்களோடு, அத்தாணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பது போல நாமும் நமது இறைவனை ஆவரண தேவ தேவியர்களோடு, சகல பரிவாரங்கள் சகிதம் யாகமண்டபத்தில் வீற்றிருக்கச் செய்கின்றோம்.
இவ்வாறு திருவோலக்கத்தில் எழுந்தருளியிருக்கிற பேரரசனுக்கு சகல வித உபசாரங்கள் வழங்குவது போல, இவ்வாறு மஹா யாக மண்டபத்தில் வீற்றருளும் இறைவனுக்கு, நாம் சகல உபசாரங்கள் வாழ்த்தி வழங்கிப் போற்றுகின்றோம்.
இவ்வாறு இந்த யாக உருவாக்கத்திலும், யாக பூஜையிலும், மந்திர பூர்வமாகவும், பாவனை மூலமும், கைலாசம், வைகுண்டம், ஸ்ரீபுரம் போன்ற தோற்றம் நம் பூமியில் உருவாகின்றது. இந்த வழிபாடுகள் நிறைவு பெற்றதும், தேவ தேவியர்களை அவரவர் இருப்பிடத்திற்கு (யதாஸ்தானம்) அனுப்பி வைப்பார்கள். பிரதான மூர்த்தியும், அஷ்ட வித்யேஸ்வரர், பீடசக்தி என்கின்ற ஸ்நபன திருமஞ்சன கும்பங்கள் அபிஷேகம் மூலம் திருவுருவத்துடன் சேர்க்கப்பெறும்.
ஆலயங்களில் நடக்கிற யாக பூஜையினில், இரண்டு மிகச்சிறப்பானது. ஓன்று வருடம் தோறும் குறிப்பிட்ட காலத்தில் நடக்கிற மஹோத்ஸவ யாகம், மற்றையது மஹா கும்பாபிஷேக யாகம்.
இதனை விட சங்காபிஷேகம், பவித்திரோத்ஸவம், பிராயச்சித்தம், விசேஷ அபிஷேகம், போன்றவற்றிலும் யாகபூஜைகள் நடைபெறுகின்றன.
இவற்றுள் மஹோத்ஸவம் என்கிற வருடாந்த பெருந்திருவிழாவுக்கான யாகசாலை நமது தென்னகத்திருக்கோயில்களில் தனியே ஆகம விதிப்படி அமைக்கப்பெற்றிருக்கக் காணலாம். (அநேகமாக திருக்கோயில்களில் ஈசான பாகத்தில் மேற்கு நோக்கியதாக இந்த யாகசாலை அமைந்திருக்கும்) மற்றைய விசேட யாகங்களுக்காக யாகசாலை தற்காலிகமாக, அழகாக அமைக்கப்பெறக் காணலாம்.
மஹோத்ஸவம், கும்பாபிஷேகம் இந்த நிகழ்வுகளில் எல்லாம் தினமும் இரண்டு வேளை
யாகபூஜை நடக்கக் காணலாம். சாதாரணமாக யாகசாலை நாற்புறமும் வாயில்களை உடையதாகவும், 16 தூண்களுடையதாகவும், நடுவில் சதுர வேதிகை (மேடை) உடையதாகவும், இருக்கும்.
இறைவனின் கொலு மண்டப வழிபாடு
யாகசாலையின் வாயுமூலை என்கிற வடமேற்கு மூலையில், அமிர்தேஸ்வரர் என்ற சந்திரகும்பம் வைக்கப்பெற்று பாலிகைகள் வைக்கப்பெற்றிருக்கும். ஈசான மூலையில் (வடகிழக்கில்) யாகேஸ்வரர்- யாகேஸ்வரி என்கிற யாகரட்ஷண மூர்த்தியும், நிருதி மூலையில் (தென்மேற்கு) புண்ணியாகவாசன மேடையும் அமைந்திருக்கும்.
இதனை விட யாகசாலையில் உள்ள தோரணங்கள், கதவுகள், மேல்விதானம், தூண்கள், திரைச்சீலை எல்லாம் தெய்வீகச்சிறப்புடையதாக, தியான ஆவாஹன பூஜை நடக்கக் காணலாம்.
சிவ யாகம்
சிவாகமபூர்வமான, யாகபூஜை, விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்யபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம் (மண் எடுத்தல்), சூரியாக்னி சங்கிரகணம் (சூரியனிலிருந்து நெருப்பு உண்டாக்கல்), அங்குரார்ப்பணம் (பாலிகை இடுதல்) ரக்ஷாபந்தனம் (சிவாச்சார்யார்கள் காப்பணிதல்), கடஸ்தாபனம் (கும்பங்கள் வடிவமைக்கப்பெறுதல்) என்பவற்றுடன் யாகபூஜை ஆரம்பமாகும். இவற்றினை விடவும் இன்னும் சிறப்பாக விரிவாக பல பூர்வாங்க கிரியைகளும் செய்வர்.
நவக்கிரஹம், நான்மறை, நான்கு யுகம், ஐந்து கலை, எண்திசைப்பாலகர், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி என பல்வேறு தேவ, தேவியரும் யாகத்தில் பல்வேறு இடங்களில் பூஜிக்கப்படுவார்கள்.
சில மூர்த்திகள் கும்பங்கள் வைக்கப்பெற்றும், சில மூர்த்திகள் கும்பங்கள் இல்லாமலும் பூஜிக்கப்பெறுவதும் ஆகம சம்பிரதாயமாக இருந்திருக்கின்றது. உதாரணமாக, 12 சூரியர்கள், 12 ராசிகள், 8 பைரவர்கள் முதலியவர்கள் கும்பங்கள் இல்லாமலும், எண்திசைப் பாலகர்கள் கும்பத்திலும் ஆவாஹித்து வழிபாடு செய்யும் வழக்கம் இவ்வாறுள்ளது.
அஷ்டமங்கலங்கள், தசாயுதங்கள் போன்றவையும் யாகத்தில் போற்றப்படுகின்றன. சித்திரங்களாக இவற்றை வரைந்து யாகத்தின் பல பாகங்களிலும் வைத்துப் போற்றும் வழக்கமும் உள்ளது.
யாகத்தில் சாதாரண மூர்த்திகளை வழிபட்ட பின் சிவாச்சார்யர் பிரதான மூர்த்தி பூஜைக்குச் செல்ல முன் அந்தர்யாகம், பூதசுத்தி என்னும் கிரியைகள் மூலம் தன்னை தயார்ப்படுத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிவாரங்களோடு கும்ப வடிவில் காட்சி தரும் பரமன்
ஆவரண மூர்த்திகள், புடை சூழ நடுவே மேடையில் பிரதான மூர்த்தி தமது ஆயதம், தேவியர், புத்திரர் பரிவாரங்களோடு எழுந்தருளியிருப்பார். இவர் வீற்றிருக்கும் ஆசனத்திற்கே தனிப்பட்ட சிறப்புப் பூஜை உள்ளது. அதனைப் பஞ்சாசனம் என்று குறிப்பிடுவர்.
ஆமை வடிவான ஆதாரசக்தி, அதன் மேல் ஆயிரம் தலை கொண்ட அநந்தன் என்ற அநந்தாசனம், அதன் மேல் சிங்கமுகங்களை உடைய சிம்மாசனம், அதன் மேல் காலம், கலை, நியதி என்ற யோகாசனம், அதன் மேல் தாமரை வடிவான பத்மாசனம், அதன் மேல் சூரிய, சந்திர, அக்னி மண்டல பூர்வமான விமலாசனம் இவற்றுக்கு மேலே கும்பத்தில் பிரதான மூர்த்தி வழிபடப்பெறுவார்.
இந்த ஆசனங்களை பாவனையாகக் காட்ட நவதானியங்களை வதை;து அதன் மேல் பிரதான கும்பத்தை நிறுவும் வழக்கமும் இலங்கையில் இருக்கின்றது. இதன் பிறகு கும்பத்தில் நியாச பூஜை நடக்கும். நியசித்தல் என்றால் பதித்தல் என்று பொருள். ஆக, சுவாமியை அங்கம் அங்கமாக இக்கும்பத்தில் நியசித்து விரிவாக பூஜிப்பர். இதன் பின் நிறைவாக அக்கினி வழிபாடு நடக்கும்.
இந்த அக்கினியில் நடக்கிற ஹோமத்தின் நிறைவாக, பூர்ணாஹுதி வழங்கி, யாகபூஜையை நிறைவு செய்து, பரிவார தேவர்களை விசர்ஜனம் செய்வர். பிரதான கும்பங்களை வீதியுலாவாகக் கொண்டு சென்று மூர்த்திக்கு அபிஷேகிப்பர்.
உதாரணமாக, சிவயாகத்தை எடுத்துக் கொண்டால் யாகத்தில் சுற்றிலும் 30 கும்பங்கள் வைத்து பூஜிப்பர். சந்திரன், சூரியன், சாந்திகலை, நந்தி, மஹாகாலர், வித்யாகலை, பிருங்கி, விநாயகர், நிவிர்த்திகலை, விருஷபர், ஸ்கந்தர், பிரதிஷ்டாகலை, தேவி, சண்டிகேஸ்வரர், வாஸ்துப்பிரம்மா, யாகேஸ்வரர், யாகேஸ்வரி, இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், பிரம்மா, விஷ்ணு, மஹாலக்ஷ்மி, விக்னவிநாயகர், சப்தகுரு என்று இந்த 30 கும்பங்களும் பூஜிக்கப்பெறும்.
இதே போல இன்னொரு உதாரணமாக சுப்பிரம்மண்யர் என்கிற முருகப்பெருமானுடைய யாகத்தை எடுத்துக் கொண்டால் அங்கேயும் 30 கும்பங்கள் பரிவார கும்பங்களாக யாகத்தில் பூஜிக்கப்படும் அதிலும் சிவயாகம் போலவே, எண் திசைப் பாலகர்கள், பிரம்மா, விஷ்ணு, யாகேஸ்வர யாகேஸ்வரி, கலைகள், மஹாலக்ஷ்மி, சப்தகுரு, விநாயகர் போன்ற பொதுவான மூர்த்திகள் பூஜிக்கப்பெறுவர்.
சுப்பிரம்மண்ய யாகம்
இவற்றை விட குமரக்கடவுளுடைய சிறப்பான பரிவாரங்களாகிய சுதேஹர், சுமுகர், மஹாவல்லி, கெஜாவல்லி(தேவசேனா), கஜர், மயூரர், குஹாஸ்திரதேவர், சுமித்திரர், தேவசேனாபதி, முதலிய மூர்த்திகள் பூஜிக்கப்பெறக் காணலாம்.
இவ்வாறே விநாயகர், அம்பாள், பைரவர், முதலிய மூர்த்திகளுடைய யாகசாலையிலும் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. மஹா விஷ்ணு யாக மண்டபபூஜை வைஷ்ணவ ஆகமங்களின் வழியே நடைபெறுவதாலும், அவற்றினை பற்றி விவரிப்பதைத் தவிர்க்கிறோம்.
கற்றாங்கு எரியோம்பல்
சிவாகம விதிப்படி கும்பாபிஷேக யாகத்தில் பஞ்சகுண்டம் (5 அக்னி குண்டங்கள்), நவகுண்டம் (9 குண்டங்கள்), சப்ததசகுண்டம் (17 குண்டங்கள்), திரியத்திரிம்சத்குண்டம் (33 குண்டங்கள்) அமைத்து ஹோம வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.
இவற்றில் பஞ்சகுண்ட, நவகுண்ட பூஜைகள் காமிக,காரண ஆகமங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக, நவகுண்ட பக்ஷ குடமுழுக்கு விழா என்றால் ஈசானத்தில் பிரதான குண்டம் விருத்த (வட்ட) வடிவில் அமையும். கிழக்கே சதுஸ்ர வடிவ குண்டமும், அக்னி மூலையில் யோனிகுண்டமும், தெற்கில் அர்த்தசந்திர (அரைவட்ட) குண்டமும், நிருதியில் திரிகோணமும் (முக்கோணம்), மேற்கில் விருத்தமும் (வட்டம்), வாயுவில் ஷடஸ்ரம் என்று, அறுகோணமும், வடக்கில் பத்ம அமைப்புள்ள குண்டமும் அமைத்து ஹோம வழிபாடுகள் செய்யப்படும்.
33 குண்ட யாகசாலை அமைத்தால், அது ஐந்து ஆவரணங்கள் (பிரகாரங்கள்) கொண்டதாய்ப் பிரம்மாண்டமாக அமையக் காணலாம். முதல் ஆவரணத்தில் பிரதான குண்டத்துடன் 9 குண்டமும், மற்றைய ஆவரணங்களில் முறையே எட்டு, எட்டுக் குண்டங்களும் அமைப்பர். 108 தூண்களும் அமைப்பர். இவ்வாறான கும்பாபிஷேக யாகங்களும் இப்போதெல்லாம் அநேகமாக அமைக்கப்பெற்று வரக் காணலாம். சத்யோஜாத சிவாச்சார்யாரின் ‘பிரதிஷ்டாகாரிகை’ என்ற நூலின் வண்ணமாக இந்த 33 குண்ட யாக பூஜை அழகாகச் செய்யப்படுகிறது.
33 குண்ட யாகசாலை
புரியாத மொழியில் அர்ச்சகர்கள் ஏதோ செய்கிறார்கள் என்று எண்ணி விலகியிருக்காது இந்த யாகபூஜையை யாவரும் உணர்ந்து அந்த இன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
யாகபூஜையை முழுக்க, முழுக்க சம்ஸ்கிருத பாஷையிலேயே ஆற்றி நிறைவு செய்யாமல், அர்ச்சகர்கள் அந்த பிரதேச மொழியில் சில விளக்கங்களை வழங்குவதும் இடையிடையே திருமுறைகள், போன்ற தெய்வீக பாசுரங்களுக்கு இடம் தருவதும் யாகபூஜையில் அனைவரையும் இணைந்து பங்கெடுத்துக் கொள்ள வசதியாக அமையும் எனலாம்.
கற்றாங்கெரியோம்பிக் கலியை வாராமே
செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே
பற்றா நின்றாரைப் பற்றா பாவமே

No comments:
Post a Comment