Friday, 11 November 2016

சிவாகமங்கள்



1 . சிவாகமங்கள்:

ஆகமங்கள் என்பவை இறைவனால் அருளப்பெற்ற நூல்களாகும். இவை மனித குலத்தவர்கள் நித்திய மோட்ச நிலையை அடைவதற்குரிய வழிமுறைகளைப் போதிக்கின்றன.

சிவபெருமான் மகேந்திர மலையில் அமர்ந்திருந்து ஆகமங்களை அருளினார் என்று மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார்.
00
மன்னு மாமலை மகேந்திர மதனிற்

சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்

என்று கீர்த்தித் திரு அகவலில் குறிப்பிடுகின்றார்.

சிவபெருமான் தமது ஐந்து முகங்களாலும் இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார். இவை சிவபேதம், ருத்திரபேதம் என்று இரண்டு வகைப்படும்.

சிவபேதத்தில் பத்து ஆகமங்களும், ருத்திரபேதத்தில் பதினெட்டு ஆகமங்களும் உள்ளன.

இந்த இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்கள் வருமாறு:

காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு, அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம் என்பனவாம்.

தற்போது, பெரும்பான்மையான கோயில்களின் பூஜைகள் காமிகம் அல்லது காரண ஆகம முறைப்படியே செய்யப்படுகின்றன. சில கோயில்களில் மகுடாகம முறைகள் வழக்கத்தில் உள்ளன. தில்லைச் சிதம்பரம் கோயிலில் நிகழ்த்தப்படும் பூஜை முறையான பதஞ்சலி பூஜா விதானம் மகுடாகமத்தையே ஒத்திருக்கின்றது. மற்றும் சில கோயில்களில், வாதுளாகமமும், பாரமேச்வரமும் பின்பற்றப்படுகின்றன.

2. விபீஷணன் நிறுவிய மூன்று சிவலிங்கங்கள்:

இராவணனின் தம்பியான விபீஷணன் மிகச் சிறந்த சிவ பக்தன். ஒரு சமயம் அவனுக்கு மூன்று திவ்வியமான சிவலிங்கங்கள் கிடைத்தன. அவை மூன்றையும் ஒரே சமயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்பது நிபந்தனை. அவற்றைப் பிறரிடம் கொடுத்துப் பிரதிஷ்டை செய்தால் நேரம் முன் பின்னாகி விடும் என்பதால், தானே மூன்றையும் ஒரே நேரத்தில் பிரதிஷ்டை செய்யத் தீர்மானித்தான். (அது எப்படி ?)

தனது வலது கையால் ஒரு லிங்கத்தையும், இடது கையால் எட்டி ஒரு லிங்கத்தையும், வாயால் கடித்து மற்றொரு லிங்கத்தையும் ஒரே நேரத்தில் உரிய பீடங்களில் நிறுவினான்.

வலது கையால் வைக்கப்பட்ட இடம் வைக்கம் என்றும், எட்டி வைக்கப்பட்ட இடம் எட்டுமானூர் என்றும், பல்லால் கடித்து இருத்தப்பட்ட இடம் கடித்திருத்தி என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த மூன்று பிரபலமான சிவாலயங்களும் இந்தியாவில், கேரள மாநிலத்தில் அமைந்துள்ளன.


3 . முக லிங்கங்கள் - ஓர் அறிமுகம்

சிவாலயங்களில் கருவறையில் சிவலிங்கங்கள் வழிபடப்படுகின்றன. சில சிவாலயங்களில், அபூர்வமாக முக லிங்கங்கள் வைத்து வழிபடப் படுகின்றன. ( படம் பார்க்கவும் ).

ஒரு முகம் கொண்ட லிங்கம் ஏக முக லிங்கம்.

இரண்டு முகம் கொண்ட லிங்கம் துவிமுக லிங்கம்.

மூன்று முகம் கொண்ட லிங்கம் திரிமுக லிங்கம்.

நான்கு முகம் கொண்ட லிங்கம் சதுர்முக லிங்கம் ( இது பிரம்ம லிங்கம் என்றும் அழைக்கப்படுகின்றது ).

ஐந்து முகம் கொண்ட லிங்கம் பஞ்சமுக லிங்கம். ( இது சதாசிவ லிங்கம் என்றும் அழைக்கப்படும் ).

முக லிங்கங்களை வழிபடுவதனால், இம்மையில் அஷ்ட ஐஸ்வரியங்களும், மறுமையில் சிவலோக சித்தியும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

(திருவக்கரை சந்திர மௌலீஸ்வரர் ஆலயம், நேபாளத்திலுள்ள பசுபதிநாதர் ஆலயம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயம், எலிபெண்டா குகையில் உள்ள சிவாலயம், திரியம்பகத்திலுள்ள ஜோதிர்லிங்க சிவாலயம், ஈரோடு மகிமாலீசுவரர் ஆலயம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டேசுவரர் ஆலயம், ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலத்தில் கோயிலுக்கு அருகில் உள்ள குன்றின் சாரலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், வேலூர் விரிஞ்சிபுரம் மார்க்க சகாய ஈசுவரர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் முக லிங்கங்கள் அமைந்துள்ளன.

ஆயிரம் முகங்கள் கொண்ட சகஸ்ர லிங்கம்:

குடந்தை ஸ்ரீ கும்பேசுவரர் ஆலயத்தில் சகஸ்ர லிங்கம் காணப்படுகின்றது. இந்த லிங்கம் ஆயிரம் முகங்களைக் கொண்டு அமைந்துள்ளது. சிவபெருமான் ஆயிரம் கரங்களையும், ஆயிரம் திருவடிகளையும், ஆயிரம் முகங்களையும் உடையவர்.

இந்த உண்மையை அப்பர் சுவாமிகள் தமது தேவாரப்பாடலில் அழகாகப் பாடுகின்றார்:

"ஆயிரம் தாமரை போலும்

ஆயிரம் சேவடியானும்

ஆயிரம் பொன்வரை போலும்

ஆயிரம் தோளுடையானும்

ஆயிரம் ஞாயிறு போலும்

ஆயிரம் நீண்முடியானும்

ஆயிரம் பேருகந்தானும்

ஆரூர் அமர்ந்த அம்மானே".

கோடி லிங்கம் ( கோடீசுவரர் ) :

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழியை அடுத்த ஊரான கொட்டையூரில் உள்ள கோடீசுவரர் ஆலயத்தில் கோடிலிங்கம் அமைந்துள்ளது. இந்தச் சிவலிங்கத்தில் ஒரு கோடி சிறு முகங்கள் அமைந்துள்ளன.

சிவபெருமானின் அருளால் தோன்றிய ஒரு கோடி உருத்திரர்கள் சிவபூசை செய்து சிவபெருமானை மனமுருகி வழிபட்டார்கள். அவர்களின் வழிபாட்டைக் கண்டு மனம் நெகிழ்ந்த சிவபெருமான், அவர்கள் ஒவ்வொருவர் முன்னும் தனித்தனியே தரிசனம் தந்தார். பின்னர் ஒரு கோடி முகங்களைக்கொண்ட சிவலிங்கமாக அங்கே தோன்றினார். இது சிவ புராணம் கூறும் கதை.

சக்தி லிங்கம்:

காஞ்சிபுரத்தில், ஆதிபீட காமாட்சி அம்மன் கோயில் என்று அழைக்கப்படும் காளிகாம்பாள் கோயிலில் சக்தி லிங்கம் காணப்படுகின்றது. இந்த லிங்கத்தின் பாணப்பகுதியின் முகப்பில் அம்மன் திரு உருவம் அமைக்கப்பட்டுள்ளது. அவள் நான்கு கரங்கள் கொண்டு, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றாள். அக் கரங்களில் பாசம், அங்குசம், கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இது அபூர்வமான லிங்கமாகும்.

No comments:

Post a Comment