Tuesday 29 November 2016

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில், பாடி (சென்னை)


மூலவர் : திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் 

உற்சவர் : -

 அம்மன்/தாயார் : ஜெகதாம்பிகை 

தல விருட்சம் : பாதிரி, கொன்றை 

தீர்த்தம் : பரத்வாஜ் தீர்த்தம் 

ஆகமம்/பூஜை : காமீகம் 

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் 

புராண பெயர் : திருவலிதாயம் 

ஊர் : பாடி, திருவலிதாயம் 

 பாடியவர்கள்:  திருஞான சம்பந்தர், அருணகிரி 

தேவாரப்பதிகம்

பத்தரோடு பலரும் பொலியம்மலர் அங்கைப் புனல்தூவி ஒத்தசொல்லி உகத்தவர்தாம் தொழுது ஏத்த உயர் சென்னி மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலிதாயம் சித்தம் வைத்த அடியாரவர் மேலடை யாமற்றிடர் நோயே. - திருஞானசம்பந்தர் 

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 21வது தலம். 

திருவிழா: 

சித்திரையில் பிரம்மோற்ஸவம், தை கிருத்திகை, குரு பெயர்ச்சி.

 தல சிறப்பு: 

மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 254 வது தேவாரத்தலம் ஆகும். 

பொது தகவல்: 

விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். ராஜகோபுரம் மூன்று நிலை உடையது.

 பிரார்த்தனை:

 சுவாமியை வணங்கிட திருமணத்தடை, நோய்கள் நீங்கும், தெட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பவுர்ணமியில் சுவாமியை வழிபட்டால் நற்பேறு கிடைக்கும். 

நேர்த்திக்கடன்: 

வியாழக்கிழமைகளில் இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் குரு சம்பந்தப்பட்ட தோஷம் விலகும். 

தலபெருமை: 

குருதலம்:

வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார். இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.) 

பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. 

இத்தலம், நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. 

இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். 

பிரகாரத்தில் சுவாமியை நோக்கியபடி தனி சன்னதியில் குருபகவான், சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சிவன், தனக்கு பூஜை பெறுவதை உரிமையாக உடையவர் என்பதால் இவர், "பலிதாயர்' என்றும் அழைக்கப்படுகிறார். பலி என்றால் பூஜை, தாயம் என்றால் உரிமை என்று பொருள். 

தல வரலாறு: 

வியாழபகவானின் மகனான பரத்வாஜர், கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாக பிறந்தார். தான் பறவையாக பிறந்ததைக் கண்டு வருத்தமடைந்த பரத்வாஜர், பல புண்ணிய தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி வந்தார். அவர் இங்கு வந்தபோது, கொன்றை மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தை கண்டார். லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்து பறவைகளின் தலைவனாகும்படி அருளினார். எனவேதான், இத்தலம் "திருவலிதாயம்' என்றும், சிவன் "வலியநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

சிறப்பம்சம்: 

அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) அமைப்புடையது.

No comments:

Post a Comment