Thursday, 24 November 2016

கங்கை கரையில் - 1



''பசுபதிநாத் கோவில்'' - நேபாளம்.

நேபாளின் காசி என்று போற்றப்படும்புனித பசுபதிநாத் கோவில்உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று.




வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி யுள்ளே ஒளித்தாய் போற்றி

ஓவாத சத்தத் தொலியே போற்றி

ஆற்றாகி அங்கே யமர்ந்தாய் போற்றி

ஆறங்க நால் வேதம் ஆனாய் போற்றி

காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி

அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்..

நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள சிவனுக்கான இக்கோவில் உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று.




இக்கோவிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார்.

இக்கோவில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது..

தல புராணம்:

இக்கோவில் எப்போது நிறுவப்பட்டது என்பது உறுதியாக அறியப்படவில்லை. நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி ஒரு கதை நம்பப்படுகிறது.




அஃது, கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடினார். இறுதியில் காத்மாண்டு் பள்ளத்தாக்கைக் கண்டுபிடித்தார். யாரிடமும் கூறாமல் தன்னிடத்தை விட்டுப் பிரிந்துப் பள்ளத்தாக்கில் வசிக்கலானார். பிற கடவுளர் அவரது மறைவிடத்தைக் கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற கடவுளர் அவரைத் தேடி அங்கு வந்த போது அவர் ஒரு பெரிய மான் வடிவில் மாறுவேடம் பூண்டார். அவர்கள் அவரிடத்து உதவி கேட்டபோதும் அவர் உதவாமல் அம்மான் வேடத்திலேயே சுற்றித் திரிந்தார். மேலும் சிவன் பிற கடவுளரது கோரிக்கைகளை ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்களது ஆற்றலைப் பயன்படுத்தத் திட்டமிட்டனர். திருமால் அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச்சிலையை உருவாக்கினார். காலப்போக்கில் அக்கோவிலானது சிதைவடைந்தது. மேலும் அது யாராலும் கண்டுகொள்ளப்படவும் இல்லை. பின்னர் ஒரு நாள் ஓர் ஆடு அம்மண் மேட்டின் மீது பாலைச் சுரந்தது. அவ்விடத்தைச் சுற்றி அந்த ஆடு தன் கால்களால் தோண்டப் புதையுண்ட கோவில் வெளிப்பட்டது. பின்னர் அந்த லிங்கச் சிலை கண்டறியப்பட்டு மீண்டும் கோவில் நிறுவப்பட்டது என கூறுகின்றனர்..





பொதுவாக இந்துக்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்துக்கள் அல்லாதோர் பாக்மதி ஆற்றின் மற்றொரு கரையிலிருந்து மட்டுமே கோவிலைப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் தோல் ஆடை அணிந்து வருவோரும் கோவிலுக்குள் அனுமதிக்கபடுவதில்லை.


கோவில் பூசாரிகள்:


கடந்த 350 ஆண்டுகளாக அக்கோவிலில் பூசாரிகளாகத் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்திலுள்ள பட்டர்கள்என்ற சமூகத்தைச் சேர்ந்தபிராமணர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுகின்றனர்.

பசுபதிநாதரின் பூசாரிகள் 'பட்டர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். கோவிலின் தலைமைப் பூசாரியானவர் 'மூல பட்டர்' என்றும் இராவல் (வட நாட்டு மரபு) என்றும் அழைக்கப்படுகிறார். இவர்களுள் மூல பட்டர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நேபாள மன்னரிடம் கோவில் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பவராக இருந்தார்.


இக்கோவிலின் மூலவரான பசுபதிநாதரை நான்கு வம்சாவளியைச் சேர்ந்த பூசாரிகள் மட்டுமே தொடமுடியும். ஒன்பதாம் நூற்றாண்டில் இந்து சமய எழுச்சியைத் தோற்றுவிக்க மூல காரணமாக விளங்கிய ஆதிசங்கரர் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோயிலின் நடை முறைகள் கடைபிடிக்கப்பட்டன. இந்நடைமுறைகள் இந்தியா எங்கும் உள்ள, ஆதி சங்கரரால் மேம்படுத்தப்பட்ட மேலும் சில இந்து கோயில்களிலும் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன. பின்னாட்களில் ஆண்ட இந்து சமய 'மல்லா' மன்னர்களும் ஆதிசங்கரரின் இந்தக் கோரிக்கையை விடாது போற்றி வந்தனர்.

நேப்பாளம் மலை நாடு என்பதால் இங்குள்ள கட்டுமானமும் மலைச் சார்ந்தே உள்ளது. காட்டிடை கிடைக்கும் மரமும் கல்லுமே இங்கு கிடைக்கும் கட்டுமானப் பொருட்கள். இவைகள்தான் பசுபதி நாதர் கோயிலையும் தாங்கி நிற்கிறது.

இக்கோவில் பகோடா கட்டடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது. பகோடா முறையின் அனைத்து சிறப்புகளையும் உள்ளடக்கியவாறு கோவிலானது கனசதுர வடிவில் மரங்களைக் கொண்டும் தாமிர மேற்கூரையில் தங்க முலாம் பூசப்பட்டும் கட்டப்பட்டுள்ளது.

இக்கோவில் நான்கு முதன்மை வாயில்களைக் கொண்டுள்ளது. இவ்வாயில்கள் அனைத்துமே வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்.


கோவிலின் மேல் ஒரு தங்கத்தால் ஆன கலசம் உள்ளது.




பசுபதிநாத் சிலையானது ஆறடி உயரத்தில் ஆறடி சுற்றளவில் கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கிறது.

இத்திருக்கோவிலில் ஐயன் நான்கு முகங்களுக்கும் தலைப்பாகை மற்றும் குடை, நடுவில் ஒரு பெரிய குடை மற்றும் சர்வாபரண பூஷிதராக, மலர் மாலைகளுடன் அற்புத அலங்காரத்தில் அருட்காட்சி தருகின்றார்.


பசுபதிநாதரின் கிழக்குப் பகுதியில் 'வாசுகிநாதர்' வீற்றுள்ளார்.


இக்கோவில் அமைந்துள்ள பாக்மதி ஆற்றங்கரையில் 'ஆர்ய காட்' என்றழைக்கப்படும் சுடுகாடும் உள்ளது. இங்கு உயிர் பிரிந்து உடல் எரியூட்டப்படின் நற்கதி கிட்டும் என்பது இந்துக்களிடையே உள்ள ஒரு நம்பிக்கை ஆகும்.

இந்தியாவில் காசியும் இதே நம்பிக்கையைப் பெற்றிருக்கக்கூடிய ஒரு தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்மதி ஆற்றங்கரையில் பல எரியூட்டும் மேடைகள் உள்ளன. அருகிலேயே முதியவர்கள் முக்தி பெறுவதற்காக தங்கி இருக்கும் முதியோர் இல்லங்கள் உள்ளன. கோவிலின் உட்பிரகாரத்தில் முக்தி மண்டபமும் உள்ளது.

விழாக்கள்:

பசுபதிநாத் கோவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் புனிதப் பயணத்திற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


நேபாளத்திலிருந்தும், இந்தியா போன்ற வெளி நாடுகளிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் பசுபதிநாதரை வழிபாடு செய்து வருகின்றனர்.ஏகாதசி, சங்கராந்தி(தை முதல் நாள்),மகாசிவராத்திரி, தீஜ் அட்சயா, ரட்சா பந்தன், கிரகணம் மற்றும் முழு நிலவு நாள் போன்ற சிறப்பு நாட்களில் மக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இங்கு கூடுவதால் அந்நாட்கள் விழாக்கோலம் காணுகின்றன. மேலும், இக்கோவிலில் கொண்டாடப்படும் மிக முக்கியமான திருவிழா சிவராத்திரி ஆகும். சிவராத்திரி நாளில் இங்கு நேபாளம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாதுக்களும் (முனிவர்கள்) பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் வருவதுண்டு. நெய் விளக்குகள் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் இக்கோவில் திறந்தே இருக்கும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நாளில் பாக்மதி ஆற்றில் நீராடி, நாள் முழுதும் உண்ணாநோன்பு இருக்கும் புனிதச் சடங்கை மேற்கொள்வர்.

பாக்மதி ஆற்றின் மறுகரையிலிருந்து எடுக்கப்பட்ட பசுபதிநாத் கோவிலின் பரந்த தோற்றம்

கங்கை கரையில் தொடர்  வ(ள)ரும்.

திருச்சிற்றம்பலம்





No comments:

Post a Comment