சார்தாம் யாத்திரை - பத்ரிநாத்
பிரம்ம கபாலம் என்பது என்ன ?
நாம் எப்போதும் நமது பித்ருக்களுக்கு கடமைப்பட்டவர்கள், வருடம் தவறாமல் அவர்களுக்கு சிரார்த்தம் கொடுப்பது நமது கடமைகளுள் ஒன்று. இங்குள்ள பிரம்ம கபாலம் என்னும் இடம் மறைந்த நம் முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் செய்ய சிறந்த இடம்.
பிரம்ம கபாலம் |
இந்த பிரம்ம கபாலத்தின் மகிமை என்னவென்று முதலில் சொல்கிறேன்..
ஆதிகாலத்தில் பிரமனுக்கும் சிவனைப் போல ஐந்து முகங்கள், ஒரு முகம் மிகவும் ஆணவத்துடன் இருந்ததால் சிவபெருமான் அந்த ஐந்தாவது தலையை தனது நகத்தால் கீறி எடுத்தார். இதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது அந்த பிரம்ம கபாலமும் அவர் கையில் ஒட்டிக்கொண்டது.
அவர் பல் வேறு தலங்களுக்கு சென்றும் விமோசனம் கிட்டவில்லை. இந்த பத்ரி ஷேத்திரத்தில் அலக்நந்தாவின் கரையில் வந்து பிண்ட தர்ப்பணம் செய்ய பிரம்ம கபாலம் அவர் கையை விட்டு விலகி அங்கேயே தங்கி விட்டது . ஆகவே பித்ருகளுக்கு பிண்டப் பிரதானம் அளிப்பது மிகவும் சிறந்தது.
முறையாக வருடாவருடம் சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், காசி , கயா முதலிய தலங்களில் செய்யாதவர்கள் இங்கு பிண்டதானம் செய்வது நல்லது. இங்கு செய்யும் பித்ரு காரியம் கயாவில் ஒரு கோடி முறை செய்வதற்கு ஒப்பானதாம்..
இங்கு ஒரு தடவை பிண்டதானம் செய்ய முன்னோர்கள் முக்தியடைகின்றர் என்பது ஐதிகம்.. மறுபடியும் அவர்களுக்கு பிதுர் காரியம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கூறுகின்றனர்.
ஜோஷிர்மட் என்ற இடத்தில் உள்ள ஆதி சங்கரர் அமர்ந்து தவம் செய்த 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பக விருஷத்தையும், அவர் தங்கியிருந்த குகையையும், அகண்ட ஜோதியையும் அவர் வழிபட்ட லக்ஷ்மி நாராயணரையும், தரிசனம் செய்ய வேண்டும்..
பஞ்ச ப்ரயாகை, பஞ்ச பத்ரி பற்றிய சில தகவல்களை பார்ப்போம்..
முதலில் பஞ்ச பத்ரி என்னும் ஐந்து தலங்கள் பற்றி பார்ப்போம் ..
விஷால் பத்ரி, யோக பத்ரி, பவிஷ்ய பத்ரி, விருத்த பத்ரி, மற்றும் ஆதி பத்ரி ஆகியவை பஞ்ச பத்ரி தலங்கள் என்று சொல்கிறார்கள்..
விஷால் பத்ரி:
விஷால் பத்ரி எனப்படும் நர நாராயண மலை சிகரங்களுக்கிடையில் அலக்நந்தாவின் கரையில் அமைந்துள்ள இந்த தலம் பத்ரிநாதரின் பிரதானத் தலமாகும், பூஜை நடைபெறும் போது பக்தர்கள் “ஜெய் பத்ரி விஷால் கீ“என்று கோஷம் எழுப்புகின்றனர்.
யோக த்யான் பத்ரி :
ஜோஷிமட் பத்ரிநாத் - பஸ் மார்க்கத்தில், அலக்நந்தா நதிக்கரையில் 1920 மீ உயரத்தில் பாண்டு கேச்வரர் புண்ய க்ஷேத்ரத்தில், பாண்டுவினால் நிர்மாணிக்கப்பட்ட யோக தியான மந்திர் அமைந்துள்ளது. பாண்டு மன்னர் தமது இறுதி காலத்தை இங்கே தான் கழித்தார். பாண்டாவ்ர்களும் தமது காலம் முடிந்த பிறகு இத்தலத்தில் இராஜ்ஜியத்தை பரிஷித்திற்கு ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்காரோஹணி எனப்படும் சொர்க்கத்திற்கான பயணத்தை இங்கிருந்து துவங்கினர். கோயில் கருவறையில் யோக த்யானத்தில் பகவான் தாமரை புஷ்பத்தில் அமர்ந்த நிலையில், அழகாக தரிசனம் அளிக்கிறார். இத்தலம் பத்ரிநாத்திலிருந்து 24 கி.மீ தூரத்திலும், ஜோஷிமட்டிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
பவிஷ்ய பத்ரி:
ஜோஷிமட் - மலாரி பஸ் தடத்தில் 15 கி.மீ. தொலைவில் தபோவன் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. கால்நடையாகச் சென்று ஸுபாயீ கிராமத்தில் சமுத்திர மட்டத்திலிருந்து 9,000அடி உயரத்தில்) பவிஷ்ய பத்ரி கோயில் உள்ளது. அகஸ்திய முனிவர் இங்கு தவம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இவருக்கு இங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் அளித்தார். அது சமயம் அவரிடம் கலியுகத்தில் தான் இங்கு கோயில் கொள்ளப் போவதாகக் கூறினார் என்று நம்பப்படுகிறது. பவிஷ்ய என்றால் எதிர்காலம் அதாவது வருங்காலம் என்று பொருள் கொள்ளலாம். ஜய விஜயர்கள் என்ற இரு மலைகளுக்கு நடுவில் அலக்நந்தாவை கடந்து நாம் பத்ரிநாத்திற்கு செல்கின்றோம். ஜோஷிமட் நரசிங்க மூர்த்தியின் கை தேய்ந்து விழும் போது இந்த ஜய விஜய மலைகள் (குதிரை மற்றும் யாணை மலைகள் - பார்ப்பதற்கு இவ்வாறு தோற்றம் அளிப்பதால் இப்பெயர்) இரண்டும் இணைந்து பத்ரி செல்லும் வழி அடைபட்டு விடும் அப்போது இந்த பவிஷ்ய பத்ரியில் பெருமாளை தரிசனம் செய்ய முடியும். தற்போது நரசிம்ம மூர்த்தியின் ஆலயம் இங்குள்ளது.
விருத்த பத்ரி:
ஜோஷிர்மட் - பீபல்கோட் பஸ் சாலையில் ஜோஷிர்மட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அனீமடம் என்று கூறப்படும் புராதனமான தீர்த்த ஸ்தலம் உள்ளது. அலக்நந்தாவின் அழகான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது இந்த தலம், விருத்த என்றால் வயதான அதாவது பழைய என்று பொருள் இது நாரத முனிவருக்கு மிகவும் விருப்பமான இடம். இங்குதான் நாரதர் தவம் செய்தார் என்பதும் அவருக்கு அங்கு ஸ்ரீமந்நாராயணன் தரிசனம் கொடுத்ததும் புராண வரலாறு. நாரதர் தான் இந்தக் கோவிலுக்கு அடிகோலினார் என்றும், ஆதிசங்கராச்சாரியாரும் இங்கு பூஜைகள் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
த்யான் பத்ரி :
பீபல்கோட் - ஜோஷிமடம் பஸ் மார்க்கத்தில் ஹெலாங் கிராமத்தின் பஸ் நிற்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ. கால்நடையாகச் சென்று ஊர்கம் - கிராமத்தை அடைய வேண்டும். அங்கு ஊர்வா ரிஷியின் தபோபூமி உள்ளது. இங்கு உள்ள விஷ்ணு ஆலயத்தில் சதுர் புஜங்களுடன் பத்ரிநாராயணன் தியானத்தில் அமர்ந்த நிலையில் தரிசனம் அளிக்கிறார்.
ஆதி பத்ரி:
சிலர் த்யான பத்ரி - யோக பத்ரி இரண்டையும் ஒரே க்ஷேத்திரமாகக் கூறுகிறார்கள். இவர்கள் ஆதிபத்ரி என்ற ஒரு க்ஷேத்திரத்தையும் கூறுகிறார்கள். கர்ண ப்ரயாக் க்ஷேத்திரத்திலிருந்து ராணிகேத் பஸ் மார்க்கத்தில் சிம்லீ கிராமம் உள்ளது. சிம்லீயிலிருந்து 11கி.மீ. நடைபயணமாக ஆதி பத்ரி சென்றடைய வேண்டும்.
பஞ்ச பத்ரிகளைப் பற்றி பார்த்தோம்.. இனி பஞ்ச ப்ரயாகைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்...
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்..
No comments:
Post a Comment