‘ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’ என முருகவேள் திருப்பிறப்பை கந்தபுராணத்தில் ஸ்ரீ கச்சியப்பர் அற்புதமாகக் குறிப்பிடுகிறார்.
‘சூரியன் உதித்தான்’ என்றால் என்ன பொருள்? ஏற்கெனவே மறைந்திருந்த சூரியன் வெளிப்பட்டான் என்று தானே அர்த்தம்?
‘செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்று அனுபூதியில் அருணகிரிநாதர் பாடுகிறார்.
சூரபத்மனின் கொடுங்கோல் ஆட்சியால் இடர்ப்பட்ட முப்பத்து முக்கோடி இமையவர்களும் வேண்ட, அவர்களின் அல்லல் போக்கி ஆனந்தம் தர ஆறுமுகப் பெருமான் அவதரித் தான் என்கிறது கந்தபுராணம்.
வேதவியாசர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களில், மகிமையில் மட்டுமல்லாது அளவினாலும் பெரியது ‘ஸ்காந்தம்’ எனப்படும் திருமுருகன் திருக்கதை. ‘எந்த புராணமும் கந்த புராணத்திலே’ என ஏற்றிப் போற்றப்படும் இந்தச் சண்முகனின் சரித்திரத்தை, கனிந்த செந்தமிழில் காவியமாகப் பாடி அருளியவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.
முக்தி தரும் நகர் ஏழுள் முக்கியமாக விளங்குகிற காஞ்சிபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் சிவாச்சாரியராக விளங்கிய கச்சியப்பர்,முருகன் திருவருளால் கந்த புராணம் இயற்றத் தொடங்கினார். தினசரி தான் எழுதி முடித்த பகுதி வரை குமரக் கோட்ட முருகன் திருப்பாதக் கமலங்களிலே சமர்ப்பிப்பார். அடுத்த நாள் காலை வந்து அந்த ஏடுகளைப் பார்த்தால், அதில் சில இடங்கள் திருத்தப் பெற்றிருக்குமாம். இப்படியேதான் கந்த புராணத்தின் பத்தாயிரம் பாடல்களும் இயற்றப்பெற்றன என்றால், முருகன் தன் வரலாற்றைத் தானே எழுதியதாகத்தானே பொருள் படுகிறது.
ஆக, கந்தபுராணம் ஒரு ஆட்டோபயாஃகிராபி!
இந்தப் புராணம், கயிலாயத்தில் தொடங்கி கயிலாயத்தில் நிறைவுபெறுகிறது; கல்யாணத்தில் தொடங்கி கல்யாணத்தில் மங்கலமாக நிறைவடைகிறது.
பார்வதி திருமணம்
ஒளிமயமான வாழ்வை அடியவர்களுக்கு உருவாக்கித் தருகின்ற உமையம்மையையும் சிவபெருமானையும் கயிலை மலையில் தேவர்களும் மூவர்களும் தோத்திரம் செய்து வணங்கி மகிழ்ந்து திரும்புகின்றனர்.
சிவபெருமானும், தேவியும் கயிலையில் தனித்திருக்கின்றனர். அப்போது இறைவி நாயகனை வணங்குகிறாள்.
‘‘நாயகரே! தற்போது என் நாமம் ‘தாட்சாயிணி’ என உள்ளது. தட்சனின் மகள் என்ற பெயரோடு நான் இருக்க விரும்பவில்லை. என் தந்தையாகிய தட்சன், தங்களை மதிக்காது வேள்வி செய்தார். அவ்வேள்வியில் அனைத்து தேவர்களையும் வேறு கலந்துகொள்ளச் செய்தார். சிவநிந்தை புரிந்த அவரின் புதல்வி என்ற அவப்பெயர் நீங்கவேண்டும். இதற்குத் தாங்கள்தான் அனுக்கிரகம் செய்ய வேண்டும்’’ என்றாள் தேவி.
புன்னகை புரிந்த பரமேஸ்வரன்,
‘‘இமாசல வேந்தன் நெடுநாளாக மகப்பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறான். இமவான்- மேனை வளர்ப்பு மகளாக நீ வளர்ந்து, பார்வதி என்ற நாமம் பெற்று என்னை நோக்கி தவம் செய்க! உரிய தருணத்தில் உன் நாயகனாக நான் வந்தடைகிறேன்” என்றார்.
தாட்சாயணி பார்வதியாக மாறினாள். ஐந்து வயதிலேயே சிவனை நோக்கித் தவம் புரிந்தாள். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால், தேவர்கள் அனைவரும் சிவநிந்தை புரிந்தவர்கள் ஆகிவிட்டனர். அந்தத் தீய செயலின் காரணமாகவே அவர்கள் சூரபத்மனின் அடக்கு முறையில் இடர்ப்பட்டனர்.
மனம் வருந்திய தேவர்கள் ‘மகாதேவனே! மன்னியுங்கள்’ என மன்றாடினர். ‘சூராதி அவுணர்களை மாய்க்க தாங்கள்தான் தங்களை நிகர்த்த ஒரு மகனை உருவாக்கித் தர வேண்டும்’ என அகம் உருகி வேண்டினர்.
‘வேதமும் கடந்து நின்றவிமல! ஓர் புதல்வன் தன்னை நீதரல் வேண்டும்! நின்பால் நின்னையே நிகர்க்க!’
இந்திரன், பிரம்மா, திருமால் மற்றும் தேவர்களின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், ‘பார்வதியை மண முடித்த பிறகு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். சூர சம்ஹாரத்துக்காகவே சுப்ரமண்யன் தோன்றுவான்’ என்றார்.
கயிலையில் இருந்தபடி, சிவபெருமான் சனகாதி முனிவர் களுக்கு மோன தட்சிணாமூர்த்தி உருவில் உபதேசம் புரிந்து கொண்டிருந்தார். இமாசலத்தில் இருந்தபடி, பார்வதி பரமேஸ்வரனை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்தாள்.
‘கயிலைச் சிவனும், இமவான் மடந்தையும் திருமணத்தில் ஒன்று சேர வேண்டுமே! பிறகுதானே, திருமுருகன் திரு அவதாரம் நிகழும்! முருகன் அவதாரம் நிகழ்ந்தால்தானே சூர சம்ஹாரம்? சூரன் அழிந்தால்தானே நாமெல்லாம் உய்வு பெறுவோம்’ என்றெண்ணிய தேவர்கள், உமையையும் சிவனையும் ஒன்றாக்க மன்மதனின் உதவியை வேண்டினர். ‘மன்மதா! நீ சென்று மகாதேவனின் மனதில் இச்சையை உண்டாக்கு!’ என்றனர்.
சிவனின் சிந்தையிலா ஆசை தோன்றும்? மலரம்பை விட்ட மன்மதன், சிவபெருமானின் நெற்றிக் கண் நெருப்பால் அழிந்தான்.
தேவர்கள், ‘தேவ தேவா! மன்னியுங்கள்! ஆறுமுகன் தோற்றம் நிகழ்வதற்காகவே அவசரப்பட்டு விட்டோம்! பொறுத்தருள்க! பார்வதியை மணம் செய்து, பாலகனைத் தந்தருள்க’ என வேண்டினர்.
அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காசியபர், ஆங்கிரசர் என ஏழு முனிவர்கள் இமவான்- மேனையிடம் சென்று திருமணம் நிச்சயிக்க, பங்குனி உத்திரத்தன்று பரமேஸ்வரன்- பார்வதி திருமணம் சிறப்பாக நடந்தேறியது. அழிந்த மன்மதன் மீண்டும் ரதி தேவி வேண்டுதலால், சிவனருள் பெற்று எழுந்தான்.
திருமுருகன் திரு அவதாரம்
பார்வதி- பரமேஸ்வரன் திருமணம் நிகழ்ந்து பல காலம் ஆகியும், பாலகனைத் தரவில்லை சிவபெருமான்.தேவர்கள், திக் பாலகர்கள், இந்திரன், பிரம்மா, திருமால் அனைவரும் ஒன்று கூடி, அம்பலவாணரிடம் முறையிட்டார்கள். இறைவன் மனம் இரங்கினார். பின்பு, மன்மதனைத் தகனம் செய்த நெற்றிக் கண்ணை மீண்டும் திறந்தார். சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள்; அவற்றோடு ‘அதோ முகம்’ என்ற ஆறாவது முகமும் சேர, ஆறுமுக நெற்றிக் கண்களிலிருந்தும் ஆறு நெருப்புப் பொறிகள் புறப்பட்டன. அந்த நெருப்பின் வெம்மையைத் தாங்கமுடியாமல் தவித்த தேவர்கள் திசைக்கொருவராய் சிதறி ஓடினர். ‘இறைவா! இது என்ன சோதனை’ என்று புலம்பினர். சிவபெருமானின் திருவிளையாடலை யாரே அறிய முடியும்!
‘தேவர்களே! ஆறு ஜோதிகளையும் தாங்குகிற வல்லமையை உங்களுக்கு அளிக்கின்றேன். வாயுவும் அக்கினியும் இந்த ஆறு சுடர்களையும் ஏந்திச் சென்று, கங்கையிடம் தரட்டும். கங்கை சரவணத்தில் ஒப்படைக்க, அங்கு ஆறு சுடர்களும் ஒன்று சேர்ந்து ஜோதி ஸ்வரூபமாக, முருகனாக, சூராதி அவுணர்களை அழிக்கும் ஆற்றலாகத் தோன்றும்’ என்றார் சிவனார். ஞாலம் ஏற்றி வழிபடும் ஆறு பேர்க்கு மகவென நாணல் பூத்த படுகையில் வருவோனே! - என அருணகிரியார் பாடுகிறார்
வைகாசி விசாகத்தில் முருகனின் திரு அவதாரம் நிகழ்ந்தது. சரவணப் பொய்கையில், ஆறு தாமரை மலர்களில் ஆறு ஜோதிகளும், அற்புத மழலைகளாகப் பொலிந்தன. கார்த்திகை மாதர்கள் அறுவர் அந்தக் குழந்தைகளை ஏந்தி மகிழ்ந்தனர். ‘இன்சொல் விசாகா! க்ருபாகர’ என அனைவரும் உச்சி முகர்ந்து மெச்சினர். பரமசிவனோடு சரவணப் பொய்கை வந்த பார்வதி ஆர்வம் மீதூர, ஆறு குழந்தைகளையும் ஒரு சேரக் கட்டியணைத்தாள்.
‘நாதன் கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உரு காட்டுதலும் அன்னவள் கண்டு அவ்வுருவம் ஆறினையும் தன் இரண்டு கையால் எடுத்தணைத்து ‘கந்தன்’ எனப் பேர் புனைந்து மெய் ஆறும் ஒன்றாக மேவு வித்து’ என்று குமரகுருபரர் இந்நிகழ்வைக் குறிப்பிடுகிறார். வளர்த்தெடுத்த கார்த்திகை மாதர்களை வாழ்த்தி, சிவபெருமான் வரம் வழங்கினார். ‘கார்த்திகை மாதர்களே! உங்களிடம் வளர்ந்ததால் ‘கார்த்திகேயன்’ எனும் பெயர் பெறுகின்றான் சரவணன். உங்கள் நட்சத்திரமான கிருத்திகையில் வடிவேலனை வணங்குபவர்கள் சகல நலங்களும் பெறுவர்’ என்று அருளி, கயிலை திரும்புகிறார்கள் பார்வதி- பரமேஸ்வரர்.
பொன்னொளி வீசும் திருக்கயிலையில் தந்தை-தாய் இடையே முருகன் அமர்ந்திருப்பது, பகலுக்கும் இரவுக்கும் இடையே அமைந்த மாலைநேரம் போல் உள்ளது என்கிறார் கச்சியப்பர். மாலைநேரம் உலக மக்கள் அனைவரையுமே மகிழ்விக்கும் மந்தஹாசமான பொழுது. அவ்வாறே முருகப் பெருமான் அனைவராலும் ஏற்றிப் போற்றப்படும் இறைவன் அல்லவா!
‘சத்து’ எனப்படும் தாவில் சிவத்திலும் ‘சித்து’ எனப்படும் தேவி இடத்திலும் புத்திரப்பெயர் பூண்டு இலகும் ‘ஆனந்தவத்து’வின் கழல் வாழ்த்தி வணங்குவாம்! - என்று பாடி மகிழ்கிறார் பாம்பன் சுவாமிகள்.
கயிலையில் இறைவன்- இறைவியை வணங்க வரும் அனைவரும் அங்கு விளையாடி மகிழும் வேலவக் குழந்தையையும் வந்தனை செய்கிறார்கள். ஆனால், பிரம்மதேவனாகிய நான்முகன் மட்டும் குழந்தையைக் கண்டும் காணாமல் சென்றுவிடுகிறான்.கந்தப் பெருமானின் கண்கள் இக்காட்சியைக் காணாமல் இருக்குமா? அகிலத்தையே படைக்கும் ஆற்றல் பிரமனிடம் இருந்தாலும் ஆணவம் இருக்கலாமா?
‘ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி அறுபூதி அடைவித்தொரு பார்வைக் காரன்’ என்கிறது திருவகுப்பு.
‘ஓம்’ என்னும் பிரணவத்தை முடிமணியாகக் கொண்ட வேதத்தை வைத்தே படைப்புத் தொழிலைச் செய்யும் நான்முகனை அழைத்து, பிரணவத்துக்குப் பொருள் சொல்லக் கேட்கிறார் முருகப் பெருமான். பிரணவத்துக்குப் பொருள் தெரியாது நான்முகன் விழிக்க, அவன் தலையில் குட்டி, சிறையில் இட்டு, படைப்புத் தொழிலைத் தானே மேற்கொள்கிறார் முருகன். இதை அறிந்த சிவபெருமான் சீற்றம் அடைந்து, ‘உனக்குப் பிரணவத்தின் பொருள் தெரியுமா? சொல் எனக்கு’ என்கிறார். ‘நான் பிரணவம் அறிவேன். தங்களுக்கு அதை உணர்த்துவேன்’ என்றார் முருகப் பெருமான். சிவபெருமானை ‘சுவாமி’ என்கிறோம். தந்தைக்கே உபதேசம் செய்ததால், முருகர் ‘சுவாமிநாதன்’ எனப் போற்றப்படுகிறார். சிவபெருமானைத் தொடர்ந்து அகத்தியருக்கும், அருணகிரிநாதருக்கும் ‘பிரணவ உபதேசம்’ என்கிற பெரும் பரிசை முருகன் அளிக்கிறார். ஆலாலம் உண்டவர்க்கும், குறுமுனியார்க்கும், திருப்புகழ்ப் பண்ணவர்க்கும் உபதேசித்தன் என் ஆண்டவனே! - என மொழிகின்றது முருகர் அந்தாதி.
வெற்றிவடிவேலன் - அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்! ‘சுற்றி நில்லாதே! போ பகையே, துள்ளி வருகுது வேல்!’ என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். அழகு, அறிவு, ஆற்றல் என அனைத்திலும் சிறந்தவர் ஆறுமுகன். இளமையும் எழிலும் கொஞ்சும் ஆறுமுகனின் அழகைக் கண்டு ஆனந்தம் அடைந்தார் திருமால். அம் மகிழ்ச்சியில் பெருகிய ஆனந்தக் கண்ணீர்த் துளிகளில் அவதரித்த இரண்டு பெண்கள்தான் ஆனந்தவல்லி, சுந்தரவள்ளி. அவர்கள் இருவரையும்தான் தெய்வானை, வள்ளி என மணந்துகொண்டார் முருகப் பெருமான். அதனால்தான் ‘திருமால் மருகன்’ என அவர் போற்றப்படுகிறார். அழகிற்சிறந்த திருமாலே வியந்து பாராட்டிய அழகு, முருகனின் அழகு! அறிவிற்சிறந்த தட்சிணாமூர்த்தியான சிவபெருமானே உபதேசம் கேட்ட பெருமைக்குரியது முருகனின் அறிவு! ஆயிரத்தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு யுகங்கள் ஆண்ட சூரபத்மனை அடியோடு அழித்தது அந்த வேளின் ஆற்றல்.
‘கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னை பாலன் என்று இருந்தேன்; பரிசிவை உணர்ந்திலேன் யான் மால் அயன் தமக்கும் ஏனைவானவர் தமக்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தி இம்மூர்த்தி அன்றோ!
என்று, போரின் முடிவில் திறமைமிக்க ஆரபத்மனே முருகனின் ஆற்றலை வியந்து போற்றுகிறான். சிக்கலிலே வேல்வாங்கி, செந்தூரில் சம்ஹாரம் செய்து, வெற்றி வேந்தனாக விளங்கினார் முருகன். வீரத்தில் சிறந்த முருகன், கடல் போன்ற கருணை மனம் கொண்டவர். ஆதலால், சூரபத்மனையே சேவலும் மயிலுமாக ஆக்கி, தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக்கொண்டு, அவனுக்கும் கௌரவம் அளித்தார்.
இச்சாசக்தியாக வள்ளியும், க்ரியா சக்தியாக தெய்வயானையும் விளங்க, ஞானவேல் தாங்கி, சேவற்கொடி ஏந்தி, மயில் வாகனத் தில் வலம் வரும் முருகப்பெருமானை நம் மனவாகனத்தில் ஏற்றி வைப்போம். பதினாறு பேறுகளையும் தன் பன்னிரண்டு கைகளாலும் பக்தர்களுக்கு வாரி வழங்குவான் வடிவேலன்!
No comments:
Post a Comment