சார்தாம் யாத்திரை - பத்ரிநாத்
ப்ரயாகை என்றால் சங்கமம் அதாவது கூடுதுறை என்று பொருள். இரண்டு நதிகள் கூடும் இடமே ப்ரயாகை.
இமயமலையெங்கும் எண்ணற்ற சங்கமங்கள் உள்ளன அவற்றுள் பரம பவித்ரமான அலக்ந்ந்தாவின் ஐந்து சங்கமங்களே இந்த பஞ்ச ப்ரயாகைகள்.
இவையனைத்தும் பத்ரிநாத் செல்லும் பாதையில் அமைந்துள்ளன எனவே சார்தாம் யாத்திரை செல்லும் அன்பர்கள் இந்த பஞ்ச ப்ரயாகைகளில் புனித நீராடலாம்..
1.விஷ்ணு ப்ரயாகை
2.நந்த ப்ரயாகை
3.கர்ண ப்ரயாகை
4.ருத்ர ப்ரயாகை
5.தேவ ப்ரயாகை
விஷ்ணு ப்ரயாகை:
சதோபந்த ஏரியிலிருந்து உற்பத்தியாகி வஸுதரா நீர் வீழ்ச்சியாகியாக விழுந்து ஒடி வரும் அலக்நந்தா மானா கிராமத்தில் சரஸ்வதி நதியுடன் கேசவ ப்ரயாகையில் கூடி பத்ரிநாதரின் பாதங்களை கழுவிக்கொண்டு ஓடி வருவதால் விஷ்ணு கங்கை என்னும் நாமத்துடன், தவுலிகிரியிலிருந்து பாய்ந்து வரும் தவுலி கங்காவுடன் சங்கமம் ஆகின்றாள். இந்த சங்கமம் எனவே விஷ்ணு ப்ரயாகை என்னும் பெயர் பெற்றது. நாரத முனிவர் இக்கூடுதுறையில் தவம் செய்து மஹாவிஷ்ணுவின் தரிசனம் பெற்றார். இக்குடுதுறையில் எண்கோண விஷ்ணு ஆலயம் உள்ளது. இதை கட்டியவர் இந்தோர் மஹாராணி அகல்யாபாய் ஆவார். விஷ்ணு குண்டம் மற்றும் காகபுஜண்டர் ஏரி அருகில் உள்ளன். ஜோஷிர்மட்டிலிருந்து 10 கி.மீ தூரத்தில் 1372 மீ உயரத்தில் விஷ்ணு ப்ரயாகை அமைந்துள்ளது..
நந்த ப்ரயாகை :
அடுத்த கூடுதுறை உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான நந்தாதேவியிலிருந்து ஓடி வரும் நந்தாகினியும், அலக்நந்தாவும் கூடும் சங்கமம் ஆகும். நந்தன் என்னும் மன்னன் யாகம் செய்ததால் இவ்விடம் இப்பெயர் பெற்றது என்பர். மற்றொரு ஐதீகம் யாதவ ரத்தினம் நந்தகோபனும், யசோதையும். வசுதேவரும் தேவகியும் மஹா விஷ்ணு தங்கள் புத்திரனாக வர வேண்டும் என்று வேண்ட கிருஷ்ணாவதாரத்தில் இருவருக்கும் அருள ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தார். கர்ணபிரயாகையில் இருந்து 22 கி.மீ தூரத்தில் 914 அடி உயரத்தில் அமைந்துள்ளது நந்த ப்ரயாகை. கோபாலருக்கு ஒரு ஆலயம் இவ்விடத்தில் உள்ளது. ரூப் குண்ட் நடைப்பயணம் செல்பவர்களை இங்கு அதிகம் காணலாம்.
கர்ண ப்ரயாகை:
பிண்டாரி பனியாற்றிலிருந்து ஓடி வரும் பிண்டாரி நதியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆகும் இடம் கர்ண ப்ரயாகை. மஹாபாரதத்து கர்ணனின் பெயரால் இந்த் கூடுதுறை இப்பெயர் பெற்றது. தங்களது மூத்த சகோதரன் கொடை வள்ளல் கர்ணனுக்கு பாண்டவர்கள் பிண்டதானம் செய்த தலம். தானத்தினால் பெயர் பெற்ற கர்ணனிடம் பாண்டவர்கள் கடைசி ஆசை என்னவென்று கேட்க , எங்கு இறுதி கர்மம் நடைபெறவில்லையோ அங்கு தனக்கு இறுதி காரியம் நடைபெற வேண்டும் என்று கூற, இங்கு ஒரு இடத்தில் அர்ச்சுனன் பாணம் விட பிண்டாரி உற்பத்தியாகி வந்தாள். இதன் கரையில் கர்ணனுக்கு ஒரு சிறு கோயில் உள்ளது. மறு கரையில் கிருஷ்ணருக்கும், சிவபெருமானுக்கும், துர்கா தேவிக்கும் கோயில்கள் உள்ளன. கன்வ முனிவரின் ஆசிரமம் இங்குதான் இருந்திருக்கின்றது. துஷ்யந்தன் சகுந்தலை காதல் நாடகம் அரங்கேறியதும் இங்குதான். அதைத்தான் காளிதாசன் இயற்றிய அற்புத இலக்கியமாக இயற்றினார். விவேகானந்தர் இங்கு சில நாட்கள் தங்கியுள்ளார்.
ருத்ர ப்ரயாகை:
கேதார் சிகரங்களிலிருந்து பாய்ந்து வரும் மந்தாங்கினியும், அலக்நந்தாவும் கூடும் கூடுதுறை ருத்ர ப்ரயாகையாகும். இசையில் தன்னை வெல்ல வந்த நாரத முனிவருக்கு சிவபெருமான் ருத்ரராக காட்சி கொடுத்த தலம். ராகங்களையும் ராகினிகளையும் சிவபெருமான் யாத்த தலம். சதி தேவி யாக குண்டத்தில் தக்ஷன் கொடுத்த உடலை தியாகம் செய்தபின் மலையரசன் பொற்பாவையாக, மலைமகளாக, கௌரியாக மீண்டும் பிறப்பெடுத்த தலம். அன்னை பர்வதவர்த்தினி தவமிருந்து சிவபெருமானை தனது கணவனாக அடைந்த தலம். ருத்ரநாத்ஜீக்கு இங்கு ஒரு ஆலயம் உள்ளது.
தேவப்ரயாகை:
கோமுக்கிலிருந்து ஓடிவரும் பாகீரதியும், வசுதாராவில் துவங்கி நரநாராயணர் சிகரம் தாண்டி பத்ரிநாதரின் பாதம் கழுவ ஓடிவரும் அலக்நந்தாவும் சங்கமமாகி கங்கையாக ஓடும் புண்ணிய தலம் இந்த தேவப்ரயாகை. இதன் கரையில் அமைந்துள்ள இரகுநாத்ஜீ ஆலயம்தான் பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற கண்டம் என்னும் கடிநகர் என்னும் திவ்யதேசம் ஆகும். இராமபிரான் இந்த கூடுதுறையில் தவம் செய்துள்ளார்.
இந்த பிரயாகைகளில் இப்பிரதேச மக்கள் உத்தராயண புண்ணியகாலமான மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மஹா சிவராத்திரி, இராமநவமி ஆகிய புண்ணிய நாட்களில் புனித நீராடி தங்கள் பாவம் போக்குகின்றனர்.
இந்த பிரயாகைகள் நமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன.
முதல் பிரயாகையில் தவுலியும் அலக்நந்தாவும் சங்கமம் ஆனால் அதற்குப்பின் தவுலி இல்லை அலக்நந்தாதான், அது போலவே இரண்டாவது சங்கமத்தில் நந்தாங்கினியும் அலக்நந்தாவும் இணைகின்றனர் அதற்குப்பின் நந்தாங்கினி இல்லை, மூன்றாவது பிரயாகைக்குப்பின் பிண்டாரி இல்லை, நான்காவது பிரயாகைக்குப்பின் மந்தாங்கினி இல்லை, ஐந்தாவது சங்கமத்திற்க்குப் பிறகு பாகீரதியும் இல்லை, அலக்நந்தாவும் இல்லை, கங்கையாக மாறுகின்றனர், இறுதியாக கடலில் கலந்தபின் கங்கையே இல்லை. அது போல ஜீவாத்மாக்களாகிய நாம் எண்ணற்ற நாமம் கொண்டாலும் அவையெல்லாம் இறுதியி பரமாத்மாவுடன் இணையும் போது மறைந்து போகும், ஆகவே நான் என்னும் ஆங்காரமும் எனது என்னும் மமகாரமும் இல்லாமல் வாழ வேண்டும் என்பதை இந்த ப்ரயாகைகள் நமக்கு உணர்த்துகின்றன.
சார்தாம் யாத்திரையின் நான்காவது தலமான கேதார்நாத் கேதாரீஸ்வரின் பெருமைகளும் , தரிசனமும்.......
திருச்சிற்றம்பலம்
கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்...
No comments:
Post a Comment