
தேவார மூவரும் ஆன்மாக்கள் உய்வு பெறும் பொருட்டு திருஐந்தெழுத்து மந்திரத்தைப் போற்றும் 'நமசிவாயப் பதிகம்' பாடி அருளியுள்ளனர். ஞான சம்பந்தரால் இரண்டு பதிகங்களும், அப்பர் அடிகளால் ஓரு பதிகமும், சுந்தரரால் ஓரு பதிகமும் பாடி அருளப் பட்டுள்ளது.

இப்புவிக்கே ஞானம் வழங்கத் தோன்றிய சம்பந்தருக்கு உபநயன விழா நிச்சயிக்கப் பட்டது. அவ்விழாவில் சம்பந்தர் வேதியர்கள் அளித்த முப்புரி நூலைத் தாங்கி அருளினார். அந்தணர்கள் சம்பந்தரின் திரு முன் நின்று 'வேதம் நான்கையும் தந்தோம்' என மொழிய, சம்பந்தர் எண்ணிறந்த வேத வாக்கியங்களை அச்சமயத்தில் ஓதி அருளினார்.

பெரிதும் வியந்த வேதியர்கள் சம்பந்தரின் திருவடி பணிந்து, மறை வாக்கியங்களில் தங்களுக்கு உள்ள ஐயப்பாடுகளை சம்பந்தரிடம் கேட்டுத் தெளிந்தனர். அத்தருணத்தில் 'அனைத்து மந்திரங்களும் தோன்ற மூலகாரணமாக விளங்குவது திருஐந்தெழுத்தே' என்று உரைத்தருளிய சம்பந்தர் 'துஞ்சலும் துஞ்சல் இலாத..' எனும் முதல் நமசிவாயப் பதிகத்தைப் பாடி அருளினார்.
சம்பந்தர் இரண்டாம் பதிகம்:
சம்பந்தருடைய மணநாளன்று, 'நல்லூர்ப் பெருமணம்' திருக்கோயிலுள், இறைவனின் திரு முன்பு தோன்றிய சிவஜோதியில், இல்லாளின் கரம் பற்றிய நிலையில் சம்பந்தர் புகுந்தருளினார். அத்தகு அற்புத தருணத்தில் 'காதலாகிக் கசிந்து' என்னும் நமசிவாயப் பதிகத்தைப் பாடி அருளினார்.


திருநாவுக்கரசர் பதிகம்:
சமணர்கள் அப்பர் அடிகளைக் கல்லுடன் பிணைத்துக் கட்டி கடலில் தள்ளினர். அச்சமயத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் 'சொற்றுனை வேதியன்' எனும் நமசிவாயப் பதிகம் பாடியருளினார். திருவருளால் அக்கல் தோனி போன்று மிதந்து அப்பர் பெருமானைக் கரை சேர்த்தது.

அனுதினமும் இத்திருப்பதிகங்களைப் பாராயணம் செய்வது எண்ணிலடங்கா நன்மைகளைப் பெற்றுத் தரும். அடைதற்கரிய பேரின்பம் கிட்டும். நலிவு நீங்கி நலம் உண்டாகும். இடரும், இன்னலும், வறுமையும் ஒழிந்து பெரும்செல்வம் வந்து எய்தும்.
No comments:
Post a Comment