Tuesday, 29 November 2016

கங்கை கரையில் - 11

சார்தாம் யாத்திரை - கேதார்நாத்


திருவிளையாடல் தொடர்ச்சி...

அதற்கு அந்த கபடவேடதாரி எதற்காக இந்த கடுமையான தவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாய் என்று வினவ, அம்மையும்  பிநாகம் ஏந்திய சிவபெருமானை கணவனாக அடைய இந்த தவம் செய்வதாக கூறினாள். அதற்கு விருத்தராக வந்த சிவபெருமான் கூறுகின்றார். ஏ தேவி! நீ சந்தனத்தை விட்டு சேற்றைப் பூசிக்கொள்ளவும், யானை வாகனத்தை விட்டு எருதின் மேல் ஏறி சவாரி செய்யவும், கங்கை நீரை விட்டு, கிணற்று நீரை அள்ளிக்குடிக்கவும், சூரிய ஒளியை விட்டுவிட்டு மின்மினியின் மினுக்கு ஒளியை கண்டு ரசிக்கவும், வீட்டு வாசத்தை விட்டுவிட்டு காட்டுவாசஞ் செய்யவும் விரும்பியவளாய் தவம் செய்கின்றாய். இன்னும் சொல்கிறேன் கேள்.

Image result for shiva parvati images

 பார்வதி ! கமலப்பூக்களைக்ப் போன்ற கருவிழிகள் கொண்ட கட்டழகியான நீ எங்கே ? முக்கண்ணனான அந்தச் சுடலையாடிச் சிவன் எங்கே ? வெண்ணிலா முகம்படைத்த நீ எங்கே ? ஐந்தலையனான அந்த ஆண்டிப்பித்தன் எங்கே ? வருணிக்க முடியாத கூந்தல் அலங்காரியான நீ எங்கே ?  விரிசடையனான அந்த ஜடாதரன் எங்கே ? சந்தனம் முதலான வாசனைகள் பூசி பரிமளிக்கும்  உடல் வளம் வாய்ந்த நீ எங்கே ?  சுடுகாட்டுச் சாம்பலை பூசித்திரியும் உடலுள்ள அந்த சிவன் எங்கே ? சுகமான வெண்பட்டாடை எங்கே ? சுகமற்ற அவன் யானைத்தோல் போர்வை எங்கே ? உனது திவ்யமான தோள் வளைகள் எங்கே ? அவனது பாம்பு ஆபரணங்கள் எங்கே ? உனக்கும் சிவனுக்கும் பொருத்தமோ ? உருவ ஒற்றுமையோ சிறிதும் கிடையாது. அவனோ விரூபாக்ஷி (கோணல் கண்ணன்) அவனது குலங்குடி முதலியனவும் நன்றாக அறியப்படவில்லை. அவன் என்ன செல்வந்தனா? அப்படியிருந்தால் அவன் ஏன் திகம்பரனாய் திரிய வேண்டும்.                      
அவன் எறித்திரிவது மாடு, உடுத்தும் ஆடை யனைத்தோல், பதை வரிசைகள் பூத பைசாசங்கள், அவனது நீல கண்டத்தில் கடுவிஷம், காடு மேடுகளில் சுற்றுபவன், ஏகாங்கி, பற்றற்ற விரக்தன்!. ஆகையால் அவனிடன் உன் மனத்தை செலுத்துவது உசிதமல்ல! அவன் வசிப்பது ருத்ரபூமி! எனவே உன் மனத்தை அப்படிப்பட்டவனிடமிருந்து திருப்புவது தான் நல்லது என்று கூறினார்.
   
இவற்றையெல்லாம் பொறுமையின்றி கேட்டா பார்வதிதேவி மிகவும் கோபம் கொண்டாள். அவள் அந்த முதுபெரும் கிழவரை நோக்கிக் குமுறி குமுறி கூறலானாள்.

 “சிவதூஷணை செய்வதில் வாய்த்தேர்ச்சி பெற்ற கிழவரே! இவ்வளவு நேரம் உம்மை தன்யர் என்று எண்ணியிருந்தேன். இப்போதுதான் தாங்கள் அபத்தமானவர் என்று புரிந்தது. தேவாதி தேவனை சிவபெருமானை நான் அறிவேன் என்று நீர் கூறியது பொய். உலகை காக்கும் அந்த்த சிவபெருமானின் வாசாமகோசரமான ஸ்வரூபத்தை நான் சொல்லுகிறேன், கேட்டுத் தெரிந்து கொள்ளும்....!

Image result for shiva parvati images
 
அந்த பரமசிவனார், யோசித்துப் பார்த்தால் நிர்க்குணர் காரணத்தால் ஸகுணராகவும் நிர்க்குணராகவும் விளங்குகின்றாரே அவருக்கு பிறவி ஏது?  ஜாதி ஏது? சகலவித்தைகளுக்கும் அவர் பிறப்பிடமானவர். அவரே முன்பு ஒரு காலத்தில்  வேதங்களை சுவாச மார்க்கமாக விஷ்ணுவுக்கு வழங்கியவர்.பரமாத்மாவும் பரிபூரணருமான அந்த சிவனாருக்கு வித்தைகளால் ஆகவேண்டியது என்ன? ஆதிபூதரான அந்த ஆனந்த கூத்தருக்கு  வயது ஏது. பிரகிருதியே அந்த பெருமானிடத்திலிருந்தல்லவோ தோன்றியது. எவன் அந்த பெருமானை நித்தியமாக அடைகின்றானோ? அவனுக்குப் ப்ரஹால, உத்ஸாஹ, மந்திரஜ சக்திகள் கைகூடும். சுடலையாண்டி என்று நீங்கள் குறிப்பிட்ட  அவரே மரணத்தை வென்ற மிருத்யுஞ்ஜயர். அவரது பூஜையால் எல்லோருக்கும் சுகம் பொங்கி வருமே தவிர அவருக்கென்று ஏது சுகம்? துன்மதியாளரே!

 எந்த சிவபெருமானின் கருணைக் கண் ணோக்கினால் தேவர்கள் ஜீவந்தர்களாக இருக்கின்றார்களோ,எந்த சிவபெருமானின் திருத்தொண்டிற்காகக் தேவர்களும் காத்திருக்கின்றார்களோ அந்த பரம்பொருள் ஸ்வயம்பு. நீர் ஆண்டியென இகழ்ந்த அந்த ஆனந்த மூர்த்தியை சேவித்தால்  அஷ்டலக்ஷ்மிகளையும் அடைவான். எந்த சிவபெருமானிடம் அஷ்டமாசித்திகளும் நர்த்தனஞ் செய்கின்றனவோ, அந்த பரமேஸ்வரனுக்கு ஐசுவரியம் எப்படி எட்டாததாகும். அவ்ரே மங்கள மூர்த்தி, சிவம் என்ற மங்களமான பெயர் எவன் முகத்தில் நிலைத்திருக்கிறதோ அவனைக் கண்ணால் காண்பதாலேயே அன்னியர்களும் பரிசுத்தராகி விடுவார்கள்.
நீர் சொல்வது போல பஸ்பமானது பரிசுத்தம் இல்லாத வெறும் சாம்பல் என்றால் அம்பலவாணரான அந்த அண்ணல் மாபெரும் நடனமாடிய பிறகு தேவர்கள் அந்த சாம்பலை ஏன் தாம் மீது சிரசின் மீது பூசிக்கொள்கின்றனர். பொன்னார் மேனியில் தூய பால் வெண்ணீறு அணியும் அந்த சிவபெருமான் அகில உலகங்களுக்கும் ஆதி. அவரே  சர்வேஸ்வரராக இருந்து . அனைத்தையும் ஆக்கலும், காத்தலும், அழித்தலும். மறைத்தலும், அருளலுமான ஐந்தொழில் புரிந்து அலகிலா விளையாட்டுடைய தலைவராக விளங்குகிறாரோ அந்த ஆதிநாயகரை உம்மைப் போன்ற குறைமதியாளர்களால் எப்படி அறிய முடியும்.

துஷ்ட வேதியரே! உம் ஊனக்கண்களுக்கு  சிவபெருமான் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரே என் மனக்கண்ணிற்க்கு பிரியரும் என் விருப்பத்திற்கு உரியவராவார் என்று வெகுண்டுரைத்து விட்டு, சிவநிந்தணை செய்யும் இவர் இருக்கும் இடம் விட்டு செல்லலாம் என்று  சொல்லி விட்டு தன் தோழியரிடம் வேறிடம் செல்ல காலெடுத்து வைபப்தற்கு முன் , விருத்த வேதியர் வடிவில் இருந்த சிவபெருமான் தனது சுயரூபத்தை காட்டினார். அவ்வாறு இவரைக்கண்டதும் பார்வதி தேவி நாணத்தோடு தலை குனிந்து நின்றாள். அவளை சிவபெருமான் உற்று  நோக்கி புன்னகை பூத்து, “பார்வதி நீ என்னை விட்டு எங்கு போக முடியும்? நீ என்னால் விட்டுவிடத்தக்கவள் அல்லவே! உன் தவத்துக்கு மகிழ்ந்த நான்  உன் முன் பிரசன்னமானேன். உன் மனதை சோதிப்பதற்காகவே  விளையாட்டாக  இப்படியெல்லாம் வாய் கொடுத்து வார்த்தையாடினேன். உன் திடபக்தியை கண்டு உவந்தேன் என்றார். பின்னர் முறைப்படி பர்வதராஜனிடம் சப்தரிஷிகள் பெண் கேட்க, சிவசக்தி திருமணம் சோன் பிரயாகை அருகில் உள்ள த்ரியுக் நாராயணில் நடைபெற்றது.

இவ்வாறு சிவசக்தி திருவிளையாடல் புரிந்த கௌரி குண்டத்தில் கௌரிக்கு ஒரு தனிக்கோவில் உள்ளது. இமயமலையின்  கட்டிட அமைப்பில்  ஒரு கூம்பு வடிவ  கோபுரத்துடன் ஒரு பிரகாரத்துடன் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கோவிலின் திருவாயிலின் அருகில் அம்மை பார்வதி தவம் செய்யும் கோல அற்புத  சிற்பம் ஒன்று உள்ளது. அம்மையின் அருகில் கணபதியும் அருள்கின்றார். அன்னையை தரிசனம் செய்வதற்கு முன்னர் அன்பர்கள் முதலில் சுடு நீர் குளத்தில் நீராடுகின்றனர். இங்கு இரு  சுடு நீர்க்குளங்கள் உள்ளன. (கேதார்நாத் மலையேறி சிவபெருமானை தரிசனம் செய்து விட்டு கீழிறங்கி வரும் போது எவ்வளவு களைப்பாக இருந்தாலும் இக்குளத்தில் நீராட எல்லா களைப்பும் நீங்கிவிடும்) இக்குளத்தில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை நீராடலாம்.

Image result for gaurikund

நீராடும் போது பக்தர்கள்
ஸர்வ மங்கள் மாங்கல்யே  சிவே ஸ்ர்வார்த்த சாதிகே |
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே ||

என்று கௌரியன்னையை நினைத்து  மனது உடலும் தூய்மையடைய நீராட வேண்டும். பின்னர் அன்னை மலைமகள் தவம் செய்த கௌரி குளத்தில் சென்று அன்னையை வழிபடுகின்றர்.  நான்கு சுவர்களிலும் அன்னையின் சரித்திரத்தை சிற்பங்களாக அமைத்துள்ளனர்.
     
த்ரியுக் நாராயண் என்னுமிடத்தில் மூன்று யுகங்களாக எரிந்து கொண்டிருக்கும் குண்டத்தின் விபூதி எடுத்து வரலாம். அந்த விபூதி பிரசாதம் தீராத விணை தீர்க்கும் சக்தி கொண்டது. சோன் பிரயாகையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் த்ரியுக் நாராயண் அமைந்துள்ளது.

Image result for thriuk narayan near kedarnath
த்ரியுக் நாராயண்
 திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற  கௌரி ஆலயத்திற்கு சென்று அன்னையை, வரையோன் பெற்ற வார் சடையாளை, மலைச்செல்வியை, அமரர் கயிலைப் பார்வதியை வழிபட்டு விட்டு ஜோதிர்லிங்க ஸ்தலமான  கேதார்நாத்திற்கான நடைப் பயணத்தை  தொடங்க வேண்டும்..

 கேதாரீஸ்வரரை தரிசனம் செய்வதற்க்கு முன்னர் கேதார்நாத்தின் பெருமைகளை  அடுத்த பதிவில் காணலாம்...

திருச்சிற்றம்பலம்

கங்கை கரையில் தொடர் இன்னும் வ(ள)ரும்..

No comments:

Post a Comment