Friday, 4 November 2016

அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு.


 

இறைவர் திருப்பெயர் : வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப்

                                பெருமான், ஆலங்காட்டுஅப்பர்.


இறைவியார் திருப்பெயர் : பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.


தல மரம் : பலா. (ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது.)


தீர்த்தம் : 'சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ

                       புஷ்கரணி),  முக்தி தீர்த்தம்.


வழிபட்டோர் : கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர்.


தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் -1. துஞ்ச வருவாருந்.

                             2. அப்பர்   -         1. வெள்ளநீர்ச் சடையர்,

                                                          2. ஒன்றா வுலகனைத்து.


                             3. சுந்தரர்  -       1. முத்தா முத்தி தரவல்ல.


அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்
காட்சித் தரும் திருவாலங்காடு


தல சிறப்பு :

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும்.

இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது.

அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.

சிவபெருமான் காளி தேவியை நடனத்தால் வென்ற தலம். அருகிலுள்ள காளி கோயிலை தரிசித்த பின்னரே இத்தல இறைவனைத் தரிசிப்பது மரபு.

காரைக்கால் அம்மையாரின் முக்தித் தலமாதலால் இத்தலத்தில் கால் பதிக்க அஞ்சிய சம்பந்தருக்கு தல எல்லையில் சிவபெருமான் காட்சியளித்து அருளியுள்ளார்.



திருவாலங்காடு

பஞ்ச சபைகளுள் இரத்தினசபை இத்தலம். இத்திருத்தலம் 'வடாரண்யம் ' எனவும் பெயர் பெற்றது. இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். தலையால் நடந்து வந்த காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம். நடராசப்பெருமான் ஊர்த்தவ தாண்டவமாக இரத்தின சபையில் அருள்கிறார். நடராசர் ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான்’, 'இரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.

திருவாலங்காடு ஊர்த்துவதாண்டவம்

திருவாலங்காட்டில் அரக்கர்களை அழித்து அவர்களின் குருதியை குடிக்கிறாள் காளி. அதனால் அசுரர்களின் பண்பு பெற்று தவம் செய்து கொண்டிருத்த முனிவர்களைத் துன்புறுத்துகிறாள். முனிவர்கள் ஈசனிடம் முறையிட, ஈசன் அகோர வடிவம் கொண்டு காளிமுன் தோன்றுகிறார். காளி ஈசனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள்.

இருவரும் நடனமாடும் போது சிவன் காதில் அணிந்திருந்த குழை கீழே விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் குழையைக் காலால் எடுத்துக் காலைக் காதுவரை உயர்த்திப் பொருத்துகிறார். காளியால் அதை செய்ய இயலவில்லை.போட்டியில் காளி தோற்கிறாள். காளியின் ஆணவம் அழிகிறது. ஈசனின் இந்த நடனம் ஊர்த்துவதாண்டவம் என்று அழைக்கப்படுகிறது.

இரத்தின சபை

இரத்தின சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.



இத்தலம் தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற 15 தலங்களில் ஒன்று. திருஞானசம்பந்தர் , அப்பர் , சுந்தரர் , அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள் ஆகியோர்கள் வழிபட்ட திருத்தலம்.

வழிபாடுகள்

நாள்தோறும் நான்கு கால வழிபாடுகள், நடராசருக்கு ஆறு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. பங்குனியில் பெருவிழா, ஆடி அமாவாசை கழிந்த செவ்வாய் முதல் அடுத்த செவ்வாய் வரை பத்ரகாளியம்மனுக்கு திருவிழா நடைபெறும். வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்ல வகையான இன்பங்களும் கிடைக்கும்.

பொது தகவல் :

தேவர்களை, அசுரர்கள் கொடுமை செய்த போது, தவத்தில் இருந்த சிவனை எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.மன்மதனை, அவர் மீது மலர் அம்பு வீசச் செய்தனர். கோபத்துடன் அவர் நெற்றிக் கண்ணைத் திறக்க, மன்மதன் பஸ்பமானான். சிவனின் உக்கிரம் தாங்காத தேவர்களும், மகரிஷிகளும் கோபம் தணியும்படி வேண்டினர். அவர்களுக்கு காட்சி தந்த சிவன், ஒரு ஆலமரத்தடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார். இதனால், இந்த ஊருக்கு, “திருவாலங்காடு’ என்றும், சுவாமிக்கு, “வடாரண்யேஸ்வரர்’ (ஆலங்காட்டு அப்பர்) என்றும் பெயர் ஏற்பட்டது.

நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, “சிதம்பர ரகசியம்’ என்பது போல, ஆலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவனைத் தரிசிக்க, கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்றார் காரைக்கால் அம்மையார். சிவன் அவரை, “அம்மா!’ என்றழைத்து, “என்ன வரம் வேண்டும்?’ எனக் கேட்க, அவர், “எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் வேண்டும்…’ என்றார்; கேட்ட வரத்தை அருளினார் சிவன்.

அத்துடன், அவ்வூர் மன்னன் கனவில் தோன்றி, காரைக்கால் அம்மையார், தன் கோவிலில் தங்கப் போவதாகவும், தனக்கு பின்புறம் அவருக்காக ஒரு சன்னிதி எழுப்பும்படியும் கூறினார். அதன்படி மன்னன், நடராஜருக்கு பின்புறம் சன்னிதியில் பாதியை மறைத்து, சுவர் எழுப்பினான். அதனுள், ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். தற்போதும், இவர் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதையே, “ஆலங்காட்டு ரகசியம்’ என்கின்றனர்.

இங்குள்ள அம்பாளை, “சமிசீனாம்பிகை’ என்பர். “சமிசீனம்’ என்றால், “ஆச்சரிய பாவனை!’ இவளது விக்ரகம், நடராஜரின் நடனத்தைப் பார்த்து ஆச்சரியத்துடன் நிற்பது போல செதுக்கப்பட்டுள்ள தால், இப்படி ஒரு பெயரை சூட்டினர்.

பஞ்ச சபைகளில் நடராஜர், இங்கு மட்டுமே எட்டு கைகளுடன் காட்சி தருகிறார். பங்குனி உத்திரத்தன்றும், மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்றும் மட்டுமே நகருக்குள் பவனி வருவார் நடராஜர். இது, சிவன் கோவிலாக இருந்தாலும், பெருமாள் கோவில்களைப் போல தீர்த்தம் தருகின்றனர்.

காளியுடன் சிவன் போட்டி நடனம் ஆடியபோது, அதன் உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்க நிலைக்குச் சென்றனர். தன் தலையிலிருந்த கங்கையைத் தெளித்து, அவர்களை எழுப்பினார் சிவன். இதனடிப்படையில் தீர்த்தம் தரப்படுகிறது. பிரகாரத்தில் எட்டு கணபதிகளை தரிசிக்கலாம். அஷ்ட கணபதி எனப்படும் இவர்கள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருபவர்களாக உள்ளனர். நாய் வாகனம் இல்லாத பீஷண பைரவர், உபதேச தட்சிணாமூர்த்தி ஆகியோரும் இங்குள்ளனர்.

பிரகாரத்தில் சனீஸ்வரரின் மகனான மாந்தி வழிபட்ட மாந்தீஸ்வரர் இங்கு அருள் புரிகிறார்.



கோயிலின் வாயிலை தாண்டி உள்ளே சென்றால் அங்கு மிகப்பெரிய மண்டபம், திறந்த வெளி, தோட்டம் காணப்படுகிறது. இடது பக்கம் விநாயகர் சன்னதியும், வலது பக்கம் முருகர் சன்னதியும் உள்ளன. அதையடுத்து கோயில் கோபுரம் காட்சியளிக்கிறது. கோயில் கோபுரத்தை கடந்ததும், அங்கும் உள் கோயிலைச் சுற்றி விசாலமான இடம் உள்ளது. வலது பக்கம் வண்டார்குழலி அம்மனும், இடது பக்கத்தில் மண்டபம் போன்ற அமைப்பும் உள்ளது. அதையும் கடந்து உள்ளே செல்லும் போது அதற்குள்ளும் மிக உயரமான தளத்துடன் கூடிய மண்டபம், மற்றும் ஏராளமான இறைவனின் சிலைகள், லிங்கங்கள் காட்சியளிக்கின்றன. அங்குள்ள மண்டபத்தின் தூண்கள் அழகான வேலைபாடுடன் காட்சியளிக்கின்றன.

அங்கு நேரெதிரே வடாரண்யேஸ்வரர் வெள்ளி கிரீடத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார். கருவறை வாயிலில் பால துவாரகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். மனதுக்கு அமைதியும், கண்களுக்கு விருந்தாகவும் காட்சி அளிக்கிறார் வடாரண்யேஸ்வரர். அவர்து உருவம் நமது மனக்கண்களில் நீங்காது நிலை பெற்று விடுகிறது. வடாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு இடது பக்கமாக கருவறையில் இருந்து வெளியே வந்ததும், சப்தா மாதாக்கள், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், சிவன், பிள்ளையார் என பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு பல சிறப்பு வாய்ந்த சிவலிங்கங்களும் வீற்றிருக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருந்தாலும், புதிதாக கட்டிய கோயிலைப் போன்று கோயில் வளாகம் காட்சி அளிப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

அதில் மாந்தீஸ்வரர் என்ற சிறப்பு வாய்ந்த சிவலிங்கம் இந்த கோயிலில் அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அஷ்டாமத்து சனி போன்ற கிரகநிலை இருப்போர், மாந்தீஸ்வரரை வணங்கினால் நலம் பெறலாம் என்று கோயிலில் உள்ள குறிப்பு நமக்கு சொல்கிறது. இந்த திருத்தலம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் உள்ளது. இந்த கோயில் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்துள்ள கோயிலாகும்.

இந்த தலத்தின் பின்பக்கம் வலது மூலையில் கோயிலின் தல விருட்சமான மிகப்பெரிய ஆலமரம் வீற்றிருக்கிறது.

தல வரலாறு :

சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களின் தொல்லை தாளாது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, முக்கண்ணனார் காளியைத் தோற்றுவித்து அவர்களுடன் போருக்கு அனுப்பினார். தங்கள் உடலிலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஒரு அசுரனாக மாறும் என்ற வரத்தை சும்பனும், நிசும்பனும் பெற்றிருந்தமையால், அவர்களது ரத்தம் பூமியில் விழாதவண்ணம் கபாலத்தில் ஏந்தி காளி அதைப் பருகி அவர்களை வீழ்த்தினாள். ஆயினும், அசுரக்குருதியை அருந்தியமையால் காளி அசுர குணம் பெற்று முனிவர்களை வதைக்க, எம்பெருமான் அவளுக்கு முன் தோன்றி தன்னுடன் நடனப் போட்டிக்கு வருமாறு அழைத்து ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். தோடுடைய செவியன் தன் இடக்காது மணியைக் கீழே வைத்து நடனமாடியவாறே தன் காலால் அதை எடுத்து மீண்டும் அணிய, தன்னால் முடியாதென்று காளி தோல்வியை ஒப்புக் கொண்டாள். ‘என்னைக் காண வருவோர் முதலில் உன்னைக் கண்டே முழுப்பலன் அடைவர்’ என்று எம்பெருமான் அவளுக்கு வரமீய, அவளும் திருவாலங்காடு கோயிலுக்குப் பின்புறம் தனிக்கோயில் கொண்டாள்.

ஆலமரக்காடாக இருந்த இடத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியமையால் இத்தலம் திருவாலங்காடு என்று பெயர் பெற்றது; வடமொழியில் வடவாரண்யம் என்றானது.

சிங்கீஸ்வரர் 

பெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது.

இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.

நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்ப குஜாம்பாள் என்றும், பூமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.

No comments:

Post a Comment