Tuesday, 29 November 2016

அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்


மூலவர் : சத்யநாதர், திருக்காலீஸ்வரர், காரைத்திருநாதர்

உற்சவர் : -

அம்மன்/தாயார் : பிரமராம்பிகை

தல விருட்சம் : காரைச்செடி

தீர்த்தம் : இந்திர, சத்யவிரத தீர்த்தம்

ஆகமம்/பூஜை : காமீகம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : கச்சிநெறிக்காரைக்காடு

ஊர் : காஞ்சிபுரம்

பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

தேவாரப்பதிகம்:

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப் பூதங்கள் மறைநவின்ற பாடலோடு ஆடலராய் மழுவேந்திச் சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும் நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்கரைக் காட்டாரே.

- திருஞானசம்பந்தர்


தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 5வது தலம்.


திருவிழா:

மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, அன்னாபிஷேகம்.

தல சிறப்பு:

இங்குள்ள இறைவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்து சிவதலங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால் இங்குள்ள கோயில்களில் அம்பாளை பார்ப்பது அரிது. ஆனால், இங்கு கருவறையிலேயே சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு உரிய பூஜைகளே இவளுக்கு செய்யப்படுகிறது. விழாக் காலங்களில் இவளை வெளியே கொண்டு செல்வதில்லை என்பது சிறப்பு. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 237 வது தேவாரத்தலம் ஆகும்.

பொது தகவல்:

இக்கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

பிரார்த்தனை

சிவனிடம் வேண்டிக்கொள்ளும் காரியங்கள் நிறைவேறும். புதன்கிழமைகளில் தீர்த்தத்தில் நீராடி பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பச்சைப்பயறு நைவேத்யம் படைத்து "ஞானகாரகன்' எனப்படும் புதனை வணங்கினால் கல்வியில் சிறக்கலாம், அறிவு கூடும், மொழியில் புலமை, பேச்சுத் திறமை, உண்டாகும், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு பூஜைகள் செய்யலாம்.

தலபெருமை:

ஏழு சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி: பொதுவாக தெட்சிணாமூர்த்தி சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு சீடர்களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சிதருவார். ஆனால், இங்கு அவருக்கு கீழே 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது ஐதீகம். சத்யநாதசுவாமி சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். அம்பாளுக்கு காரார்குழலி என்ற பெயரும் உள்ளது. நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு.

பிரகாரத்தில் புதனுக்கு அருகில் இந்திரன் இருக்கிறார். பிரஹஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் கல்வி கற்ற சந்திரன், அவரது மனைவியான தாரையை குருபத்தினி என்பதையும் கருதாமல் அவள்மீது ஆசை கொண்டான். ஒருசமயம் அவன் மகாவிஷ்ணுவின் அருள் பெறுவதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு குரு என்ற முறையில் வியாழன், தன் மனைவி தாரையுடன் கலந்து கொண்டார். அவள் மீது காதல் கொண்டிருந்த சந்திரன் அவளை மயக்கி அவனுடனே இருக்கச் செய்துகொண்டான்.

சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தார் புதன். பிரஹஸ்பதி, சிவனிடம் முறையிட்டு தாரையை கூட்டிச் சென்றார். புதனை சந்திரனே வளர்த்து வந்தார். புதன் பெரியவனாகியதும் தான் பிறந்த முறையை அறிந்து வெறுப்புற்று சந்திரனை பிரிந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தாய், தந்தையை பிரிந்திருந்த புதன் இத்தலத்திற்கு வந்து, தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்யநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், உரிய காலத்தில் கிரகப்பதவி கிடைக்கப்பெறும் என்று அருள்புரிந்தார். புதன் இத்தலத்தில் பிரகாரத்தில் சுவாமிக்கு வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

தல வரலாறு:

தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் அதிகாலையில் கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்று, சேவல் போல கூவினான். பொழுது விடிந்தது என நினைத்த கவுதமர் வெளியில் சென்று விட்டார்.

இத்தருணத்திற்காக காத்திருந்த இந்திரன், அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரைப் போலவே உருவத்தை மாற்றிக் கொண்டு அகல்யாவிடம் சென்று அவளை ஏமாற்றி காமுற்றான். இதனிடையே ஏதோ மாயையால் தான் கிளம்பி வந்திருப்பதை உணர்ந்த கவுதமர், ஆசிரமத்திற்கு திரும்பினார். அவரைக் கண்ட இந்திரன் பூனை போல வடிவத்தை மாற்றி தப்பிக்கப் பார்த்தான். அவனது வஞ்சக எண்ணத்தை ஞானதிருஷ்டியால் உணர்ந்த கவுதமர், அவனது உடல் முழுக்க கண்களைப் பெற்று திரியும்படி சபித்ததோடு, அகல்யாவையும் கல்லாக மாற்றி விட்டார். சாபம்பெற்ற இந்திரன் பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, காரைச்செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தை போக்கி, "காரைத்திருநாதர்' என்ற பெயரும் பெற்றார்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள இறைவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment