Tuesday, 1 November 2016

ஆருத்ரா தரிசனம் !

ஆருத்ரா தரிசனம்!
ஆருத்ரா தரிசனம்!
“ஆருத்ரா” என்பது, திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில், நடராஜரின் திருநடனம் கண்டால், “ஆ…ருத்ரா’ என்று, மூக்கில் விரலை வைக்கச் சொல்லும். அத்தகைய அழகு கோலத்தில், அவர் காட்சி தருகிறார்.  அவர் இடது காலை, தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்… ஏன் தெரியுமா? மனைவி மேல் கொண்ட பாசத்திற்காக! இதென்ன புதுக்கதை என்பவர்கள், தொடர்ந்து படியுங்கள்.
நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, “அபஸ்மாரன்’ என்பர். இவன் வளைந்து நெளிந்து, அஷ்ட கோணலாகப் படுத்திருப்பான். “அபஸ்மாரம்’ என்றால், “வலிப்பு நோய்” (அ) “வளைந்து நெளிதல்’ என்பர். காக்கா வலிப்பு நோய் வந்தவருக்கு, கையும், காலும் இழுத்து, எந்த நிலையில் தரையில் கிடப்பாரோ, அப்படி ஒரு நிலை. “முசலகம்’ என்றால், “காக்கா வலிப்பு!’ இதனால், அவன், “முசலகன்’ என்றாகி, தமிழில் முயலகன் ஆனான்.
முயலகன், ஆணவத்தைக் குறிப்பவன். மனிதனுக்கு, தன்னிடமுள்ள அகங்காரத்தை, நடராஜர், காலில் இட்டு மிதித்திருப்பது போல், தனக்குள் புதைத்துக் கொள்ள வேண்டும். அதை, வெளியே காட்ட அனுமதிக்கவே கூடாது என்பது இதன் தத்துவம்.  இடது காலை, “குஞ்சிதபாதம்’ என்பர். “குஞ்சிதம்’ என்றால், “வளைந்து தொங்குதல்’ எனப் பொருள். ஆம்… அவரது இடது கால் வளைந்து தொங்குகிறது.
தஞ்சாவூரில், பாபவிநாச முதலியார் என்ற கவிஞர் வசித்தார். அவர், பாடல் ஒன்றில், நடராஜர், ஏன் இடது காலைத் தூக்கியிருக்கிறார் என்பதற்கு, பல காரணங்களைச் சொல்கிறார்…“சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?’ என்பது அதில் ஒரு வரி.  நடராஜரின் துணைவியான சிவகாமி, அவர் அருகில், இரண்டு கால்களையும் நன்றாக ஊன்றித்தான் நிற்கிறாள். ஆனால், அவளுக்கு பாதம் வலிக்குமென, இவர் காலை தூக்கிக் கொண்டாராம்.  எப்படி தெரியுமா?
சிவனே, நடராஜர் எனும் பெயரில் நடனமாடுகிறார். அவரது இடது பாகத்தை, தன் மனைவிக்கு கொடுத்து விட்டார். இவர் நடனமிடும் போது, மனைவிக்குரிய இடது பாதம், தரையில் பட்டால் வலிக்குமே என, காலை உயர்த்திக் கொண்டாராம்.  எவ்வளவு உயரிய பாசம்! 
இந்த இடத்தில், சிவகாமி அம்மையார் பற்றி, மற்றொரு தகவலையும் அவர் சொல்கிறார்.  சிவகாமியை, “சிவகாமவல்லி’ என்று அவர் அழைக்கிறார். “வல்லி’ என்றால், “கொடி!’ கொடி வளைந்து வளைந்து படர்ந்திருக்கும் தன்மையுடையது. அதனால், பெயருக்கேற்றாற் போல், நடராஜர் அருகிலுள்ள சிவகாமி அம்மையின் சிலையின் இடுப்பை, வளைத்து செதுக்கியிருப்பர். அந்த அம்பாள், சிவனுடன் இணைந்து, தன் அருளை கொடி போல படர விடுவாளாம். அதனால், “சிவகாமவல்லி’ என்று பெயர் பெற்றாள்.
நடராஜரைத் தரிசிக்கச் சென்றால், அவரது இடது திருவடியை அவசியம் தரிசிக்க வேண்டும். ஏனெனில், அந்த தரிசனம், நம் பாவங்களை எல்லாம் போக்கி, சொர்க்கத்தை தந்து விடும். மேலும், தீர்க்காயுளையும் தரும்.
சிவபக்தரான மார்க்கண்டேயருக்கு, 16 வயதில், ஆயுள் முடிந்து விடும் என்ற நிலை இருந்தது. இதனால், அவரது தந்தை, மிகுந்த வருத்தத்தில் இருந்தார். குறிப்பிட்ட நாளில், எமன் வர, தன் பிரிவால், தந்தை துக்கப்படக் கூடாதே என்பதற்காக, சிவலிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டார். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவனின் இடது கால், எமனை எட்டி உதைத்தது. மார்க்கண்டேயன் தப்பித்தார். அந்த திருவடி பட்டதால், எமனுக்கும் மீண்டும் உயிர் கிடைத்தது.
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய நடராஜர் உத்ஸ்வம், திருவலம் அருட் திரு வில்வநாதீஸ்வரர் திருக்கோவிலில், வெகு சிறப்பாக இன்று திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவேறியது.
ஆருத்ரா  தரிசனத்தன்று, நடராஜரின் திருவடி தரிசனம் பெற்று, வாழ்க்கைத் துணைவியை இன்முகத்துடன் நடத்துங்கள்; தீர்க்காயுளும் பெறுங்கள், என்பதிற்கேற்ப பக்தகோடிகள் அனேகம் பேர் கலந்துகொண்டு திருஆலவாயனின் அருள் பெற்றனர்.

No comments:

Post a Comment