சிவ பெருமான், பார்வதி திருக்கல்யாணத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தபோது, அதனைச் சமன் செய்ய, பொதிகைமலை நோக்கி அகத்திய மாமுனி வந்தார் என்பது புராணம். அவர் வந்த வழியில் ராம நதி, ஜம்பு நதி ஆகிய இரு நதிகளுக்கு இடையில் இயற்கைப் பேரழகுடன் திகழ்ந்த இடம்தான் தோரணமலை. இங்கு மந்தகாசமான திருமுகத்துடன் முருகன் சிலையொன்றை அகத்தியர் பிரதிஷ்டை செய்தார் என்று நம்பிக்கை நிலவுகிறது. பின்னர் அவர் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
புலவரின் தலைவலி
பிறவியிலேயே வாய் பேச இயலாத, புத்திசாலி சிறுவன் ஒருவனுடன் வந்த ஒளவையார், அகத்தியரிடம் அவரது ஆராய்ச்சிப் பணிக்கு உதவியாக அச்சிறுவனை வைத்துக்கொள்ளக் கேட்டுக் கொண்டார். அந்தச் சிறுவனை ஏற்றுக்கொண்டு தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் அகத்தியர். திக்கெட்டும் அவர் செய்த மருத்துவ ஆராய்ச்சியின் பலன் பரவியது.
ஒருநாள் திரணதூமாக்கினி என்னும் தொல்காப்பியர், அகத்தியரின் ஆராய்ச்சி குறித்துக் கேள்விப்பட்டு அங்கு வந்தார். இவர் கபாடபுரத்தைச் சேர்ந்த இரண்டாம் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவர் என்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகதான் தீராத தலைவலியால் அவதியுறுவதாகவும், அதனை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொல்காப்பியரின் தலைவலிக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டார் அகத்தியர்.
ஜலநேத்திப் பழக்கம்
திரணதூமாக்கினிக்கு ஜலநேத்திப் பழக்கம் உண்டு அதனால்தான் தலைவலி வந்துள்ளது என்பதைக் கண்டறிந்தார் அகத்தியர். ஒரு நாசி வழியாக நீரையேற்றி மூளையின் எல்லா அறைகளுக்குள்ளும் செலுத்தி சுத்தம் செய்து மறுநாசி வழியாக நீரை வெளியேற்றும் முறையே ஜலநேத்தி. அப்போது அந்த நீரில் நுண்ணுயிராய் கலந்திருந்த தேரை ஒன்று மூளைக்குள் சென்று தங்கிவிட்டது. அந்தத் தேரை இப்போது பெரியதாக வளர்ந்துவிட்டது.
அது இப்போது வெளியேற முடியாமல் அங்குமிங்கும் அசைகிறது. அந்த அசைவுகளே தீராத தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. ரண சிகிச்சை செய்து கபாலத்தைத் திறந்து தேரையை அகற்றிவிட்டால், நோய் தீரும் எனக் கண்டுபிடித்தார் அகத்தியர்.
அகத்தியர் கால அறுவை சிகிச்சை
முதலில் சம்மோஹினி எனும் மூலிகை, மயக்க மருந்தாக செலுத்தப்பட்டு மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டார் திரணதூமாக்கினி. கபாலத்தைச் சுற்றி ஒருவகை மெழுகு தடவப்பட்டதும் மண்டைஓடு திறந்தது. மூளையை இறுகப்பற்றியபடி ஒரு தேரை அங்கு இருக்கக் கண்டார். அதனை குறடால் எடுக்க முனைந்தார் அகத்தியர். அவரைத் தடுத்தான், அவர் கூடவே இருந்த சிறுவன் பொன்னரங்கன்.
தண்ணீரில் தாவிய தேரை
வாயகன்ற மட்பாண்டம் ஒன்றில் நீர்நிரப்பி எடுத்துவந்தான் அந்த வாய் பேச முடியாத சிறுவன். அதனைக் கபாலம் அருகே கொண்டுச் சென்று, நீரினுள் கையைவிட்டு அளைந்து ‘சல சல’ என சப்தம் எழுப்பினான். அந்த நீரின் குளுமை காற்றில் கலந்து வீச, தேரை அந்த தண்ணீருக்குள் குதித்தது.
தலைவலி நீங்கியது
சட்டென மண்டை ஒட்டை மூடி ‘சந்தானகரணீ ’ மூலிகைக் கலவையால், பிளந்த கபாலத்தை நன்கு ஒட்ட வைத்தார் அகத்தியர். சிறிது நேரம் கழித்து ‘சஞ்சீவினி’ மூலிகை செலுத்தி அவரது மயக்கத்தைத் தெளிய வைத்தார். தலைவலி நீங்கியது.
சித்தர் தேரையர்
இந்தச் சிகிச்சையின்போது சமயோசிதமாக செயல்பட்ட சிறுவன் பொன்னரங்கனை அகத்தியர் அன்று முதல் தேரையர் என்றழைத்தார். பின்னர் அங்கிருந்த மூலிகையைப் பயன்படுத்தி தேரையரின் பிறவிக் குறையான பேச முடியாத தன்மையைப் போக்கி பேச்சுத்திறன் வரவழைத்தார். சித்த மருத்துவத்தையும் சித்து வேலைகளையும் போதித்து தேரையரைச் சிறந்த மருத்துவராகவும் சித்தராகவும் உயர்த்தினாராம்.
திருநெல்வேலி கடையம் அருகே உள்ள இந்த தோரணமலையில் அறுபத்து நான்கிற்கும் மேற்பட்ட சுனைகள் உள்ளன. இவையனைத்தும் வெவ்வேறு மருத்துவ குணமும் தனித் தனி சுவையும் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment