பாற்கடலில் ஐந்து தலை நாகமான ஆதிசேடன் மீது பள்ளி கொண்டிருந்தார் மகாவிஷ்ணு. திடீரென்று மகாவிஷ்ணுவின் உடல் பாரம் அதிகரித்ததால் சிரமப்பட்ட ஆதிசேடன், ‘‘ஸ்வாமி, நான் படுக்கையாக இருந்து தங்களைத் தாங்கிவருகிறேன். அப்படியிருக்க, இன்று மட்டும் தங்கள் பாரம் அதிகமாக இருக்கிறதே, என்ன காரணம்?’’ என்று வினவினார். அதற்கு மகாவிஷ்ணு, ‘‘முன்பொரு முறை சிவனின் ஆனந்தத் தாண்டவ நடனத்தைக் கண்டேன். அதை இன்று நினைத்துக்கொண்டேன். அந்த சந்தோஷத்தினால் என் உடல் பாரம் மிகுந்திருக்கலாம்” என்று பதிலளித்தார். இதைக் கேட்ட ஆதிசேடன், தனக்கும் ஆனந்தத் தாண்டவ நடனத்தைக் காண விருப்பம் என்றார். அதற்கு மகாவிஷ்ணு, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தால் உன் விருப்பம் கைகூடும் என்றார்.
ஆதிசேடன் கைலாயம் சென்று தவம் செய்ய, ஈஸ்வரன் பிரசன்னமானார். தன் விருப்பத்தை அவரிடம் ஆதிசேடன் கூற, ‘‘நீ பூலோகத்தில் வியாக்ரபுரம் எனப்படும் சிதம்பரம் செல்வாயாக. அங்கு உன்னைப்போல் வியாக்ர பாதன் என்பவன் (வியாக்ரம்=புலி) புலிக்கால், புலிக் கைகளுடன் கூடியவனாய், என் ஆனந்த தாண்டவத்தைக் காண விரும்பி, ஸ்ரீமூலநாதரைப் பூஜித்துவருகிறான். நீ அங்கு போய் இரு. தை மாதம், குரு வாரத்தில், பூச நட்சத்திர நாளில் நாம் அங்கு ஆனந்தத் தாண்டவம் ஆடுவோம். ஆனால் நீ உன்னுடைய ஆயிரம் தலைகளுடனும் பாம்பு உருவத்தோடும் போனால் எல்லோரும் உன்னைக் கண்டு அஞ்சுவார்கள். எனவே, அத்திரி மகரிஷி அனுசூயை தம்பதிக்குக் குழந்தையாவாய். உனக்குப் பதஞ்சலி என்ற பெயர் உண்டாகும். மனித சரீரமும், ஐந்து தலைப் பாம்பு உருவமும் கொண்டு அவனோடு இரு!’’ என்றார்.
பதஞ்சலி ஆன ஆதிசேடன்
பின்னர், பதஞ்சலி முனிவர் தனக்கு நடனக் காட்சி கொடுத்த இறைவனை சிவலிங்கமாக நிறுவி வழிபட்டுவந்தார். அனந்தனாகிய பதஞ்சலி வழிபட்ட சிவன் என்பதால் இந்தச் சிவன் அனந்தீஸ்வரர் என்றழைக்கப்பட்டார். இக்கோயிலில் தனிச்சன்னிதியில் பதஞ்சலி முனிவர் அனுக்கிரக மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.
இவர் யோக சூத்திரம், ஆத்ரேய சம்ஹிதை, வியாகரண மகாபாஷ்யம் போன்ற மூன்று அரிய சாஸ்திர நூல்களை எழுதியுள்ளார். மனதையும் உடலையும் மேம்படுத்துவது யோக சாஸ்திரம்; உடல் ஆரோக்கியத்துக்கு உதவும் மருத்துவ நூல் ஆத்திரேய சம்ஹிதை; பிழையற்ற சொற்களைப் பேசவும் எழுதவும் உதவும் நூல் வியாகரண மகாபாஷ்யம்.
இவர் நூல்களைக் கற்க ஆயிரம் மாணவர்கள் இவரைத் தேடி வந்தனர். பதஞ்சலி முனிவர் யோசித்து ஒரே சமயத்தில் ஆயிரம் மாணவர்களுக்குத் தன் ஆயிரம் தலைகள் கொண்ட உருவை எடுத்துப் பாடம் போதிக்க முடிவு செய்தார். மாணவர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு திரையை நிறுவினார். இறைவனைத் தவிர அந்த உருவத்தை யாரும் பார்க்க முடியாது. ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடனின் கண்கள் ஒளியும் தீட்சண்யமும் மிகுந்தவை; மேலும் ஆயிரம் நாவுகளிலிருந்தும் தீ சீற்றத்துடன் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
இதனால் பதஞ்சலி முனிவர் மாணவர்களுக்கு இரண்டு விதிகளைக் கூறி அவர்களை எச்சரித்தார். தான், பாடம் போதிக்கும்போது ஒருவரும் அந்த இடத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது. அவ்வாறு சென்றால், செல்பவர் பிரம்ம ராட்சசனாக மாறி விடுவார்; அதே மாதிரி, திரையை விலக்கி எவரும் தன்னைப் பார்க்க முயலக் கூடாது. அப்படிப் பார்த்தால் தீயினால் எதிரில் இருப்பவர்கள் எரிந்து சாம்பலாகிவிடுவார்கள். இவைதாம் அவ்விரு விதிகள்.
சாம்பலாகிப் போன சீடர்கள்
பின்னர் பாடம் தொடங்கியது. ஒரு சீடனுக்கு ஆர்வம். திரைக்கு அப்பால் உள்ள குரு ஆயிரம் பேருக்கும் எப்படி ஈடு கொடுத்துப் பாடம் நடத்துகிறார் என்று அறியும் ஆர்வக் கோளாறால், திரையை விலக்கிப் பார்த்தான். அந்தக் கணத்தில் எதிரில் இருந்த மாணவர்கள் அனைவரும் ஆதிசேடன் கக்கிய தீயின் உஷ்ணம் பட்டு எரிந்து சாம்பலாகிப் போனார்கள். பதறிப் போன பதஞ்சலி, அரும்பாடுபட்டுத் தான் போதித்த கல்வி வீணாகிப் போயிற்றே என்கிற வேதனையோடு மாணவர்கள் உடலை எண்ணிப் பார்த்தார்.
999 பேர்தான் எரிந்து கிடந்தனர். ஒருவன் அவர் விதியை மீறி வெளியே போயிருந்தான். அவன் திரும்பி வந்ததும் பதஞ்சலி மகிழ்ந்து மிச்சம் மீதிப் பாடமான வியாகரண மகாபாஷ்யத்தையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், அவர் விதித்த விதியை மீறியதால் அவன் பிரம்ம ராட்சஸ் ஆகிவிட்டான். இந்த நிலை மாற வேண்டுமானால், அவன் கற்ற எல்லாப் பாடங்களையும் வேறு ஓர் மாணவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் பதஞ்சலி. இப்படி அவரிடம் பாடம் கற்றவர் கவுடபாதர் என்ற முனிவர். இவர் மந்திர சர்மா என்பவருக்குத் தான் கற்ற அனைத்தையும் கற்றுக் கொடுத்துப் பாவ விமோசனம் பெற்றார்.
999 பேர்தான் எரிந்து கிடந்தனர். ஒருவன் அவர் விதியை மீறி வெளியே போயிருந்தான். அவன் திரும்பி வந்ததும் பதஞ்சலி மகிழ்ந்து மிச்சம் மீதிப் பாடமான வியாகரண மகாபாஷ்யத்தையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். ஆனால், அவர் விதித்த விதியை மீறியதால் அவன் பிரம்ம ராட்சஸ் ஆகிவிட்டான். இந்த நிலை மாற வேண்டுமானால், அவன் கற்ற எல்லாப் பாடங்களையும் வேறு ஓர் மாணவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் பதஞ்சலி. இப்படி அவரிடம் பாடம் கற்றவர் கவுடபாதர் என்ற முனிவர். இவர் மந்திர சர்மா என்பவருக்குத் தான் கற்ற அனைத்தையும் கற்றுக் கொடுத்துப் பாவ விமோசனம் பெற்றார்.
பதஞ்சலி தீர்த்தம்
மூலவருக்கு அபிஷேகம் செய்ய கோயிலின் முன்புறம் தீர்த்தக் குளம் ஒன்றைப் பதஞ்சலி உருவாக்கினார். இதற்குப் பதஞ்சலி தீர்த்தம் என்று பெயர். பதஞ்சலி முனிவர் அருளிய யோகக் கலையைக் கற்கவும் அவரிடம் ஆசி பெறவும் பலர் இக்கோயிலுக்குப் பெரும்பாலும் பகலில் வருகை தந்ததால், இக்கோயிலின் உச்சிக்கால பூஜை மிகவும் புகழ் பெற்றது. கோயிலின் உள்ளே விநாயகரும் ராஜா சண்டிகேஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். இரண்டாம் பிராகாரத்தில் இடது புறம், ஐந்து தலை நாகம் குடைபிடிப்பது போன்ற மனித உரு, பாம்பு உடலுடன் தனிச் சந்நிதியில் காட்சியளிக்கிறார் பதஞ்சலி முனிவர். இவரின் நட்சத்திரமான பூசம் அன்று இங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழித் திருவாதிரை நாளன்று ஸ்ரீநடராஜருடன் இவரும் புறப்பாடு ஆகிறார்.
இவருக்கு அடுத்ததாக சூரிய, சந்திரர் சந்நிதி உள்ளது. இருவரும் அருகருகே உள்ளதால், இத்தலத்தை நித்திய அமாவாசைத் தலமாகக் கருதி பக்தர்கள் வழிபடுகிறார்கள். இரண்டாவது, மூன்றாவது பிராகாரங்களை விட, சற்று உயரமாக அமைக்கப்பட்டுள்ள முதல் பிராகாரத்தில் கன்னிமூலை கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், கஜலட்சுமி, வல்லப விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். திருமணத் தடை அகல, அஷ்டபுஜ துர்க்கைக்கு மஞ்சள் புடவை சாத்தி வழிபடுகின்றனர்.
பிரகாரத்தோடு இணைந்த அர்த்த மண்டபத்தில் தென்முகம் நோக்கி செளந்தரநாயகி சந்நிதியும், எதிரில் மேற்கு நோக்கி ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன. மகாமண்டபத்தில் தென் முகம் நோக்கி சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் அருள்பாலிக்கிறார். அவர் அருகில் பதஞ்சலி முனிவர் உள்ளார். மூலவர் ஸ்ரீஅனந்தீஸ்வரர் சிவலிங்க வடிவில் கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேடி வரும் பக்தர்களுக்குக் குறையாமல் அருள்பாலிக்கும் திருக்கோயில் இது.
No comments:
Post a Comment