Tuesday, 6 March 2018

ஸ்பெஷல் இட்லி ரெசிப்பி


வெள்ளை வெளேரென வேகவைத்த அரிசி கேக்... மல்லிகைப்பூவோடு ஒப்பிட்டு மகிழ்வோமே... ஆம், அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு இட்லிதான் இன்று உலகம் ஒப்புக்கொள்கிறது. 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஓர் உணவு பதார்த்தம் இது. இன்று  வெளிநாட்டிலிருந்து நம்மூருக்கு வரும் விருந்தினர்கள் விரும்பிச் சுவைக்கும் உணவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி, சேமியா இட்லி, செட்டிநாடு இட்லி, காஞ்சிபுரம் இட்லி, சாம்பார் இட்லி, குஷ்பு இட்லி என இட்லியிலேயே எத்தனை வகைகளை நாம் ருசித்திருக்கிறோம்? இவை அனைத்தையும் தாண்டி, புதிய வகை இட்லிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். இட்லி சாப்பிடுவோம்... இட்லி போல வாழ்வோம்!
கார்ன் இட்லி

தேவையானவை:

 சோள முத்துகள் – 2 கப்
 கடலை மாவு – அரை கப்
 ஃப்ரூட் சால்ட் – ஒரு டேபிள்ஸ்பூன்
 கடுகு – ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சோள முத்துகளை மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விடாமல் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். அதனுடன் கடலை மாவு, தயிர், உப்பு சேர்த்துக் கலந்து (தேவையானால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்), நான்கு மணி நேரம் ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து மாவுடன் கலக்கவும். பிறகு ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கலக்கவும். இட்லித் தட்டு அல்லது விரும்பிய வடிவிலான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

கோகனட் -  பெசரட் இட்லி

தேவையானவை:

 பச்சைப் பயறு -  ஒரு கப்
 அரிசி – அரை கப்
 கடுகு – கால் டீஸ்பூன்
 எண்ணெய் - 2  டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

அரைக்க:

 தேங்காய்த் துருவல் – கால் கப்
 பச்சை மிளகாய் – 6
 தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு
 பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
செய்முறை:

பச்சைப் பயறை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசி, பச்சைப் பயறைத் தனித்தனியாக, கொரகொரப்பாக அரைத்து ஒன்றுசேர்க்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைத்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். கடுகைச் சிறிதளவு எண்ணெயில் தாளித்து மாவுடன் கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இஞ்சி சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.

பீட்சா இட்லி மஃப்பின்ஸ்

தேவையானவை:

 இட்லி அரிசி ரவை – ஒரு கப்
 உளுத்தம்பருப்பு – அரை கப்
 குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 ஆலிவ் - ஒன்று (நறுக்கவும்)
 சோள முத்துகள் – சிறிதளவு
 பீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்
 ஆரிகானோ - ஒரு டீஸ்பூன்
 சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி ரவையுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து மாவாக அரைத்து எடுக்கவும். பிறகு, மாவை எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். மாவுடன் வெங்காயம், குடமிளகாய், ஆலிவ், சோள முத்துகள், பீட்சா சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, ஆரிகானோ சேர்த்துக் கலக்கவும் (சிறிதளவு வெங்காயம், குடமிளகாய், ஆரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸை தனியே எடுத்து வைக்கவும்). மஃப்பின் மோல்டில் மாவுக் கலவையை ஊற்றி, அதன்மீது எடுத்துவைத்த சிறிதளவு வெங்காயம், குடமிளகாய், ஆரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும். இதை, குக்கரில் வெயிட் போடாமல் முதல் ஐந்து நிமிடங்கள் அதிக தீயிலும், அடுத்த ஐந்து நிமிடங்கள் சிறு தீயிலும் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மோல்டில் இருந்து வெளியே எடுக்கவும்.

தொன்னை இட்லி

தேவையானவை:

 சீரகம், மிளகு – ஒரு டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

இட்லி மாவு அரைக்க:

 இட்லி அரிசி - 3 கப்
 உளுத்தம்பருப்பு – ஒரு கப்
 வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
 ஜவ்வரிசி – ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:


 கடுகு – அரை டீஸ்பூன்
 கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
 தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
 முந்திரி – தேவையான அளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 நல்லெண்ணெய், நெய் – 4 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

செய்முறை:

இட்லி மாவு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து, பிறகு உப்பு சேர்த்து இட்லி மாவுப் பதத்துக்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும். மிளகுடன் சீரகத்தைச் சேர்த்துப் பொடிக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை வாணலியில் சேர்த்துத் தாளிக்கவும் மிளகு - சீரகப்பொடி சேர்த்துப் புரட்டி எடுக்கவும். 

மாவுடன் தாளித்த பொருள்கள் சேர்த்துக் கலந்து, எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். வாழை இலையில் தொன்னை செய்து மாவை முக்கால் பாகம் நிரப்பி 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். `ஹாட் பேக்’கில் வைக்கவும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்க வேண்டும்.

இதற்கு சட்னி, சாம்பார், இட்லி மிளகாய்ப்பொடி தொட்டுக்கொள்ளலாம்.

வெஜிடபிள் இட்லி

தேவையானவை:

 இட்லி மாவு – ஒரு கப்
 கேரட் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 ஸ்வீட் கார்ன் – ஒரு டேபிள்ஸ்பூன்
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 குடமிளகாய் – 2 (குறுக்கே இரண்டாகக் கிண்ணம் போல நறுக்கி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும்)
 கடுகு – ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 முந்திரி – கைப்பிடியளவு
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயைவிட்டுக் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் கேரட், வெங்காயம், ஸ்வீட் கார்ன், உப்பு சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். மாவுடன் காய்கறிக் கலவை, முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். குடமிளகாய் கிண்ணங்களில் தோசை மாவுக் கலவையை ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

மங்களூர் இட்லி

தேவையானவை:

 இட்லி அரிசி – ஒன்றரை கப்
 பச்சரிசி – ஒரு கப்
 முழு உளுத்தம்பருப்பு – ஒரு கப்
 வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
 சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
 வறுத்த முந்திரி – 2 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
 பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
 தோல் சீவி, துருவிய இஞ்சி  – 2 டீஸ்பூன்
 கறிவேப்பிலை – சிறிதளவு
 சுக்குத்தூள் – அரை டீஸ்பூன்
 நல்லெண்ணெய் – கால் டீஸ்பூன்
 நெய் – கால் டீஸ்பூன்
 தயிர் – அரை கப்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசியுடன் பச்சரிசி சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசி, பருப்பைத் தனித்தனியாக அரைத்து ஒன்றாகக் கலக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்கவிடவும். புளித்த மாவுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், சுக்குத்தூள், முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு நல்லெண்ணெய், நெய், தயிர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மாவை டம்ளரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இட்லி மிளகாய்ப்பொடியுடன் பரிமாறவும்.

காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை:

 பச்சரிசி – 3 கப்
 கறுப்பு உளுத்தம்பருப்பு – 2 கப்
 மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா 2 டீஸ்பூன்
 சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்
 தயிர் – ஒரு கப்
 நெய் - 4 டீஸ்பூன்
 சமையல் சோடா – ஒரு டீஸ்பூன்
 நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்பைத் தனித்தனியாக ஊறவைத்துச் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்த அரிசியுடன் அரைத்த பருப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், சுக்குத்தூள், உப்பு, நெய், நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு சமையல் சோடா, தயிர் சேர்த்துக் கலக்கவும். மாவை இட்லித் தட்டு அல்லது டம்ளரில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இட்லி மிளகாய்ப்பொடியுடன் பரிமாறவும்.

சாக்கோ இட்லி

தேவையானவை:

 பார்லே பிஸ்கட் – ஒரு பாக்கெட்
 மில்க் பிஸ்கட் – ஒரு பாக்கெட்
 காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்
 வெண்ணெய் (அ) நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
 கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன்
 ஜவ்வரிசி – 3 டீஸ்பூன்
 ஃப்ரூட் சால்ட் -  ஒரு டீஸ்பூன்

செய்முறை:

பிஸ்கட்டுகளை மிக்ஸியில் நைஸாக பொடித்து எடுக்கவும். அதனுடன் பால், வெண்ணெய், கோகோ பவுடர், ஜவ்வரிசி சேர்த்துக் கலக்கவும்.
பிறகு ஃப்ரூட் சால்ட் சேர்த்துக் கலக்கவும். பின்னர் மினி இட்லித் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை ஊற்றி 10 - 12 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். வெந்துவிட்டதா என்று `செக்’ செய்து எடுக்கவும். சாக்லேட் சாஸுடன் பரிமாறவும்.

மார்பிள் ஸ்பினச் இட்லி

தேவையானவை:

 ரவை – இரண்டரை கப்
 தயிர் – முக்கால் கப்
 கடுகு – ஒரு டீஸ்பூன்
 அரைத்த கீரை விழுது – 2 டீஸ்பூன்
 பேக்கிங் சோடா – ஒரு டீஸ்பூன்
 எண்ணெய் – 2 டீஸ்பூன்
 தண்ணீர், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளிக்கவும். அதனுடன் ரவை சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும். ரவையுடன் தயிர், உப்பு, பேக்கிங் சோடா, தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைக்கவும். 

பிறகு, கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். இட்லித் தட்டு அல்லது சாதாரண தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி, மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். 

க்யூப் வடிவில் வெட்டி புதினா - கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment