Thursday, 8 March 2018

ஸ்வீட் & காரம் - சிறுதானிய ஸ்பெஷல் !


``பாரம்பர்ய மணத்தோடு ஆரோக்கியம் காத்து ஆயுளை நீட்டிக்கும் சிறப்புமிக்கவை சிறுதானியப் பலகாரங்கள். இந்தத் தீபாவளிக்குப் புதுமையாக என்ன செய்யலாம் என யோசிப்பவர்களுக்கு இந்த ரெசிப்பிகள் மகிழ்ச்சியை அளிக்கும்’’

குதிரைவாலி இனிப்புச் சீடை

தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், பொட்டுக்கடலை - கால் கப், ஏலக்காய் - 6, தேங்காய் - அரை மூடி (துருவவும்), எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலி அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடியவிட்டு லேசாக ஈரம் இருக்கும்போது, மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். ஏலக்காயை மிக்ஸியில் போட்டுத் தூளாக அரைத்து எடுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் மாவாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். இதனுடன் அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு, பொட்டுக்கடலை மாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த மாவுக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, உருண்டைகளைப் போட்டு, அடுப்பை சிறுதீயில் வைத்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கரகரப்பான ஸ்வீட் சீடை ரெடி!

வரகரிசித் தட்டை

தேவையானவை: வரகரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப் (ஊறவைக்கவும்), தேங்காய் - அரை மூடி (துருவவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சிறிய பச்சை மிளகாய் - 4, பூண்டு - 5 பல், தண்ணீர் - கால் டம்ளர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வரகரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் உப்பு, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து, தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடியாக அரைத்துச் சலிக்கவும். வரகரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாகப் பிசையவும். மாவைச் சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துத் தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு, காய்ந்தவுடன் தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தினை - வாழைப்பழ அப்பம்

தேவையானவை: தினை மாவு, பொடித்த வெல்லம் - தலா அரை கப், அரிசி மாவு, கோதுமை மாவு, அத்திப்பொடி - தலா கால் கப், ஜாதிக்காய்த்தூள், ஏலக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், பழுத்த வாழைப்பழம் - ஒன்று (மசிக்கவும்), நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - கால் கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, காய்ச்சி ஆறவைத்த பால், எண்ணெய் -  தேவையான அளவு.
செய்முறை: தினை மாவுடன் வெல்லம், அரிசி மாவு, கோதுமை மாவு, அத்திப்பொடி, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், சமையல் சோடா, வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு பால் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். பணியாரக்கல்லில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கரைத்த மாவைக் குழிக்கரண்டியால் எடுத்து ஊற்றி, மூடிவைத்து இருபுறமும் நிறம் மாறாமல் வேகவைத்து எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: அத்திப்பழங்களைக் காயவைத்துப் பொடித்தால் அத்திப்பொடி தயார்.

ராகி - கொள்ளு நெய் உருண்டை

தேவையானவை:  ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப், நாட்டுச்சர்க்கரை - ஒரு கப், கொள்ளு மாவு - கால் கப், நெய் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: வெறும் வாணலியில் பொட்டுக்கடலையை வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து எடுக்கவும். ராகி மாவுடன் கொள்ளு மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, மாவுக் கலவையைச் சேர்த்து வறுத்து இறக்கவும். அதனுடன் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.
இதை சில நாள்கள் வரை வைத்திருந்தும் சாப்பிடலாம்.

ராகி முள்ளு தேன்குழல்

 தேவையானவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 2 கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், வெள்ளை எள் அல்லது சீரகம், மிளகாய்த்தூள், நெய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் ராகி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெள்ளை எள் அல்லது சீரகம், மிளகாய்த்தூள், நெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர்விட்டு, முறுக்கு மாவுப் பதத்துக்குப் பிசையவும். முறுக்கு குழலில் முள்ளு தேன்குழல் அச்சைப்போட்டு, பிசைந்த மாவு உருண்டையைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறுதீயில் வைத்து,  முறுக்கு பிழிந்து வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

குறிப்பு: ராகி மாவு கறுப்பாக இருப்பதால், சரியான பதம் பார்த்து எடுக்கவும். சிறிது நேரம் வெந்தாலே போதுமானது. பொட்டுக்கடலை மாவுக்குப் பதிலாக அரிசி மாவு சேர்த்தும் செய்யலாம்.

தினை - நட்ஸ் லட்டு

தேவையானவை: தினை மாவு - ஒரு கப், நெய் - அரை கப், நறுக்கிய முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா கலவை - அரை கப், நாட்டுச்சர்க்கரை - முக்கால் கப் (பொடிக்கவும்).
செய்முறை: வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை, பாதாம் சேர்த்து லேசாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் தினை மாவைச் சேர்த்து நன்கு வறுத்து இறக்கவும். அதனுடன் நாட்டுச்சர்க்கரை, நட்ஸ் கலவை சேர்த்துக் கைகளால் உதிர்த்து லேசாகப் பிசிறவும். பிறகு, சூடான நெய்விட்டுக் கலந்து, கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கம்பு - கோதுமை கார போண்டா

தேவையானவை: கம்பு மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், பச்சை மிளகாய் 2 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  கோதுமை மாவுடன் கம்பு மாவு, பச்சை மிளகாய், வெங்காயம், சமையல் சோடா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு போண்டா மாவு பதத்துக்குக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

சோளம் - கோதுமை கார பிஸ்கட்

தேவையானவை: சோள மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், சிறிய பச்சை மிளகாய் – 5, பூண்டு - 5 பல், வெண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம், வெள்ளை எள் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயுடன் பூண்டு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து வடிகட்டவும். இதனுடன் சோள மாவு, கோதுமை மாவு, உப்பு, வெண்ணெய், சீரகம், வெள்ளை எள் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை நனைத்துப் பிழிந்த ஈரத்துணியைக் கொண்டு ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி, விரும்பிய வடிவில் துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு செய்து வைத்த துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

கம்பு - வரகு காரச் சீடை

தேவையானவை:  கம்பு மாவு, வரகு மாவு - தலா ஒரு கப், மிளகாய்த்தூள், வெள்ளை எள் - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கம்பு மாவுடன் வரகு மாவு, வெள்ளை எள், மிளகாய்த்தூள், சீரகம், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: காரம் அதிகம் வேண்டு மானால் சீடைகளின்மீது சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

தினை -  இட்லி அரிசித் தேன்குழல்

தேவையானவை: தினை அரிசி, இட்லி அரிசி - தலா ஒரு கப், பொட்டுக்கடலை - கால் கப், லேசாக வறுத்த பாசிப்பருப்பு -  கால் கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெண்ணெய், வெள்ளை எள் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசியுடன் இட்லி அரிசி, பொட்டுக்கடலை, உளுத்தம்பருப்பு, லேசாக வறுத்தப் பாசிப்பருப்பு சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் வெள்ளை எள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கெட்டியாக முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும். முறுக்குக் குழலில் தேன்குழல் அச்சு தட்டைப் போடவும். பிறகு, மாவை முறுக்குக் குழலில் நிரப்பவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து முறுக்குகளைப் பிழிந்து பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

பச்சைப்பயறு - கம்புப் பக்கோடா

தேவையானவை:  வறுத்த பச்சைப்பயறு, கம்பு மாவு, அரிசி மாவு - தலா அரை கப், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறை வேகவைத்து மசிக்கவும். அத்துடன் கம்பு மாவு, அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு, வெங்காயம், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, வேர்க் கடலை, கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வேகவைத்து எடுக்கவும்.

சோள மாவு இனிப்பு பிஸ்கட்

தேவையானவை: சோள மாவு - ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், நாட்டுச்சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய் - 3, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:  நாட்டுச்சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். சோள மாவுடன் கோதுமை மாவு, அரைத்த நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு, டைமண்ட் வடிவில் துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, நறுக்கிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமான வேகவைத்து எடுக்கவும்.

ராகி முறுக்கு

தேவையானவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு) - 2 கப், அரிசி மாவு - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம், நெய் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகம், நெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைய வும். முறுக்குக் குழலில் மூன்று கண் உள்ள அச்சைப் போடவும். பிறகு மாவுக் கலவையை நிரப்பவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து முறுக்குகளைப் பிழிந்து, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு: ராகி மாவு கறுப்பாக இருப்பதால், சரியான பதம் பார்த்து எடுக்கவும்.

கம்பு - கீரை பக்கோடா

தேவையானவை: முருங்கைக்கீரை அல்லது அரைக்கீரை (நறுக்கியது) - அரை கப், கடலை மாவு, கம்பு மாவு – தலா அரை கப், பச்சரிசி மாவு - 2  டீஸ்பூன், பூண்டு - 4 பல் (தட்டவும்), பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), சமையல் சோடா - ஒரு சிட்டிகை, நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையுடன் கடலை மாவு, கம்பு மாவு, பச்சரிசி மாவு, பூண்டு, பெருங்காயத்தூள், வெங்காயம், சமையல் சோடா, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

சோளம் - பச்சைப்பயறு பணியாரம்

தேவையானவை: சோள மாவு - ஒரு கப், உளுந்து மாவு - அரை கப், பச்சைப்பயறு - அரை கப் (வறுத்து வேகவைக்கவும்), வெல்லம் - முக்கால் கப் (பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: சோள மாவுடன் உளுந்து மாவு, பச்சைப்பயறு சேர்த்துக் கலக்கவும். வெல்லத்துடன் மூழ்கும்வரை தண்ணீர் சேர்த்து, ஒரு கொதிவிட்டு வடிகட்டவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், மாவுக் கலவைச் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இதை அப்படியே இருபது நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, பணியாரக்கல்லில் எண்ணெய்விட்டு, இந்த மாவை ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்.

தேன் - தினை லட்டு

தேவையானவை: தினை அரிசி, ரவை - தலா ஒரு கப், நெய் - அரை கப், நாட்டுச்சர்க்கரை - முக்கால் கப், பாதாம், முந்திரி - தலா 5 (ஒன்றிரண்டாக உடைக்கவும்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், தேன் - அரை கப்.
செய்முறை: வெறும் வாணலியில் தினை அரிசியைப் போட்டு வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். பிறகு, ரவையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி, பாதாம் சேர்த்து வறுத்து எடுக்கவும்.  ஆறவைத்த தினை அரிசியுடன், ரவை, ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் மாவாக அரைத்து எடுக்கவும். இத்துடன் முந்திரி, பாதாம் சேர்க்கவும். பிறகு, நெய்யைச் சூடாக்கி சேர்த்துக் கலந்து, தேன் சேர்த்துப் பிசையவும். இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கிப் பரிமாறவும்.

கேழ்வரகு - கம்புப் புட்டு

தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப்,  கம்பு மாவு, தேங்காய்த் துருவல் - தலா அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், சர்க்கரை – தேவையான அளவு, தண்ணீர் - அரை டம்ளர்.
செய்முறை: கேழ்வரகு மாவுடன் கம்பு மாவுடன், உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து, கட்டிகள் இல்லாமல் பிசிறி உதிர்க்கவும். இந்தக் கலவையை 20 நிமிடங்கள் நனைத்த ஈரத்துணியால் மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதை முதல் நாள் இரவே செய்து வைக்கலாம். மறுநாள் காலை மீண்டும் அந்த மாவுடன் உப்பு கலந்த தண்ணீரைத் தெளித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். மேலே நெய்விட்டுப் பரிமாறவும்.
குறிப்பு: உடனே சாப்பிட வேண்டும் என்றால் ஒருமுறை ஆவியில் வேகவைத்தால் போதுமானது. இருமுறை வேகவைப்பதால், சுவை அதிகரிக்கும்; புட்டு மிகவும் மென்மையாக இருக்கும்.

கேழ்வரகு - அத்தி சத்து உருண்டை

தேவையானவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு) -  ஒரு கப், நெய், பொட்டுக்கடலை மாவு -  தலா அரை கப், அத்திப்பொடி - கால் கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய் - 3 (தூளாக்கவும்),  நறுக்கிய முந்திரி, திராட்சை, பிஸ்தா - தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் போட்டுப் பொடியாக்கவும். வாணலியில் நெய்விட்டு பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா சேர்த்து வறுக்கவும். இதனுடன் ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு, அத்திப்பொடி, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, அடுப்பைச் சிறுதீயில் வைத்து நன்கு வறுத்து இறக்கவும். கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகள் பிடிக்கவும். 20 நிமிடங்கள் கழித்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

குறிப்பு: சத்துமிக்க இந்த உருண்டையைச் சில நாள்கள் வைத்திருந்தும் சாப்பிடலாம்.  அத்திப்பழங்களைக் காயவைத்துப் பொடித்தால், அத்திப்பொடி தயார்.

தினை மசாலா வடை

தேவையானவை: கடலைப் பருப்பு, தினை அரிசி -  தலா அரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - ஒன்று, பூண்டு - 5 பல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, கிராம்பு - 2, பட்டை - சிறிய துண்டு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசியுடன் கடலைப்பருப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பூண்டுடன் கரம் மசாலாத்தூள், பச்சை மிளகாய், உப்பு, கிராம்பு, பட்டை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைக்கவும்.  அதனுடன் கடலைப்பருப்பு, தினை அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து, வடை மாவு பதத்துக்குக் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.  மாவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

கம்பு ஸ்பைஸி கட்லெட்

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், புதினா இலை - சிறிதளவு, வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும்), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி புதினா இலை, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் தக்காளி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். வதக்கிய கலவையைக் கம்பு மாவுடன் சேர்த்துக் கலக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை நான்கு உருண்டைகளாக்கி, சிலிண்டர் வடிவில் உருட்டி ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைக்கவும். வெந்தவுடன் எடுத்து உடையாமல் வட்டமாக நறுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய்விட்டு வேகவைத்த துண்டுகளை அடுக்கி, டோஸ்ட் செய்து எடுக்கவும்.

சோளம் - தினை சோமாஸ்

தேவையானவை: சோள மாவு - ஒன்றரை கப், கோதுமை மாவு, தினை அரிசி மாவு - தலா ஒரு கப், எண்ணெய் (சோமாஸ் மாவு பிசைய) - 3 டீஸ்பூன், பாசிப்பருப்பு - அரை கப், நாட்டுச்சர்க்கரை - முக்கால் கப், தேங்காய்த் துருவல் - அரை கப், அத்திப்பொடி - 2 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் (பொரிக்க) - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை நன்கு வேகவைத்து தண்ணீர் இல்லாமல் வடியவிடவும். நாட்டுச்சர்க்கரையை மிக்ஸியில் தூளாக்கவும். தினை அரிசி மாவு, பாசிப்பருப்பு, நாட்டுச்சர்க்கரை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதுவே பூரணம். பூரணத்தைச் சிறிய உருண்டைகளாக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். இதனுடன் சோள மாவு, கோதுமை மாவு, அத்திப்பொடி, 3 டீஸ்பூன் எண்ணெய்  சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். 20 நிமிடங்கள் அப்படியே மூடிவைக்கவும். பின்னர்  மாவைச் சிறிய உருண்டைகளாக்கிப் பூரி போல திரட்டவும். ஒவ்வொரு பூரியின் நடுவிலும் ஒரு பூரண உருண்டையை வைத்து மூடி, ஓரங்களை ஒட்டி சோமாஸ் வீல் அச்சால் ஓரத்தில் ஓட்டி எடுத்தால், சோமாஸ் வடிவம் வந்துவிடும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, சோமாஸ்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: அத்திப்பழங்களைக் காயவைத்துப் பொடித்தால், அத்திப்பொடி தயார்.

சாமை - ஜவ்வரிசி கோலா

தேவையானவை: பச்சரிசி மாவு, ஜவ்வரிசி - தலா ஒரு கப், சாமை அரிசி - அரை கப், கறுப்பு எள், வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை வடியவிடவும். வெறும் வாணலியில் சாமை அரிசியை வறுத்து, மாவாக அரைத்து எடுக்கவும். பச்சரிசி மாவுடன் சாமை மாவு, எள், ஜவ்வரிசி, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, நீளமாக உருட்டி வளையம் போல செய்து, இரு முனைகளையும் ஒட்டவும். இதுவே கோலா.  வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, கோலாக்களைப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: வளையம்போல செய்துவைத்த கோலா மீதமானால், ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாளும் பொரித்துச் சாப்பிடலாம்.

வரகு - சுக்கு அதிரசம்

தேவையானவை: வரகரிசி, பாகு வெல்லம் (துருவியது) - தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சுக்குத்தூள் - 2 டீஸ்பூன், தண்ணீர் - கால் டம்ளர், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:  வரகரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து, காய்ந்த துணியில் பரப்பி 10 நிமிடங்கள் ஆறவிடவும். லேசாக ஈரம் இருக்கும்போது, மிக்ஸியில் மாவாக அரைத்து எடுக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் சேர்த்துக் கலக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒருகொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். வெல்லக் கரைசலை அகலமான பாத்திரத்தில் ஊற்றி, மீண்டும் கொதிக்கவிட்டு உருட்டு பதத்தில் பாகு வரும்வரை காய்ச்சவும். இதனுடன் வரகு மாவு சேர்த்துக் கிளறவும். மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டி, வாழை இலையில் தட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், அடுப்பைச் சிறுதீயில் வைத்து, தட்டிய அதிரசங்களைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக வேகவிடவும். பிறகு, ஒரு கரண்டியால் அதிரசத்தை எடுத்து மேலே மற்றொரு கரண்டி வைத்து அழுத்தி அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்து எடுக்கவும். சுத்தமான பாத்திரத்தில் அடுக்கிவைக்கவும்.

ராகி - பேரீச்சம்பழக் குழிப்பணியாரம்

தேவையானவை: ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், வாழைப்பழம் - ஒன்று (தோலுரித்து மசிக்கவும்), ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, பேரீச்சம் பழம் – 5 (பொடியாக நறுக்கவும்), பாதாம் – 5 (நறுக்கவும்), நெய் - கால் கப்.
செய்முறை: வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி, நன்கு கரைத்து வடிகட்டவும். அதனுடன் வாழைப்பழம், பேரீச்சம், ராகி மாவு, ஏலக்காய்த்தூள், சமையல் சோடா,  பாதாம் சேர்த்து சற்றுக் கெட்டியாகக் கரைக்கவும். பணியாரக்கல்லில் நெய்விட்டு, மாவை ஊற்றி, அடுப்பைச் சிறுதீயில் வைத்து, மூடிபோட்டு வேகவிடவும். பிறகு, திருப்பிப்போட்டுச் சிறிதளவு நெய்விட்டு வேகவைத்து எடுக்கவும்.

வரகு ரிப்பன் பக்கோடா

தேவையானவை: வரகரிசி - 2 கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு, வெண்ணெய் - தலா அரை கப், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, பூண்டு – 8 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டுடன் காய்ந்த மிளகாய், தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும். வெறும் வாணலியில் வரகரிசியை வறுத்து மாவாக அரைத்து எடுக்கவும். வரகரிசி மாவுடன் உளுந்து மாவு, எள், உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், பூண்டு - மிளகாய் சாறு சேர்த்து, முறுக்கு மாவு பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். முறுக்குக்குழாயில் ரிப்பன் அச்சுத்தட்டு வைத்து அதில் மாவைப் போடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், மாவை ரிப்பன்களாகப் பிழிந்து இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.

சாமை அப்பம்

தேவையானவை: சாமை அரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை - தோல் சீவிய இஞ்சி - கால் இன்ச் (பொடியாக நறுக்கவும்), கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சாமை அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். உளுத்தம்பருப்புடன் வெந்தயம் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அரிசியுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு மாவாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி இறக்கி, மாவுடன் கலக்கவும். பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணெய்விட்டு மாவை ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து 
எடுக்கவும்.

சோளம் - பிரெட் கட்லெட்

தேவையானவை: வேகவைத்து உதிர்த்த சோளம் – அரை கப், உருளைக்கிழங்கு  - 2, பிரெட் ஸ்லைஸ் - 4, பிரெட் க்ரம்ஸ் - அரை கப், சோள மாவு - அரை கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் -  தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு உப்பு, கரம் மசாலா, தண்ணீர் சேர்த்துத் தளர்வாகக் கரைக்கவும். உருளைக்கிழங்கைத்  வேகவைத்து, தோலுரித்து அதனுடன் பிரெட் ஸ்லைஸ்களைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பிரெட் கலந்த உருளைக்கிழங்கு, வேகவைத்த சோளம், சிறிதளவு உப்பு சேர்த்து, நன்கு வதக்கி இறக்கவும். பிறகு, இந்தக் கலவையைச் சிறிய உருண்டைகளாக்கி விரும்பிய வடிவில் தட்டினால் கட்லெட்டுகள் தயார். கட்லெட்டுகளைச் சோள மாவில் முக்கி எடுத்து பிரெட் க்ரம்ஸில் இருபுறமும் புரட்டி எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு எண்ணெய்விட்டு, கட்லெட்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: பிரெட் தூள் (க்ரம்ஸ்) செய்ய, பிரெட் துண்டுகளைக் காற்றுப்புகுமாறு காய வைக்கவும். கட்லெட் செய்யும் நேரத்தில் மிக்ஸியில் அரைத்து எடுத்தால் கிரிஸ்பியாக இருக்கும்.

No comments:

Post a Comment