Thursday, 8 March 2018

30வகை பஞ்சபூத ரெசிப்பி !


நீ
ர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களால் நிறைந்தது இவ்வுலகம். நாம் உண்ணும் உணவிலும், பஞ்ச பூதங்களோடு தொடர்புடைய உணவு வகைகளைச் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடுவதுடன் ஒரே மாதிரியான சமையலையே திரும்பத் திரும்ப செய்வதில் இருந்து சற்று வித்தியாசம் கிடைக்கும்தானே! 


கசகசா பாயசம் 

தேவையானவை: கசகசா – 3 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு கப், முந்திரி - 6 (ஊறவைக்கவும்), சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 6, திராட்சை - 6, நெய் - ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – சிறிதளவு, பால் - தேவையான அளவு (காய்ச்சி ஆறவைத்தது).
செய்முறை: கசகசாவை வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறிய பின் தேங்காய்த் துருவல், ஊறவைத்த முந்திரி சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து, பிறகு பால் சேர்த்துக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். திராட்சை, குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி, சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

கோதுமை பாயசம்

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், பச்சரிசி - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், பால் - 3 கப், நெய் - தேவையான அளவு, கேரட் துருவல் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 8.
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு கோதுமை ரவை, அரிசி, பருப்பை தனித்தனியாக  சிவக்க வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். முந்திரி, திராட்சை, கேரட் துருவலை சிறிதளவு நெய்யில் தனித்தனியாக வறுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் ஒன்றரை கப் பால், 4 கப் தண்ணீர், அரிசி, பருப்பு, ரவை சேர்த்து வேகவிடவும். இதனுடன் கேரட் துருவல், மீதமுள்ள பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். மேலே முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

பூந்தி பாயசம்

தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பால் - ஒன்றரை கப், சர்க்கரை - முக்கால் கப், முந்திரி, திராட்சை - தலா 8, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஜாதிக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, நெய் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை. 
செய்முறை: வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். மைதா மாவுடன் உப்பு சேர்த்து, நீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்து, இரண்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை பூந்திக் கரண்டியில் ஊற்றி எண்ணெயில் விழும்படி தேய்த்து, சிவக்க பொரித்தெடுக்கவும். ஒரு கப் பாலை சுண்டக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்துக் கரையவிடவும். ஆறிய பிறகு இதனுடன் பூந்தி, மீதமுள்ள பால், முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பூந்தி பாயசம் தயார்.

உளுந்து கஞ்சி

தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், கருப்பட்டித்தூள் – தேவையான அளவு, தேங்காய்ப்பால் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்.  
செய்முறை: உளுத்தம் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். பிறகு கருப்பட்டித்தூள், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

பார்லி கஞ்சி


தேவையானவை: பார்லி – ஒரு கப், காய்ச்சிய பால், சர்க்கரை  - தேவையான அளவு. 
செய்முறை: வெறும் வாணலியில் பார்லியைப் போட்டுச் சிவக்க வறுக்கவும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். பிறகு பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்தும் பருகலாம்.

பருப்பு சூப்

தேவையானவை: 
துவரம்பருப்பு  - கால் கப், விரும்பிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப், பிரெட் ஸ்லைஸ் - ஒன்று,  நெய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள்,  நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு.   
செய்முறை: பிரெட்டின் ஓரத்தை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். வாணலியில் நெய்விட்டு பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத் தெடுத்து தனியே வைக்கவும்.பருப்புடன் காய்கறிகள், சூப்புக்குத் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்து மசிக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வறுத்த பிரெட் துண்டுகள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

வெஜ் சூப்

தேவையானவை:
 விரும்பிய காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - ஒரு கப், மைதா மாவு – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், பால் – 50 மில்லி (காய்ச்சி ஆறவைத்தது), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.  
செய்முறை: பாத்திரத்தில் வெண்ணெயைவிட்டு உருக்கி காய்கறிகள், வெங்காயம், பச்சை மிளகாய், மைதா சேர்த்து வதக்கவும். இதனுடன் சூப்புக்குத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முக்கால் பதம் வேகவிட்டு இறக்கவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, பால் சேர்த்துப் பரிமாறவும்  
புதினா ஜூஸ்

தேவையானவை:  
புதினா இலைகள் - ஒரு கப் (சுத்தம் செய்யவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடித்த ஓமம் - அரை டீஸ்பூன், தேன் (அ) சர்க்கரை, ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு.
செய்முறை: இரண்டு கப் தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து இறக்கி, புதினா இலைகளைப் போட்டு 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் வடிகட்டி ஓமம், எலுமிச்சைச் சாறு தேன் (அ) சர்க்கரை சேர்த்துக் கலந்து, ஐஸ் கட்டிகள் போட்டுப் பருகலாம்.


கேரட் - பீட்ரூட் அல்வா

தேவையானவை:
 கேரட் துருவல், பீட்ரூட் துருவல் - தலா 100 கிராம், சர்க்கரை – 250 கிராம், பால் – 250 மில்லி (காய்ச்சி ஆறவைத்தது), நெய் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, முந்திரி - 10. 
செய்முறை: வாணலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அதே வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு கேரட் துருவல், பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கவும். இதனுடன் பால் விட்டு வேகவைக்கவும். காய்கள் வெந்து பால் வற்றியதும் சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டுக் கிளறி, ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.

முள்ளங்கி - பட்டாணி கூட்டு


தேவையானவை: வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப், பொடியாக நறுக்கிய முள்ளங்கி - அரை கப், காய்ந்த பட்டாணி - கால் கப், சின்ன வெங்காயம் – 10 (இரண்டாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.  
செய்முறை: பட்டாணியை முதல் நாளே ஊறவைக்கவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். பட்டாணியுடன் முள்ளங்கி, சின்ன வெங்காயம் சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

பிடிகருணை குழம்பு

தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு - கால் கிலோ, புளி - நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்), பூண்டு - 10 பல், தேங்காய்த்துண்டு - 2, கடுகு, சீரகம், வெந்தயம், சோம்பு - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,  
செய்முறை: புளியை ஊறவைக்கவும். தேங்கா யுடன் சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். பிடி கருணைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி.. புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிடிகருணை துண்டுகள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, கறிவேப்பிலை, வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

கருணைக்கிழங்கு வறுவல்

தேவையானவை: கருணைக்கிழங்கு (சேனைக் கிழங்கு) - கால் கிலோ, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், கெட்டியான புளிக் கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: கருணைக்கிழங்கை சிறிய துண்டு களாக்கி, புளிக்கரைசலுடன் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும் (கிழங்கினால் ஏற்படும் அரிப்பு நீங்கும்). பிறகு, நன்கு கழுவி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் வேக்காடு பதத்தில் வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கிழங்குத் துண்டுகளை போட்டுப் பொரித்தெடுக்கவும். பிறகு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், கருணைக்கிழங்கு துண்டுகள் சேர்த்து வதக்கி இறக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்க்கலாம்).

நிலக்கடலை உருண்டை

தேவையானவை: வறுத்த நிலக்கடலை (வேர்க்கடலை) – 300 கிராம், வெல்லம் – 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.  
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைச் சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு உருட்டு பதத் தில் பாகு காய்ச்சவும் (பாகை தண்ணீரில்விட்டு எடுத்தால் உருட்ட வர வேண்டும்). இதனுடன் தோல் நீக்கி, உடைத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி, கைபொறுக்கும் சூட்டில் இருக்கும்போதே சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு

தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, பச்சரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு கப், சீரகம், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று,  கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.   
செய்முறை: தயிரைக் கட்டியில்லாமல் கடைய வும். சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். அரிசியுடன், துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். பிறகு அரைத்த விழுதுடன் உப்பு, பெருங்காயத்தூள், சேப்பங்கிழங்கு துண்டுகள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும். பிறகு, கடைந்த தயிர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து மோர்க்குழம்பில் சேர்க்கவும்.

நிலக்கடலை சட்னி

தேவையானவை:  நிலக்கடலை (வேர்க்கடலை) - கால் கப், காய்ந்த மிளகாய் - 5, புளி - சிறிதளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கவும்), பெருங் காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவல், வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஆறிய பின் புளி, உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் கொரகொரப்பாக  அரைக்கவும். 
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பணியாரம்

தேவையானவை: சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 200 கிராம், புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா அரை கப், வெல்லம் - ஒரு கப் (தூளாக்கவும்), உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், வெந்தயம், ஏலக்காய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.      

செய்முறை: 
புழுங்கல் அரிசி, பச்சரிசியுடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவைத்து மசிக்கவும். அரைத்த மாவுடன் மசித்த  கிழங்கு, வெல்லத்தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கரைக்கவும். பணியாரக்கல்லில் மாவை ஊற்றி, எண்ணெய்விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

பச்சை மிளகாய் குழம்பு

தேவையானவை: பச்சை மிளகாய் – 12 (நீளவாக்கில் நறுக்கவும்), புளி - எலுமிச்சைப்பழ அளவு, சின்ன வெங்காயம் - 15 (தோல் உரிக்கவும்), ஆய்ந்த கறிவேப்பிலை - அரை கப், கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.     
செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்து, ஆறியபின் பொடிக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து, கறிவேப்பிலைப் பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

மிளகுக் குழம்பு

தேவையானவை: 
பூண்டுப் பல் - 20, சின்ன வெங்காயம் - 10 (தோல் உரிக்கவும்), தாளிப்பு வடகம் - சிறிதளவு, கத்திரிக்காய் வற்றல், மாங்காய் வற்றல் - தலா 4, சுண்டைக்காய் வற்றல் - 10, நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.    
அரைக்க: காய்ந்த மிளகாய் - ஒன்று, மிளகு, மல்லி (தனியா) - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு அரைக்கக் கொடுத்த பொருள்களைச் சேர்த்து வறுத்து பவுடராக அரைக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை விட்டு வடகம், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் கத்திரிக்காய் வற்றல், சுண்டைக்காய் வற்றல், மாங்காய் வற்றல், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த பொடி சேர்த்து, தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

புளி சேர்க்கத் தேவையில்லை. பிரசவித்த பெண்களுக்கு இதைச் செய்து தரலாம்.

கத்திரிக்காய் காரக்குழம்பு

தேவையானவை: 
கத்திரிக்காய் – 200 கிராம் (பொடியாக நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 10 (தோலுரிக்க வும்), பூண்டு - 10 பல், பழுத்த தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), தாளிப்பு வடகம் - சிறிதளவு, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, தேங்காய்ப்பால் - ஒரு குழி கரண்டி, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 50 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 

அரைக்க: காய்ந்த மிளகாய் - 5, மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தனித்தனியாக வறுத்து எடுத்து, விழுதாக அரைக்க வும். பாதியளவு பூண்டைப் பொடியாக நறுக்கவும், மீதியை தோலுடன் தட்டவும். அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயைவிட்டு தாளிப்பு வடகம், தட்டிய பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், நறுக்கிய பூண்டு, கத்திரிக்காய், தக்காளி சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, நன்கு வதக்கவும். பிறகு, புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து காய் வேகும் வரை கொதிக்கவிட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து, ஒரு கொதி வந்த பின் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை, வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

பூண்டு - மிளகாய் துவையல்

தேவையானவை: 
காய்ந்த மிளகாய் - 15, பூண்டு - 10 பல்,  பழுத்த தக்காளி - 2, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.     
செய்முறை: காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளியை மிக்ஸியில் சேர்த்து விழுதாக (தண்ணீர் விடாமல்) அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்த விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.

கொத்தமல்லித் தொக்கு

தேவையானவை: கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு, புளி - தேவையான அளவு.  

செய்முறை: 
கொத்தமல்லித்தழையை கழுவி நிழலில் உலர்த்தவும். மறுநாள் வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கொத்தமல்லித்தழையை சேர்த்து சிறு தீயில் வதக்கி எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். வெறும் வாணலியில் மிளகாயை வறுத்து எடுக்கவும். கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய், உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து, மசிந்ததும் கொத்த மல்லித்தழை சேர்த்து அரைத்து எடுக்கவும் (தண்ணீர் விட வேண்டாம்).

தயிர் சாதம், இட்லி, தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன். 
பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகாய் – 12 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு, வெந்தயம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4 , பெருங்காயம் – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: பச்சை மிளகாயுடன் உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து இரண்டு நாள்கள் ஊறவைக்க வும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயுடன் வறுத்த பொடியை சேர்க்கவும். கடுகை எண்ணெயில் தாளிக்கவும். எண்ணெயுடன் கடுகை பச்சை மிளகாய் கலவையில் சேர்த்துக் கலக்கினால், ஊறுகாய் தயார்.

வேப்பம்பூ பச்சடி

தேவையானவை: வேப்பம்பூ - அரை கப் (நிழலில் காயவைக்கவும்), காய்ந்த மிளகாய் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், வெல்லம் - சிறிதளவு, புளி – சிறிய எலுமிச்சை அளவு, நெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.    
செய்முறை: புளியை ஊறவைத்துக் கரைக்கவும். வாணலியில் நெய்விட்டு, வேப்பம்பூ சேர்த்து வதக்கி எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, வதக்கிய வேப்பம்பூ சேர்த்து நன்கு கொதித்ததும், வெல்லம் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: விரும்பினால், மாங்காய்த் துண்டுகளைச் சேர்க்கலாம்.

கல்யாண முருங்கை இலை அடை

தேவையானவை: 
புழுங்கல் அரிசி - ஒரு கப், கல்யாண முருங்கை இலை – 6 (நரம்பு நீக்கவும்), எண்ணெய், உப்பு – தேவையான அளவு.    
செய்முறை: அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து இதனுடன் கல்யாண முருங்கை இலை, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைக்கவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை அடைகளாகத் தட்டி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: 
இந்த அடை ஜலதோஷத்தைக் குறைக்க உதவும்.

முருங்கைக்கீரை தோசை


தேவையானவை: தோசை மாவு - ஒரு கப், முருங்கைக்கீரை - அரை கப், சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் சீவி, மிகவும் பொடியாக நறுக்கிய இஞ்சி - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.    
செய்முறை: தோசை மாவுடன் முருங்கைக்கீரை, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லை காயவைத்து, மாவை தோசை களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: 
தோசை மாவிலேயே உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கத் தேவையில்லை. விருப்பப்படுபவர் கள் மிகவும் சிறிதளவு சேர்க்கலாம்.

வாத நாராயண இலை - பொரி மாவு துவட்டல்

தேவையானவை: வாத நாராயண  இலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, புழுங்கல் அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், தாளிப்பு வடகம் - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.     
செய்முறை: வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், அரிசி, சோம்பு போட்டு சிவக்க வறுத்துப் பொடிக்கவும். இதுவே பொரி மாவு. வாணலியில் எண்ணெய்விட்டு வடகம் தாளித்து கீரையை சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். கீரை வெந்ததும் பொரி மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

வாதத்தால் ஏற்படும் பிரச்னைகளுக்கு இந்தக் கீரை தீர்வளிக்கும்.

அகத்திக்கீரைச் சாறு

தேவையானவை: 
ஆய்ந்த அகத்திக்கீரை - ஒரு கப், சின்ன வெங் காயம் - 10 (தோல் உரிக்கவும்),  பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.    
செய்முறை: சாதம் செய்யும் சமயத்தில் அரிசியை இரண்டாவது முறை கழுவிய நீரை தனியே எடுத்து வைக்கவும். தேங்காயுடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசியைக் கழுவிய நீரில் கீரை, வெங்காயம், உப்பு சேர்த்து வேகவைக்கவும். இதனுடன் அரைத்து வைத்த விழுது, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட லாம். அகத்திக்கீரை, நுரையீரல் பிரச்னை யிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

காராமணி சுண்டல்

தேவையானவை: காராமணி - ஒரு கப், தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

அரைக்க: 
காய்ந்த மிளகாய் - 2, மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்.    
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். காராமணியை நான்கு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து... வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, வறுத்து அரைத்த பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

கார அடை

தேவையானவை: புழுங்கல் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு, கொள்ளு - தலா கால் கப், பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - 5, சோம்பு - ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 5 (தட்டவும்), தோல் சீவி, மிகவும் பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - தலா 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: அரிசி, பருப்பு வகைகளை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து மிளகாய், சோம்பு சேர்த்து  தண்ணீர் தெளித்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு, உப்பு இஞ்சி, சீரகம், பெருங்காயத்தூள், தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை அடைகளாக தட்டி, சுற்றிலும்  எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

மொச்சைக்கொட்டை முருங்கைக் குழம்பு

தேவையானவை: 
காய்ந்த மொச்சைக்கொட்டை – 50 கிராம், சின்ன வெங்காயம் - 20 (இரண்டாக நறுக்கவும்),  பூண்டுப் பல் - 20, முருங்கைக்காய் துண்டுகள் - 8, புளி - சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம் - தலா - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் -  ஒன்றரை டீஸ்பூன். மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.    

செய்முறை: புளியை ஊறவைத்து கரைக்கவும். தேங்காயுடன் சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். மொச்சைக்கொட்டையை வெறும் வாணலியில் வறுத்து, 3 மணி நேரம் ஊறவைத்து, வேகவைக்கவும். வாணலி யில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும். இதனுடன்  பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், வேகவைத்த மொச்சை, முருங்கைக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

No comments:

Post a Comment