Thursday, 8 March 2018

மூலிகை சமையல் 30 வகை


``இன்றைய காலகட்டத்தில், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, நோய்களின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதைத் தடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் அதிகம். எனவே, ‘உணவே மருந்து... மருந்தே உணவு’ என்ற நம் முன்னோர் வாக்கைப் பின்பற்றி, எளிதாக கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்துப் பல்வேறு உணவுகளைப் பரிமாறியுள்ளேன்’’ என்று கூறுகிறார், ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி. அவர் வழங்கும் 30 வகை மூலிகை சமையல் உணவுகள்... உங்களுக்காக!

ஹெர்பல் டீ

தேவையானவை: காய்ந்த துளசி இலை, காய்ந்த புதினா இலை - தலா ஒரு கைப்பிடியளவு, பட்டை - சிறிய துண்டு, கறுப்பு ஏலக்காய் - 2, பச்சை ஏலக்காய் - 5, மிளகு - ஒரு டீஸ்பூன், அதிமதுரப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன், திப்பிலி - 5, ஜாதிக்காய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த தேயிலை - ஒரு கைப்பிடி அளவு, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில் துளசி இலைகளுடன் புதினா இலைகள் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றவும். இதனுடன் மிளகு, பட்டை, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய்த்தூள், காய்ந்த தேயிலை சேர்த்து அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, அரைத்தத்தூள் ஒரு டீஸ்பூன், தேவையான அளவு கருப்பட்டி (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தலாம்.
குறிப்பு: விரும்பினால் பால் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

பயன்: தேவையற்ற கொழுப்பை நீக்கும்; அஜீரணக் கோளாறுகளை அகற்றும்.

பூண்டு லேகியம்

தேவையானவை:  நாட்டு பூண்டுப் பல் – 12 முதல் 20 வரை, பால் - 100 மில்லி, கருப்பட்டி அல்லது வெல்லம் - 100 கிராம், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பூண்டுப் பற்களைப் பாலில் வேகவைக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும் (மிக்ஸியில் அரைத்தும் எடுக்கலாம்). கருப்பட்டி (அ) வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் பூண்டு விழுது, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகி சுருண்டு வரும்போது மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சுருளக்கிளறி இறக்கவும். ஆறியபின் பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.  

பயன்: உணவுக்கு முன் அல்லது பின் இந்த லேகியத்தை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர  ஜீரணம், வயிற்றுப் பொருமல், மாந்தம் சரியாகும்.

உளுந்தோரை

தேவையானவை: உடைத்த கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம், பச்சரிசி - 200 கிராம், பூண்டு – 6 பல்,   மிளகுத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, தோலுரித்த சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கவும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் நல்லெண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, சீரகம், பூண்டு, வெந்தயம், சின்ன வெங்காயம், மிளகுத்தூள், உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் பச்சரிசி, உப்பு, 3 கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் குக்கரைத் திறந்து, சிறிதளவு நல்லெண்ணெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

பயன்: மாதவிடாய்க் கோளாறு உள்ளவர்களுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும், எலும்பு சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கவும் ஏற்ற உணவு இது.

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை: தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 8 பல், தாளிப்பு வடகம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5.
செய்முறை: புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும்போது கறிவேப்பிலை தூவி இறக்கவும். 

பயன்: ரத்தச்சோகை, முடி உதிர்தல், சோர்வு, மயக்கம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகும் குழம்பு இது.

பிரண்டைத் துவையல்

தேவையானவை:  நார் நீக்கிய பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப், உளுத்தம்பருப்பு  - ஒரு டேபிள்ஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் - 8, புளி  - சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 5,  (விரும்பினால்) தேங்காய்த் துருவல் – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பிரண்டை, உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து துவையலுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பயன்: கால்சியம் சத்து, நார்ச்சத்து கொண்டது. எலும்பு, மூலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருந்தாகும்.  

மூலிகை மோர்க்குழம்பு

தேவையானவை:  மோர் - 3 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு.

வறுத்து அரைக்க: பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, ஓமம் - அரை டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன், புதினா இலை, துளசி இலை – தலா 15, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து எடுக்கவும். மோருடன் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மோர்க்கலவையை ஊற்றி, நுரைத்து வரும்போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.   

பயன்: நாவறட்சி, தொண்டைக் கமறல் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

அத்திக்காய் கூட்டு

தேவையானவை: அத்திக்காய் - 15, பாசிப்பருப்பு – 100 கிராம், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 3, தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: அத்திக்காய்களை உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, நான்கு  துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் அத்திக்காய், தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும். தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வேகவைத்த பருப்புக் கலவையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச்  சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கூட்டுடன் கலந்து பரிமாறவும். 
 
பயன்: குழந்தை பாக்கியம் ஏற்பட உதவும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளுக்கும் மருந்தாகும்.

தேன் - தினை லட்டு

தேவையானவை: தினை மாவு - ஒரு கப், வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் - முக்கால் கப், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: வெறும் வாணலியில் தினை மாவை  வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும்.  இதனுடன் தேன், நெய் சேர்த்துக் கலந்து, சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும்.

பயன்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான சிற்றுண்டி.

வல்லாரைத் துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, புளி – சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, கறுப்பு உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், கீரை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் புளி, உப்பு  சேர்த்து துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்து பரிமாறலாம்.  

பயன்: ஞாபகசக்தியைத் தூண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருந்தாகும்.

அங்காயப் பொடி

தேவையானவை: தனியா (மல்லி), மிளகு, சீரகம், ஓமம், காய்ந்த வேப்பம்பூ – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், சுக்குத்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள வற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைத்து சேகரிக்கவும். சூடான சாதத்துடன் சிறிதளவு நெய், அரைத்த பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

பயன்: குழந்தை பெற்ற பெண்களுக்கு மிகவும் நலம் தரும்.

திப்பிலி ரசம்

தேவையானவை: திப்பிலி - 5, மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - அரை கப், தக்காளி - 2 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் திப்பிலி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்துக் கரைத்து ஒரு கொதிவிடவும். இதனுடன் அரைத்த பொடி, பருப்பு தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து ரசத்துடன் கலந்து பரிமாறவும்.

பயன்: கபத்தைக் கரைக்கும்; உடல் சூட்டைத் தணிக்கும்; காய்ச்சலுக்கு ஏற்ற மருந்தாகும்.

செலவு குழம்பு

தேவையானவை: செலவு சாமான் – தலா 10 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்),  தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் – தேவையான அளவு, தாளிப்பு வடகம் - ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் செலவு சாமான்களை சேர்த்து வறுத்து பவுடராக பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம் தாளித்து வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, அரைத்த பவுடரைச் சேர்த்து கொதிவிட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு இறக்கவும்.

சூடான சாதத்தில் சிறிதளவு  நெய்விட்டு, இந்தக் குழம்பைச் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு: செலவு சாமான்கள் சுக்கு, மிளகு, கண்டந்திப்பிலி, வெந்தயம், சதகுப்பை, ஓமம், சீரகம், பெருங்காயம், கருஞ்சீரகம், சித்தரத்தை, அரிசி திப்பிலி ஆகியனவாகும்.

பயன்: குழந்தை பெற்ற பெண்களுக்கு நலம் பயக்கும்; காய்ச்சல் நேரங்களிலும் சாப்பிடலாம்.

கண்டந்திப்பிலி - கற்பூரவல்லி குழம்பு

தேவையானவை: மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கண்டந்திப்பிலி - 15, கற்பூரவல்லி இலை - 5, தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்), புளி -  சிறிய எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு, தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு  நல்லெண்ணெய்விட்டு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கண்டந்திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். இதனுடன் கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்து, குழம்பு கெட்டியான பின்பு இறக்கவும்.

பயன்: நெஞ்சு சளியைக் கரைக்க உதவும்.

மூலிகை ஊறல் நீர்

தேவையானவை:  ஆவாரம்பூ - ஒரு கைப்பிடியளவு, ஏலக்காய் - ஒன்று, ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெட்டி வேர் - சிறிதளவு, துளசி, புதினா - சிறிதளவு, பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மண் குடுவையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து  இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காலையில் வடிகட்டி பருகலாம்.

பயன்: உடல் உஷ்ணம் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். தேவையற்ற கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.

புதினா சூப்

தேவையானவை:  பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - ஒன்று, மிளகு - சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - ஒரு மூடி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சைப் பழத்தை சாறு பிழியவும். குக்கரில் பாசிப்பருப்புடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா இலைகள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை நீக்கிவிட்டு மத்தால் கடையவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம்.

பயன்: பசியைத் தூண்டும். புத்துணர்ச்சி தரும். கொழுப்பைக் குறைக்கும்.

புழுங்கல் அரிசி கஞ்சி

தேவையானவை:  புழுங்கல் அரிசி - ஒரு கப், பூண்டு - 15 பல், தோல் சீவி துருவிய இஞ்சி -  சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், முருங்கை இலை - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்ப்பால் அல்லது மோர் - ஒரு கப், மிளகு, சீரகம், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் புழுங்கல் அரிசி, பூண்டு, இஞ்சித் துருவல், வெந்தயம், சீரகம், மிளகு, முருங்கை இலை, உப்பு, நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் தேங்காய்ப்பால் அல்லது மோர்விட்டு கடைந்து பருகலாம்.

பயன்: வாயு பிரச்னைகளுக்கும் வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாகும்.

சீரகம் - கொத்தமல்லி பால் சோறு

தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 கப், சீரக சம்பா அரிசி - ஒரு கப், பூண்டு - 6 பல், தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (கீறவும்), தயிர் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, பூண்டு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தயிர், அரிசி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

பயன்: வயிற்றுப்புண், வாய்புண் நீங்கும்; நல்ல உறக்கம் வரும்.

தூதுவளை ரசம்

தேவையானவை: தூதுவளை இலைகள் - 15, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், வேகவைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப், புளிக்கரைசல் - ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தட்டிய பூண்டு – 5 பல், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும். இதனுடன்  புளிக்கரைசல் ஊற்றி, ஒரு கொதிவிடவும். பிறகு, மிளகு - சீரகத்தூள், பருப்புத் தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

பயன்: கபம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி நீங்கும்.

ரோஜாப்பூ துவையல்

தேவையானவை: பன்னீர் ரோஜா இதழ்கள் - ஒரு கப், பொட்டுக்கடலை - கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, எண்ணெய் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: ரோஜா இதழ்களுடன் பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, அரைத்துவைத்த துவையலுடன் கலந்து பரிமாறவும்.

பயன்: உடல்சூட்டைக் குறைக்கும். வயிற்று எரிச்சல், குமட்டல் பிரச்னைகளுக்கு மருந்தாகும். ரத்த விருத்திக்கு உதவும். ஞாபகசக்தியைத் தூண்டும்.

முடக்கத்தான் கீரை ரசம்

தேவையானவை: சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை இலைகள் - 3 கப், புளி -  கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு விழுது, மிளகு - சீரகத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய், கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல்விட்டு, ஒரு கொதி வந்ததும் மிளகு - சீரகத்தூள், வடிகட்டிய கீரைச்சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது முடக்கத்தான்.

பயன்: கை, கால், மூட்டுவலி, வாதநோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

குப்பைமேனி சூப்

தேவையானவை: குப்பைமேனிக் கீரை  - ஒரு கைப்பிடியளவு, பாசிப்பருப்பு - 50 கிராம், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு பேஸ்ட் போல கரைக்கவும். குக்கரில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பாசிப்பருப்பு, குப்பைமேனிக் கீரை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மூடி            2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மசித்து வடிகட்டவும். இதனுடன் மிளகு - சீரகத்தூள், சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி சூடாகப் பருகவும்.

குறிப்பு: விரும்பினால் எலுமிச்சைச் சாறு கலந்தும் பருகலாம்.

பயன்: கசப்புத்தன்மை இருந்தாலும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.

வெந்தயம் - வெள்ளைப் பூண்டு குழம்பு

தேவையானவை: வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், நாட்டுப் பூண்டு - 20 பல், தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்)  - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு,
தாளிக்க: வடகம், பெருங்காயத்தூள், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், வெந்தயப்பொடி,  ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

பயன்: வயிற்று உப்பசம், வயிற்றுவலி, வாயு கோளாறுகள், உடல்சூட்டு வலி போன்றவற்றுக்கு மருந்தாகும்.

அறுகம்புல் தேன் சாறு

தேவையானவை: அறுகம்புல் - அரை கட்டு, தேன் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 3 கப்.

செய்முறை: அறுகம்புல்லைக் கழுவி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்துக் கலந்து பருகலாம்.
பயன்: ரத்தத்தில் உள்ள நச்சு களை வெளியேற்றும்.

மூலிகை ஊத்தப்பம்

தேவையானவை:  தோசை மாவு - 3 கப், பசலைக்கீரை, புதினா, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா கைப்பிடி அளவு, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கி வதக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், தேங்காய்த் துருவல், கேரட் துருவல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சுத்தம் செய்த பசலைக்கீரை, புதினா, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து எடுக்கவும். தோசை மாவுடன் மிளகு - சீரகத்தூள், சின்ன வெங்காயம், அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றவும். அதன் மேலே தேங்காய்த் துருவல், கேரட் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும்.

பயன்: பல், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு.

மூலிகை பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை - தலா கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, வெங்காயம், தக்காளி - 
தலா 2 (நீளவாக்கில் நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 8, கற்பூரவள்ளி இலை, துளசி – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு, சோம்பு, தயிர் – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சின்ன வெங்காயத்துடன் தக்காளி, மிளகு, சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். புதினா, துளசி, கற்பூரவள்ளி, கொத்தமல்லித்தழை, தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசியை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த விழுது வகைகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி அரிசி, 2 கப் தண்ணீர்விட்டு மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் திறந்து மேலே சிறிதளவு நெய்விட்டு சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.

பயன்: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

கற்றாழை நீர் சாரம்

தேவையானவை: கற்றாழை – ஒரு மடல், மோர் – ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கற்றாழை மடலை சீவி, நன்கு பலமுறை கழுவி புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்துப் பருகலாம்.

பயன்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்; சருமப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

மூலிகை சாலட்

தேவையானவை: கேரட் துருவல், வெள்ளரித் துருவல் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள்) – தேவையான அளவு, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேர்க்கடலை - சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு, புதினா, கொத்தமல்லித்தழை, துளசி - தலா கைப்பிடியளவு, காய்ந்த திருநீற்றுப் பச்சிலை, வெந்தயக்கீரை – சிறிதளவு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, தேன் – தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.

பயன்: காலை சிற்றுண்டியாக சாப்பிடலாம். தோல் பளபளப்பாகும்.

ஓமப் பூரி

தேவையானவை: ஓமம் – 20 கிராம், கோதுமை மாவு - 3 கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஓம வாட்டர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, ஓமம், சீரகத்தூள், ஓம வாட்டர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாக திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

பயன்: வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கும்.

துளசி - நெல்லி துவையல்

தேவையானவை: முழு நெல்லிக்காய் - 5, துளசி - ஒரு கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு  - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், இந்துப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்துத் துவையலாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை  தாளித்து, துவையலுடன் சேர்க்கவும்.

பயன்: வைட்டமின்-சி நிறைந்தது; நோய் எதிர்ப்புச்சக்தியைத் தூண்டும்.

சிறுதானிய மூலிகை கஞ்சி

தேவையானவை: குதிரைவாலி, சாமை, வரகு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம்,  மிளகு - சீரகத்தூள் -  ஒரு டீஸ்பூன், புதினா, துளசி - சிறிதளவு, கிராம்பு - ஒன்று, பூண்டு - 6 பல், வெந்தயம் - கால் டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் குதிரைவாலி, சாமை, வரகு, பாசிப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் துளசி, புதினா, கிராம்பு, பூண்டு, வெந்தயம், இந்துப்பு, மிளகு - சீரகத்தூள், 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 விசில்விட்டு இறக்கவும். ஆவிவிட்டதும் மத்தால் கடைந்து அருந்தலாம்.

குறிப்பு: விரும்பினால் மோர் சேர்த்தும் அருந்தலாம்.

பயன்: காய்ச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். கபம், வாயு சீராகும்.

No comments:

Post a Comment