மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்
தேவையானவை:
தோசை மாவு அரை கிலோ
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி ஒன்று
பொடியாய நறுக்கிய கேரட் 2
சிக்கன் 200 கிராம்
இட்லி பொடி 2 டேபிள்ஸ்பூன்
சீஸ் 25 கிராம்
வெண்ணெய் 25 கிராம்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், சிறிது வெண்ணெய் தடவி, தோசைமாவை ஊத்தப்பம் போன்று ஊற்றவும். இதன் மீது வெங்காயம், கேரட், தக்காளி, சிக்கன் துண்டுகளையும் வைக்கவும். பின் ஊத்தப்பத்தின் எல்லா இடங்களிலும் படுமாறு இட்லிப் பொடியைத் தூவவும். சுற்றிலும், வெண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் சீஸ் தூவி இறக்கிப் பரிமாறவும்.
இறால் தொக்கு தோசை
தேவையானவை:
தோசை மாவு ஒரு கப்
இறால் கால் கிலோ
சின்னவெங்காயம் 10
சீரகம் கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
முட்டை 2
உப்பு தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன், தேவையானவற்றில் கொடுத்துள்ள முட்டை, தோசைமாவு நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். இறுதியில், முட்டையை உடைத்து ஊற்றி இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதன் மீது ஏற்கெனவே செய்து வைத்துள்ள மசாலாக் கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும். பிறகு, தோசையை அப்படியே சப்பாத்தி போல் சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.
கோழி கீமா தோசை
தேவையானவை:
தோசை மாவு அரை கிலோ
எலும்பில்லாத சிக்கன் 300 கிராம்
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் 50 கிராம்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் ஒன்று
பூண்டு 5 பல்
எண்ணெய் தேவையான அளவு
சோம்பு கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
சீரகத்தூள் அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சின்னவெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் சோம்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்த தண்ணீர் வற்றியதும் இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும் தோசை ஊற்றி, வதக்கி வைத்துள்ள மசாலாவை அதன் நடுவில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேக விடவும். இருபுறமும் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.
மட்டன் தோசை
தேவையானவை:
தோசை மாவு அரை கிலோ
எலும்பில்லாத மட்டன் கால் கிலோ
முட்டை 5
இஞ்சிபூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் உப்பு, இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தோசை மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். இதில் முட்டையை உடைத்து அடித்து ஊற்றி, வேகவைத்த மட்டன் தூண்டுகளை வைக்கவும். இதன் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள் தூவவும். பிறகு, எண்ணெய் ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
ஜவ்வரிசி கார தோசை
தேவையானவை:
இட்லி அரிசி அரைக்கிலோ
உளுந்து 100 கிராம்
காய்ந்த மிளகாய் 5
உப்பு தேவையான அளவு
சோம்பு அரை டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
மிளகு ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2
பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு துண்டு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சூடான தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்துப் பரிமாறவும்.
மைசூர் மசாலா தோசை
தேவையானவை:
ஜவ்வரிசி 100 கிராம்
சர்க்கரை ஒரு டீஸ்பூன்
தோசை மாவு அரை கிலோ
காய்ந்த மிளகாய் 10
பூண்டு 5 பல்
உப்பு தேவையான அளவு
மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
கடுகு, உளுந்து அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
பொடியாக நறுக்கிய
பெரிய வெங்காயம் ஒன்று
உருளைக்கிழங்கு 150 கிராம்
தக்காளி ஒன்று
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் ஒன்று
பெருங்காயம் சிறிதளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், அரைத்த பூண்டுக் கலவையைச் சேர்த்து கலவை ஒன்றாகும் வரை வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைப் பாதியாக நறுக்கிச் சேர்க்கவும். கலவை கெட்டியானதும் இறக்கவும். சூடான தோசைக்கல்லில் தோசைமாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் அதன் மீது உருளைக்கிழங்குக் கலவையை வைத்து தோசைக்கல்லிலேயே ரோலாக சுருட்டி எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்.
தக்காளி தோசை
தேவையானவை:
தோசை மாவு அரை கிலோ
பழுத்த தக்காளி கால் கிலோ
பச்சைமிளகாய் ஒன்று
மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை வேகவைத்து தோலுரித்து ஆறவிடவும். தக்காளியுடன் பச்சைமிளகாய், மிளகுத்தூள், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பதமாக வார்த்தெடுக்கவும்.
கேழ்வரகு ரவா தோசை
தேவையானவை:
கேழ்வரகு மாவு 200 கிராம்
ரவை 50 கிராம்
கோதுமை மாவு 50 கிராம்
பச்சை மிளகாய் ஒன்று
இஞ்சி ஒரு துண்டு
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகுத்தூள் அரை டீஸ்பூன்
சீரகம் அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கேழ்வரகு, ரவை, கோதுமை மாவை ஒன்றாகக் கலந்து எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லா பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி ரவா தோசை பதத்துக்கு கலக்கவும். எண்ணெய் ஊற்றி, தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
சுரைக்காய் தோசை
தேவையானவை:
இட்லி அரிசி அரை கிலோ
உளுந்து 200 கிராம்
சுரைக்காய் அரை கிலோ
காய்ந்த மிளகாய் 6
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
துருவிய தேங்காய் ஒரு கப்
பொடியாக நறுக்கிய
சின்னவெங்காயம் 50 கிராம்
செய்முறை:
இட்லி அரிசி, உளுந்தை தனித்தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சுரைக்காயை தோல்நீக்கித் துருவிக்கொள்ளவும். ஊறவைத்த அரிசியுடன் காய்ந்த மிளகாய், சேர்த்து அரைத்துக்கொள்ளவும். துருவிய சுரைக்காய், உப்பு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலக்கி தோசைகளாக வார்த்து எடுக்கவும்.
No comments:
Post a Comment