Tuesday 6 March 2018

சிவன் வடிவமைத்த காசி - 06


Image result for varanasi tourism

சாகசப் பயணம் ! 

காசி - இந்தியச் சமயங்கள் அனைத்துக்கும் பொதுவான புண்ணியத் தலமாக விளங்குகிறது. கங்கையால் மட்டும் காசிக்குப்புகழில்லை. காரணம் ஹரித்துவார், ரிஷிகேஷ், பிரயாகை ஆகியன கங்கைக் கரையில்தான் இருக்கின்றன. ஆனால் அவை காசியைப் போல் மகிமை அடையவில்லை.

வேதகாலம் முதலே காசி பெருமையுடன் திகழ்கிறது. வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

சிவனும் பார்வதியும் மணம் முடித்ததும் பூமியில் வாழ ஓரிடம் தேடி வந்தபோது பிரளய காலத்திலும் அழியாத காசியையே தேர்ந்தெடுத்தனர் என்றும், அவர்கள் பூமியில் கால் ஊன்றிய இடமே காசிதான் என்றும் காசி காண்டம் கூறுகிறது.

சிவன் ஏன் காசியில் கால் ஊன்றினார் ?

சிவனாகிய பைரவர் கையில் பிரம்மகபாலம் காசியை மிதித்ததும் கீழே விழுந்த காரணம் என்ன ?

 பூமியில் எங்காவது ஓரிடத்தில்தான் இறையருள் விளக்கம் ஆகிறது. ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல மற்றவர்களுக்கும் மற்றொரு வகையில் அதே இடத்தில் அனுபவம் ஏற்படுகிறது. சோதித்துப் பார்க்க நினைத்தால், அப்போதும் அதே மாதிரி அனுபவம் கிடைக்கிறது. ஆகையால் அந்த இடம் பலருக்கும் - பல வகையில் வேறுபட்டவருக்கும் - ஒரு ஈர்ப்பு ஆற்றலுடன் விளங்குகிறது.

இப்படித்தான் வேதகாலத்திலும் உபநிடத காலத்திலும் இதிகாச காலத்திலும் வாழ்ந் தவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்து, உணர்வு வழியாகக் காசியைப் புனிதத் தலமாக முடிவுசெய்திருக்கிறார்கள்.

சமண, புத்த மதங்களும் காசியின் பெருமையை ஏற்று அதையே தங்களுக்கும் தலைமையாக்கிக் கொண்டன.

புத்தர் தனது முந்தைய பிறவியில் காசியில் செய்த அற்புதங்களைத் தாமே கூறியதாகப் புத்த ஜாதகக் கதைகளில் விளக்கப்பட்டுள்ளன.

புத்த, சமண சமயங்களுக்கு அக்காலப் பேரரசுகள் வலிமையான துணையாக இருந்தன. அவர்களும் காசியைப் போற்றவே செய்தனர். பின்னர் இந்த மதங்களின் செல்வாக்கு வீழ்ந்தது. புத்தமதம் இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தனக்கு இடம் தேடிக் கொண்டது. ஆனால் புத்த சமண சமயத்தரால் வளர்க்கப்பட்ட காசிமட்டும் தனது புகழில் மங்காமல் மறையாமல் தொடர்ந்து வளர்ந்து வந்தது.

அடுத்து ஆதிசங்கரர் வந்தார்.

அவரது காலம் முதல் சுமார் 450 ஆண்டுகள் வரையிலும் காசி தனது தொன்மைப் புகழை மீண்டும் பெற்று இந்துக்களின் பெருமைமிக்க புனித பூமியாக சிறந்தோங்கி வளர்ந்தது.

இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சிக்கு வரும் வரையில் ஆதிசங்கரர் உருவாக்கிய இந்துசமய ஒருமைப்பாட்டு உணர்வு காசியை மகத்துவம் மங்காமல் காத்து நின்றது. புத்தர் காலம் வரையில் இருந்த இந்துக் காசியைவிட, இப்போதிருக்கும் இந்துக் காசி சடங்குமுறையால் காசியைத் தலைமை ஸ்தானத்துக்கு உயர்த்தியது. அதாவது தத்துவார்த்த அடிப்படையில் பெருமை சேர்க்கப்பட்ட காசியின் முதற்கட்டம் முடிந்து சடங்கு முறைகளால் புகழ் வளர்க்கப்பட்ட காசி அடுத்த வேறொரு நிலைக்கு வளர்ந்தது. அதனாலேயே அது இந்துக்களின் அன்றாட வாழ்வியலோடு பிணைந்து கொண் டது.

ஆனால் முஸ்லிம் மன்னர்களில் அக்பர், ஜஹாங்கீர் ஆகிய இருவர் மட்டுமே மதசகிப்புத் தன்மை உள்ளவர்களாக இருந்தார்கள். ஏனைய முஸ்லிம் மன்னர்கள் காசியை மதக்காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அழிக்கவே செய்தனர்.

அக்பர் காலத்துக்கு முந்தைய அழிவு நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் புத்துயிர் பெற்ற காசியை அடுத்து வந்த ஷாஜஹான் தனது காலத்தில் அழித்து நிர்மூலம் செய்தார்.

பிறகு வீர சிவாஜியினால் இந்து மறுமலர்ச்சி தோன்றிய காலத்தில் மீண்டும் இன்றைய காசி உருவாக்கப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோயில் ஐந்துமுறை இடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

புத்த, சமண சமயங்கள் காசியை ஒரு இந்துமதச் சின்னமாக இருக்கவிடவில்லை. அதை ஒரு பொதுவான புனித நகரமாக ஆக்கவே அவர்கள் முயன்றனர்.

அது மீண்டும் இந்துக்களுக்கே உரிய காசியாக மாற சுமார் 1000 ஆண்டுகள் தேவைப்பட்டன.

காசியை மீண்டும் இந்துக்காசியாக மாற்ற பல ஞானிகளும், துறவிகளும், சமயாசாரியார்களும், தத்துவ ஆசிரியர்களும் பெருமுயற்சி எடுத்துக்கொண்டனர். முஸ்லிம்கள் ஆட்சிக் காலத்தில் சுமார் 500 ஆண்டுகள் அது இருண்ட காசியாகவே ஒளி மங்கி இருந்தது.

இந்துக்கள் காசிக்கு யாத்திரை மேற் கொண்டால் அவர்கள் காசி செல்வதற்குத் தனியே வரி கட்டவேண்டும் என்று முகம்தியர் காலத்தில் சட்டம் இருந்தது.

கர்நாடக அரசன் ஒருவன் ‘இந்த வரியை என் தேசத்திலிருந்து காசிக்கு யாத்திரை செல்லும் மக்களுக்கு எனது அரசே செலுத்தும்' என்று அறிவித்து, அதற்கென்று ஒரு வைப்பு நிதியை ஏற்படுத்தி வைத்தான். இது நடந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில்.

இதிலிருந்து தெரிய வருவது என்ன ? 

யாத்திரை போகத் தடை இருந்தும், வசதி குறைவிருந்தும் காசிக்குப் போக விரும்பியோர் ஏராளம். காசிக்குச் சென்று திரும்புவதில் ஒரு சாகசத்தையும் மக்கள் உணர்ந்தனர். காசிக்குச் சென்று திரும்பியவர்களைக் காண்பதும் புனிதமாகக் கருதப்பட்டது. மற்றவர்களுக்கும், தாம் காசி செல்ல வேண்டும் என்ற உந்துதலை வளர்த்தது.

காசிக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு உதவுவதன் மூலம் மன்னர்கள் பொது மக்களின் அபிமானத்தைப் பெற்றனர். செல்வந்தர்கள் காசியாத்திரை செல்லும் பொதுமக்களுக்கு வழி நடையில் சுமைதாங்கிகளும், ஆங்காங்கே அன்னச் சத்திரங்களும் கட்டிவைத்து, தெய்வீகத் தொண்டு செய்தனர்.

வழிப்போக்கர்களிடையே ஒவ்வொரு தேசத்து மக்களைக் காணவும் பேசவும் பழகவும் வாய்ப்பு கிடைத்ததால், காசி யாத்திரை என்பது தேச ஒருமைப்பாட்டு வளர்ச்சிக்கும் துணை நின்றது.

Related image

போக இயலாதவர்களின் மனக்குறை தீர்க்கவே, உள்நாட்டில் ஆங்காங்கே காசி விஸ்வநாதர் ஆலயங்களை எழுப்பினர். விஸ்வலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நாராயண பட்டர், லட்சுமிதரர், இராமானந்தர், துளசிதாஸர் முதலிய பெருமக்களும் காசியைத் தங்கள் இலக்கியங்களினாலும் ஆன்மிகத் தொண்டினாலும் வளர்த்தனர். காசியை அழிக்கும் முயற்சியில் எதிரிகள் பெற்ற வெற்றியின் காரணமாக இந்துக்களின் மனதில் ஏற்பட்ட காயங்களுக்கு இவர்களின் பக்தி இலக்கியமே நல் மருந் தாகத் திகழ்ந்தது.

அழிவு நடைபெறும் காலத்தில் ஆக்ரோஷமான எதிர்ப்பைக் காட்டும் வேலையில் கையில் கிடைப்பதையெல்லாம் ஆயுதமாகப் பயன்படுத்துவது தானே மனித இயல்பு. அப்போது கருவியின் தரம் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க மனம் விழையுமா.

ஆங்கிலேயர் காலத்தில் காசியின் புகழில் அவர்கள் அனாவசியமாகத் தலையிட்டு அதன் புனிதத் தன்மையைக் கெடுத்துவிடாத அளவுக்கு இந்துக்கள் வலிமை பெற்றுவிட்டனர்.

இன்றைய காசி தனது பழம் பெருமையை மீண்டும் பெற்று, அதனைத் தனித்தன்மை யோடு தக்கவைத்துக் கொண்டுள்ளது.

 கங்கையில் குளியல், கழுதையில் சவாரி 

காசியில் ஒருநாள் வணங்கிவிட்டு உடனே திரும்பி விடுவது சிறப்பல்ல. குறைந்தது மூன்று நாள்களாவது தங்கி, அல்லது எவ்வளவு அதிக நாள்கள் தங்க முடியுமோ தங்கி விஸ்வநாதரையும் அன்னபூரணி உள்ளிட்ட தெய்வங்களையும் வணங்கி வரவேண்டும்.

கங்கையில் நீராடி, வில்வ பத்திரம் கொண்டும் கங்கா தீர்த்தம் கொண்டும் விஸ்வநாதரை வழிபட வேண்டும். விஸ்வநாதர் கோயில், கேதாரீஸ்வரர் கோயில், விசாலாட்சி கோயில், அன்னபூ ரணி கோயில், பைரவர் கோயில், துண்டி (டுண்டி) விநாயகர் கோயில், தண்டபாணி கோயில், துர்க்கை கோயில், கெளடிபாய் கோயில், வியாச காசி ஈஸ்வரன் கோயில் ஆகியவற்றையாவது தரிசித்துப் பூஜை செய்து வர வேண்டும். 

பக்தர்கள் காலை ஐந்து மணிக்குத் தொடங்கி பகல் பன்னிரண்டு மணி வரை விஸ்வநாதருக்கு பூஜை செய்து கொண்டே இருக்கின்றனர். உச்சிகாலை பூஜையை வடகத்திய பண்டாக்கள் செய் கிறார்கள். ஆறு தட்டுகளில் அன்னம் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள்.

மாலையில் ஏழு மணிக்கு சப்தரிஷி பூஜை சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும். ஏழு அர்ச்சகர்கள் அமர்ந்து இந்த பூஜையைச் செய்வார்கள். இந்தப் பூஜை முடிவில் டமாரம் அடிப்பது விந்தையாக உள்ளது. இந்தப் பூஜை முடிந்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இரவு ஒன்பது மணிக்கு அர்த்தஜாம பூஜை ஆரம்பம். அபிஷேகம் அலங்காரம் செய்து நாகாபரணமும், குடையும் சாத்தப்படு கிறது. தீப நைவேத்தியம் செய்து விபூதி பிரசாதம் கொடுக்கிறார்கள். பிறகு, கதவு திருக்காப்பு செய்யப்படுகிறது. அன்னபூரணி கோயிலிலும் இதுவே நடைமுறை. காலை முதல் எல்லா பூஜைகளையும் பள்ளியறை பூஜை வரை தரிசிப்பது மிகவும் புண்ணியமாகும்.

விழாக்கள்: 

எல்லாப் பண்டிகை நாள்களிலும் காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. ஹோலிப் பண்டிகையும் சிவராத்திரியும் தீபாவளிப் பண்டிகையும் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.

ஹோலிப் பண்டிகையை மூன்று நாள்களுக்கு சாயப் பூச்சு, கங்கைக் குளியல், ஊரைச் சுற்றி கழுதைச் சவாரி, பஜனை, படகில் சவாரி என்று தடபுடலான முறையில் காசிமக்கள் கொண்டாடுகிறார்கள்.

காசியில் நவராத்திரி விழாவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியின் போது காசியில் நடைபெறும் அன்னகோடி உற்சவம் மிகவும் பிரசித்திப் பெற்றது. நாடெங்கிலுமிருந்து கங்கையில் நீராட வந்த மக்களுக்கு, பெரும் அளவில் அன்னதானம், ரொட்டித்தானம், பலகார தானம் நடைபெறுகிறது.

                                      - புனித பயணம் வ(ள)ரும்..

No comments:

Post a Comment