Tuesday 6 March 2018

நாட்டுக் காய்கறி சமையல்


முக்கூட்டு மசியல்

தேவை:     தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிய பரங்கி, பூசணி, சுரைக்காய் கலவை - ஒன்றரை கப்  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்  பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப், சீரகம் - 2 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 3 
 சோம்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:   அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். பருப்பு வகைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் பருப்புடன் காய்கறிகள், தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுது, வேகவைத்த காய்கறிகள், பருப்புக் கலவை, மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு கிளறி இறக்கவும்.

மஞ்சள் பூசணி பாயசம்

தேவை:    தோல் சீவி, விதை நீக்கி துருவிய மஞ்சள் பூசணி - ஒரு கப்  சர்க்கரை - ஒரு கப்  பால் - ஒரு லிட்டர்  கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்  குங்குமப்பூ - சிறிதளவு  தேங்காய்த் துருவல் - கால் கப்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  நெய் - சிறிதளவு  நெய்யில் வறுத்த உலர் பூசணி விதை - ஒரு டீஸ்பூன்  வெனிலா எசென்ஸ் - ஒரு துளி.

செய்முறை:    வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூசணித் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் பால் ஊற்றி (சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்) நன்றாக வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம், கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூ, பூசணி விதை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வெனிலா எசென்ஸ் விட்டுச் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும். பூசணிக்காய் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

சுண்டைக்காய் கொத்சு

தேவை:     சுண்டைக்காய் - அரை கப் (நறுக்கி தண்ணீரில் போடவும்)  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்  கடுகு - அரை டீஸ்பூன்  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  எள் - ஒரு டேபிள்ஸ்பூன்  புளி - எலுமிச்சை அளவு (கரைக்கவும்)  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  சீரகம் - அரை டீஸ்பூன்  தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்  கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, பிறகு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். பின்பு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த விழுது, எள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, கொதிக்கும் கலவையில் ஊற்றிக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இரும்புச் சத்துமிக்க சுண்டைக்காய் கொத்சு வயிற்றில் கிருமிகள் வராமலும் தடுக்கும்.

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

தேவை:    பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ (இரு முனைகளையும் நீக்கி, நீளவாக்கில் நடுவே கீறி விதைகளை எடுக்கவும்)  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்  பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்  பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய பிறகு இந்த மசாலாவைக் கீறிவைத்துள்ள வெண்டைக்காய்க்குள் அடைக்கவும். கடலை மாவுடன் அரிசி மாவு, மைதா மாவு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஸ்டப்ஃபிங் செய்த வெண்டைக்காயை மாவில் முக்கி எடுத்துப்போட்டுப் பொரித்தெடுக்கவும் (மெதுவாக திருப்பிப் போட்டு வேகவிடவும்). இதை சாதத்துடன் பரிமாறலாம். அல்லது, சாஸ் தொட்டுத் தனியாகவும் சாப்பிடலாம்.

முருங்கைக்காய் மசாலா

தேவை:     முருங்கைக்காய் - 3 (விரல் நீள துண்டுகளாக்கவும்)  பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - தலா அரை கப்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  சோம்பு - ஒரு டீஸ்பூன்  கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை:  வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி அரைக்கக் கொடுத் துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு அதனுடன் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, முருங்கைத் துண்டுகளைப் போட்டு மூழ்கும்வரை தண்ணீர்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேகவிடவும்.  தண்ணீர் வற்றி காய் வெந்த பிறகு இறக்கிப் பரிமாறவும். முருங்கையில் இரும்புச் சத்து, கொழுப்புச் சத்து வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. இது நரம்புகளுக்கு நல்லது.

சுரைக்காய் பர்ஃபி

தேவை:     தோல், விதை நீக்கி துருவிய சுரைக்காய் - ஒன்றரை கப்  தேங்காய்த் துருவல் - அரை கப்  மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா கால் கப்  நெய் - சிறிதளவு  பச்சை நிற ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  சர்க்கரை - ஒரு கப்  கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்  நட்ஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  சுரைக்காய் துருவலில் நீர் இல்லாமல் ஒட்டப்பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெறும் வாணலியில் மைதா மாவு சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். அதனுடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, நெய், சுரைக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பிறகு ஃபுட் கலர், நெய், ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துச் சுருள கிளறி இறக்கி நெய் (அ) வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே நட்ஸ் தூவி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.

பாகற்காய் பிட்லை

தேவை:    வட்டமாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்  வெல்லம் - சிறிதளவு  புளி - நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கரைக்கவும்)  துவரம்பருப்பு - ஒரு கப்  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 8  தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்  மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - கால் கப்  எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து வறுத்து எடுத்து விழுதாக அரைக்கவும். துவரம்பருப்புடன் பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். நறுக்கிய பாகற்காயில் சிறிதளவு உப்பு தூவி அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து ஒட்டப்பிழிந்து எடுக்கவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் , பாகற்காய் சேர்த்து வேகவிடவும். பிறகு மசித்த பருப்பு, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து குழம்பு கெட்டிப்படும் வரை வேகவிடவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்துக் குழம்பில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்தப் பாகற்காய் பிட்லை.

பீர்க்கங்காய் பஜ்ஜி
தேவை:     லேசாக தோல் சீவி வட்டமாக நறுக்கிய பீர்க்கங்காய்த் துண்டுகள் - ஒரு கப்  கடலை மாவு - ஒரு கப்  அரிசி மாவு - அரை கப்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  ஓமம் - அரை டீஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    கடலை மாவுடன் அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், ஓமம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பீர்க்கங்காயில் நீர்ச்சத்து உள்ளதால் உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.

நாட்டுக் காய்கறிக் கலவை ஊறுகாய்

தேவை:    பொடியாக நறுக்கிய, விருப்பமான நாட்டுக் காய்கறிகள் கலவை (மாங்காய், கொத்தவரை, பூண்டு என சேர்க்கலாம்) - 2 கப்  மிளகாய்த்தூள் - 50 கிராம்  கடுகு - ஒரு டீஸ்பூன்  எலுமிச்சைப் பழம் - 3  வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன்  சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - 100 மில்லி  உப்பு - தேவையான அளவு.
செய்முறை:  காய்கறிகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு சுத்தமான துணியில் உலரவிடவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ஈரமில்லாத பாத்திரத்தில் காய்கறிக் கலவை, எலுமிச்சைக் கலவையைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்க்கவும். மேலே வெந்தயப்பொடி, சீரகத்தூள் சேர்த்துக் கிளறி, காற்றுப்புகாத பாட்டிலில் கைபடாமல் ஸ்பூனால் எடுத்துப் போட்டுச் சேகரிக்கவும். நன்கு குலுக்கிவிடவும். இதை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். இரும்புச் சத்து மிகுந்த இந்த ஊறுகாயைப் பரிமாறும்முன் ஒவ்வொரு முறையும் நன்கு கிளறிவிட்டுப் பரிமாறவும்.

வெள்ளைப் பூசணி - பயறு கூட்டு

தேவை:    விதை, தோல் நீக்கி சதுர துண்டுகளாக்கிய பூசணி - ஒரு கப்  முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - சீரகம் - தலா அரை டீஸ்பூன்  சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்). 

அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப்  சோம்பு - அரை டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 4.

செய்முறை:   அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேவையான அளவு தண்ணீர்விட்டு முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து வேகவிடவும், பாதி வெந்ததும் பூசணித் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு தேங்காய் எண்ணெயில் தாளித்து கூட்டுடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மேலே மீதமுள்ள தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் பரிமாறவும். பூசணி வயிற்றுப் புண்ணில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பரங்கிக்காய் சட்னி

தேவை:     தோல், விதை நீக்கி சதுரமாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப்  தேங்காய்த் துருவல் - கால் கப்  புளி - சிறிதளவு  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்  தோல் சீவிய இஞ்சி - கால் இன்ச் துண்டு  பூண்டு - 2 பல்  கடுகு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பரங்கிக்காய், தக்காளி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும். அதனுடன் தேங்காய்த் துருவல், புளி, வேர்க்கடலை, இஞ்சி சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலந்து பரிமாறவும்.

மிக்ஸ்டு நாட்டுக் காய்கறி அவியல்
தேவை:  நாட்டுக் காய்கறிகள் கலவை (தோல், விதை நீக்கி நீளவாக்கில் நறுக்கியது) - ஒரு கப் (வாழைக்காய், பூசணி, முருங்கை, புடலை இப்படி சேர்த்துக்கொள்ளலாம்)  கெட்டித் தயிர் - ஒரு கப்  காய்ந்த மிளகாய் - 3  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - சிறிதளவு  வாழை இலை - பாத்திரத்தை மூடிவைக்க தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் -  ஒரு கப்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2  பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன் (15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்)  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். குக்கரில் காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் காய்கறி கலவை, தயிர், அரைத்த விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி சேர்த்து நன்கு கலக்கவும். இதை வேறு பாத்திரத்துக்கு மாற்றி வாழை இலையால் மூடவும். பிறகு, அதன்மீது மற்றொரு மூடியை வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பிறகு பரிமாறவும். தேங்காய் எண்ணெய் மற்றும் வாழை இலை மணத்துடன் காய்கறி அவியல் மிகவும் சுவையாக இருக்கும்.

கொத்தவரங்காய் - பருப்பு உசிலி

தேவை:   பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் - ஒரு கப்  பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (சேர்ந்து) - கால் கப்  காய்ந்த மிளகாய் - 4  கடுகு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நறுக்கிய கொத்தமல்லித்தழை -  ஒரு டேபிள்ஸ்பூன்  உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   பருப்பு வகைகளுடன் மிளகாய் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். கொத்தவரங்காய், அரைத்த பருப்புக் கலவையைத் தனித்தனியாக ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த பருப்புக் கலவையை மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கொத்தவரங்காய், உப்பு, அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும். சாதத்துக்குத் தொட்டு சாப்பிடலாம். பிரெட், சப்பாத்தி நடுவே வைத்தும் சாப்பிடலாம்.

வாழைப்பூ அடை

தேவை:    இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ -  தலா ஒரு கப்  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை  காய்ந்த மிளகாய் - 8  கறிவேப்பிலை - சிறிதளவு  தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்  கடுகு, உடைத்த உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, 6 மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மீதமுள்ள மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், இஞ்சி, மஞ்சள்தூள், வாழைப்பூ, உப்பு சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

வெண்டை - சுண்டை சூப்

தேவை:    பிஞ்சு வெண்டைக்காய் - 3 (பொடியாக நறுக்கவும்)  சுண்டைக்காய் - 6  (இரண்டாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்  சீரகத்தூள் - அரை டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  லவங்கம் - ஒன்று  பட்டை - சிறிய துண்டு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, லவங்கம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெண்டைக்காய், சுண்டைக்காய் சேர்த்து வதக்கி உப்பு, பருப்பு வேகவைத்த நீர், சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டுச் சூடாகப் பரிமாறவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்த சூப்.

வாழைத்தண்டு ரசம்

தேவை:  வாழைத்தண்டு (சிறியது) - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  ரசப்பொடி - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு  எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்)  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  வெந்தயப்பொடி, கடுகு - தலா அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து மசிக்கவும். பாதி வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.  பருப்புடன் வாழைத்தண்டு சாறு, தக்காளி, மீதமுள்ள வாழைத்தண்டு, உப்பு, பெருங்காயத்தூள், ரசப்பொடி சேர்த்து நன்கு கரைத்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி தாளித்து ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிட்டு, எலுமிச்சைச் சாறு கலந்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

நாட்டுக் காய்கறிகள் மசாலா சாட்

தேவை:   துண்டுகளாக நறுக்கிய நாட்டுக் காய்கறிகள் கலவை - ஒரு கப்  சாட் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்  ரெடிமேட் சிவப்பு இனிப்பு சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன்  ரெடிமேட் கிரீன் சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன்  வெங்காயம், தக்காளி -  தலா 2 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை)  உப்பு - தேவையான அளவு. 
செய்முறை:   காய்கறிகள் கலவையை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அகலமான  பாத்திரத்தில்  காய்கறிகளுடன் உப்பு, தக்காளி, கிரீன் சட்னி, இனிப்பு சட்னி சேர்த்துக் கிளறவும். பிறகு கொத்தமல்லித்தழை, வெங்காயம்,  சாட் மசாலாத்தூள் தூவிக் கிளறவும். இரும்புச் சத்து மிகுந்த இந்த மசாலா சாட் பரிமாறும்போது ஓமப்பொடி தூவவும்.

மாங்காய் தால்

தேவை:    மாங்காய்த் துருவல் - ஒரு கப்  பாசிப்பருப்பு, துவரம்பருப்பு (சேர்த்து) - அரை கப்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  கடுகு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து எடுத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதனுடன் பருப்புக் கடைசல் சேர்த்துக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி, நாண் வகைகளுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் சேர்ந்து சாப்பிடலாம். மாங்காய் நார்சத்து உள்ள காயாகும். பசியைத் தூண்டும்.

துவரை மசாலா சுண்டல்

தேவை:    உரித்த பச்சை துவரை - ஒரு கப்  சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  கடுகு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு எடுக்கவும்)  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப்  தோல் சீவிய இஞ்சி - கால் இஞ்ச் துண்டு  சோம்பு - அரை டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை - கால் கப் (அலசி ஆய்ந்தது)  பூண்டு - 2 பல்  எள் - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - ஒன்று.

செய்முறை:   துவரையைத் தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, துவரையைப் சேர்த்துப் புரட்டி சாட் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

வாழைக்காய்ப் பொடி

தேவை:    நாட்டு வாழைக்காய் - 2  புளி - நெல்லிக்காய் அளவு  முழு வெள்ளை உளுத்தம்பருப்பு - அரை கப்  காய்ந்த மிளகாய் - 6  பூண்டு - 3 பல்  பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை  சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:   வாழைக்காயைத் தோலோடு தீயில் சுட்டு எடுக்கவும். பிறகு தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சுக்குப் பொடி, பூண்டு, உப்பு சேர்த்து வறுத்து  எடுக்கவும். ஆறிய பிறகு புளி சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். அதனுடன் வாழைக்காய் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றி எடுக்கவும். எலும்புகளுக்கு உறுதி தரக்கூடிய சத்தான, சுவையான பொடி தயார். இதைச் சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய்  சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். பொரியல் செய்யும்போது இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.

அவரை - துவரைப் பொரியல்

தேவை:    நாட்டு அவரைக்காய் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  உரித்த பச்சை துவரை - 50 கிராம்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  நறுக்கிய  வெங்காயம் - அரை கப்  மல்லித்தூள்  (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - கால் கப்  தக்காளி - ஒன்று  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:   தக்காளியை வெந்நீரில் போட்டுச் சில நிமிடங்கள் கழித்து எடுத்துத் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். துவரையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அவரைக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெந்த துவரையைச் சேர்த்துக் கிளறி தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.

புடலை மசாலா பாத்

தேவை:    நறுக்கிய புடலங்காய் - ஒரு கப்  நறுக்கிய பீர்க்கங்காய் - கால் கப்  பாஸ்மதி அரிசி - ஒரு கப்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: பச்சை மிளகாய் - 2  பூண்டு - 3 பல்  தேங்காய்த் துருவல் - கால் கப்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  சோம்பு, ஓமம் - தலா அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு. 
செய்முறை:    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுக்கவும். அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு உதிர் உதிராக வடித்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச்  சூடானதும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், புடலங்காய் சேர்த்து வதக்கவும். பிறகு பீர்க்கங்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவிடவும். காய் வெந்த பிறகு அரைத்த விழுது, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி ஆறவிடவும்.  இந்த மசாலாவைச்  சாதத்தில் சேர்த்துக் கிளறி பரிமாறவும். புடலங்காய் புரதச்சத்து நிறைந்தது.

கத்திரி - முருங்கைக் கறி

தேவை:   முருங்கைக்காய்த் துண்டுகள் - ஒரு கப்  புளி - எலுமிச்சை அளவு  நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய் - ஒரு கப்  தேங்காய்த் துருவல் - கால் கப்  நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - அரை கப்  நெய் - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வாங்கிபாத் பவுடர் செய்ய: காய்ந்த மிளகாய் - 5  மல்லி (தனியா) , கடலைப்பருப்பு, வெந்தயம் -  தலா ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  பட்டை - சிறிய துண்டு  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை. 

செய்முறை:     புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் வாங்கிபாத் பவுடர் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், முருங்கை, கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறி மூடி, குறைந்த தீயில் வேகவிடவும். காய்கள் நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் வாங்கிபாத் பவுடர், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்து மிகுந்த உணவு இது.

கொத்தவரங்காய் வற்றல்

தேவை:    கொத்தவரங்காய் - கால் கிலோ  உப்பு - தேவையான அளவு  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:      கொத்தவரங்காயின் இரு ஓரங்களையும் நீக்கவும். பிறகு அலசி உப்பு, மஞ்சள்தூள், மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி வடிகட்டவும். இதை வெயிலில் நன்கு காயவிடவும் (முறுகலாக உடையும் பதம் வரை காயவிடவும்). பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இதை வற்றல் குழம்பு செய்யும்போது சேர்க்கலாம். அல்லது, தனியாக எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம். கொத்தவரங்காய் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

பாகற்காய் - கோதுமை புலாவ்

தேவை:     விதை நீக்கி, பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்  கோதுமை ரவை - ஒரு கப்  சிறிய பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  கடுகு - ஒரு டீஸ்பூன்  கிராம்பு, ஏலக்காய் - தலா 2  பிரியாணி இலை - ஒன்று  இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி (சேர்த்து) - கால் கப்  உப்பு, நெய், எண்ணெய் – தேவையான அளவு. 

செய்முறை:    வாணலியில் நெய், எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாகற்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து புலாவில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்த புலாவ் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.


``நாம் எத்தனையோ பல நல்ல விஷயங்களைப் பயன்படுத்துவதைச் சென்ற தலைமுறையோடு மிகவும் குறைத்துவிட்டோம். இந்தப் பட்டியலில் நாட்டுக் காய்கறிகளும் அடங்கும். முருங்கைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கத்திரிக்காய், அவரை, துவரை, சுண்டைக்காய், பாகற்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், மாங்காய், கொத்தவரங்காய், கோவக்காய், வாழைக்காய், தேங்காய் இவையெல்லாம் நம்மூர் பாரம்பர்யக் காய்கறிகள். நம் வீட்டுத் தோட்டத்திலேயேகூட பயிரிடலாம். இவை சத்தில், சுவையில் இங்கிலீஷ் காய்கறிகளுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல.

நாட்டுக் காய்கறிகள் இரும்புச்சத்து மிக்கவை. பாகற்காய், கொத்தவரை, புடலை, சுண்டைக்காய் அவரைக்காயில் சுண்ணாம்பு சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன. கத்திரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து உள்ளது. முருங்கைக்காயில் இரும்புச் சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. நாட்டுக் காய்கறிகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் குடும்ப ஆரோக்கியத்தை உயர்த்துவோம்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் சுதா செல்வகுமார், நாட்டுக் காய்கறிகளில் மசியல், பஜ்ஜி, கூட்டு, ஊறுகாய், அவியல், பாயசம், சூப், சாட் என சுவையான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார். இவற்றை எல்லாம் செய்து பரிமாறினால்... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் உங்கள் பெருமை கொடிகட்டிப் பறக்கும்.

No comments:

Post a Comment