Friday 23 March 2018

அருள்மிகு செளந்தர நாயகி உடனுறை கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்) திருக்கோயில், பாரிமுனை- சென்னை.

Image result for கச்சாலீஸ்வரர்

Ⓜ அமைவிடம்:Ⓜ

சென்னை பாரிமுனை, அரண்மனைக்காரத் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து நிமிடம் நடந்தால் கோயிலை அடையலாம்.

🌀🌱🌀🌱 BRS🌀🌱🌀🌱🌀

திருத்தலங்கள் என்றாலே தல புராணங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு புராணப் பின்னணி அல்லாத கோயில்களும் உண்டு. இக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள பல தெய்வச் சன்னதிகள் காரணமாக பல விதமான நற்பயன்கள் ஏற்படுவது கண்கூடு.

அப்படிப்பட்ட, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அரசர் அல்லாத சாமானியரால் கட்டப்பட்ட திருக்கோயில் சென்னை பாரீசில் உள்ள அரண்மனைக்காரத் தெருவில் அமைந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு செளந்தர நாயகி உடனுறை கச்சாலீஸ்வரர் திருக்கோயில்.

Ⓜ அருள்மிகு கச்சபேசர் எனப் பெயர் வரக் காரணம் :Ⓜ 

திருமால் தசாவதாரத்தில் ஆமைவடிவம்  கொண்டு இத்தலத்து ஈசனை-கச்சபேசனை-வணங்கினார்.  அதாவது கச்சபேசர் = கச்சப் + ஈசர் எனப்  பிரிக்கலாம். இதன்படி கச்சபம் என்றால் ஆமையைக் குறிக்கும்.  ஆமைக்கு அருள் புரிந்த ஈசனே  கச்சபேஸ்வரர் ஆனார். அதாவது திருமால் ஆமை வடிவம் கொண்டு இத்தலத்து ஈசனை வணங்கிய தால் இத்தலத்து ஈசனுக்கு கச்சபேஸ்வரர் எனப் பெயர் வந்தது.

Ⓜ கச்சபேஸ்வரரின் மகிமை :Ⓜ

 இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள் புரிந்து கொண்டு இருக்கும் கச்சபேசனை (வழிபட வேண்டும்) கும்பிட வேண்டும் என்று சென்றவர்களும், செல்ல வேண்டும்  என நினைத்தவர்களும், சென்று கச்சபேசனைக் கண்டவர்களும், யாவரும் இவ்வுலகத்தில் துன்பம்  நீங்கி இன்பம் எய்தி, மீளா முக்தியும் அடைவார்கள்.

Ⓜ திருமண தடை நீக்கும் ஸ்ரீதுர்கை அம்மன்:Ⓜ

கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் உள்ள ஸ்ரீதுர்கைக்கு அடுத்தபடி, ஸ்ரீகச்சாலீஸ்வரர் கோவிலில் இருக்கும் கோஷ்டத்தில் கொலுவிருக்கும் ஸ்ரீதுர்கை அம்மனே. ஸ்ரீதுர்கையின் உத்ஸவத் திருக்கோலம் கொள்ளை அழகு!, இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கு உத்ஸவ மூர்த்தம் இருப்பது சிறப்பு.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீதுர்கை அம்மனுக்கு  விளக்கு ஏற்றி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை பிராகார வலம் வந்து வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மற்றும் தேய்பிறை நவமி அன்று காலையில் இங்கு ஸ்ரீதுர்கா சண்டி ஹோமம் விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொண்டால், ஸ்ரீதுர்கையின் பேரருளைப் பெறலாம் !

ராகு- கேது பெயர்ச்சியின்போது இங்கே உள்ள ஸ்ரீதுர்கைக்கும், சித்தி-புத்தி சமேத ஸ்ரீபஞ்சமுக விநாயகருக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல நன்மைகளும் கைகூடும். ராகு- கேது பெயர்ச்சியின்  போது ஸ்ரீதுர்கை விளக்கு ஏற்றி வழிபட்டால் திருமணம் நடைபெறும். குழந்தை வரம் கிட்டும்.

Ⓜ ஆலய அமைப்பு: Ⓜ

பிரதான சாலையான அரண்மனைகாரத் தெருவிலிருந்து ஆலயத்தில் நுழைந்ததும் வலப்பக்கத்தில் தெய்வ விருட்சமான அரசும், வேலும் பின்னி பிணைந்து இருக்கும் அற்புத காட்சியையும், இடது புறம் பிரம்மாண்டமான அரச மரத்தின் கீழ் முழுமுதற் கடவுளான மகாகணபதியும், நாக விக்ரகங்களும் அமைந்துள்ளது ஒரு அழகு காட்சி.

கோபுர வாசலை அடைந்ததுமே நம் எதிரே கயிலாய மலையில் சிவபெருமான், பார்வதி தேவி, கணபதி, முருகன் ஆகியோருடன் வீற்றிருக்கும் காட்சியை காண்கிறோம். கயிலாய மலையை தன்னால் தூக்க முடியும் என்ற ஆணவத்தில் இராவணன் அதை தூக்க முயற்சிக்க, சிவபெருமான் தன் கால் கட்டை விரலால் அதை அழுத்த, இராவணன் சிக்கி தவிக்கிறான்.

தன்னை இந்த நிலையில் இருந்து காக்க சிவபிரானை வேண்டி - சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான சாமவேதத்தை சாமகானமாக தனது பத்து தலைகளில் ஒன்றை கொய்து, வீணையின் தலைகுடமாக்கி, இருபது கைகளில் ஒன்றை வீணையின் தண்டாக்கி, தனது நரம்புகளையே நாணாக்கி இசை பாடுகிறான். இதில் மயங்கிய சிவபெருமான் அவனை விடுவித்து இராவணேஸ்வரன் என்ற பட்டத்தையும் அளிக்கிறார். இக்கயிலாய மலை காட்சியிலே, பாரத போருக்காக பாசுபதாஸ்திரம் வாங்க அர்ச்சுனனை அழைத்து செல்லும் ஸ்ரீ கிருஷ்ணர், கயிலாயத்தில் கால் பட்டால் பாவம் எனக் கருதி தன் கைகளாலேயே தலை கீழாக  கைலாயம் செல்லும் காரைக்கால் அம்மையார் மற்றும் பரிவார தேவர்களும், பிருகு முனிவர், ஒளவையார் ஆகியோரும் காட்சி அளிப்பது, நம்மையே கைலாயம் அழைத்து செல்வது போல் ஓர் அரிய அமைப்பாகும்.

ஆலயத்துக்கு அணிகலனான, பிரம்மாண்ட கொடி மரம் பலிபீடம், நந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் ஸ்ரீ கச்சபேசனின் இருமருங்கிலும் ஐந்து முகங்களுடன் சித்தி புத்தி சமேதராக பஞ்சமுக கணபதி சிங்க வாகனத்திலும், - ஆறுமுகப்பெருமான் சன்னதியின் மேல் பகுதியில் இருக்கும் காட்சி, கந்தன் சூரனை சம்ஹரித்ததும், சூரனின் உடல் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறி, முருகனை வணங்கும் கோலம், ஆனந்தப் பரவசமூட்டும்.

எந்தத் திருக்கோயிலிலும் காணக் கிடைக்காத அற்புதக் காட்சியாக, இவ்வாலயத்தின் மூலவர் சிவபெருமான் கச்சபேசன் 5 ஆசனங்கள் இருக்கைகள் கூர்மாசனம் (ஆமை) அஷ்ட நாகாசனம் (8 நாகங்கள்) சிம்ம ஆசனம் (சிங்கம்) யுகாசனம் (காலங்கள்) கமல்-விமலாசனம் (தாமரை மலர் குவிந்தும் விரிந்தும் )அமர்ந்து, ஆனந்தக் காட்சியைத் தருகிறார். இந்த ஐந்து ஆசனங்கள் மேல் அமர்ந்துள்ள சிவபெருமானின் மேற்கூரையாக பன்னிரெண்டு சூரிய தூண்கள் மேல், பிரம்மா, விஷ்ணு , சிவன் மூவரும் மூன்று சிகரங்களாக அமைந்துள்ளதும், மிகச் சிறப்பானதாகும்.

சிவபெருமான் அனைத்து ஆலயங்களிலும், லிங்க உருவமாகத் தான் தரிசனம் தருகிறார். ஆனால் இத்திருக்கோயிலில் தான் மூலலிங்கத்தின் பின்புறம், ஐந்து முகங்களுடன் சிவபெருமான், சதா சிவ மூர்த்தி மனோன்மணித் தாயாருடன், காட்சி தருகிறார்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முற்பட்டபோது மத்தாக மந்தர மலையை வைக்க அது கடலில் அழுந்தவே, மகா விஷ்ணு ஆமையுரு (கச்சபம்) எடுத்து தன் மீது மத்தை வைத்து கடையச் சொன்னார். அதன்படி செய்து அமுதமும் கிடைத்தது. திருமால் ஆமை வடிவில் இறைவனை பூஜித்ததால்* "கச்சப இதி ஈஸ்வரனா"* அதாவது "கச்சபேசுவரர்" என்று பெயராயிற்று. இந்த வரலாறு எல்லோருக்கும் எளிதில் விளங்குமாறு தென் சுவரில் பல வர்ணங்கள் தீட்டப்பட்டு விவரிக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தின் உட்பிரகார சுவர்களிலும், அலங்கார மண்டபத்தில் சிவபெருமானின் பல்வேறு சிறப்புகளை விளக்கும், அழகிய வண்ணப்படங்களும், ஆலய சுவர்களில் இறைவன் புகழை விளக்கும் அழகிய தேவார பாடல்களும், நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும்.

இங்கு நவக்கிரகங்கள் வேறெங்கும் காணமுடியாத நூதன ஜாதகக் கணிப்பாகும். அதிதேவதைகள், நட்சத்திர நாயகர் இவர்களுக்கெல்லாம் சிகரமாயமைந்த சிவபெருமானின் கீழ் அஷ்ட மூர்த்திகள், திக்பாலகர்கள், பன்னிரண்டு ராசிகள், நான்கு யுகம், திதி வார நட்சத்திரம், கரணம் யோகம், ஸப்த மாதா அஷ்டவஸு, த்வாதச ஆதித்யர்கள், அபிஜித்துடன் கூடிய 28 நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவைகளை விமான அமைப்பில் தரிசிக்கலாம்.

ஆலயத்தை உள்பிரகார வலம் வரும்போது மிகப் பிரம்மாண்டமான உற்சவ மூர்த்தியாக, சோமாஸ்கந்தராக கச்சபேசப் பெருமான், செளந்தரநாயகியை தரிசிக்கலாம்.. பண்டைய காலத்தில் அனைத்துத் திருவிழாக்களிலும் புறப்பாடு ஆன இப்பெருமான் மிகுந்த கனம் ஆனதால், இப்போது ஆண்டிற்கு இருமுறைதான் இத்திரு உருவின் வீதி உலா நடைபெறுகிறது.

சோமாஸ்கந்தரின் சன்னதிக்கு அடுத்து, ஸ்தல-கச்சப மகா கணபதி தரிசனம் கிடைக்கிறது. இத்திருக்கோயில் நிர்மானம் (1728) செய்வதற்கு முன்பே, இந்த மகா கணபதி, இக்கோயிலை ஒட்டியுள்ள குளக்கரையில் (அப்போதைய குட்டை) வீற்றிருந்ததாக சரித்திரம் கூறுகிறது.

மகாகணபதியின் சன்னதியை அடுத்து, சிவபெருமானின் மூலஸ்தானத்தின் நேர்பின்புறம், சிவபெருமானின் மறு அம்சமாக - ஐந்துமுகன் ஈசனின் நெற்றி உதித்த  ஆறுமுகப் பெருமான் - வள்ளி, தேவயானையுடன் உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ ஷண்முகராக, மயில் வாகனத்துடன் நின்ற கோலத்தில் அளிக்கும் ஆனந்த தரிசனம், நிலைத்து நின்று அருளை வாரி வழங்கும் கச்சியம்பதி ஸ்ரீ ஷண்முகனை வணங்கி வேண்டினால் நினைப்பது நடக்கும், கேட்பது கிடைக்கும். அடுத்து ஸ்ரீ துர்காம்பிகையின் உற்சவ மூர்த்தி தரிசனமும் இதயத்தை அள்ளும்.

வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ துர்கா தேவியின் மூலஸ்தானக் காட்சி அற்புதமானது. இந்த அன்னையை உள்ளன்போடு வெள்ளி செவ்வாயில் தொடர்ந்து வழிபட்டால் மனைப்பேறு, மணப்பேறு, மக்கட்பேறு ஆகியவை கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவப் பூர்வ உணர்வு, அன்னையின் சன்னதிக்கு நேர் எதிரே சப்த மாதாக்கள் சப்த பர்வதங்கள், சப்த சமுத்திரங்கள் அமைந்துள்ள காட்சி, அனைத்துமே அன்னையின் அருளாட்சி தான் என்பதை உணர்த்துகிறது.

அடுத்து தேவாசிரியர் மண்டபத்தில் சிவனடியார்களான 63 நாயன்மார்களின் அழகிய சிலை உருவக் காட்சிகளும், அந்தந்த நாயன்மார்களின் பாதத்திலே, அவர்களின் குறிப்புகளும் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும், பெரிய புராண ஆசிரியர் சேக்கிழாரும், நாயன்மார்கள் சரிதத்தை உணர்த்த வந்த பொள்ளா பிள்ளையார் தரிசனமும் கூட உண்டு.

உள் பிரகாரத்தை வலம் வருகையில் நால்வர், ஸ்கந்த புராணம் இயற்றிய கச்சியப்ப சிவாச்சாரியார், நீல கண்ட சிவாச்சாரியார் இவர்களது சிலா விக்ரகங்களும் காணப்படுகின்றன.

சைவத்தின் மேன்மையை நிலை நாட்ட பூர்வாசிரமத்தில் கஞ்சனூரில் வைஷ்ணவ குலத்தில் உதித்து சுதர்ஸன ஆழ்வார் என்ற திவ்ய திருநாமம் தாங்கி சைவமே சிறந்தது என்று உலகிற்கறிவிப்பான் வேண்டி பழுக்கக் காய்ச்சிய இரும்பு பீடத்தில் இனிது ஏறி இக்குவலயம் மெச்சும்படி நேர்ந்த ஹரதத்தரையும் இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீ நடராஜர் சந்நதியில் அம்பிகை சிவகாமியுடன் பன்னிரு திருமுறை வேதங்கள் இவற்றுடன் சிதம்பர ரகசியமும் இடம் பெற்றிருக்கிறது. இச்சந்நிதி வாயிலின் வலபுறத்தில் கோவிந்தராஜப் பெருமாளும், இடப்புறத்தில் பதிபக்தி நிறை அனுசூயாவிற்கு காட்சி தந்த தத்தாத்ரேயரும் காட்சியளிக் கின்றனர்.

சிதம்பரத்தில் சயன கோலத்தில் காணப்படும் பெருமாள் இங்கு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகிறார். இக்காரணங்களால் இச்சந்நதி சிதம்பரத்திற்கு ஒப்பானதாகக் கருதப்படுகிறது.

இரண்டு கரங்கள் கொண்டு துதிக்க கமலங்களில் அமர்ந்து காணும் கெஜலட்சுமியையும் வெள்ளைத் துணியணிந்த வெண்தாமரைச் செல்வி வீணையை விரல்கொண்டு மீட்டும் சரஸ்வதியையும், தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம்.

வலம் வந்ததும், உலகை காக்கும் அன்னையாம் உமாதேவியை அழகு கொஞ்சும் சௌந்தர நாயகியாய் தரிசிக்கும் போது இதயம் லேசாகி, மகிழ்ச்சி ஊற்றெடுக்கிறது. அன்னையின் இருமருங்கிலும், வீரபத்ரஸ்வாமியும், கால பைரவ மூர்த்தியும் காட்சியளிப்பது ஒரு அற்புதமாகும்.

செளந்தரநாயகி மலைமகளாய் காட்சிதர, அலைமகளாய் மகாலட்சுமியும், கலைமகளாய் சரஸ்வதியும் தரிசனம் அளிப்பது மிகச் சிறப்பானது.

ஆலய வெளிப்பிரகாரத்தை வலம் வரும்போது, மகா கணபதியின் அற்புத தரிசனம் கண்டதும், முருகப்பெருமான் சன்னதி தெரிகிறது. இவ்வாலய முருகன் - செங்கல்வராயன் என்ற பெயரோடு தனிச் சன்னதியிலும், இருபக்கமும் தனிதனி சன்னதியாக, வள்ளி தேவானையும் இருப்பதும் ஆனந்தம்.

பாம்பன் சுவாமிகள் தன் பாடலில் "செங்கல்வராயா" என்று முருகனை அழைத்தது இத்திருத்தல முருகன் பெருமையைதான். முருகனுக்கு மயில்தான் என்றாலும் இங்கு மட்டும் மயிலுக்கு பதிலாக யானை-ஐராவதம் இடம் பெற்றிருப்பது மிகமிக அபூர்வமாகும். இச்சன்னதி காட்சி திருத்தணி முருகன் சன்னதிக் காட்சியாகும்.

ஸ்ரீ ஆதிசங்கரரின் தனிச்சன்னதியை தரிசித்து. இவ்வாலயத்தை நிர்மாணித்த திரு. தளவாய் செட்டியார் சார்ந்திருந்த பேரிச் செட்டியார்கள் குலத்தின் குல குருவான முந்திகேஸ்வர சுவாமியின் சன்னதியை தரிசித்து, தனிச் சன்னதியில் தரிசனம் தரும் ஆஞ்சனேயரை அருள் வேண்டலாம்.

அடுத்துள்ள தனி மண்டபத்தில் காலங்களைக் கடந்த தூண் ஆஞ்சனேயரின் தரிசனத்தோடு. மண்டபம் ஏறினால் இடப்புறம், பூரணை புஷ்களா சமேத ஹரிஹரபுத்திரரின் மூலவிக்ரக தரிசனம் நம்மை ஈர்க்கிறது.

இம்மண்டபத்தில் பஞ்சலோகப் பொன்னால் செய்யப்பட்ட ஹரிஹர சுதன், ஆனந்த சித்தன், சபரி கிரிசன், ஸ்ரீ சின்முத்திரையோடு, தவக்கோலத்தில் ஞான குருவாக, ஸ்ரீ ஐயப்பப் சுவாமியாக அருள் பாலிக்கும் தெய்வீகம் நமக்கு அருளை வழங்குகிறது. இச்சன்னதியின் தனிச்சிறப்பு, 1949-50 காலகட்டத்தில் தற்போதைய சபரிமலை ஆலயம் புதிதாக நிர்மாணம் செய்யப்படும் போது, இன்று சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனின் திருஉருவம், பல ஊர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, சென்னையில் நம் திருக்கோயிலில் மட்டும், மூன்று தினங்கள் அமர்ந்திருந்து பிறகு சபரிக்கு சென்றது. சபரி ஐயன் அமர்ந்த அதே இடத்தில் ஐயப்ப விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சென்னை மாநகரிலேயே முதல் ஐயப்பன் சன்னதி அமைந்த சிறப்பு, இத் திருக்கோயிலுக்கே உரியது.

இதிகாச, புராண, நாயன்மார் வரலாறுகளை விளக்கும் பிம்பங்களை சாதாரணமாக எல்லா கோயில் கோபுரங்களும் தாங்கி இருக்கின்றன. ஆனால், இக்காட்சிகள், ஒரே இடத்தில் இல்லாமல் இத்திருக்கோயிலில் தனித்தனியே ஆங்காங்கே சுவர்கள், மண்டபங்கள் மீது பெரிய அளவில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பக்தர்கள் ஒன்றையும் விடாமல் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாய் இருப்பது இக்கோயிலின் மற்றொரு விசேஷமாகும்.

ஆலயத்தை தரிசித்து அண்ணலின் அருளோடு வெளி வரும்போது முன்கோபுரத்தின் மேற்கு நோக்கி பஞ்சபூத ஸ்தலங்களின் தெய்வக் காட்சிகளும், சப்தலிங்க தரிசனமும். இறையருளை நமக்கு மேலும், மேலும் வழங்குவது ஸ்ரீ சௌந்தர நாயகி உடனுறை ஸ்ரீ கச்சபேசன் அருளால்தான்.

Ⓜ பஞ்சவாகன சிவன்:Ⓜ

பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், "கச்சபேஸ்வரர்' என்றும், "கச்சாலீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

"கச்சபம்' என்றால் "ஆமை' என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Ⓜ ஸ்தலபுராணம்:Ⓜ

வரலாறும், சிறப்பும் கோவில்கள் ஏற்பட்டதற்கு ஆதாரமாக இதிகாச புராண கதைகளும், சரித்திர சான்றுகளும் கேள்விப்படுகிறோம். இவை எதுவும் இன்றி பக்தர்களுக்கிடையே பிரபலமாய் விளங்கும் கோயில்களும் சில உண்டு. அவைகளில் ஒன்று தான் சென்னையில் உள்ள ஸ்ரீ கச்சபேசுவரர் திருக்கோயில் மொழிவழக்கத்தில் கச்சாலீஸ்வரர் என்று வழங்கி வருகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கச்சபேசுவரர் கோவிலைப் போலவே இது அமைந்துள்ளது.

1700 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியில் சென்னை கோட்டையில் கிழக்கு இந்திய கம்பெனியில் "துபாஷ்" ஆக வேலை பார்த்த தளவாய் செட்டியார் பெரிய சிவபக்தர். காஞ்சியில் உள்ள ஸ்ரீ கச்சபேஸ்வரரை அங்கு சென்று தினசரி தரிசித்து விட்டு வருவது வழக்கம்.

அப்படி ஒரு நாள் கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது.

"என்ன செய்வேன் இறைவா !' என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது. பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயம் ! அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார்.

பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர்.  இறைவன் அவர் கனவில் தோன்றி சென்னையிலேயே ஆலயம் அமைத்து வழிபட பணித்தார். வெள்ளை அதிகாரிகள் ஆதரவுடன், அப்போது ஒரு கணபதி சிலையும், ஒரு குட்டையும் அமைந்திருந்த, தற்போது நம் ஆலயம் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்து, 1720 ஆம் ஆண்டில் தொடங்கி இத்திருக்கோயிலை நிர்மாணித்து 1728 ஆம் ஆண்டு, முதல் கும்பாபிஷேகத்தை நிகழ்த்தினார்.

ஸ்ரீ தளவாய் செட்டியார் அவரது மகனைவி சுந்தரி ஆகியோரின் திருஉருவங்களை ஆலயத்தின் தென்பிரகாரத்தில் உள்ள ஒரு தூணில் காணலாம்.

இறைவன் : ஸ்ரீ கச்சாலீஸ்வரர்(கச்சபேஸ்வரர்).

தாயார் : ஸ்ரீ அழகாம்பிகை.

தல விருட்சம் : கல்யாணமுருங்கை மரம்

தீர்த்தம் : சிவகங்கை தீர்த்தம்

ஆகமம்/பூஜை : சிவாகமம்


Ⓜ நடை திறக்கும் நேரம்:Ⓜ

 
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


🅱 பூசைக்காலம் : 🅱


கச்சாலீஸ்வரருக்கு தினந்தோறும் 4 காலப் பூசைகள் நடைபெறுகின்றன.

🌀 காலை சந்தி காலை 8 மணிக்கு

🌀 உச்சி காலம் முற்பகல் 11 மணிக்கு

🌀 சாயங் காலம் (சாயராட்சை)மாலை 6 மணிக்கு

🌀 அர்த்த சாமம் இரவு 8.30 மணிக்கு


🅱 திருவிழாக்கள் :🅱


♻ சித்திரை – பிரம்மோத்சவம்

♻ வைகாசி - வைகசி விஷாகம்

♻ ஆனி - ஆனி திருமஞ்சனம்

♻ ஆடி - ஆடி பூரம்

♻ ஆவணி – உற்சவம்

♻ புரட்டாசி – நவராத்திரி

♻ ஐப்பசி - கந்தா சஷ்டி

♻ கார்த்திகை - ஐயப்பன் பூஜை : கார்த்திகை தீபம்

♻ மார்கழி - தனுர்மாத பூஜை

♻ தை - பொங்கல் திருவிழா

♻ மாசி - மகா சிவராத்திரி

♻ பங்குனி - பங்குனி உத்திரம்  

No comments:

Post a Comment