Tuesday 6 March 2018

அழகு என்பது ஆரோக்கியம் !


`அழகு என்பது ஓர் ஆற்றல். புன்னகை என்பது ஓர் ஆயுதம்' என்றொரு பழமொழி உண்டு. இன்றைய சூழலில் அழகு என்பது ஆரோக்கியம். சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினாலே முழு ஆரோக்கியத்தை நோக்கி நாம் முன்னேறுவோம். இதோ... நம் கிச்சன் கிளினிக்கிலேயே செய்யக்கூடிய சருமப் பராமரிப்புக் குறிப்புகளை வழங்குகிறார் அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அசோக்.
நிறம் மிளிரும்

வீட்டிலேயே இயற்கையான பிளீச்சிங் செய்யலாம். வெதுவெதுப்பான பாலில் கசகசா ஒரு டீஸ்பூன், தோல் எடுத்த இரண்டு  பாதாம் பருப்பை ஊறவைத்து விழுதாக அரைத்து முகத்தில் பூச நிறம் மிளிரும்.

முகம் பளிச்சிடும்

சிலருக்குச் சருமம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் 10 வால்நட்களை (மிகுந்த எண்ணெய் பசையுள்ளது)  எடுத்துச் சூடான பாலில் ஊறவைத்து விழுதாக அரைத்து, அதில் ரோஸ் ஆயில் 50 சொட்டுகள் கலந்து ஃப்ரிட்ஜில் சேமிக்கவும். இதை தினசரி சிறிது எடுத்து முகத்தில் ஸ்கிரப்பிங் செய்வதுபோல தேய்த்தால் இறந்து உலர்ந்துபோன செல்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

சருமம் இறுகும்

உருளைக்கிழங்கு 2, பாகற்காய் 2 எடுத்து நன்றாகத் துருவி வெயிலில் நன்கு காயவைக்கவும். சருகாகக் காய்ந்ததும், மிக்ஸியில் பொடித்துச் சலித்து வைத்துக்கொள்ளவும். அதில் பாதி பங்கு அரிசி மாவு கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். வாரம் இருமுறை இந்தப் பொடியுடன் மோர் கலந்து முகத்தில் ‘பேக்’காக போட்டு 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் சருமத்தின் கருமை நீங்கும்; சுருக்கங்கள் வராமல் சருமம் இறுகும்.

சருமம் தகதகக்கும்

பன்னீர் திராட்சையைக் கொட்டையுடன் மிக்ஸியில் அடித்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக்கொண்டு அவ்வப்போது முகத்திலும் கழுத்திலும் தேய்த்தால் மிகச்சிறந்த இயற்கையான ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆஸிட் கிடைக்கும். இதனால் சருமம் தகதகக்கும்.

சருமம் மின்னும்

நன்கு கனிந்த வாழைப்பழத்தின் தோலில் சிறிதளவு சர்க்கரை தூவி முகத்தில் தேய்த்தால் ஃபேஷியல் செய்த மாதிரி சருமம் மின்னும்.

சுருக்கங்கள் நீங்கும்

காலை, இரவு இரண்டு வேளைகளும் முகம் கழுவித் துடைத்துச் சுத்தமான ஜோஜோபா ஆயிலைத் தடவினால் முகத்தில் சுருக்கம் ஏற்படாது.

முடி கொட்டுவது நிற்கும்

கண்களில் உள்ள இமை முடிகள் கொட்ட ஆரம்பித்தால், ஜோஜாபா ஆயிலுடன் விளக்கெண்ணெய் கலந்து ஒரு பஞ்சில் தொட்டு ஒற்றி ஒற்றி எடுத்தால் முடி கொட்டுவது நிற்கும்.

கைகளின் நிறம் மேம்படும்

முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கைகளுக்கும் கொடுக்க வேண்டும். 

2 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து மசாஜ் செய்து குளித்துவந்தால் கைகளின் நிறம் மேம்படும்.

சருமம் பொலிவுறும்

மஞ்சள் பூசணிக்காயின் சதைப் பகுதியுடன் பால் சேர்த்து அரைத்து, அதில் ஆவாரம்பூ பொடியைக் கலந்து குழந்தையின் உடலில் பூசி, சிறிது நேரம் கழித்துத் தேய்த்துக் குளிப்பாட்டிவிட, குழந்தையின் சருமம் பொலிவுறும்.

கண்கள் பளிச்சிடும்

தாமரை இதழ்களை விளக்கெண்ணெயுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் காற்றுப்புகாத டப்பாவில் சேர்த்து ஃப்ரிட்ஜில் சேமிக்கவும். தினசரி இந்த விழுதைக் கண்களைச் சுற்றித் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் கண்கள் பளிச்சிடும்; கருமை மறையும்.

உதடுகள் பொலிவுறும் 

உதடுகள் கருமைக்கு பீட்ரூட் சாற்றில் சிறிது கிளசரின், தேன், லைம் ஆயில் ஐந்து சொட்டுகள் கலந்து ஒரு பஞ்சில் தொட்டு ஒற்றி ஒற்றி எடுக்கவும். ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment