Tuesday, 6 March 2018

மைசூர் ரசம் முதல் வேப்பம்பூ ரசம் வரை...


தென்னாட்டுச் சமையலில் மிக முக்கிய இடம்வகிக்கும் ரசத்தின் பல்வேறு வகைகளைத் தயாரிக்க தேவைப்படும் பொடிகளை எப்படிச் செய்வது என்று சென்ற இதழில் பார்த்தோம். அந்தப் பொடிகளைப் பயன்படுத்தி ஊரைக்கூட்டும் மணத்தில், சொக்கவைக்கும் சுவையில் விதம்விதமான ரசங்களைச் செய்து அசத்துவோம்... வாருங்கள்! 
மைசூர் ரசம் 

தேவையானவை: வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், தக்காளி -  2, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, மைசூர் ரசப்பொடி - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய், பெருங்காயத்தூள், கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை ஒரு கப் நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டவும். தக்காளியுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வேகவைத்து மசித்த துவரம்பருப்பு, பருப்பு வேகவைத்த நீர், மைசூர் ரசப்பொடி, வெல்லம், உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். ரசம் நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்,  பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

ஆந்திரா ரசம் 

தேவையானவை: 
தக்காளி - 2, புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, ஆந்திரா ரசப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 6 பல் (தட்டவும்), மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம்  -  தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: புளியை ஒரு கப் நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டவும். தக்காளியுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் புளிக்கரைசல், தட்டிய பூண்டு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.  பிறகு ஆந்திரா ரசப்பொடி, உப்பு சேர்த்து ஐந்து  நிமிடங்கள் கொதிக்கவிடவும். ரசம் நுரைத்து வரும் போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, சீரகம்,  காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் கலக்கவும். மேலே  கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை தூவி பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

உடுப்பி சாறு 

தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், தக்காளி - 3, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உடுப்பி ரசப்பொடி - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெல்லம் - சிறிய துண்டு, கடுகு,  சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை  -  சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: துவரம்பருப்புடன் தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். ரசம் லேசாக நுரைத்து வரும்போது  உடுப்பி ரசப்பொடி சேர்த்து, கொதி வரும்போது வெல்லம், உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.  வாணலியில் நெய்விட்டு கடுகு,  பெருங்காயத்தூள், சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து ரசத்துடன் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

மிளகு ரசம் 

தேவையானவை: புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகு ரசப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை: புளியை ஒரு கப் நீரில் ஊற வைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டவும். புளிக்கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். அதனுடன் மிளகு ரசப்பொடி, உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். ரசம் நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் கலக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

பருப்பு ரசம் 

தேவையானவை: பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பருப்பு ரசப்பொடி  - 2  டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - அரை டீஸ்பூன். 

செய்முறை: புளியை ஒரு கப் நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டவும். புளிக்கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். அதனுடன் பருப்பு வேகவைத்த நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ரசம் நுரைத்து வரும்போது பருப்பு  ரசப்பொடி,  உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, சீரகம்,  காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் கலக்கவும். மேலே  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறும் வரை மூடி வைக்கவும். 

எலுமிச்சை ரசம்  /  ஆரஞ்சு ரசம்  /  பைனாப்பிள் ரசம்  /  தர்பூசணி ரசம்

தேவையானவை: எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன் (அ) ஆரஞ்சு சாறு – அரை கப் - புளித்த பழத்தைப் பயன்படுத்தவும் (அ) பைனாப்பிள் சாறு – கால் கப் (அ) தர்பூசணிச் சாறு - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், பச்சை மிளகாய் - 2  (கீறவும்), ரசப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு,  சீரகம்  -  தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள்  -  அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் -  கால் டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை  -  சிறிதளவு, உப்பு  -  தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர், பச்சை மிளகாய் சேர்த்துக் கொதிக்கவிடவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). ரசம் லேசாக நுரைத்து வரும்போது ரசப்பொடி, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். பிறகு, பழச்சாற்றை (எலுமிச்சை / ஆரஞ்சு / பைனாப்பிள் / தர்பூசணி) சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் கலக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

புதினா  /  கொத்தமல்லி  /  கறிவேப்பிலை  /  தூதுவளை  /  ஓமவல்லி  /  நாரத்த இலை ரசம்

தேவையானவை: புதினா  (அ)  கொத்தமல்லித்தழை  (அ)  கறிவேப்பிலை  (அ)  தூதுவளை  (அ)  ஓமவல்லி (அ) நாரத்தை இலை - ஒரு கப், பூண்டு - 4 பல், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, ரசப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கொத்தமல்லித்தழை,  கறிவேப்பிலை  -  சிறிதளவு, கடுகு,  சீரகம்  -  தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு  -  தேவையான அளவு, நெய் - அரை டீஸ்பூன்.

செய்முறை: புளியை ஒரு கப் நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டவும். இலையுடன் (புதினா  (அ) கொத்தமல்லித்தழை (அ) கறிவேப்பிலை (அ)  தூதுவளை (அ) ஓமவல்லி (அ) நாரத்தை இலை), பூண்டு சேர்த்து இடிக்கவும். புளிக்கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.  பிறகு  பூண்டு - இலை கலவை, ரசப்பொடி, உப்பு சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ரசம் நுரைத்து வந்ததும் இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து ரசத்துடன் கலக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

ஆப்பிள்  /  மாங்காய்  /  இஞ்சி ரசம் 
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள்  (அ)  மாங்காய்த் துருவல் - ஒரு கப் (அ) தோல் சீவி துருவிய இஞ்சி - கால் கப், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - அரை கப், தக்காளித் துண்டுகள்  - கால் கப், ரசப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு,  சீரகம் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  - சிறிதளவு, நெய் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஆப்பிள் துண்டுகள் (அ)  மாங்காய்த் துருவல் (அ) இஞ்சித் துருவலுடன் தக்காளித் துண்டுகள், மஞ்சள்தூள், மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  அதனுடன் மசித்த துவரம்பருப்பு, ரசப்பொடி, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு,  சீரகம்,  காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் கலக்கவும். மேலே  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

வேப்பம்பூ ரசம் 

தேவையானவை: 
காய்ந்த வேப்பம்பூ - ஒரு டேபிள்ஸ்பூன், பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 3, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  -  சிறிதளவு, கடுகு,  சீரகம்  -  தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்  - தலா அரை டீஸ்பூன், ரசப்பொடி  -  2  டேபிள்ஸ்பூன், உப்பு  -  தேவையான அளவு, நெய் -  ஒரு டீஸ்பூன்

செய்முறை: புளியை ஒரு கப் நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டவும். புளிக்கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு பருப்பு வேகவைத்த நீர், ரசப்பொடி, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் அரை டீஸ்பூன் நெய்விட்டு மிதமான சூட்டில் வேப்பம்பூவைக் கறுகாமல் நிறம் மாறும் வரை பொரித்தெடுத்து ரசத்தில் சேர்க்கவும். வாணலியில் மீண்டும் அரை டீஸ்பூன் நெய்விட்டு கடுகு,  சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து ரசத்துடன் கலக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

No comments:

Post a Comment