Tuesday 6 March 2018

சத்தான பருப்பு ரெசிப்பிகள்

தால் சாண்ட்விச்

தேவை:     கோதுமை பிரெட் - 8 ஸ்லைஸ்  வேகவைத்த பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு கலவை – 100 கிராம்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)  மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை  நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு  நெய் அல்லது வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.  
செய்முறை: வேகவைத்த பருப்புக் கலவையுடன் மிளகுத்தூள், உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசையவும். இதை பிரெட் ஸ்லைஸ்களின் மீது தடவவும். ஒரு பிரெட்டின் மீது மற்றொரு பிரெட்டை வைத்து அழுத்தவும். (பருப்புக் கலவை நடுவில் வர வேண்டும்). தவாவில் பிரெட் ஸ்லைஸ்களை அடுக்கி, சுற்றிலும் நெய் (அ) வெண்ணெய் சேர்த்து இருபுறமும் மொறுமொறுப்பாக டோஸ்ட் செய்து எடுக்கவும். மேலே நறுக்கிய வெங்காயம் தூவிப் பரிமாறவும்.

டொமேட்டோ பப்பு

தேவை: முப்பருப்புக் கலவை (துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து) – 100 கிராம்  தக்காளி – 5 (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  பூண்டு - 2 பல் (தட்டவும்)  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: 
    நெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: குக்கரில் நெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு பருப்புக் கலவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 (அ) 4 விசில்விட்டு இறக்கவும். ஆறிய பிறகு நன்கு மசித்துப் பரிமாறவும்.

லெமன் தால் 

தேவை:     பாசிப்பருப்பு – 100 கிராம்  தோல் சீவி துருவிய இஞ்சி - 2 டீஸ்பூன்  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை  எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     நெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை: பாசிப்பருப்புடன் இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துப் பருப்புடன் கலக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த லெமன் தால் எல்லோருக்கும் ஏற்றது. 

முப்பருப்பு மசாலா போண்டா

தேவை:     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்  பச்சை மிளகாய் - இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்  நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் கலவை - அரை கப்  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)  சமையல் சோடா - ஒரு சிட்டிகை  சோம்பு - சிறிதளவு  எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு  நெய் - 2 டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி ஊறவைத்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சமையல் சோடா, உப்பு, நெய், புதினா கலவை, பச்சை மிளகாய் - இஞ்சி  விழுது, சோம்பு, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய உருண்டைகளாக எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

மிளகு - பூண்டு பருப்புப் பொடி

தேவை:     துவரம்பருப்பு – 100 கிராம்  மிளகு - 2 டீஸ்பூன்  பூண்டு - 4 பல் (தட்டவும்)  கறிவேப்பிலை – சிறிதளவு  பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை வெறும் வாணலியில் தனித்தனியாகச் சேர்த்து,  வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடியாக அரைத்து எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்தப் பொடியைச் சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் அல்லது நெய்விட்டுக் கலந்து சாப்பிடலாம்.

துவரம்பருப்புச் சுண்டல்
தேவை:    
 குழையாமல் வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப்  கடுகு – ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் – ஒன்று  வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்   கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

மல்டி தால் சூப்

தேவை:     கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம்  சர்க்கரை – ஒரு சிட்டிகை  பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா ஒன்று  மிளகுத்தூள், நெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 
குக்கரில் பருப்புகளுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், தேவையான நீர் சேர்த்துக் குழைய வேகவிட்டு இறக்கவும். ஆவி அடங்கியவுடன் குக்கரைத் திறந்து, இரண்டு பங்கு நீர் சேர்த்துச் சூடாக்கி, நன்கு நுரைத்து வரும்போது இறக்கவும். இதை டம்ளர் / சூப் கப்பில் ஊற்றி மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிதளவு நெய்விட்டுப் பரிமாறவும்.

தால் மக்னி 

தேவை:  தோலுடன் கூடிய கறுப்பு உளுத்தம்பருப்பு – 200 கிராம் (8 மணி நேரம் ஊறவிடவும்)  பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கவும்)   தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு  பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)  அரைத்த தக்காளி விழுது - ஒரு கப்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  நறுக்கிய வெங்காயம் - அரை கப்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் (மாங்காய்த்தூள்) - தலா அரை டீஸ்பூன்  பிரியாணி இலை - 2  வெண்ணெய் – 100 கிராம்  ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு  மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
 உளுந்துடன் பிரியாணி இலை சேர்த்து வேகவிட்டு நன்கு மசிக்கவும். வாணலியில் 75 கிராம் வெண்ணெய்விட்டு உருக்கி இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி விழுது, கரம் மசாலாத்தூள், பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பவுடர் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அரை கப் தண்ணீர், வேகவைத்த உளுந்து சேர்த்து 10-20 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். மற்றொரு வாணலியில் மீதமுள்ள வெண்ணெய்விட்டு உருக்கி, பூண்டு சேர்த்துப் பொரித்து எடுத்துச் சேர்க்கவும். மேலே ஃப்ரெஷ் க்ரீம், கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

மசூர் தால் - டேட்ஸ் லட்டு

தேவை:     மசூர் தால் – 100 கிராம்  பொடித்த வெல்லம் – 150 கிராம்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த பேரீச்சைத் துண்டுகள் - கால் கப்  உருக்கிய நெய் - கால் கப்.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு மசூர் தால் சேர்த்துச் சிவக்க வறுத்தெடுத்து நைஸாக பொடிக்கவும். வெல்லத்துடன் பேரீச்சை சேர்த்துக் கையால் நன்கு பிசையவும். பிறகு அதனுடன் ஏலக்காய்த்தூள், அரைத்த பருப்பு, சூடான நெய் சேர்த்து, கைபொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த லட்டு, புரதம் மற்றும் இரும்புச் சத்து மிக்கது.

பாசிப்பருப்பு உக்காரை

தேவை:     பாசிப்பருப்பு – 200 கிராம் (வறுத்து ரவையாக உடைக்கவும்)  வெல்லம் – 250 கிராம்  நெய் – 50 கிராம்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த முந்திரி - திராட்சை கலவை – 50 கிராம்.

செய்முறை: 
பாசிப்பருப்பு ரவையுடன் சுடுநீர் சேர்த்து நன்கு பிசைந்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பிறகு உதிர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, இதைக் கொதிக்கவிட்டு ஏலக்காய்த்தூள், நெய், உதிர்த்த பாசிப்பருப்பு கலவை சேர்த்து நன்கு கிளறி இறக்கி மூடி வைக்கவும். அரை மணி கழித்து எடுத்தால், பொலபொலவென்று இருக்கும். இதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துக் கலந்து பரிமாறவும். இது இரண்டு நாள்கள் வரை நன்றாக இருக்கும்.

கீரை - தால் கொழுக்கட்டை 

தேவை:     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்  காய்ந்த மிளகாய் - 6  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய அரைக்கீரை, அகத்திக்கீரை, பருப்புக்கீரை கலவை - ஒரு கப்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, கீரை வகைகள், வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்துப் பிசையவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, பருப்புக் கலவையுடன் கலக்கவும். பிறகு, சிறிய உருண்டைகளாக்கி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கீரை வகைகளில் இரும்புச் சத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தால் ஃபிங்கர் ஃப்ரை 

தேவை:     துவரம்பருப்பு - 50 கிராம்  அரிசி - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  உருளைக்கிழங்கு – 4 (தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும்)  எண்ணெய் - 250 கிராம்  பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்புடன் காய்ந்த மிளகாய், அரிசி சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்து எடுக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும்.

தால் ஸ்டஃப்டு பராத்தா

தேவை:  
   கடலைப்பருப்பு – 100 கிராம் (வேகவிடவும்)  பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

மேல் மாவுக்கு: 
கோதுமை மாவு – 200 கிராம்  நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மேல் மாவு செய்ய கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும். வேகவைத்த கடலைப்பருப்புடன் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துப் பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். இதுதான் பூரணம்.

பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டி நடுவே பூரணம் வைத்து மூடி மீண்டும் சப்பாத்திகளாகத் திரட்டவும். தோசைக்கல்லைச் சூடாக்கி, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

ஸ்வீட் அண்டு சோர் பாசிப்பருப்பு சாலட் 

தேவை:     பாசிப்பருப்பு – 100 கிராம் (ஊறவிடவும்)  தேங்காய்த் துருவல் - கால் கப்  நறுக்கிய கொத்தமல்லித்தழை  பச்சை மிளகாய் - சிறிதளவு  குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் - கால் கப்  எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்  சர்க்கரை - ஒரு சிட்டிகை  தேன் - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     நெய் - ஒரு டீஸ்பூன்  கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை: வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும். பிறகு, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, ஸ்வீட் கார்ன் முத்துகள், சர்க்கரை, தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

பாலக் தால் 

தேவை:     கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 200 கிராம்  பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)  சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு  பூண்டு – 2 (பொடியாக நறுக்கவும்)  சீரகம் - கால் டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  நெய் - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பருப்பு வகைகளைக் குழைய வேகவிடவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாலக்கீரை, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, வேகவைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். அபரிமிதமான இரும்புச் சத்துள்ள இந்த பாலக் தால் அனைவருக்கும் ஏற்றது.

பாசிப்பருப்பு பக்கோடா 

தேவை:     பாசிப்பருப்பு – 200 கிராம்  பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பைக் களைந்து, ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டுப் பருப்புக் கலவையைச் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

இதை டீயுடன் சாப்பிடலாம் அல்லது மோர்க்குழம்பில் போட்டு ஊறவிட்டுப் பரிமாறலாம்.

மல்டி தால் வெஜ் மிக்ஸ்

தேவை:     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, மசூர் பருப்பு தலா - 25 கிராம்  நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு கலவை - ஒரு கப்  வேகவைத்த பச்சைப் பட்டாணி – சிறிதளவு  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்  கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: குக்கரில் பருப்பு வகைகளுடன் நறுக்கிய காய்கறிகள், பச்சைப் பட்டாணி சேர்த்துக் குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேகவைத்த கலவை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். காய்கறிகளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்துகொடுப்பது நல்ல பலன் தரும்.

தால் கிச்சடி 

தேவை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா 50 கிராம்  அரிசி – 150 கிராம்  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை  பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கவும்)  வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)  நெய் – 100 கிராம்  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     பட்டை, லவங்கம், மராத்தி மொக்கு, ஏலக்காய் - தலா 2  சீரகம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: பருப்பு வகைகளுடன் அரிசி சேர்த்துக் களையவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும். குக்கரில் நெய்விட்டு தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரிசி - பருப்பு கலவை, மூன்று பங்கு தண்ணீர்விட்டு மூடி, 4 - 5 விசில்விட்டு இறக்கவும். சற்று ஆறியபின் திறந்து கிளறி, சூடாகப் பரிமாறவும்.

மிக்ஸ்டு தால் பிளெய்ன் கறி

தேவை:     துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம்  காய்ந்த மிளகாய் - 4  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:     தேங்காய் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்  கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவிட்டுக் களைந்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் அரைத்த பருப்புக் கலவை, மஞ்சள்தூள் சேர்த்து உதிர் உதிராகக் கிளறி இறக்கவும்.

பாசிப்பருப்பு - கடலைப்பருப்பு பண்டிகை பாயசம் 

தேவை:     பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்  வெல்லம் - 200 கிராம்  தேங்காய்ப்பால், காய்ச்சிய பால் - தலா அரை கப்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த முந்திரி  திராட்சை – சிறிதளவு.

செய்முறை: பருப்பு வகைகளைக் களைந்து குழைய வேகவிட்டு எடுக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலைக் கொதிக்கவிட்டு வேகவைத்த பருப்புக் கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். அத்துடன் முந்திரி, திராட்சை, பால், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

உடனடி உளுத்தம்பருப்பு பச்சடி 

தேவை:     உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  தயிர் - கால் கப்  பெருங்காயம் – சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:   
  நெய் - அரை டீஸ்பூன்  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி ஊறவைத்து உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தயிர் சேர்த்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து அரைத்த கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

நியூட்ரி தால் இட்லி 

தேவை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம்  பச்சரிசி – 50 கிராம்  துருவிய கேரட், கோஸ் கலவை - கால் கப்  பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)  நெய் - 2 டீஸ்பூன்  மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்துக்கு அரைத்தெடுக்கவும். அதனுடன் கேரட், கோஸ், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு - சீரகத்தூள், நெய் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

துவரம்பருப்பு - கறிவேப்பிலை துவையல் 

தேவை:     துவரம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா 2  கறிவேப்பிலை - 2 ஆர்க்கு  தேங்காய்த் துருவல் - கால் கப்  புளி - நெல்லிக்காய் அளவு  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  கடலை எண்ணெய் – சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 
வாணலியில் எண்ணெய்விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து, தேவையான தண்ணீர்விட்டுத் துவையலாக அரைத்து எடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்தத் துவையலை அடிக்கடி பயன்படுத்துவது அனைவரின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

தால் பேஸ்கட்  
  
தேவை:     கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா 100 கிராம்  துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  சீரகம் - கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: கடலைப்பருப்பு, பச்சரிசி, துவரம்பருப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இத்துடன் உப்பு, சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டுக் கெட்டியாகப் பிசையவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு குழிக்கரண்டியில் எண்ணெய் தடவி, எலுமிச்சை அளவு மாவு எடுத்து, கரண்டியின் உட்புறமாகக் கூடைபோல பரப்பி, அப்படியே கரண்டியுடன் சூடான எண்ணெயில் விடவும். சிறிது நேரத்தில் கரண்டி, கூடை இரண்டும் தனித்தனியே பிரிந்து வரும். சற்றே சிவந்தவுடன் எடுத்துவிடவும்.

இது 15 நாள்களுக்கு நன்றாக இருக்கும். விருப்பப்பட்டால், தால் பேஸ்கட்டில் சுண்டல், வறுத்த வேர்க்கடலை போட்டுப் பரிமாறலாம்.

உளுத்தம்பருப்பு - கீரை வடை 

தேவை:     உளுத்தம்பருப்பு – 100 கிராம்  நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு  சோம்பு - சிறிதளவு  பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்)  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, ஊறிய உளுத்தம்பருப்பைக் களைந்து சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு, சோம்பு சேர்க்கவும். பிறகு வெங்காயம், கீரை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். மாவை வடைகளாகத் தட்டி நடுவே துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த கீரை வடை, அனைவரும் விரும்பி உண்ணும் வடையாகவும் அமையும்.

`பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது பழமொழி. கல்யாண விருந்தில் மட்டுமல்லாமல், அன்றாட வீட்டுச் சமையலிலும் பருப்பு இன்றியமையாத பொருளாக அங்கம்வகிக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பருப்பு மனிதர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, சைவ உணவு உண்பவர்களுக்குப் பருப்பிலிருந்தே பெருமளவுக்குக் கிடைக்கிறது. மேலும், பருப்பு வகைகளிலிருந்து வைட்டமின், இரும்புச் சத்து, நார்ச் சத்து, கால்சியம், பொட்டாசியம், ஃபோலிக் ஆசிட் போன்றவற்றையும் பெறலாம்.

பொதுவாக, பருப்பில் சாம்பார், ரசம், வடை, துவையல், பாயசம், சுண்டல் போன்றவற்றைச் செய்வது வழக்கம். இந்த இணைப்பிதழில் பருப்பை வைத்து, வழக்கமான ரெசிப்பிகளுடன் சூப், சாண்ட்விச், சாலட், ஃபிங்கர் ஃப்ரை, தால் பாஸ்கெட் என்று கலந்துகட்டி உணவு வகைகள் தயாரித்து அளித்து அசத்துகிறார் சமையல் கலைஞர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன். இவற்றை யெல்லாம் செய்து பரிமாறி... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் நீங்கள் `சமையல் சக்கரவர்த்தினி’யாக வலம்வர வாழ்த்துகள்!

No comments:

Post a Comment